காதுகேளாத சகோதர சகோதரிகளை நெஞ்சார நேசியுங்கள்!
இன்று கடவுளுடைய மக்கள் ஆன்மீக ரீதியில் சகோதர சகோதரிகளாக, ஒரு பெரிய குடும்பமாக இருக்கிறார்கள். இந்தக் குடும்பம் நேற்று இன்று தோன்றியதல்ல, பூர்வ காலத்தில் வாழ்ந்த சாமுவேல், தாவீது, சிம்சோன், ராகாப், மோசே, ஆபிரகாம், சாராள், நோவா, ஆபேல் போன்றோருடைய காலம்தொட்டே இருந்து வந்திருக்கிறது. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களில் காதுகேளாதோர் பலரும் உள்ளனர். உதாரணமாக, மங்கோலியாவில் முதன்முதலாகச் சத்தியத்திற்கு வந்த இரண்டு பேர் காதுகேளாதோரே. ரஷ்யாவில் காதுகேளாதோராய் இருந்த நம் சக விசுவாசிகள் உண்மையோடு நிலைத்திருந்ததன் காரணமாகத்தான் மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் நம்மால் வெற்றிபெற முடிந்தது.
நவீன காலங்களில், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பார் சைகை மொழியில் பிரசுரங்களை வெளியிட்டிருக்கிறார்கள்; அதோடு, சைகை மொழியில் சபைகளை நிறுவியிருக்கிறார்கள், மாநாடுகளையும் நடத்தியிருக்கிறார்கள். (மத். 24:45) இதனால் காதுகேளாதோர் ஏராளமான நன்மைகளை அடைந்திருக்கிறார்கள்.a இந்த ஏற்பாடுகள் எதுவும் இல்லாத காலத்தில், காதுகேளாதவர்களால் எவ்வாறு உண்மைக் கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்திருக்கும், சத்தியத்தில் முன்னேற முடிந்திருக்கும் என்றெல்லாம் நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள காதுகேளாதோருக்கு எப்படி உதவலாமென்று நினைத்துப் பார்த்ததுண்டா?
முன்பெல்லாம். . .
காதுகேளாத வயதானோரிடம், ‘கடவுளைப் பற்றி நீங்கள் எப்படித் தெரிந்துகொண்டீர்கள்’ எனக் கேட்டால் பொதுவாக அவர்கள் என்ன சொல்வார்கள்? கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்பதை அவர்கள் முதன்முதலாகத் தெரிந்துகொண்டபோது எப்படி உணர்ந்தார்கள் என்றும், அது அவர்களுடைய வாழ்க்கையை எப்படி அடியோடு மாற்றியது என்றும் சொல்வார்கள். சைகை மொழியில் வீடியோக்களோ டிவிடிகளோ கிடைப்பதற்கு முன்பு சத்தியத்தில் வருடக்கணக்காக நிலைத்திருக்க அதுவே அவர்களுக்கு உதவியது என்றும் சொல்வார்கள். சைகை மொழியில் கூட்டங்கள் நடைபெறாதபோது அல்லது மொழிபெயர்க்கப்படாதபோது எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என அவர்கள் சொல்வார்கள். யாராவது தங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, பேச்சின் முக்கியக் குறிப்புகளை ஒரு தாளில் எழுதிக் காட்ட வேண்டியிருந்திருக்கும். காதுகேளாத ஒரு சகோதரர், தன்னுடைய சபைக்கு மொழிபெயர்ப்பாளர் ஒருவர் வரும்வரை ஏழு வருடங்களாக இப்படித்தான் பைபிள் சத்தியங்களைக் கற்றுவந்தாராம்.
காதுகேளாத முதிர்ந்த சகோதர சகோதரிகள், காது கேட்கிறவர்களிடம் நற்செய்தியை எவ்வாறு அறிவித்தார்கள் என்பதை இப்போது நினைவுகூருகிறார்கள். நற்செய்தி சுருக்கமாக எழுதப்பட்ட ஓர் அட்டையை ஒரு கையிலும், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை இன்னொரு கையிலும் பிடித்துக்கொண்டு ஊழியம் செய்தார்களாம். காதுகேளாத ஒருவருக்கு பைபிள் படிப்பு நடத்துவதென்பது ரொம்பவே கஷ்டமாக இருந்ததாம்; ஏனென்றால், அச்சிடப்பட்ட பிரசுரங்களை மட்டுமே அப்போது பயன்படுத்த வேண்டியிருந்ததால் இரண்டு பேருமே அதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடினார்களாம். தாங்கள் சொல்வது மற்றவர்களுக்குப் புரியாதபோது எந்தளவு விரக்தி அடைந்தார்கள் என்பதைக் காதுகேளாத முதியவர்கள் இப்போது நினைத்துப் பார்க்கிறார்கள். யெகோவாவை அவர்கள் நெஞ்சார நேசித்தபோதிலும், சத்தியத்தை மற்றவர்களிடம் தன்னம்பிக்கையோடு பேச முடியாமல் தவித்த தவிப்பு அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஏனென்றால், ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்திருக்கிறார்களா இல்லையா என்று அவர்களுக்கே சந்தேகமாக இருந்ததாம்.
இத்தனை இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் காதுகேளாத நம் சகோதர சகோதரிகள் உத்தமத்தில் உறுதியாய் நின்றிருக்கிறார்கள். (யோபு 2:3) யெகோவா தங்களுக்காக ஏதாவது செய்வாரென்று அவர்கள் ஏக்கத்தோடு காத்திருந்தார்கள். (சங். 37:7) அதை ஈடுகட்டும் வகையில் யெகோவா இப்போது அவர்களை அளவில்லாமல் ஆசீர்வதித்து வருகிறார், அவர்களில் பெரும்பாலோர் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே!
கணவராகவும் தகப்பனாகவும் இருக்கிற காதுகேளாத ஒரு சகோதரர் எடுத்த முயற்சிகளைச் சற்றுக் கவனியுங்கள். சைகை மொழியில் வீடியோக்கள் கிடைப்பதற்கு முன்பே குடும்பப் படிப்பை அவர் தவறாமல் நடத்தி வந்திருந்தார். அவருடைய மகன் இவ்வாறு சொல்கிறார்: “குடும்பப் படிப்பை நடத்துவது என் அப்பாவுக்கு எப்போதுமே சிரமமாக இருந்தது. ஏனென்றால், அச்சிடப்பட்ட பிரசுரங்களை வைத்துத்தான் அவர் எங்களுக்குப் படிப்பு நடத்த வேண்டியிருந்தது. அவற்றைப் பெரும்பாலும் அவரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. போதாக்குறைக்கு, நாங்களும் அவருக்குக் கஷ்டம் கொடுத்தோம். அவர் ஒரு விஷயத்திற்குச் சரியான விளக்கம் அளிக்காதபோது உடனே அவரிடம், ‘நீங்கள் சொல்வது தப்பு’ எனச் சொல்லி அவரைத் தர்மசங்கடப்படுத்திவிடுவோம். ஆனாலும் அவர் குடும்பப் படிப்பை நடத்தத் தவறியதே இல்லை. தனக்கு ஆங்கிலம் சரியாகப் புரியாததால் அவ்வப்போது தர்மசங்கடமாக உணர்ந்தாலும் பரவாயில்லை, பிள்ளைகளாகிய நாங்கள் யெகோவாவைப் பற்றிக் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் நினைத்தார்.”
நியு யார்க்கிலுள்ள புருக்லினில் வசிக்கும் ரிச்சர்ட் என்ற சகோதரரின் உதாரணத்தையும் சிந்திப்போம். அவர் 70 வயதைத் தாண்டியவர். அவருக்குக் காது கேட்காது, கண்ணும் தெரியாது. ஆனாலும் கிறிஸ்தவக் கூட்டங்களைத் தவறவிடாதவர் எனப் பெயரெடுத்திருக்கிறார். கூட்டங்களுக்குச் செல்வதற்காக அவர் சுரங்க ரயிலில் தனியாகப் பயணிப்பார்; இடையிடையே வரும் நிறுத்தங்களை எண்ணிக்கொண்டே வருவார், இறங்க வேண்டிய இடம் வரும்போது சரியாக இறங்கிவிடுவார். ஒருசமயம் குளிர்காலத்தில், கனத்த பனிமழை பொழிந்துகொண்டிருந்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. சபையிலிருந்த எல்லாருக்கும் இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது, ஆனால், எப்படியோ அவருக்கு மட்டும் அந்தச் செய்தி தெரிவிக்கப்படாமல் விட்டுப்போனது. இதை உணர்ந்த சகோதரர்கள், அவரைத் தேடி இங்கும் அங்குமாய் அலைந்தார்கள்; கடைசியில் அவர் ராஜ்ய மன்றத்திற்கு வெளியே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தார்கள்! ராஜ்ய மன்றத்தின் கதவுகளை யாராவது வந்து திறப்பார்கள் என்று அவர் பொறுமையோடு காத்திருந்தார். ‘கொட்டுகிற பனியில் ஏன் வெளியே வந்தீர்கள்?’ எனச் சகோதரர்கள் கேட்டபோது, அவர் சொன்ன பதில்: “நான் யெகோவாவை நேசிக்கிறேன்.”
நீங்கள் என்ன செய்யலாம்?
நீங்கள் வசிக்கும் பகுதியில் காதுகேளாதோர் இருக்கிறார்களா? அவர்களோடு பேசுவதற்காகச் சைகை மொழியை உங்களால் ஓரளவு கற்றுக்கொள்ள முடியுமா? பொதுவாக, காதுகேளாதோர் அந்த மொழியை மற்றவர்களுக்கு மிக நயமாகவும், மிகப் பொறுமையாகவும் கற்றுக்கொடுப்பார்கள். காதுகேளாத ஒருவரை நீங்கள் சந்தர்ப்ப வசமாகவோ, ஊழியத்திலோ சந்தித்தால் என்ன செய்யலாம்? அவர்களிடம் பேச முயலுங்கள். அங்க அசைவுகள் செய்தோ, குறிப்புகள் எழுதியோ, சித்திரங்கள் வரைந்தோ, படங்களைக் காட்டியோ அவர்களோடு பேச முயலுங்கள். சத்தியத்தில் ஆர்வம் இல்லை என அவர்கள் தெரிவித்தாலும்கூட, காதுகேளாத ஒரு சாட்சியிடம் அல்லது சைகை மொழி தெரிந்த ஒரு சாட்சியிடம் அவர்களைப் போய்ச் சந்திக்கும்படி கேட்டுக்கொள்ளுங்கள். ஏனென்றால், சைகை மொழியில் அவர்களிடம் பைபிள் செய்தியைச் சொல்லும்போது அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டலாம்.
நீங்கள் ஒருவேளை சைகை மொழியைக் கற்றுவருகிறவராகவும், அந்த மொழிச் சபையோடு கூட்டுறவு கொள்கிறவராகவும் இருக்கலாம். சைகைகளைச் செய்வதிலும் அவற்றைப் புரிந்துகொள்வதிலும் நீங்கள் எப்படி அதிகத் திறம்பட்டவர்களாய் ஆகலாம்? காதுகேட்கும் பிரஸ்தாபிகளிடமும்கூட நீங்கள் சைகை மொழியிலேயே பேசலாம். இப்படிப் பேசும்போது, சைகை மொழியிலேயே யோசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆனால், சைகை காட்டிப் பேசுவது சில சமயம் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும்போது வாய்திறந்து பேச நீங்கள் தூண்டப்படலாம். எந்தவொரு மொழியிலும் சரளமாகப் பேசுவதற்கு ஆரம்பத்தில் கஷ்டப்பட்டுத்தான் ஆக வேண்டும்; சைகை மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல.
சைகை மொழியில் பேசுவதற்காக ஊக்கமாய் முயற்சி எடுப்பது காதுகேளாத சகோதர சகோதரிகள்மீது உங்களுக்கு அன்பும் மரியாதையும் இருப்பதைக் காட்டுகிறது. பள்ளியில் அல்லது வேலையிடத்தில் உள்ள ஆட்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் அவர்கள் அவதிப்படுவதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். காதுகேளாத சகோதரர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “என்னைச் சுற்றியிருக்கிறவர்கள் என்ன பேசுகிறார்களென்றே எனக்குப் புரிவதில்லை; இதனால் தனிமை உணர்வு அடிக்கடி என்னை வாட்டுகிறது; ஒதுக்கி வைக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது; வெறுப்பும், கோபமும் பொங்கியெழுகிறது. சிலசமயம் நான் எப்படி உணருகிறேன் என்பதை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.” காதுகேளாத சகோதர சகோதரிகளுக்கு நம்முடைய சபைக் கூட்டங்கள் பாலைவனச் சோலையாக இருக்க வேண்டும்; அங்கே அவர்கள் தஞ்சம் புகுந்து ஆன்மீக உணவைப் பெற வேண்டும், அன்பான உரையாடலிலும் அன்யோன்யமான சகவாசத்திலும் திளைக்க வேண்டும்.—யோவா. 13:34, 35.
நம்முடைய சபைகளில் காதுகேளாதோர் அடங்கிய சிறுசிறு தொகுதிகள் இருந்தால், அவற்றுக்கும் நம் உதவி தேவை. கூட்டங்களில் கொடுக்கப்படும் பேச்சுகள் அந்தத் தொகுதியில் உள்ளவர்களுக்காகச் சைகை மொழியில் மொழிபெயர்க்கப்படுகின்றன. காதுகேளாதோர், நிகழ்ச்சிகளை முழுமையாய்ப் புரிந்துகொள்வதற்காக ராஜ்ய மன்றத்தின் முன்பகுதியிலுள்ள இருக்கைகளில் அமர்ந்துகொள்கிறார்கள். இதனால், ஒரே நேரத்தில் பேச்சாளரையும் மொழிபெயர்ப்பாளரையும் எந்த இடைஞ்சலுமின்றி அவர்களால் பார்க்க முடிகிறது. இந்த ஏற்பாடு சபையிலுள்ள மற்றவர்களுக்குச் சீக்கிரத்திலேயே பழகிவிடும், அவர்களுக்கு அது கவனச்சிதறலாக இருக்காது என்பதை அனுபவங்கள் காட்டியிருக்கின்றன. இந்த ஏற்பாடு மாநாடுகளுக்கும் பொருந்துகிறது. ஒரு தகவலைக் காதுகேளாதோர் எப்படி அர்த்தமுள்ள விதத்திலும் இயல்பான விதத்திலும் தெரிவிப்பார்களோ அப்படியே தெரிவிப்பதற்குக் கடினமாக உழைக்கிற மொழிபெயர்ப்பாளர்கள் நம் பாராட்டுக்குரியவர்கள்!
உங்கள் சபையில், சைகை மொழித் தொகுதி இருக்கலாம், அல்லது காதுகேட்காத ஒரு சிலர் இருக்கலாம். அப்படியானால், இவர்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டுவதற்காக நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் வீட்டிற்கு அவர்களைக் கூப்பிடுங்கள். முடிந்தால், சில சைகைகளைக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களிடம் பேச முடியாது என்று நினைத்துப் பின்வாங்கிவிடாதீர்கள். முயற்சி செய்தீர்களென்றால், எப்படியாவது அவர்களிடம் பேசப் பழகிவிடுவீர்கள். நீங்கள் காட்டுகிற இந்த அன்பை அவர்களும் மறக்க மாட்டார்கள், நீங்களும் மறக்க மாட்டீர்கள். (1 யோ. 4:8) காதுகேளாத நம் சக விசுவாசிகளிடமிருந்து நாம் எத்தனையோ நன்மைகளை அடையலாம். அவர்கள், உரையாடுவதில் கெட்டிக்காரர்கள், அறிவுக்கூர்மையில் வல்லவர்கள், நகைச்சுவையில் மன்னர்கள். காதுகேளாத பெற்றோரை உடைய ஒரு சகோதரர் இவ்வாறு சொல்கிறார்: “என் உலகமே காதுகேளாதோரைச் சுற்றித்தான் இருந்திருக்கிறது. அவர்களுக்கு நான் எவ்வளவோ நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். காதுகேளாத நம் சகோதர சகோதரிகளிடமிருந்து நாம் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.”
யெகோவா தம்முடைய உண்மை வணக்கத்தார் எல்லாரையும் நேசிக்கிறார், காதுகேளாதோர் உட்பட! விசுவாசத்திலும் சகிப்புத்தன்மையிலும் அவர்கள் வைக்கிற முன்மாதிரி யெகோவாவுடைய அமைப்பின் அழகுக்கு அழகு சேர்க்கிறது. எனவே, காதுகேளாத நம் சகோதர சகோதரிகளை நெஞ்சார நேசிப்போமாக!
[அடிக்குறிப்பு]
a ‘யெகோவா தம் முகத்தை அவர்கள்மீது பிரகாசிக்கச் செய்திருக்கிறார்’ என்ற கட்டுரையை ஆகஸ்ட் 15, 2009 தேதியிட்ட காவற்கோபுரத்தில் காண்க.
[பக்கம் 31-ன் படம்]
சைகை மொழியில் பைபிள் செய்தியைச் சொல்லும்போது காதுகேளாதவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டலாம்
[பக்கம் 32-ன் படங்கள்]
காதுகேளாத சகோதர சகோதரிகளுக்கு ஆன்மீக ஊக்கத்தை அளிக்கிற சபைக் கூட்டங்கள் பாலைவனச் சோலையாக இருக்க வேண்டும்