சுறுசுறுப்பான செயலுக்கான பெரிய கதவு திறந்திருக்கிறது
1 நற்செய்தியின் வைராக்கியமுள்ள பிரசங்கிப்பாளராக, தேவை அதிகமாய் இருந்த பிராந்தியங்களை பவுல் ஆவலுடன் கண்டறிந்தார்; அவற்றுள் ஒன்றுதான் எபேசு பட்டணம். அவர் அங்குப் பிரசங்கித்ததில் நல்ல பலனைக் கண்டதால், உடன் கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: ‘சுறுசுறுப்பான செயலுக்கு வழிநடத்துகிற ஒரு பெரிய கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது.’ (1 கொ. 16:9, NW) பவுல் அந்தப் பிராந்தியத்தில் தொடர்ந்து ஊழியம் செய்து, எபேசியர்கள் பலர் விசுவாசிகளாவதற்கு உதவினார்.—அப். 19:1-20, 26.
2 இன்றும்கூட, சுறுசுறுப்பான செயலுக்கு வழிநடத்துகிற ஒரு பெரிய கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. ஓர் ஒழுங்கான பயனியராக சேர்ந்துகொள்வதற்கான, கூடுமானால், மற்றொரு ஏரியாவுக்கு மாறிச்செல்ல முன்வருவதற்கான, ஒருவேளை அதிகளவான பிராந்தியமுள்ள ஒரு சிறிய சபையோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்கான வெளிப்படையான அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் விடுக்கப்படுகிறது. இவ்வாறு, குறிப்பிட்ட ஏரியாக்களிலிருக்கும் தேவையை நம் முயற்சிகள் ஈடுசெய்யலாம்.—2 கொரிந்தியர் 8:13-15-ஐ ஒப்பிடுக.
3 ஓர் ஒழுங்கான பயனியராக நீங்கள் சேவை செய்ய முடியுமா? ஓர் ஒழுங்கான பயனியராக சேவை செய்யும் சாத்தியத்தைப் பற்றி நீங்கள் ஜெபத்துடன் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயமாகவே, இந்தியாவில் பிரசங்கிக்க வேண்டிய பிராந்தியம் பெரியதாய் இருக்கிறது; அத்துடன் பிரமாண்டமான கூட்டிச்சேர்க்கும் வேலை செய்யப்பட வேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தைப் பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனோ, உங்கள் சபை மூப்பர்களுடனோ, உங்கள் வட்டாரக் கண்காணியுடனோ ஏன் பேசிப்பார்க்கக்கூடாது. நீங்கள் ஒழுங்கான பயனியர் சேவையில் ஈடுபடுவதற்காக, உங்கள் அட்டவணையை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பதைப் பற்றிய அவர்களுடைய ஆலோசனைகளைக் கேளுங்கள். பெரிய குடும்பங்களில், ஓர் உறுப்பினர் பயனியராகும்படி முழுக் குடும்பமும் ஒன்றுசேர்ந்து ஒத்துழைக்க முடியுமா? கணவன் மனைவி ஆகிய இருவர் மட்டுமே அடங்கிய குடும்பத்தில், பொருளாதார தேவைகளுக்காக முழு நேர வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் இருவருக்கும் இல்லாதபோது, குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டு, அதன் மூலம் அந்த மனைவி, முதல் சில வருடங்களுக்கு ஒழுங்கான பயனியர் சேவையில் ஈடுபடும்படி செய்வதைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்க்க முடியுமா?
4 சமீப ஆண்டுகளில், உலகளவிலான ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ குடும்பங்கள், அறுவடை வேலையில் இன்னும் முழுமையாக பங்குகொள்வதற்காக மற்ற ஏரியாக்களுக்கு மாறிச்சென்றிருக்கின்றன. இவ்வாறு செய்த ஒரு தம்பதியினர் சொன்னதாவது: “எங்கே மற்றவர்களுக்கு அதிக உதவியாய் இருக்க முடியுமோ அங்கேபோய் யெகோவாவைச் சேவிக்க விரும்பினோம்.” நீங்கள் வசிக்கும் ஏரியாவில், ஒரு பெரிய சபை ஓரளவு அடிக்கடி ஊழியம் செய்து முடிக்கிறதென்று வைத்துக்கொள்வோம். மற்றொரு ஏரியாவிற்கு மாறிச்செல்லும் வாய்ப்பு உங்கள்முன் இருக்கிறது; அங்கே குறைவான ராஜ்ய பிரஸ்தாபிகளே இருக்கிறார்கள் என உங்களுக்குத் தெரியும். இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த ஏரியாவிற்கு நீங்களாகவே மனமுவந்து மாறிச்செல்ல விருப்பப்படுவீர்களா? புதிய ஏரியாவில் ஓர் ஒழுங்கான பயனியராக நீங்கள் சேவை செய்ய முடியாவிட்டாலும்கூட, அங்கு நீங்கள் இருப்பதுதானே, ஒரு சிறிய சபைக்கு பலனுள்ளதாய் இருக்கலாம். இந்த ஆவல் உங்களுக்கு இருந்தால், என்னென்ன சாத்தியங்கள் இருக்கின்றன என்பது பற்றி உங்களது சபை மூப்பர்களுடனோ, உங்களது வட்டாரக் கண்காணியுடனோ நீங்கள் பேசலாம்.
5 யெகோவாவின் பெயரைத் தாங்கியிருப்பது ஒரு சிலாக்கியம். நாம் எல்லாருமே பயனியர் சேவை செய்ய முடிவதில்லை; ஆனால் நாம் ஒவ்வொருவரும் அதற்கான சாத்தியங்கள் என்னென்ன இருக்கின்றன என்பதுபற்றி மிகக் கவனமாக சிந்தித்துப்பார்க்க வேண்டும். என்னவாயிருந்தாலும், சுறுசுறுப்பான செயலுக்கான பெரிய கதவு திறந்திருக்கும்வரை, நாம் அனைவரும் யெகோவாவின் சேவையில் தொடர்ந்து மும்முரமாய் ஈடுபடுவோமாக.—1 கொ. 15:58.