அக்டோபர் 16 முதல் நவம்பர் 12 வரை விசேஷ விநியோகிப்பு!
1 “மதத்தின் பெயரில் அட்டூழியங்கள்—முடிவுக்கு வருமா?” என்பதே ராஜ்ய செய்தி எண் 37-ன் தலைப்பு. இதன் விநியோகம் உலகளவில் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கவிருக்கிறது. அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை நாம் ஊழியத்தில் அளிப்போம். அக்டோபர் 16, திங்கட்கிழமை முதல் நவம்பர் 12, ஞாயிற்றுக்கிழமை வரை ராஜ்ய செய்தி எண் 37-ஐ மும்முரமாக விநியோகிப்போம். இந்த விநியோகிப்பைச் செய்து வருகையில் சனி, ஞாயிறு தினங்களில் இதை தற்போதைய பத்திரிகைகளோடு சேர்த்து அளிப்போம்.
2 யாரெல்லாம் பங்கெடுக்கலாம்: நற்செய்தியை வழக்கமாகப் பிரசங்கித்துவரும் எல்லாப் பிரஸ்தாபிகளுமே இதில் கலந்துகொள்வார்கள். சிலர் துணைப் பயனியராகவும் சேவை செய்வார்கள். உங்கள் பிள்ளைகளோ பைபிள் மாணாக்கர்களோ ஆன்மீக முன்னேற்றம் செய்துவருகிறார்களா? அவர்கள் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாவதற்குத் தகுதி பெற்றிருக்கிறார்களா என்பதைக் காண மூப்பர்களை அணுகச் சொல்லுங்கள். செயலற்ற பிரஸ்தாபிகளுடன் மூப்பர்கள் இதுகுறித்துப் பேசி இந்த விநியோகிப்பில் கலந்துகொள்ள உற்சாகப்படுத்த வேண்டும், ஒருவேளை அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபிகளோடு சேர்ந்து அவர்கள் இதை விநியோகிக்க உற்சாகப்படுத்தலாம்.
3 ராஜ்ய செய்தி எண் 37, பிரஸ்தாபிகளுக்கும் பயனியர்களுக்கும் தலா 50 பிரதிகளாவது கிடைக்கும் வகையில் எல்லாச் சபைகளுக்கும் அவற்றின் முக்கிய மொழியில் போதியளவு அனுப்பி வைக்கப்படும். இன்னும் பிரஸ்தாபிகளாய் ஆகாத ஆர்வமுள்ளோரும்கூட ஐந்து பிரதிகளைப் பெற்றுக்கொண்டு குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் விநியோகிக்கலாம். தாங்கள் எத்தனைப் பிரதிகளை விநியோகித்திருக்கிறார்கள் என்பதை எல்லாரும் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளி ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கையில் இந்த எண்ணிக்கையை வெளி ஊழிய அறிக்கைப் படிவத்தின் பின்புறத்தில் குறிப்பிட வேண்டும். சபையார் அனைவருமாகச் சேர்ந்து விநியோகித்திருக்கிற மொத்த எண்ணிக்கையை செயலர் அந்த மாதங்களின் கடைசியில் கிளை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். இந்த விநியோகிப்பு முடிந்த பின்னர் மீதமிருக்கும் பிரதிகளை தங்கள் ஊழியத்தின்போது எப்படி வேண்டுமானாலும் பிரஸ்தாபிகள் அளிக்கலாம்.
4 என்ன சொல்வது: வீட்டுக்காரரிடம் சுருக்கமாகப் பேசுங்கள்; அப்போதுதான் நிறைய பிரதிகளை விநியோகிக்க முடியும். நீங்கள் இப்படிச் சொல்லலாம்: “ஒரு பொதுநல சேவையாக, உலக முழுவதும் விநியோகிக்கப்பட்டு வரும் முக்கியச் செய்தி அடங்கிய இந்தப் பிரதியை உங்களிடம் கொடுக்க வந்திருக்கிறேன். இதை உங்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறேன். தயவுசெய்து வாசித்துப் பாருங்கள்.” இதில் அடங்கியுள்ள செய்தி வலிமை வாய்ந்தது, எனவே சாதுரியமாகவும், வாக்குவாதங்களைத் தவிர்க்கும் விதத்தில் பகுத்துணர்வோடும் நடந்துகொள்ளுங்கள். வீட்டுக்கு வீடு செல்லும்போது வெளி ஊழியப் பைகளை எடுத்துச் செல்லாமல் இருப்பது நல்லது. ஆர்வம் காட்டுகிறவர்களைப் பற்றிய விவரங்களை மறக்காமல் குறித்துக்கொள்ளுங்கள்.
5 உங்கள் பிராந்தியத்தை முடிப்பது எப்படி: இவற்றைத் தெரு ஊழியத்தில் விநியோகிப்பதற்குப் பதிலாக முடிந்தளவு வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் வியாபார பிராந்தியத்திலுமே அளியுங்கள். நீங்கள் செல்லும் பிராந்தியத்தில் எதிர்ப்பு அல்லது பிரச்சினை வருமென்று தோன்றுகிற பகுதிகளைத் தவிருங்கள். வீட்டில் ஆட்கள் இல்லாவிட்டால் குறித்து வைத்துக்கொண்டு அதே நாளில் வேறொரு சமயத்திலோ அந்த வாரத்தில் வேறொரு நாளிலோ திரும்பவும் சென்று அளியுங்கள். நவம்பர் 6, திங்கட்கிழமையிலிருந்து இவற்றில் ஒரு பிரதியை ஆட்களைப் பார்க்க முடியாத வீடுகளில் வைத்துவிட்டுச் செல்லலாம். என்றாலும், கொடுக்கப்பட்டிருக்கும் காலப் பகுதிக்குள் விநியோகித்து முடிக்க முடியாதளவு நிறைய பிராந்தியம் சபைக்கு இருந்தால், ஆரம்பத் தேதியிலிருந்தே அப்படிச் செய்ய மூப்பர்கள் தீர்மானிக்கலாம்.
6 ‘மகா பாபிலோனுக்கு’ அழிவு காலம் நெருங்கிவிட்டது. அவள் முற்றிலும் நாசமடைவதற்கு முன்பு ஜனங்கள் அவளை விட்டு வெளியே வரவேண்டும். (வெளி. 14:8; 18:8) உலகளாவிய இந்த விநியோகிப்பில் முழுமையாகப் பங்குகொள்ளத் திட்டமிடுங்கள். மதத்தின் பெயரில் செய்யப்பட்டுவரும் எல்லா அட்டூழியங்களுக்கும் விரைவில் முடிவு வருமென்று அனைவரும் தெரிந்து கொள்ளட்டும்!