உங்கள் சபை பிராந்தியம் பெரியதா?
1 யூதேயாவிலிருந்த பட்டணங்கள் முதல் கலிலேயாவிலிருந்த கிராமங்கள் வரை பரந்து விரிந்திருந்த பூர்வ இஸ்ரவேலின் பெரிய பிராந்தியத்தில் இயேசு முழுமையாக சாட்சி கொடுத்தார். (மாற். 1:38, 39; லூக். 23:5) நாமும் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் நற்செய்தியை அறிவிக்க வேண்டும். (மாற். 13:10) எனினும், இந்தியாவில் ஒரு சிறிய அளவு பகுதியே ஊழியம் செய்ய சபைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது; இந்தப் பிராந்தியங்களிலும்கூட இன்னும் முழுமையாகவும் கிரமமாகவும் ஊழியம் செய்யப்பட வேண்டியிருப்பதை அறிக்கைகள் தொடர்ந்து காட்டுகின்றன. இன்னும் அநேகருக்கு நற்செய்தியை அறிவிக்க நாம் என்ன செய்யலாம்?
2 கவனமாக திட்டமிடுங்கள்: சபை பிராந்தியத்தை வரைபடங்களில் பிரிக்கையில் ஒவ்வொன்றிலும் 200 முதல் 300 வீடுகள் மட்டுமே இருக்கும்படி ஊழியக் கண்காணியும் பிராந்திய ஊழியரும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஒரு வருடத்தில் முழுமையாக முடிக்க முடியாதளவுக்கு அதிகமான பிராந்தியம் கைவசம் இல்லாதிருக்கும்படியும் அவர்கள் பார்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட பகுதிகளில் தங்கள் கொள்கையைப் பிடிவாதமாக பின்பற்றும் சிலர் நம் ஊழியத்தை தொடர்ந்து எதிர்த்து வருவது தெரிந்தால், அந்தப் பிராந்தியத்திற்குப் பதிலாக நியமிக்கப்படாத பிராந்தியத்தில் ஊழியம் செய்ய ஆரம்பிக்கலாம்; அங்குள்ளவர்கள் செவிகொடுத்து கேட்க விருப்பமுள்ளவர்களாக இருக்கலாம். (லூக்கா 9:5, 6-ஐ ஒப்பிடுக.) எனினும், சில சமயங்களில் அப்பகுதியிலுள்ள ஒரேவொரு நபர் மட்டுமே எதிர்ப்பை தூண்டிவிடுகிறவராக இருக்கையில் பகுத்துணர்வை உபயோகிக்க வேண்டும்; அவருடைய வீட்டையோ தெருவையோ “சந்திக்க வேண்டாம்” என வரைபடத்தில் குறித்துக்கொண்டு, எந்த அசம்பாவிதமும் நிகழாதபடி மற்ற பகுதிகளில் விவேகத்துடன் ஊழியம் செய்யலாம்.
3 வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அதிக நேரம் செலவழிக்கும்படி சபையார் அனைவரையுமே உற்சாகப்படுத்தலாம். வெளி ஊழியத்திற்கான கூட்டங்களுக்கு தயாராவதற்கும் அவற்றில் கலந்துகொள்வதற்கும் பெரும்பாலும் அதிக நேரம் செலவிடப்படுகிறது. இத்தனை முயற்சியும் எடுத்து ஒரு மணிநேரமோ அதற்கும் குறைவாகவோ ஊழியம் செய்துவிட்டு வருவது எத்தனை வருத்தமாக இருக்கிறது. நமக்கு பைபிள் படிப்புகள் அல்லது மறுசந்திப்புகள் இருக்கலாம்; ஆனால் அவற்றிற்கு செல்வதற்கு முன்பு, நமக்கு நியமிக்கப்பட்டுள்ள பிராந்தியத்தில் இரண்டு மணிநேரம் அல்லது மூன்று மணிநேரம்கூட ஊழியம் செய்யலாம். குடிசை பகுதிகளிலும் அடுத்தடுத்து வீடுகள் உள்ள காலனிகளிலும் ஆயிரக்கணக்கான ஆட்கள் அருகருகே வசிக்கின்றனர். அப்படிப்பட்ட பகுதிகள் பாதுகாப்பானதாக இருக்கையில் தனியாகவே ஊழியம் செய்வது நமக்கு பயனுள்ளதாக இருக்குமல்லவா? உடன் ஊழியம் செய்யும் சாட்சியின் பார்வையில் படும்படியாகவே தனியாக ஊழியம் செய்கையில் இரண்டு மடங்கு பிராந்தியத்தில் ஊழியம் செய்து முடிக்கவும், ஒவ்வொரு வீட்டிலும் தனிப்பட்ட விதத்தில் சாட்சி கொடுக்கவும் முடியும்.
4 நல்ல திட்டமிடுதல் என்பது சரியான மொழி பிரசுரங்கள் நம் வசம் இருப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. மாநகரங்களைப் பொருத்ததில், ஒவ்வொரு வரைபடத்திலும் அங்கு உபயோகிக்கப்படும் மொழியை குறித்து வைப்பது அவசியமாக இருக்கலாம். இது, தங்கள் தொகுதியிலுள்ளவர்கள் உரிய பிரசுரங்களை எடுத்துச் செல்வதை புத்தகப் படிப்பு கண்காணிகள் உறுதி செய்துகொள்வதற்கு வசதியாக இருக்கும்.
5 முழுமையாக ஒத்துழையுங்கள்: பெரிய பிராந்தியத்தில் ஊழியம் செய்கையில் சபையிலுள்ள எல்லாரும் ஒத்துழைக்கும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். கலந்துபேசுவதற்கு விருப்பமுள்ள வீட்டுக்காரர்களை சந்திக்கையில் பகுத்துணர்வைப் பயன்படுத்துவது அவசியம். பிராந்தியத்திலுள்ள ஒவ்வொருவரையும் சந்திக்கவும் உணர்வுள்ளவர்களாக இருங்கள்; உங்கள் வெளி ஊழிய தொகுதியில் உங்களுக்காக காத்திருப்பவர்களையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். ஆர்வம் காட்டுகிறவரிடம் நீண்ட நேரத்திற்கு பேச நேர்ந்தால் தொகுதியிலுள்ள மற்றவர்கள் காத்திருக்காமல் ஊழியத்தைத் தொடர ஏற்பாடுகள் செய்ய முடியுமா?
6 ஆர்வம் காட்டிய அனைவரையும் தவறாமல் போய் சந்திக்க திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள். ஆர்வம் காட்டியவரின் விலாசத்தை மட்டுமல்லாமல் போன் நம்பரையும் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள்; அப்போதுதான் அவரை மீண்டும் தொடர்புகொண்டு போனில் மேலும் சாட்சி கொடுக்க முடியும். பெயரிடப்படாத தெரு இருந்தால் அல்லது இலக்கமிடப்படாத வீடுகள் இருந்தால், ஆர்வம் காட்டியவரை கண்டுபிடித்து மறுசந்திப்பு செய்வதற்காக கவனமாக வரைபடத்தைத் தயாரியுங்கள் அல்லது விவரங்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
7 “எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும் போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரி[யுங்கள்]” என்ற இயேசுவின் அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிவது நமக்குக் கிடைத்த விசேஷித்த பாக்கியம்! (மத். 10:11) அதிக பலன் தரும் இந்த ஊழியத்தில் உங்களையே மனதார அளிக்கையில் யெகோவா நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார்!