சத்தியத்தில் இல்லாத துணைகளை அணுகுங்கள்
1 தம்பதியினர் மெய் வணக்கத்தில் ஒன்றுபட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்றபோதிலும், பல குடும்பங்களில் சத்தியத்தின் வழியை திருமண துணைகளில் ஒருவர் மட்டுமே ஏற்றிருக்கிறார். சத்தியத்தில் இல்லாத இப்படிப்பட்ட துணைகளை நாம் அணுகி, அவர்களும் நம்முடன் சேர்ந்து யெகோவாவை வணங்க நாம் எப்படி அவர்களை உற்சாகப்படுத்தலாம்?—1 தீ. 2:1-4.
2 அவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொள்ளுங்கள்: சத்தியத்தில் இல்லாத துணைகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அசட்டை மனப்பான்மையோ தப்பெண்ணமோதான் பிரச்சினையாய் இருக்கிறது. ஒருவர் புறக்கணிக்கப்பட்டவராய் உணரலாம், இல்லாவிட்டால் தன் துணை புதிதாய் கண்டுபிடித்திருக்கும் ஆவிக்குரிய அக்கறையின்மீது பொறாமை கொள்ளலாம். “வீட்டில் நான் மட்டும் தனியாக இருக்கையில், கைவிடப்பட்டவனாய் உணர்ந்தேன்” என்று ஒரு கணவர் நினைவுகூருகிறார். “என் மனைவியும் பிள்ளைகளும் என்னைக் கைவிட்டுவிடுவதுபோல் உணர்ந்தேன்” என்று மற்றொருவர் கூறுகிறார். தங்களுடைய குடும்பத்தினர், தங்களைத் தனியே விட்டுவிட்டு ஒரு மதத்தின் பின்னே செல்வதாக சிலர் நினைக்கலாம். (ஆகஸ்ட் 15, 1990, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 20-3-ஐக் காண்க.) ஆகவேதான், முடிந்தால் ஆரம்பத்திலிருந்தே, வீட்டு வேதப்படிப்பு ஏற்பாட்டில் மனைவியுடன் கணவனையும் உட்படுத்துவது மிகச் சிறந்தது.
3 ஒன்றுசேர்ந்து உழையுங்கள்: திருமணமான ஆட்கள் சத்தியத்திற்கு வருவதில் உதவுவதற்கு, சாட்சிகளாயிருந்த ஒரு தம்பதியினர் திறம்பட்ட முறையில் உழைத்தனர். மனைவியுடன் ஒரு படிப்பை அந்தச் சகோதரி நடத்த ஆரம்பித்த பிறகு, அந்தச் சகோதரர் கணவனைச் சந்திக்கச் செல்வார். பெரும்பாலும் ஒரு படிப்பை அந்தக் கணவனுடன் ஆரம்பித்துவிடுவார்.
4 சிநேகப்பான்மையுடனும் உபசரிக்கும் தன்மையுடனும் இருங்கள்: மெய் வணக்கத்தில் இன்னும் ஒன்றுபடாத குடும்பங்களின்மீது அக்கறை காட்டுவதன் மூலம் சபையிலிருக்கும் குடும்பங்கள் உதவலாம். அவ்வப்போது சிநேகப்பான்மையுடன் சந்தித்துவருவது, யெகோவாவின் சாட்சிகள் கனிவானவர்கள் என்பதையும் அக்கறை காட்டும் கிறிஸ்தவர்கள் என்பதையும் ஒவ்வொருவருடைய நலனையும் கருத்தில் கொள்பவர்கள் என்பதையும் சத்தியத்தில் இல்லாத துணை புரிந்துகொள்ள உதவலாம்.
5 அவ்வப்பொழுது, சத்தியத்தில் இல்லாத துணைகளை அணுகுவதற்காக சமீபத்தில் எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளை மூப்பர்கள் மறுபார்வை செய்யலாம்; மேலும், அவர்களை யெகோவாவுக்காக ஆதாயப்படுத்தும் நம்பிக்கையுடன் இன்னும் என்ன செய்யப்படலாம் என்றும் அவர்கள் தீர்மானிக்கலாம்.—1 பே. 3:1, NW, அடிக்குறிப்பு.