வீட்டில் இல்லாதவர்களைப் பற்றிய பதிவை ஏன் வைத்திருக்க வேண்டும்?
1 ஒரு சாட்சி தம்பதி, அதிகாலையிலே வெளி ஊழியத்திற்குச் சென்றனர். அதே நாளில், அந்தப் பிராந்தியத்தில் வீட்டில் இல்லாதவர்களைச் சந்திக்கும்படி பின்னர் வந்தனர். ஒருவர் அவர்களை உள்ளே அழைத்து, உன்னிப்பாகக் கேட்டார். என்றும் வாழலாம் புத்தகம் ஒன்றை அவர் வாங்கிக்கொண்டு, அந்தச் சாட்சி திரும்பவும் வருவாரா என்று கேட்டார். அவர் இதற்கு முன்னதாக யெகோவாவின் சாட்சிகளோடு பேசியதே கிடையாது; ஆகவே அவருக்கிருந்த அநேக கேள்விகள் பதிலளிக்கப்பட்டன; ஒரு பைபிள் படிப்பு தொடங்கப்பட்டது. செம்மறியாட்டைப்போன்ற அப்படிப்பட்ட ஒரு நபரைக் கண்டுபிடிக்க முடிந்ததால் அந்தத் தம்பதி மிகவும் சந்தோஷப்பட்டனர். அதுபோன்ற ஒரு அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்களா? வீட்டில் இல்லாதவர்களைப்பற்றி ஒரு நல்ல பதிவைக் கொண்டிருந்து, தாமதிக்காமல் திரும்பிச் செல்வது அதைக் கூடியதாக்கும்.
2 வீட்டில் இல்லாதவர்களைப் பற்றிய திருத்தமான ஒரு பதிவைக் கொண்டிருக்கும்படியும், சீக்கிரமாகத் திரும்பச் சென்று சந்திக்கும்படியும் நாம் மீண்டும் மீண்டும் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறோம். மேற்சொல்லப்பட்ட அனுபவம் காண்பிக்கிறபடி, அதே நாளில் மற்றொரு சந்திப்பைச் செய்வது சிறந்த பலன்களைக் கொண்டுவரக்கூடும். கொடுக்கப்பட்ட பிராந்தியத்தைச் செய்வதில் நாம் குறியாக இருக்கக்கூடும்; அதேநேரத்தில் வீட்டில் இல்லாதவர்களைப்பற்றிய பதிவை வைப்பதில் ஒருவேளை ஊக்கம் குறைந்தவர்களாக இருக்கலாம். சிலர் சொல்கின்றனர்: ‘ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குள் நாங்கள் எங்கள் பிராந்தியத்தில் வேலைசெய்து முடிக்கிறோம்; எப்படியும் வெகு சீக்கிரமாக அங்கு திரும்பி வந்துவிடுவோம் என்பதால் அப்படிப்பட்ட ஒரு பதிவைக் கொண்டிருக்க அவசியமில்லை.’ ஆனால் ஒரு பதிவைக் கொண்டிருப்பதற்கு அது இன்னுமதிக காரணத்தை அளிக்கிறது. அடிக்கடி பிராந்தியம் செய்துமுடிக்கப்பட்டிருக்கையில், வீட்டில் இல்லாதவர்களை மீண்டும் சந்திக்க முயலுவது, பாத்திரமானவர்களை அதிக முழுமையாகத் தேடுவதற்கு உதவி செய்கிறது. எவ்வாறு?
3 பல பகுதிகளில், குடியிருப்பவர்களில் 50 அல்லது அதற்கும் அதிகமான சதவீதத்தினர் பகற்பொழுதில் வீட்டில் இருப்பதில்லை. ஆகவே, வீட்டில் இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பதில் அதிக கவனம் செலுத்தினோமானால், உண்மையில் அதிக பிராந்தியம் கிடைக்கும்படி செய்கிறோம். அந்தப் பிராந்தியம் அரிதாகவே வேலை செய்யப்படுவதாக இருந்தாலும்கூட, அந்தப் பிராந்தியம் வேலை செய்து முடிக்கப்பட்டதாக குறியிடப்படுவதற்குமுன் எல்லாரையும் சந்திப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டிருக்கையில் பலன்களில் முன்னேற்றத்தைக் காணலாம்.
4 வீட்டில் இல்லாதவர்களைச் சந்திப்பதற்கு பொதுவாக வேறொரு நாள் ஏற்பாடு செய்யப்படலாம்; அந்த வாரத்திற்குள் அதைச் செய்வது நல்லது. முதல் சந்திப்பு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திலிருந்து வித்தியாசப்பட்ட சமயத்தில் திரும்பிச் செல்வதை அநேகர் நல்லதாகக் காண்கின்றனர். ஒரு வாரத்தில் குறித்து வைத்திருக்கும் வீட்டில் இல்லாதவர்களை, சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் நேரத்தை எடுத்து மீண்டும் சந்திக்கச் செல்வதை நீங்கள் தெரிந்துகொள்ளக்கூடும். மேலும், அப்படிப்பட்ட சந்திப்புகளை மாலை நேரத்தின் முற்பகுதியில் செய்வதை அநேக சபைகள் பயனுள்ளதாகக் கண்டிருக்கின்றனர். பாதிக்கும் அதிகமான ஆட்களை வீடுகளில் காண முடியும்.
5 மறுசந்திப்புகளை உங்களுடைய தனிப்பட்ட பதிவுகளில் பட்டியலிட்டு வைக்க வேண்டும். வீட்டில் ஒருவரும் இல்லாத இடத்திற்கு மீண்டும் உங்களால் திரும்பிப் போக முடியவில்லை என்றால், அந்தத் தொகுதியை ஊழியத்தில் வழிநடத்திய சகோதரனிடம் வீட்டில் இல்லாதவர்களைப்பற்றிய பதிவு கொடுக்கப்பட வேண்டும்; அடுத்ததாக அந்தப் பிராந்தியத்திற்குச் செல்லும் தொகுதி அதைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அதைச் செய்ய வேண்டும்.
6 நம்முடைய ஊழியத்தின் இந்த அம்சத்திற்கு நெருங்கிய கவனம் செலுத்துவது நம் பலனையும் அதோடு சந்தோஷத்தையும் அதிகரிக்கும். செம்மறியாட்டைப் போன்றவர்களைத் தேடுவதிலும் அவர்களைக் கவனிப்பதிலும் நாம் முழுமையாகச் செயல்படுகிறோம் என்றறிவதிலிருந்து வரும் திருப்தியை அது நமக்குக் கொடுக்க முடியும்.—எசே. 34:11-14.