ஜனங்கள் வீட்டில் இல்லாதபோது
1 அநேக பகுதிகளில் முன்புபோல் ஜனங்களை வீட்டில் பார்க்கவே முடிவதில்லை. இந்தக் ‘கொடிய காலங்களில்’ தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே அநேகர் நீண்ட நேரம் வேலை பார்க்கும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். (2 தீ. 3:1, NW) சிலர் பணத்தைச் செலவழிப்பதற்கோ, கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கோ சென்றுவிடுவதால் வீட்டில் இல்லாதிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு நாம் எப்படி நற்செய்தியை அறிவிக்க முடியும்?
2 விலாவாரியான பதிவுச்சீட்டுகளை வைத்திருங்கள்: எந்தெந்த வீடு பூட்டியிருக்கிறது என்பதைக் குறித்து வைத்துக்கொள்வது முதல் படி ஆகும். உங்கள் பிராந்தியத்தில் அடிக்கடி ஊழியம் செய்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்தப் பதிவுச் சீட்டைப் பயன்படுத்த வேண்டும். தெருவின் பெயரையும் (பிராந்திய வரைபட அட்டையில் கொடுக்கப்பட்டுள்ளபடி) பிராந்திய எண்ணையும் உங்கள் பெயரையும் தேதியையும் குறித்துக்கொள்கிறீர்களா? வீட்டில் இல்லாதவர்களை நீங்களோ வேறொரு பிரஸ்தாபியோ மீண்டும் போய் சந்திக்கும்போது தேவைப்படுகிற தகவலை எழுதிக்கொள்ள அந்தப் பதிவுச் சீட்டில் கொஞ்சம் இடத்தை விட்டுவைக்கலாம். வீட்டில் இல்லாதவர்களை நீங்களே மீண்டும் போய் சந்திப்பதற்கு பிராந்திய அட்டையைக் கையாளும் சகோதரர் ஒப்புக்கொள்ளாவிட்டால், ஊழியம் முடிந்ததும் அந்தப் பதிவுச் சீட்டை அல்லது குறிப்புச் சீட்டை மறக்காமல் அவரிடம் கொடுத்துவிடுங்கள். ஆர்வம் காட்டுபவர்களை மீண்டும் போய் சந்திப்பதற்கு அவர்களைப் பற்றிய விவரங்களைக் குறித்துக்கொள்ள வேறொரு சீட்டைப் பயன்படுத்துங்கள்.
3 வேறொரு சமயத்தில் போய் பாருங்கள்: வேலை நாட்களில் வீட்டில் இல்லாதவர்கள், மாலை நேரங்களிலோ சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலோ வீட்டில் இருக்கலாம். நீங்கள் திட்டமிட்டு, பொருத்தமான சமயத்தில் மீண்டும் போய் சந்திக்க ஏற்பாடு செய்துகொள்ள முடியுமா? (1 கொ. 10:24) அப்படி முடியாவிட்டால், வீட்டில் இல்லாதவர்களை வேறொரு சமயத்தில் போய் பார்க்க முடிந்த பிரஸ்தாபியிடம் அது சம்பந்தப்பட்ட பதிவுச் சீட்டை நீங்கள் கொடுக்கலாம். மற்றபடி, வீட்டில் இல்லாதவர்களுக்கு நீங்கள் கடிதம் எழுதலாம் அல்லது அவர்களோடு தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம். இந்த விஷயத்தில், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொள்ள முடியாதளவு வியாதிப்பட்டிருக்கும் பிரஸ்தாபிகள் சந்தோஷமாய் உங்களுக்கு உதவலாம்.
4 வீட்டில் இல்லாதவர்களை மீண்டும் போய் சந்திப்பதன் முக்கியத்துவத்தை ஓர் அனுபவம் விளக்குகிறது. வீட்டில் இல்லாதவரைச் சந்திக்க பிரஸ்தாபிகள் மூன்று வருடங்கள் முயற்சி செய்து, கடைசியில் அந்த வீட்டுக்காரரைச் சந்தித்தார்கள். இந்தப் பகுதியில் வந்து குடியேறுவதற்கு முன்பு அந்தப் பெண்மணிக்கு யெகோவாவின் சாட்சிகள் பைபிள் படிப்பு நடத்தி வந்தார்களாம்; மீண்டும் தனக்கு பைபிள் படிப்பு நடத்த சாட்சிகள் வரமாட்டார்களா என அவர் அத்தனை நாட்களும் காத்துக்கொண்டே இருந்தாராம்.
5 பிராந்தியத்தில் முழுமையாய் ஊழியம் செய்தல்: எப்போது ஒரு பிராந்தியம் முழுமையாய் ஊழியம் செய்து முடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது? பொதுவாக, ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவரைச் சந்திக்க நியாயமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தால் முழுமையாய் ஊழியம் செய்து முடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. முக்கியமாய், அவ்வப்போதே ஊழியம் செய்கிற பிராந்தியங்களில் பிறர் கவனத்தை ஈர்க்காதபடி, ஒரு துண்டுப்பிரதியையோ பழைய பத்திரிகையையோ பூட்டிய வீடுகளில் விட்டுவருவது பொருத்தமானதாய் இருக்கலாம். ஒரு பிராந்தியத்தில் நான்கு மாதங்களுக்குள் முழுமையாய் ஊழியம் செய்து முடிக்க வேண்டும். பிறகு, பிராந்திய ஊழியர் தன் பதிவுகளில் குறித்து வைத்துக்கொள்வதற்காக அதை அவரிடம் தெரிவிக்க வேண்டும்.
6 யெகோவாவின் பெயரில் கூப்பிட கற்றுக்கொள்ளவும், இரட்சிப்படையவும் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு வாய்ப்பளிக்க நாம் விரும்புகிறோம். (ரோ. 10:13, 14, NW) வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறபோது சந்திக்க முடியாதவர்களையும் இது உட்படுத்துகிறது. அப்போஸ்தலன் பவுலைப் போலவே, ‘தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தை [“முழுமையாய்,” NW] பிரசங்கம்பண்ணுவதை’ உங்கள் குறிக்கோளாக வையுங்கள்.—அப். 20:24.
[கேள்விகள்]
1. வீட்டுக்கு வீடு ஊழியத்தில் ஈடுபடும்போது எதிர்ப்படுகிற பொதுவான பிரச்சினை என்ன?
2. வீட்டில் இல்லாதவர்கள் மீண்டும் சந்திக்கப்பட நாம் என்ன செய்யலாம்?
3. வீட்டில் இல்லாதவர்களுடன் தொடர்புகொள்வதற்கு உதவும் ஆலோசனைகள் சில யாவை?
4. வீட்டில் இல்லாதவர்களை மீண்டும் போய் சந்திப்பதன் முக்கியத்துவத்தை எந்த அனுபவம் விளக்குகிறது?
5. எப்போது ஒரு பிராந்தியம் முழுமையாய் ஊழியம் செய்து முடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது?
6. நம் பிராந்தியத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நாம் ஏன் நற்செய்தியை அறிவிக்க வேண்டும்?