இளைஞரே—உங்களுடைய ஆவிக்குரிய இலக்குகள் என்ன?
1 மகிழ்ச்சியைக் கொண்டுவருவதில் அர்த்தமுள்ள வேலையும் அடையத்தக்க இலக்குகளும் எவ்வளவு முக்கியமானவை என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். (ஆதியாகமம் 1:28; 2:15, 19-ஐக் காண்க.) இன்று யெகோவா தம்முடைய மக்களுக்கு பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்குமான நியமிப்பை கொடுத்திருக்கிறார். பரதீஸில் நித்திய ஜீவனை அடையும் இறுதியான இலக்கும்கூட நமக்கு இருக்கிறது. இதற்கிடையில், நம்முடைய சக்திகளையும் செல்வங்களையும் தவறான வழியில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமானால், படிப்படியான ஆவிக்குரிய இலக்குகளை நாம் வைக்க வேண்டும்.—1 கொ. 9:26.
2 இளைஞருக்கு நடைமுறையான இலக்குகள்: இளைஞர்கள், அவரவர் திறமைகளுக்கேற்ப அவர்களால் அடையத்தக்க தேவராஜ்ய இலக்குகளை வைக்க வேண்டும். (1 தீ. 4:15) சிறுபிள்ளைகள் சிலர் தாங்கள் வாசிக்க கற்றுக்கொள்வதற்கு முன்பாகவே பைபிள் புத்தகங்களின் பெயர்களை மனப்பாடம் செய்யும் இலக்கை அடைந்திருக்கிறார்கள். குடும்ப படிப்பின் மூலம், கூட்டங்களுக்காக தயார்செய்வதற்கு பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள்; இதனால் அர்த்தமுள்ள குறிப்புகளை சொல்லுதல், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொள்ளுதல் போன்ற இலக்குகளை அவர்களால் சென்றெட்ட முடிகிறது. வெளி ஊழியத்தில் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரோடு செல்லும்போது, முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆகும் இலக்கை நோக்கி முன்னேறுகையில், சாட்சிகொடுப்பதில் அவர்களும் பங்கேற்க கற்றுக்கொள்கிறார்கள். ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெறும் இலக்கை, பெற்றோர் தங்களுடைய பிள்ளைகள்முன் வைக்க வேண்டும்.
3 நீங்கள் ஒரு பருவ வயதினராக இருந்தால், உங்களுடைய ஆவிக்குரிய இலக்குகளில் எவையெல்லாம் உட்பட்டிருக்கின்றன? வாழ்க்கையில் உண்மையிலேயே முக்கியத்துவமுள்ள இலக்குகளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவன் மூலம் ‘இப்பொழுதே, உங்கள் மகத்தான சிருஷ்டிகரை நினையுங்கள்.’ (பிர. 12:1, NW; சங். 71:17) உங்களுடைய பள்ளி விடுமுறையின்போது ஏன் துணைப் பயனியர் ஊழியம் செய்யக்கூடாது? ஓர் ஒழுங்கான பயனியராக முழுநேர ஊழியத்தைத் துவங்குவதைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்களுடைய பகுதியிலோ அல்லது வேறு இடத்திலோ உள்ள அந்நிய மொழி பேசும் ஒரு தொகுதிக்கு அல்லது சபைக்கு நீங்கள் எதிர்காலத்தில் உதவிசெய்வதற்காக, ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதைப் பற்றியென்ன? இப்பொழுது பெத்தேலில் சேவைசெய்கிறவர்கள் அல்லது பயணக் கண்காணிகளாக அல்லது மிஷனரிகளாக சேவை செய்கிறவர்களில் அநேகர், பள்ளியில் படிக்கும்போதே விசேஷித்த முழுநேர சேவையை தங்களுடைய இலக்காக வைத்தார்கள். அதையே நீங்களும் ஏன் செய்யக்கூடாது?
4 இளம் வயதிலேயே, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற முயலுங்கள். 12 வயதிலேயே, ஆவிக்குரிய விஷயங்களைக் குறித்து அவர் தயக்கமின்றி பேசினார். (லூக். 2:42-49, 52) தனிப்பட்ட படிப்புக்கும் பைபிளை தினந்தோறும் வாசிப்பதற்கும் கூட்டங்களிலும் வெளி ஊழியத்திலும் முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களுடன் தவறாமல் கூட்டுறவுகொள்வதற்கும் பயனுள்ள இலக்குகளை வைப்பது, இயேசு செய்த முறையில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்குப் போதிப்பதற்கான திறமையைப் பெற உங்களுக்கு உதவிசெய்யும்.