‘யெகோவா தம் முகத்தை அவர்கள்மீது பிரகாசிக்கச் செய்திருக்கிறார்’
நம்முடைய முகத்தில் எத்தனை தசைகள் இருக்கின்றன? ஒன்றல்ல, இரண்டல்ல, 30-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன! புன்னகைப்பதற்கு மட்டுமே 14 தசைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இந்தத் தசைகள் மட்டும் இல்லையென்றால், நாம் பேசும்போது எப்படியிருக்கும் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். கேட்கவே சகிக்காது, அல்லவா? ஆகவே, நம் முகத்திலுள்ள இந்தத் தசைகள் நம்முடைய பேச்சை இனிமையாக்குகின்றன. ஆனால், காதுகேளாதோருக்கு அவை வேறு விதங்களிலும் உதவுகின்றன. எண்ணங்களையும் கருத்துகளையும் தெரியப்படுத்துவதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன; அந்தத் தசைகளோடு, அங்க அசைவுகளும் சேரும்போது சொல்ல வேண்டிய விஷயத்தை அவர்களால் மிக நன்றாகத் தெரியப்படுத்த முடிகிறது. கடினமான விஷயங்களைக்கூட சைகை மொழியில் துல்லியமாகத் தெரிவிக்க முடிவதைக் குறித்துப் பலர் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
உலகெங்குமுள்ள காதுகேளாதோர், இதுவரை எந்த மனித முகத்திலும் பார்த்திராத உணர்ச்சிகளையும் பாவனைகளையும் சமீப காலங்களில் பார்த்திருக்கிறார்கள். ஆம், அடையாள அர்த்தத்தில் ‘யெகோவாவின் முகத்தை’ அவர்கள் பார்த்திருக்கிறார்கள். (புல. 2:19, NW) இது தற்செயலாக நடைபெற்ற ஒன்றல்ல. வெகு காலமாகவே யெகோவா காதுகேளாதோர்மீது அலாதி அன்பைக் காட்டிவந்திருக்கிறார். பூர்வ இஸ்ரவேலருடைய காலத்திலும்கூட அவர் அத்தகைய அன்பைக் காட்டியிருந்தார். (லேவி. 19:14) நவீன காலங்களிலும் அந்த அன்பு பளிச்செனத் தெரிகிறது. ‘பலதரப்பட்ட ஆட்களும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய வேண்டுமென்பதும், மீட்புப் பெற வேண்டுமென்பதும் அவருடைய சித்தமாக’ இருக்கிறது. (1 தீ. 2:4) காதுகேளாதோரில் அநேகர் கடவுளைப் பற்றிய சத்தியத்தைத் திருத்தமாக அறிந்துகொண்டதன் மூலம் அவருடைய முகத்தை அடையாள அர்த்தத்தில் பார்த்திருக்கிறார்கள். ஆனால், காதுகேட்காத அவர்களால் சத்தியத்தை எப்படித் திருத்தமாக அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்குமுன், காதுகேளாதோருக்குச் சைகை மொழி ஏன் முக்கியம் என்பதைச் சிந்திப்போம்.
பார்ப்பதே கேட்பது
காதுகேளாதோர் பற்றியும், சைகை மொழி பற்றியும் பல தவறான கருத்துகள் நிலவிவருகின்றன. ஆனால், உண்மைகளை இப்போது தெரிந்துகொள்வோம். காதுகேளாதோரால் வாகனங்களை ஓட்ட முடியும். உதட்டு அசைவைப் பார்த்துப் புரிந்துகொள்வது அவர்களுக்கு மிகவும் கஷ்டம். ப்ரெய்ல் புத்தகங்களுக்கும் சைகை மொழிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. சைகை மொழி என்பது வெறுமனே அபிநய நாடகமல்ல. ஒரே சைகை மொழியை உலகமுழுவதும் பயன்படுத்த முடியாது. சைகை மொழி நாட்டுக்கு நாடு வேறுபடுவதோடு, ஊருக்கு ஊரும் வேறுபடுகிறது.
காதுகேளாதோரால் வாசிக்க முடியுமா? ஒருசிலரால் வாசிக்க முடியும் என்றாலும், அவர்களில் பெரும்பாலோர் வாசிப்பதற்கு ரொம்பவும் சிரமப்படுகிறார்கள். ஏன் அப்படிச் சிரமப்படுகிறார்கள்? ஏனென்றால், பேசப்படுகிற வார்த்தைகள்தான் அச்சில் வடிக்கப்படுகின்றன. காதுகேட்கும் திறனுள்ள குழந்தை ஒரு மொழியை எப்படிக் கற்றுக்கொள்கிறது என யோசித்துப் பாருங்கள். பிறந்த சமயத்திலிருந்தே அது தன்னைச் சுற்றி இருக்கிறவர்கள் பேசுகிற மொழியைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதனால் சிறிது காலத்திற்குள், வார்த்தைகளையெல்லாம் கோர்த்துக் கோர்த்து வாக்கியங்களை அமைக்கப் பழகிவிடுகிறது. பேசப்படுகிற மொழியை வெறுமனே கேட்பதன் மூலம் அப்படிச் செய்யப் பழகிவிடுகிறது. பின்பு வாசிக்கத் தொடங்கும்போது, தாள்களில் பார்க்கிறவற்றை, தனக்கு ஏற்கெனவே தெரிந்த ஒலிகளோடும் வார்த்தைகளோடும் சம்பந்தப்படுத்திப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்கிறது.
இப்போது, நீங்கள் வெளிநாடு ஒன்றுக்குச் சென்றிருப்பது போலக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.. அங்கே ஒலிபுகாத ஒரு கண்ணாடி அறைக்குள் இருக்கிறீர்கள்.. அந்த நாட்டில் பேசப்படும் மொழியை நீங்கள் கேட்டதே கிடையாது.. ஒவ்வொரு நாளும், அந்நாட்டு மக்கள் உங்களிடம் கண்ணாடி வழியாகப் பேச முயற்சி செய்கிறார்கள்.. ஆனால், அவர்கள் பேசுவதை உங்களால் கேட்க முடிவதில்லை.. அவர்களுடைய உதட்டு அசைவை மட்டுமே பார்க்கிறீர்கள்.. தாங்கள் பேசுகிற விஷயம் உங்களுக்குப் புரியவில்லை என்பதை உணருகிற அவர்கள், அதை ஒரு காகிதத்தில் எழுதி அதே கண்ணாடி வழியாக உங்களிடம் காட்டுகிறார்கள்.. எழுதியிருக்கிற வார்த்தைகளை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.. அந்த வார்த்தைகளை உங்களால் எந்தளவுக்குப் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறீர்கள்? இத்தகைய சூழ்நிலையில் அவர்களோடு பேசுவது முடியாத காரியம் என்றே நினைப்பீர்கள். ஏன்? ஏனென்றால், அவர்கள் எழுதிய வார்த்தைகளை நீங்கள் ஒருபோதும் பேசிக் கேட்டதே இல்லை. காதுகேளாதோரில் பெரும்பாலான ஆட்களின் நிலைமை இதுதான்.
காதுகேளாதோர் பேச்சுத்தொடர்பு கொள்ள மிகச் சிறந்த வழியாக இருப்பது சைகை மொழியே ஆகும். இம்மொழியில், ஒருவர் தனது அங்க அசைவுகளாலேயே கருத்துகளைத் தெரியப்படுத்துகிறார். இந்த அங்க அசைவுகளும் முக பாவனைகளும் சைகை மொழிக்கே உரிய இலக்கண விதிப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன. இவ்வாறு, இது பார்த்துப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியாகிறது; இதன் மூலமாகவே, விஷயங்கள் கண்களுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றன.
சொல்லப்போனால், காதுகேளாத ஒருவர் சைகை மொழியில் பேசும்போது, அவருடைய ஒவ்வொரு அங்க அசைவுக்கும் முக பாவனைக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும். ஆட்களுடைய மனதைக் கவரும் நோக்கத்தோடு அத்தகைய முக பாவனைகள் செய்யப்படுவதில்லை. அவை சைகை மொழி இலக்கணத்தின் உயிர்நாடியாக இருக்கின்றன. உதாரணத்திற்கு: புருவங்களை உயர்த்தியபடி கேள்வி கேட்பது, பதிலை எதிர்பார்க்காமல் கேட்கப்படும் கேள்வியைக் குறிக்கலாம், அல்லது ‘ஆம்’ ‘இல்லை’ போன்ற பதிலை வரவழைக்கிற கேள்வியைக் குறிக்கலாம். புருவங்களைச் சுருக்கிக் கேட்கப்படுகிற கேள்வி, யார்?, என்ன?, எங்கே?, எப்போது?, ஏன்?, எப்படி? என்பவற்றை அர்த்தப்படுத்தலாம். குறிப்பிட்ட சில வாய் அசைவுகள், ஒரு பொருள் எவ்வளவு பெரியது என்பதையோ ஒரு செயல் எந்தளவு தீவிரமானது என்பதையோ தெரிவிக்கலாம். காதுகேளாத ஒருவர் தன் தலையை ஆட்டுகிற விதமும், தோள்களை உயர்த்துகிற விதமும், கன்னங்களை அசைக்கிற விதமும், கண்களைச் சிமிட்டுகிற விதமும் அவர் சொல்ல நினைக்கிற விஷயத்திலுள்ள அத்தனை அர்த்தங்களையும் ஒன்றுவிடாமல் வெளிப்படுத்துகின்றன.
விதவிதமான இத்தகைய அங்க அசைவுகள் கண்களுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் விருந்தளிக்கின்றன. காதுகேளாத ஒருவருக்கு இந்த மொழி நன்கு தெரிந்திருந்தால் எந்த விஷயத்தையும் அவரால் தெரிவிக்க முடியும்; அது கவிதையோ தொழில்நுட்பமோ, காதலோ நகைச்சுவையோ, பார்க்க முடிந்தவையோ பார்க்க முடியாதவையோ, எதுவானாலும் சரி அவரால் தெரிவிக்க முடியும்.
இதயத்தைத் தொடும் சைகை மொழிப் பிரசுரங்கள்
காதுகேளாத ஒருவருக்குச் சைகை மொழியில் யெகோவாவைப் பற்றிய அறிவைப் புகட்டும்போது, அவரால் அந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது, அதோடு அந்த விஷயத்தின் ஊற்றுமூலர்மீது ‘விசுவாசம் வைக்க’ முடிகிறது. அதனால்தான், யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதிலுமுள்ள காதுகேளாதோரிடம் பிரசங்கிப்பதற்காகவும் அவர்களுடைய நன்மைக்காகப் பிரசுரங்களைத் தயாரிப்பதற்காகவும் ஊக்கமான முயற்சியெடுத்து வந்திருக்கிறார்கள். (ரோ. 10:14) தற்போது, உலகம் முழுக்க சைகை மொழிக்கென்று 58 மொழிபெயர்ப்புக் குழுக்கள் இருக்கின்றன; டிவிடி-யில் சைகை மொழிப் பிரசுரங்கள் 40 சைகை மொழிகளில் கிடைக்கின்றன. இந்தக் கடின உழைப்புக்கெல்லாம் பலன் கிடைத்திருக்கிறதா?
ஜெரமியின் அப்பா அம்மா இருவருமே காதுகேளாதவர்கள். அவர் சொல்கிறார்: “எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது; ஒருநாள் அப்பா தன்னுடைய படுக்கை அறைக்குப் போய், காவற்கோபுர பத்திரிகையிலிருந்த கட்டுரையில் ஒருசில பாராக்களை மணிக்கணக்காக விழுந்துவிழுந்து படித்துக்கொண்டிருந்தார். பிறகு திடீரென அறையைவிட்டு வெளியே வந்தார், அவருடைய முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல பிரகாசித்தது; ‘எனக்குப் புரிந்துவிட்டது! புரிந்துவிட்டது!’ என்று சைகை மொழியில் உற்சாகம் கொப்பளிக்க சொன்னார். பின்பு, அவர் புரிந்துகொண்ட விஷயத்தை என்னிடம் விளக்கினார். அப்போது எனக்கு 12 வயது. உடனே நான் அந்த பாராக்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, அவரிடம் சைகை மொழியில், ‘அப்பா, நீங்கள் சொல்கிற மாதிரி இதில் இல்லையே. இதன் அர்த்தம் . . . ’ என்று சொல்ல ஆரம்பித்தேன். அப்போது, அவர் என்னை நிறுத்தும்படி கைகாட்டிவிட்டு அந்த விஷயத்தைத் தானாகவே படித்துப் புரிந்துகொள்ள மறுபடியும் தன் அறைக்குள் போய்விட்டார். அவருடைய விடாமுயற்சியைக் கண்டு நான் வியந்தபோதிலும், அவரது முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது; அந்தக் காட்சியை என்னால் மறக்கவே முடியாது. ஆனால், இப்போதெல்லாம் சைகை மொழிப் பிரசுரங்கள் டிவிடி-யில் கிடைப்பதால், விஷயங்களை அவரால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. யெகோவாவை எப்படியெல்லாம் ரசித்து ருசிக்கிறார் என்பதை அவர் தெரியப்படுத்தும்போது அவருடைய முகத்தில் படருகிற சந்தோஷத்தைப் பார்க்கும்போது எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்துப்போகும்!”
மற்றொரு அனுபவத்தைக் கேளுங்கள்: சிலி நாட்டில் ஹெஸென்யா என்ற காதுகேளாத ஓர் இளம் பெண்ணை யெகோவாவின் சாட்சித் தம்பதியர் சந்தித்துப் பேசினார்கள். சிலியன் சைகை மொழியிலுள்ள என்னுடைய பைபிள் கதை புத்தகம்—டிவிடி-யை அவளுடைய அம்மாவின் அனுமதியோடு அவளுக்குப் போட்டுக்காட்டினார்கள். அவர்கள் சொல்வதாவது: “ஹெஸென்யா அதைப் பார்க்க ஆரம்பித்தபோது, அவள் முகத்தில் அப்படியொரு சிரிப்பு! ஆனால் சற்று நேரத்திற்குப்பின் அவள் அழ ஆரம்பித்தாள். ஏன் அழுகிறாள் என அவளுடைய அம்மா கேட்டபோது, அந்த டிவிடி தனக்கு ரொம்பவும் பிடித்துப்போனதாகச் சொன்னாள். டிவிடி-யில் பார்க்கிற எல்லாவற்றையுமே அவளால் புரிந்துகொள்ள முடிந்ததை அப்போது அவளுடைய அம்மா தெரிந்துகொண்டார்.”
வெனிசுவேலாவின் கிராமப்புறப் பகுதியில் காதுகேளாத ஒரு பெண் வசித்துவந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது; பின்பு, அந்தப் பெண் இரண்டாவது முறையாகக் கர்ப்பமானார். பணவசதி இல்லாததால் இன்னொரு குழந்தை வேண்டாமெனத் தீர்மானித்து கருச்சிதைவு செய்துகொள்ள அந்தப் பெண்ணும் அவரது கணவரும் நினைத்திருந்தார்கள். இதைப் பற்றியெல்லாம் தெரிந்திராத யெகோவாவின் சாட்சிகள் அவர்களைச் சந்தித்தபோது, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற வெனிசுவேலன் சைகை மொழி வீடியோவில் 12-வது பாடத்தைப் போட்டுக் காட்டினார்கள். கருச்சிதைவு செய்வதையும், கொலை செய்வதையும் பற்றிக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்று அந்தப் பாடத்தில் விளக்கப்பட்டிருந்தது. யெகோவாவின் சாட்சிகள் அந்தப் பாடத்தைத் தன்னோடு படித்ததற்காக, தான் எவ்வளவு நன்றியுள்ளவளாய் இருக்கிறாள் எனப் பிற்பாடு அந்தப் பெண் அவர்களிடம் சொன்னாள். அதைப் பார்த்ததால்தான் கருச்சிதைவு செய்துகொள்ளும் எண்ணத்தையே கைவிட்டிருந்ததாகவும் சொன்னாள். டிவிடி-யில் உள்ள சைகை மொழிப் பிரசுரத்தைப் பார்த்ததால் ஓர் உயிரே காப்பாற்றப்பட்டது!
லரேன் என்ற காதுகேளாத சகோதரி ஒருவர் சொல்கிறார்: “பைபிளைக் கற்றுக்கொள்வது, படத் துண்டுகளை ஒன்றோடொன்று இணைத்து விளையாடுகிற ஜிக்சா புதிரைப் போல் இருந்தது. ஆரம்பத்தில் பைபிளை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை, நடுநடுவே நிறையப் படத் துண்டுகள் இல்லாததுபோல் உணர்ந்தேன். என்றாலும், சைகை மொழிப் பிரசுரங்கள் அதிகமாகக் கிடைத்தபோது பைபிள் சத்தியங்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது, அந்தப் படத் துண்டுகளையெல்லாம் இணைத்துப் பார்ப்பதுபோல் இருந்தது.” 38 வருடங்களாகச் சத்தியத்தில் இருக்கிற ஜார்ஜ் என்ற காதுகேளாத சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “ஒரு விஷயத்தை ஒருவர் தானாகவே புரிந்துகொள்ளும்போதுதான் சுய மரியாதையும் தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது. சைகை மொழியிலுள்ள டிவிடி-கள் என் ஆன்மீக வளர்ச்சிக்கு ரொம்பவே கைகொடுத்திருக்கின்றன.”
“என் மொழியிலேயே கூட்டங்கள்!”
யெகோவாவின் சாட்சிகள் சைகை மொழிப் பிரசுரங்களைத் தயாரிப்பதோடு, சைகை மொழிச் சபைகளையும் நடத்திவருகிறார்கள்; அங்கு கூட்டங்கள் முழுக்க முழுக்க சைகை மொழியிலேயே நடத்தப்படுகின்றன. தற்போது, உலகெங்கும் 1,100-க்கும் அதிகமான சைகை மொழிச் சபைகள் இருக்கின்றன. காதுகேளாத சபையாருக்கு அவர்களுடைய மொழியிலேயே பேச்சுகள் கொடுக்கப்படுகின்றன; ஆம், அவர்கள் சிந்திக்கிற மொழியிலேயே பைபிள் சத்தியங்கள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அவர்களுடைய பண்பாட்டிற்கும் வாழ்க்கை அனுபவத்திற்கும் மரியாதை காண்பிக்கிற விதத்தில் அவை தெரிவிக்கப்படுகின்றன.
சைகை மொழிச் சபைகளால் ஏதாவது பலன் கிடைத்திருக்கிறதா? சிரல் என்பவரின் அனுபவத்தைக் கேளுங்கள்; இவர் 1955-ல் யெகோவாவின் சாட்சியாக ஞானஸ்நானம் பெற்றார். அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களைப் படித்துப் புரிந்துகொள்வதற்குப் பல வருடங்களாகவே தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துவந்தார், கிறிஸ்தவக் கூட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டார். கூட்டங்களின்போது, சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் சிலசமயம் இருந்தார்கள், சிலசமயம் இருக்கவில்லை. அப்படி யாரும் இல்லாத சந்தர்ப்பங்களில், மற்ற அன்பான சகோதர சகோதரிகள் மேடையிலிருந்து கொடுக்கப்படுகிற பேச்சுகளைக் குறிப்பெடுத்து அவருக்குக் காட்டினார்கள். அவர் ஞானஸ்நானம் பெற்று சுமார் 34 வருடங்களுக்குப் பின்புதான், அதாவது 1989-ல்தான், அமெரிக்காவிலுள்ள நியு யார்க் நகரில் முதன்முதலாக சைகை மொழிச் சபை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அந்தச் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்ததற்குப் பின் சிரல் எப்படி உணர்ந்தார்? “இருண்ட சுரங்கப் பாதையிலிருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் இருந்தது. . . . ஏனென்றால், இப்போது என் மொழியிலேயே கூட்டங்கள்!”
காதுகேளாதோர் தவறாமல் கூடிவந்து, கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கும் அவரை வழிபடுவதற்கும் ஏற்ற இடங்களாகச் சைகை மொழிச் சபைகள் திகழ்கின்றன. இங்குதான் அவர்கள் உணர்ச்சி ரீதியில் செழித்தோங்குகிறார்கள். இந்த உலகம் காதுகேளாதோரை ஒதுக்கி வைப்பதால் அவர்கள் பாலைவனத்தில் இருப்பதுபோல் உணருகிறார்கள்; ஆனால் இந்தச் சபைகளுக்கு வரும்போது பாலைவனச் சோலைகளில் இருப்பதுபோல் உணருகிறார்கள். ஏனென்றால், இங்கே அவர்களால் நன்றாகப் பேச்சுத்தொடர்புகொள்ள முடிகிறது, மற்றவர்களோடு கூடிப்பழகவும் முடிகிறது. அதோடு, பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடையவும், யெகோவாவின் சேவையில் பொறுப்புகளைப் பெறத் தகுதிபெறவும் முடிகிறது. காதுகேளாத சாட்சிகள் பலர் முழுநேர ஊழியர்களாகச் சேவை செய்துவருகிறார்கள். அவர்களில் சிலர், காதுகேளாத மற்றவர்களுக்கு யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுப்பதற்காக வேறு நாடுகளுக்குக் குடிமாறிச் சென்றிருக்கிறார்கள். காதுகேளாத சகோதரர்கள் திறம்பட்ட போதகர்களாகவும் ஒழுங்கமைப்பாளர்களாகவும் மேய்ப்பர்களாகவும் ஆவதற்குக் கற்றுக்கொள்கிறார்கள்; இதனால் அநேக சகோதரர்கள் சபைப் பொறுப்புகளைக் கவனிப்பதற்குத் தகுதி பெறுகிறார்கள்.
அமெரிக்காவில், 100-க்கும் மேலாக சைகை மொழிச் சபைகளும், சுமார் 80 தொகுதிகளும் இருக்கின்றன. பிரேசிலில், சுமார் 300 சைகை மொழிச் சபைகளும் 400-க்கும் அதிகமான தொகுதிகளும் இருக்கின்றன. மெக்சிகோவில் கிட்டத்தட்ட 300 சைகை மொழிச் சபைகள் இருக்கின்றன. ரஷ்யாவில் 30-க்கும் அதிகமான சைகை மொழிச் சபைகளும் 113 தொகுதிகளும் இருக்கின்றன. உலகெங்கும் சைகை மொழிச் சபைகளில் ஏற்பட்டுவருகிற வளர்ச்சிக்கு இவையெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே.
யெகோவாவின் சாட்சிகள் சைகை மொழியில் வட்டார, மாவட்ட மாநாடுகளைக்கூட நடத்துகிறார்கள். கடந்த வருடம், உலகெங்கும் வெவ்வேறு சைகை மொழிகளில் 120-க்கும் அதிகமான மாவட்ட மாநாடுகள் நடத்தப்பட்டன. இதுபோன்ற மாநாடுகளில் கிடைக்கிற காலத்திற்கேற்ற உணவிலிருந்து காதுகேளாத சாட்சிகள் போஷாக்கைப் பெறுகிறார்கள்; இதனால், தாங்களும் உலகளாவிய கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் பாகமாக இருப்பதை உணருகிறார்கள்.
லெனர்ட் என்ற காதுகேளாத சகோதரர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக ஒரு யெகோவாவின் சாட்சியாய் இருக்கிறார். அவர் சொல்கிறார்: “யெகோவாதான் உண்மையான கடவுள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஆனாலும், அவர் ஏன் துன்பங்களை அனுமதிக்கிறார் என்று எனக்குச் சரியாகப் புரியாமல் இருந்தது. இதனால், சிலசமயம் அவர்மீது கோபம்கோபமாக வந்தது. ஒருசமயம் சைகை மொழி மாவட்ட மாநாட்டில் கொடுக்கப்பட்ட ஒரு பேச்சை ‘கேட்ட’ பிறகுதான், கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் என்ற விஷயம் புரிந்தது. பேச்சு முடிந்தவுடன் என் மனைவி முழங்கையால் என்னை மெல்ல இடித்து, ‘இப்போது, பதில் கிடைத்துவிட்டதா?’ என்று கேட்டாள். ஆம் என்று என்னால் உள்ளப்பூர்வமாக ‘சொல்ல’ முடிந்தது! கடந்த 25 வருடங்களாக நான் யெகோவாவை விட்டுவிடாமல் அவரைச் சேவித்து வந்திருப்பதை நினைத்துச் சந்தோஷப்படுகிறேன். அவர்மீது எனக்கு எப்போதுமே அன்பு இருந்தாலும், அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தேன். இன்றைக்கோ என்னால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது!”
இருதயப்பூர்வ நன்றி
காதுகேளாதோர் யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்போது என்னென்ன “உணர்ச்சிகளை” அவருடைய முகத்தில் பார்க்கிறார்கள்? அன்பு, கரிசனை, நியாயம், பற்றுமாறாத்தன்மை, அன்புமாறா கருணை என எத்தனையோ உணர்ச்சிகளைப் பார்க்கிறார்கள்!
உலகெங்குமுள்ள காதுகேளாத யெகோவாவின் சாட்சிகள் யெகோவாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், இன்னும் தெளிவாகப் பார்த்துக்கொண்டே இருக்கப்போகிறார்கள். அப்படிப்பட்டவர்களை நெஞ்சார நேசிக்கிற ‘யெகோவா தம் முகத்தை அவர்கள்மீது பிரகாசிக்கச் செய்திருக்கிறார்.’ (எண். 6:25, NW) யெகோவாவைப் பற்றி அறிந்துகொண்டதற்காக அவர்களெல்லாரும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்!
[பக்கம் 24, 25-ன் படங்கள்]
உலகம் முழுவதிலும் 1,100-க்கும் அதிகமான சைகை மொழிச் சபைகள் இருக்கின்றன
[பக்கம் 26-ன் படங்கள்]
யெகோவா தம் முகத்தைக் காதுகேளாதோர்மீது பிரகாசிக்கச் செய்திருக்கிறார்