தேடிக் கண்டுபிடித்துப் பிரசங்கியுங்கள்
1. பல மொழிகள் பேசப்படும் நகரங்களில் சபைகள் மொழி அடிப்படையில் பிராந்தியங்களைப் பிரித்துக்கொள்வது ஏன்?
1 கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று இயேசுவின் சீடர்கள் கடவுளுடைய சக்தியைப் பெற்றார்கள். அதனால், உலகின் தொலைதூர இடங்களிலிருந்து வந்திருந்தவர்களிடம் “வேற்று மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.” (அப். 2:4) அதன் விளைவாக, சுமார் 3,000 பேர் ஞானஸ்நானம் பெற்றார்கள். அங்கு கூடிவந்திருந்த பெரும்பாலோருக்கு எபிரெய அல்லது கிரேக்க மொழிகூட தெரிந்திருக்கலாம். இருந்தாலும், அவர்களுடைய தாய்மொழியில் நற்செய்தியைச் சொல்ல யெகோவா விரும்பினார். ஏனென்றால், தாய்மொழியில் பேசும்போது பொதுவாக மக்கள் நன்கு காதுகொடுத்து கேட்பார்கள். அதனால்தான், பல மொழிகள் பேசப்படும் நகரங்களில் இன்று, மொழி அடிப்படையில் பிராந்தியங்கள் பிரிக்கப்படுகின்றன. (ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல், பக். 107, பாரா. 2-3) மொழித் தொகுதிகளுக்கென்று தனியாகப் பிராந்தியம் கொடுக்கப்படாது. அந்தத் தொகுதியினர் எந்தச் சபையின் பாகமாக இருக்கிறார்களோ, அந்தச் சபைப் பிராந்தியத்தில் தங்கள் மொழி பேசுகிறவர்களிடம் சாட்சி கொடுப்பார்கள். அதேபோல, பக்கத்து சபை பிராந்தியங்களிலும் தங்கள் மொழியைப் பேசும் ஆட்களிடம் சாட்சி கொடுப்பார்கள்.
2. (அ) உங்கள் மொழியைப் பேசுபவர்களை ஏன் தேட வேண்டும், எப்படிப்பட்ட இடங்களில் இது தேவைப்படுகிறது? (ஆ) பல மொழிகள் பேசப்படும் நகரங்களிலுள்ள சபைகள் ஒன்றுக்கொன்று எப்படி உதவலாம்? (இ) ஆர்வம் காட்டும் பிற மொழி ஆட்களைச் சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்?
2 உங்கள் ஊரில் ஒரே மொழியைத்தான் பேசுகிறார்கள் என்றால் வரிசையாக வீட்டுக்கு வீடு பிரசங்கித்து விடலாம். ஆனால், வெவ்வேறு மொழி பேசுபவர்கள் வாழ்கிற பெருநகரங்களில் நீங்கள் வசித்தால் நிலைமையே வேறு. ஒருவேளை, பல மொழி சபைகள் ஒரே பிராந்தியத்தில் ஊழியம் செய்யலாம். அந்த மொழிகளைப் பேசுவோர் அந்தப் பிராந்தியத்தில் அதிகமாக இருந்தால், சம்பந்தப்பட்ட சபைகள் மாறி மாறி அங்கு ஊழியம் செய்ய ஊழியக் கண்காணிகள் ஏற்பாடு செய்வார்கள். ஆனால், ஒரு சபையின் அல்லது தொகுதியின் மொழியைப் பேசும் ஆட்கள் சிலர் மட்டுமே அந்தப் பிராந்தியத்தில் இருந்தால், அவர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். மற்ற சபையினர், உங்கள் மொழி பேசுபவர்களை ஊழியத்தில் சந்திக்கும்போது விவரங்களை உங்களுக்குத் தெரிவிக்கலாம். இருந்தாலும், உங்களுடைய மொழி பேசுபவர்களைக் கண்டுபிடித்து பிரசங்கிக்கும் முக்கிய பொறுப்பு உங்கள் சபை அல்லது தொகுதிக்கே உரியது. (“ஒருவருக்கொருவர் உதவுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அதற்காக, உங்கள் மொழி பேசுபவர்களைப்பற்றி விசாரித்து, அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். எப்படித் தேடலாம்?
3. தேடுவதற்கு எவ்வளவு நேரம் செலவிடலாம்? எங்குத் தேடுவது என்பதை எப்படித் தீர்மானிக்கலாம்?
3 திட்டமிட்டுத் தேடுங்கள்: பல மொழிகள் பேசப்படும் பிராந்தியங்களில் எவ்வளவு நேரம் தேடலாம் என்பது அங்குள்ள சூழ்நிலைகளைப் பொறுத்தது. உதாரணத்திற்கு, அந்த ஊரில் எத்தனை பேர் உங்கள் மொழியைப் பேசுகிறார்கள்? எத்தனை பேருடைய விலாசம் ஏற்கெனவே உங்கள் சபையில் அல்லது தொகுதியில் இருக்கிறது? எத்தனை பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்? என்பதையெல்லாம் யோசித்துப் பாருங்கள். தேடுவதற்காக எல்லா இடங்களிலும் ஒரே அளவு நேரம் செலவிட வேண்டியதில்லை. சபை பிராந்தியத்திலேயே ஜன நெருக்கடியுள்ள பகுதிகளிலும், ஓரளவு பக்கத்திலிருக்கும் மற்ற பிராந்தியங்களிலும் அதிக நேரம் தேடலாம். என்றாலும், இந்த வேலையை நன்கு ஒழுங்குபடுத்தி செய்வது முக்கியம். அப்போதுதான் யெகோவாவின் பெயரை அறிந்து அவரை வழிபட அநேகருக்கு வாய்ப்பளிக்க முடியும்.—ரோ. 10:13, 14.
4. (அ) தேடும் வேலை எப்படி ஒழுங்குபடுத்தப்படுகிறது? (ஆ) உங்கள் மொழி பேசுபவர்களைக் கண்டுபிடிக்க சில வழிகள் யாவை?
4 மூப்பர் குழு, முக்கியமாக ஊழியக் கண்காணி நன்றாகத் திட்டமிட்டு மேற்பார்வை செய்தால் ஒரே இடத்தில் திரும்பத் திரும்ப தேடுவதைத் தவிர்க்கலாம். (1 கொ. 9:26) மொழித் தொகுதிகளில் இதை முன்நின்று வழிநடத்த தகுதிவாய்ந்த ஒரு சகோதரரை சபையின் மூப்பர் குழு தேர்ந்தெடுக்கும். அவர் ஒரு மூப்பராக அல்லது உதவி ஊழியராக இருந்தால் நல்லது. அநேக சபைகளும் தொகுதிகளும் நன்றாகத் திட்டமிட்டு தேடுகின்றன. உதாரணமாக, ஒருவருடைய பெயரைப் பார்த்ததுமே அது தங்கள் மொழிப் பெயரா என்பது தெரிந்துவிடும். அதனால், தங்களுடைய மொழி பெயர்களை டெலிபோன் டைரக்டரியில் அல்லது இன்டர்நெட்டில் தேடி, விவரங்களைக் குறித்துக்கொள்கிறார்கள். அவர் தங்கள் மொழியைப் பேசுபவர்தானா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள போனில் பேசுகிறார்கள் அல்லது நேரில் சந்திக்கிறார்கள். முடிந்தால், அவ்வப்போது முழு சபையுமே இப்படித் தேட மூப்பர் குழு ஏற்பாடு செய்யும்.—“உங்கள் மொழியைப் பேசுபவர்களைக் கண்டுபிடிக்க...” என்ற பெட்டியைப் பாருங்கள்.
5. (அ) தேடும் வேலையில் ஈடுபடும் பிரஸ்தாபிகள் என்ன ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும்? (ஆ) தேடும்போது ஆட்களிடம் என்ன சொல்லலாம்?
5 ஒவ்வொரு முறையும் குறிக்கோளுடன் தேட வேண்டும். தேடுவதும் நம் ஊழியத்தின் பாகமாக இருப்பதால், நேர்த்தியாக உடையணிந்து செல்ல வேண்டும். சந்திக்கும் ஆட்களிடம் அவர்களுடைய மொழியில் எப்படிப் பேசலாம் என்பதை முன்கூட்டியே பழகிப் பார்க்கலாம்; தேடும்போதும் அந்த மொழியிலேயே பேசலாம். உற்சாகத்தை இழந்துவிடாதிருக்கவும் அந்த மொழியை கற்றுக்கொள்ளவும் இவை உதவும். தேடுவதற்காகச் செலவிட்ட நேரத்தை ஊழிய அறிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், பிராந்திய வரைபடத்தையும் பட்டியலையும் தயாரிக்கும் நேரத்தை அறிக்கை செய்யக் கூடாது. உங்கள் மொழி பேசுபவரைச் சந்தித்தால், அவரிடம் நற்செய்தியைச் சொல்லுங்கள். அவரைப்பற்றி ஊழியக் கண்காணியிடம் அல்லது அவர் நியமித்த சகோதரரிடம் உடனடியாகத் தெரிவியுங்கள். அப்போதுதான் பிராந்தியப் பதிவுகளில் அந்தத் தகவலைச் சேர்த்துக்கொள்ள முடியும். அந்த நபர் ஆர்வம் காட்டினாலும் சரி காட்டாவிட்டாலும் சரி, இதைச் செய்ய வேண்டும். தேடும் வேலை முக்கியமானதுதான், அதற்காக வீட்டுக்கு வீடு ஊழியம், பொது ஊழியம் போன்ற மற்ற அம்சங்களை அலட்சியப்படுத்தக் கூடாது. சமநிலை முக்கியம்.—“தேடும்போது என்ன சொல்லலாம்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.
6. காதுகேளாதவர்களைக் கண்டுபிடிப்பதில் என்ன சிக்கல்கள் இருக்கின்றன?
6 காதுகேளாதவர்களைத் தேடுதல்: காதுகேளாதவர்களைத் தேடுவதில் வேறு விதமான சிக்கல்கள் இருக்கின்றன; அதற்கு கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவசியம். ஏனென்றால் ஒருவருடைய பெயர், தோற்றம், உடை ஆகியவற்றை வைத்து அவர் காதுகேளாதவரா இல்லையா என்று சொல்லிவிட முடியாது. அது மட்டுமல்ல, காதுகேளாதவரின் குடும்பத்தினரும், நண்பர்களும் அவரைப் பற்றிய தகவலைக் கொடுக்கத் தயங்கலாம். காதுகேளாதவர்களைக் கண்டுபிடிக்க பின்வரும் ஆலோசனைகள் உதவும். பிற மொழி பேசுபவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் இவற்றைப் பயன்படுத்தலாம்.
7. (அ) குடியிருப்பு பகுதிகளில் காதுகேளாதவர்களைக் கண்டுபிடிக்க என்ன செய்யலாம்? (ஆ) வீட்டுக்காரரின் சந்தேகத்தை எப்படிப் போக்கலாம்?
7 குடியிருப்பு பகுதிகளில் விசாரித்து சைகை மொழி சபைகளில் அல்லது தொகுதிகளில் உள்ளவர்கள் காதுகேளாத ஆட்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒருவேளை, அக்கம்பக்கத்திலோ வேலை செய்யுமிடத்திலோ பள்ளியிலோ சைகை மொழி பேசும் ஒருவரை அந்த வீட்டுக்காரர் பார்த்திருக்கலாம். சில நாடுகளில், காதுகேளாத குழந்தைகள் இருக்கிற தெருக்களில் அறிவிப்பு பலகை வைத்திருப்பார்கள், அதை அவர் பார்த்திருக்கலாம். அல்லது காதுகேளாத உறவினர் அவருக்கு இருக்கலாம். காதுகேளாத ஆட்களைப்பற்றி விசாரிக்கும்போது அவர் உங்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கலாம். அதனால் அவரிடம் நட்பாக, சுருக்கமாக, கண்ணியமாக, நேர்மையாக பேசுங்கள். இது அவருடைய சந்தேகத்தைப் போக்கும். அப்படி விசாரிக்கும்போது, பைபிள் டிவிடி அல்லது வேறு சைகை மொழி டிவிடி-களை சிலர் போட்டு காட்டுகிறார்கள். அதன் பிறகு, பைபிள் தரும் நம்பிக்கையைப்பற்றி காதுகேளாதவர்களுக்குச் சொல்ல விரும்புவதாகத் தெரிவிக்கிறார்கள். காதுகேளாதவர்களைப் பற்றிய விவரங்களைக் கொடுக்க வீட்டுக்காரர் தயங்கினாலும், உங்களுடைய விலாசத்தை அல்லது சபைக் கூட்டத்திற்கான அழைப்பிதழைக் கொடுங்கள். அதைத் தன் உறவினருக்கோ நண்பருக்கோ அவர் கொடுக்கலாம்.
8. சைகை மொழி சபைக்கு எப்படி பக்கத்திலுள்ள சபை உதவலாம்?
8 சைகை மொழி சபையின் பிராந்தியம் மிகப்பெரியது. அதனால், வருடத்தில் ஓரிரு முறை பக்கத்திலுள்ள பிற மொழி சபையின் உதவியோடு தங்களுடைய பெரிய பிராந்தியத்திலுள்ள ஓர் இடத்தில் காதுகேளாதவர்களைத் தேடலாம். எப்படித் தேடலாம் என்பதை சைகை மொழி சபை நடத்தும் வெளி ஊழியக் கூட்டத்தில் விளக்கலாம், நடித்தும் காட்டலாம். ஊழியத்திற்கு சிறு தொகுதிகளாகச் செல்லலாம். இப்படிச் செல்லும் ஒவ்வொரு தொகுதியினரோடும் சைகை மொழி சபையைச் சேர்ந்த ஒரு பிரஸ்தாபியை நியமிக்க வேண்டும். எங்குத் தேட வேண்டும் என்பதைக் காட்டும் வரைபடத்தையும் கொடுக்க வேண்டும்.
9. காதுகேளாதவர்கள் வழக்கமாக ஒன்றுகூடும் இடங்களுக்குப் போகும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
9 காதுகேளாதவர்கள் கூடிவரும் மன்றங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், காதுகேளாதவர்களுக்கான நலத் திட்ட நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தேடலாம். அப்படிப் போகும்போது சூழ்நிலைக்கு ஏற்றபடி பிரஸ்தாபிகள் உடையணிந்து செல்ல வேண்டும். அங்கு எல்லோருக்கும் முன்பாக பேச்சு கொடுப்பதற்குப் பதிலாக, ஓரிரண்டு பேரிடம் பேசுவது நல்லது. அதோடு, விவேகமாக நடந்துகொள்ள வேண்டும். ஆர்வம் காட்டினால், உங்கள் விலாசத்தைக் கொடுத்து, அவர்கள் விலாசத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
10. உள்ளூர் வியாபார நிறுவனங்களில் பிரஸ்தாபிகள் எவ்வாறு தேடும் வேலையைச் செய்யலாம்?
10 வியாபாரம் செய்யுமிடங்களைக் காட்டும் வரைபடத்தைத் தயார் செய்து, பொருத்தமான சமயங்களில் அங்கு செல்வது இன்னொரு வழி. ஒரு வரைபடத்தில், பெட்ரோல் பங்க் இருக்கும் இடங்களைக் குறித்துக்கொள்ளலாம். மற்றொன்றில் சலவை செய்யுமிடங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் போன்ற ஏதாவதொன்றைக் குறித்துக்கொள்ளலாம். இப்படி ஒரு வரைபடத்தில் ஒரே மாதிரியான வியாபார இடங்கள் இருப்பதால், பிரஸ்தாபிகள் அந்த இடங்களில் ஒரே விதமாக பேச முடிகிறது; அங்கு எப்படிப் பேசலாம் என்பதைக் கற்றுக்கொள்ளவும், திறமைசாலிகளாய் ஆகவும் முடிகிறது. உதாரணத்திற்கு, ஹோட்டல் வரவேற்பறையில் உள்ளவரிடம் நம் வேலையைப்பற்றி சுருக்கமாகச் சொல்லலாம். பிறகு, ஒரு சைகை மொழி டிவிடி-யையும் சபைக் கூட்டத்திற்கான அழைப்பிதழையும் கவரில் வைத்து அதை அங்கு தங்க வரும் காதுகேளாத ஆட்களிடம் கொடுக்கச் சொல்லலாம். சில வியாபார நிறுவனங்களுக்குப் போகும்போது, சைகை மொழி பேசுகிற வேலையாட்களோ வாடிக்கையாளர்களோ இருக்கிறார்களா என்று நேரடியாகக் கேட்கலாம். உங்கள் பிராந்தியத்தில் காதுகேளாதோருக்கான பள்ளி இருந்தால், சைகை மொழி டிவிடி-களை நூலகத்தில் வைப்பதற்காகக் கொடுக்கலாம்.
11. தேடும் வேலை ஏன் ஊழியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது?
11 முக்கியமான வேலை: உங்கள் மொழி பேசுபவரைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். அதுமட்டுமல்ல, சில பிராந்தியங்களில் ஆட்கள் அடிக்கடி குடிமாறிக்கொண்டிருப்பதால் பிராந்தியத்தைப் பற்றிய பதிவுகளைத் திருத்தமாக வைப்பது கடினம். ஆனாலும், நிறைய பிராந்தியங்களில் இந்தத் தேடும் வேலை ஊழியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாரபட்சம் காட்டாத யெகோவா தேவன் பிரசங்க வேலையை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார். (அப். 10:34) “பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய சித்தம்.” (1 தீ. 2:3, 4) ஆகவே, யெகோவாவோடும் சகோதர சகோதரிகளோடும் ஒத்துழைத்து எல்லா மொழியினரிலும் ‘நல்ல இருதயமுள்ளோரை’ கண்டுபிடிப்போம்.—லூக். 8:15.
[பக்கம் 5-ன் பெட்டி]
ஒருவருக்கொருவர் உதவுங்கள்
உங்கள் சபையோ, தொகுதியோ உங்கள் மொழியைப் பேசுவோர், அருகிலுள்ள பிற மொழி சபை பிராந்தியங்களில் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினால், ஊழியக் கண்காணி அந்தந்த சபை மூப்பர்களைத் தொடர்புகொள்வார். அந்தச் சபைகள் ரொம்ப தூரத்தில் இருக்கக் கூடாது; அல்லது உங்கள் மொழியைப் பேசுவோர் அந்தச் சபைகளின் பிராந்தியத்தில் அதிகமாக இருக்க வேண்டும். நீங்கள் உதவி கேட்டிருப்பதை அங்குள்ள பிரஸ்தாபிகளிடம் மூப்பர்கள் தெரிவிப்பார்கள். பிரஸ்தாபிகள் ஊழியம் செய்யும்போது உங்கள் மொழி பேசுகிறவரைச் சந்தித்தால், அவருடைய விலாசத்தை ஊழியக் கண்காணியிடம் கொடுப்பார்கள். ஊழியக் கண்காணி அந்தத் தகவலை உங்கள் சபைக்கோ தொகுதிக்கோ அனுப்புவார். பல மொழிகள் பேசப்படும் பிராந்தியத்தில் இந்த வேலையை முழுமையாகச் செய்து முடிக்கவும் ஆர்வம் காட்டுவோரின் விலாசத்தை உரிய சபைக்கு அல்லது தொகுதிக்கு கொடுக்கவும் சம்பந்தப்பட்ட சபைகளின் ஊழியக் கண்காணிகள் பேசி, தகுந்த ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
வேறு மொழி பேசும் ஒருவர் (அல்லது காதுகேளாதவர்) ஆர்வம் காட்டினால், உடனடியாக ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43-TL) படிவத்தைப் பூர்த்தி செய்து சபையின் செயலரிடம் கொடுக்க வேண்டும். ஆர்வம் காட்டியவர் சீக்கிரத்திலேயே ஆன்மீக உதவி பெற இது வழிவகுக்கும்.—km 5/11 பக். 3-ஐப் பாருங்கள்.
[பக்கம் 6-ன் பெட்டி]
“உங்கள் மொழி பேசுபவர்களைக் கண்டுபிடிக்க...”
• பைபிள் மாணாக்கர்கள், குடும்பத்தினர், சக பணியாளர்கள் போன்றோரிடம் கேளுங்கள்.
• உங்களுடைய மொழி பெயர்களை டெலிஃபோன் டைரக்டரியில் கண்டுபிடியுங்கள். இதற்காக, இன்டர்நெட்டில் விலாசவாரியாக பெயர்களை வகைப்படுத்தும் டைரக்டரியைப் பயன்படுத்தலாம் அல்லது போன் கம்பெனி மூலம் பெயர்களைப் பெறலாம்.
• நூலகங்கள், அரசாங்க அலுவலகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் சாதுரியமாக விசாரியுங்கள்.
• ஏதாவது ஒரு மொழியினர் பொது நிகழ்ச்சிகளை நடத்தப் போவதாக அறிவிப்பு செய்திருக்கிறார்களா என செய்தித்தாளில் பாருங்கள்.
• குறிப்பிட்ட ஒரு மொழியினருக்கு பொருள்களை விநியோகிக்கிற கடைகளுக்கும் கம்பெனிகளுக்கும் செல்லுங்கள்.
• குறிப்பிட்ட மொழியினர் வருகிற வியாபார இடம், பல்கலைக்கழகம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் அனுமதி பெற்று, அந்த மொழி பிரசுரங்களை மேஜைகளில் அடுக்கி வையுங்கள்.
[பக்கம் 7-ன் பெட்டி]
தேடும்போது என்ன சொல்லலாம்?
நட்பாக, உள்ளப்பூர்வமாக, நேரடியாக பேசினால் சந்தேகத்தைப் போக்க முடியும். எடுத்த எடுப்பிலேயே அவர்களுடைய மொழியிலுள்ள பிரசுரத்தைக் கொடுப்பது நல்லது.
அவர்களிடம் வணக்கம் சொன்ன பிறகு இப்படிச் சொல்லலாம்: “நாங்க ______ (மொழி) பேசுறவங்கள பார்க்க வந்திருக்கிறோம். உங்களுக்கு யாரையாவது தெரியுமா?”
காதுகேளாதவர்களைத் தேடும்போது இப்படிச் சொல்லலாம்: “வணக்கம். உங்களுக்கு ஒரு வீடியோவை காட்டலாமா? [வீடியோ ப்ளேயரில் புதிய உலக மொழிபெயர்ப்பு—டிவிடி-யிலிருந்து (ஆங்கிலம்) ஒரு வசனத்தைக் காட்டுங்கள்.] இது அமெரிக்க சைகை மொழி பைபிளிலுள்ள ஒரு வசனம். இது போக, இன்னும் நிறைய வீடியோக்கள நாங்க விலையில்லாம கொடுக்குறோம். காதுகேட்காதவர்களும் கடவுளைப்பற்றி தெரிஞ்சுக்கிறதுக்காக இதை தயாரிச்சிருக்கோம். காதுகேட்காதவர்கள் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா?” வீட்டுக்காரருக்கு அப்படிப்பட்ட யாரையும் நினைவில் இல்லை என்றால், வேலை செய்யுமிடம், பள்ளி, அக்கம்பக்கம் என ஏதாவது இடத்தைக் குறிப்பிட்டு, அங்கு பார்த்திருக்கிறார்களா என கேட்கலாம்.