ராஜ்ய செய்தி எண் 35-ஐப் பரந்தளவில் விநியோகியுங்கள்
1 அக்டோபரிலும் நவம்பரிலும் நாம் அனைவரும் சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்போம். அக்டோபர் மாதத்தின் முதல் 11 நாட்களில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான சந்தாக்களை நாம் அளிப்போம். பிறகு, அக்டோபர் 12, ஞாயிறு முதல் நவம்பர் 16, ஞாயிறு வரை, ராஜ்ய செய்தி எண் 35-ன் உலகளாவிய விநியோகிப்பில் நாம் பங்குகொள்வோம். நமது பிராந்தியத்திலுள்ள அனைவருக்கும் ஒரு முக்கிய செய்தியை எடுத்துச்செல்வது நம் சிலாக்கியமாய் இருக்கும். “ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?” என்ற கேள்விக்கான பதிலாக அச்செய்தி இருக்கும். இந்த விசேஷ அளிப்பு ஏற்பாட்டின்போது, ராஜ்ய செய்தி எண் 35-ஐ நாம் வாரநாட்களில் விநியோகிப்போம். வாரயிறுதி நாட்களின்போது, ராஜ்ய செய்தியை அளிப்பதோடுகூட, பத்திரிகைகளின் தற்போதைய பிரதிகளை சிறப்பித்துக்காட்டி சந்தாக்களை அளிப்போம்.
2 யார் பங்குபெறலாம்? மூப்பர்கள் எப்போதும்போலவே, இந்த ஊழியத்தை முன்நின்று நடத்துவர். ராஜ்ய செய்தியை விநியோகிப்பதில் அனைவரும் மகிழ்ச்சிகாண்கின்றனர்; மேலும், மிக அதிகமான பிரஸ்தாபிகள், அளிப்பு ஏற்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இரு மாதங்களிலுமோ ஏதாவதொரு மாதத்திலோ துணைப் பயனியர் ஊழியம் செய்வர் என்பதில் சந்தேகமில்லை. மற்ற பிரஸ்தாபிகள், ஊழியத்தில் வழக்கத்தைவிட அதிக நேரத்தை செலவிட விரும்புவர்.
3 அறிவு புத்தகத்தில் போதியளவு அதிகாரங்களைப் படித்து முடித்து, வெளி ஊழியத்தில் பங்குகொள்வதற்கு விரைவில் தகுதிபெறவிருக்கும் ஒரு பைபிள் மாணாக்கர் இருக்கிறாரா? ராஜ்ய செய்தி அளிப்பு ஏற்பாட்டில் பங்குகொள்ளும்படி ஒருவேளை முன்னதாகவே அவர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகலாம். இந்தத் துண்டுப்பிரதியை அளிக்க வெறுமனே ஓர் எளிய அறிமுகமே போதுமானது. உதாரணத்திற்கு ஒருவர் இப்படிச் சொல்லலாம்: “இந்தச் செய்தி அந்தளவுக்கு முக்கியமாய் இருப்பதால், இந்த மாதம் இது உலகம் முழுவதும் 169 மொழிகளில் விநியோகிக்கப்படுகிறது. நீங்களும் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும்படி நான் விரும்புகிறேன்.” சந்தோஷமளிக்கும் இந்த வேலையில் சிறு பிள்ளைகளும்கூட நன்கு பங்குபெறலாம்.
4 புத்தக படிப்பு நடத்துநர்கள், தங்கள் தொகுதியின் ஒவ்வொரு அங்கத்தினரையும் ராஜ்ய செய்தி எண் 35-ன் விநியோகிப்பில் முழுமையாக பங்குகொள்ளும்படி உற்சாகப்படுத்தவேண்டும். ஊழியத்தில் செயலிழந்த பிரஸ்தாபிகளும் இருக்கலாம்; ஆனால் தேவையான உற்சாகமளிக்கப்பட்டால் அவர்கள் மறுபடியும் ஊழியத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடலாம். இப்படிப்பட்ட பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரையும் அளிப்பு ஏற்பாட்டிற்கு முன்னதாக மூப்பர்கள் சந்தித்து, அனுபவம்பெற்ற பிரஸ்தாபிகளோடு சேர்ந்து அவர்களும் இந்த வகையான ஊழியத்தில் ஈடுபட தேவைப்படும் உதவியை அளிப்பதற்கான வழியை சிந்திக்க வேண்டும்.
5 ஊழியத்திற்காக நாம் எப்போது கூடலாம்? இந்த எல்லா நடவடிக்கைகளும், தொகுதியாக சாட்சிகொடுக்கும் ஏற்பாடுகள் சௌகரியமாகவும் நடைமுறையாகவும் இருப்பதைத் தேவைப்படுத்தும். எங்கெல்லாம் முடியுமோ அங்கு, ஊழியத்திற்கான கூட்டங்கள் ஒவ்வொரு வாரநாட்களிலும் வாரயிறுதி நாட்களிலும் சாயங்காலவேளைகளிலும் ஏற்பாடு செய்யப்படவேண்டும். பிரஸ்தாபிகளும் பயனியர்களும், சாட்சிபகருவதற்கான சமயத்தை முழுமையாக பிரயோஜனப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவான நேரங்களில் அவை நடத்தப்பட வேண்டும். பள்ளி மாணவர்களுக்காகவும் ஷிப்ட்டில் வேலைசெய்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் சாயங்காலங்களில் கூடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படலாம். வீடுவீடாகவும் வர்த்தக இடங்களிலும் ஊழியம் செய்வதற்கு நிறைய பிராந்தியம் இருக்கிறதா என்பதை ஊழியக் கண்காணி நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்; அப்போதுதான் அனைவரும் ஊழியத்தில் முழுமையாக பங்குபெற முடியும். ஒரு பகுதியில் அநேக பிரஸ்தாபிகள் இருந்தால், பிராந்தியத்தின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு பேர் ஊழியம் செய்கின்றனர் என்பதைக் குறித்து அவர்கள் விவேகத்தோடு செயல்பட வேண்டும்.
6 பூட்டிய வீடுகளைக் குறித்து என்ன? ராஜ்ய செய்தி எண் 35-ஐ ஏன் வாசிக்க வேண்டுமென்று விளக்குவதற்கு எவ்வளவுபேரிடம் முடியுமோ அவ்வளவுபேரிடம் தனிப்பட்ட விதமாக நாம் பேச விரும்புகிறோம். ஆகவே நீங்கள் செல்கையில் வீடு பூட்டியிருந்தால், விலாசத்தை எழுதிவைத்துக்கொண்டு வேறொரு சமயத்தில் மறுபடியும் செல்லுங்கள். இந்த வீட்டுக்காரர்களை சந்திக்க நீங்கள் முயற்சிகள் எடுத்தும், அளிப்பு ஏற்பாட்டின் கடைசி வாரம்வரை அவர்களை சந்திக்க முடியவில்லையென்றால், ராஜ்ய செய்தியின் ஒரு பிரதியை கதவண்டையில் நீங்கள் விட்டுச்செல்லலாம்; அது வழிப்போக்கரின் கண்களில் படாதபடி இருக்கவேண்டும். குடியிருப்புப் பகுதிகளில், தெருவில் நடந்துசெல்லும் நபர்களுக்கு ராஜ்ய செய்தியை அளிக்க தவறாதீர்கள். கிராமப்புறங்களில் ஊழியம் செய்கையிலும் அளிப்பு ஏற்பாட்டின்போது முடிக்க முடியாதளவு அதிக பிராந்தியம் இருக்கையிலும், வீடு பூட்டியிருந்தால் முதல் தடவை போகும்போதே ராஜ்ய செய்தியின் ஒரு பிரதியை அங்கு விட்டுவரலாம்.
7 நம் குறிக்கோள் என்ன? நவம்பர் 16-ம் தேதியன்று அளிப்பு ஏற்பாடு முடிவதற்குள், சபைகள் அவற்றின் பிராந்தியத்தை முழுமையாக முடிக்க தங்களிடம் உள்ள ராஜ்ய செய்தி பிரதிகள் அனைத்தையும் அளித்துவிட முயற்சிசெய்ய வேண்டும். உங்கள் சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிராந்தியம் பெரிதாக இருக்கும்போதும், இரண்டு பேராக இல்லாமல் நீங்களே தனியாக ஊழியம்செய்வது பாதுகாப்பானதாய் இருக்கும்போதும், அவ்வாறு செய்வதை நீங்கள் நடைமுறையானதாக காணலாம். இது, கூடுமானவரை அனைத்து தகுதியானோருக்கும் நற்செய்தியை சொல்ல உங்களுக்கு உதவும். (மத். 10:11, NW) ஒரு ப்ரீஃப்கேஸை பயன்படுத்துவதற்குப் பதிலாக உங்கள் கையில் ஒருசில துண்டுப்பிரதிகளையும் உங்கள் பாக்கெட்டிலோ பர்ஸிலோ ஒரு பைபிளையும் எடுத்துச்செல்வது பயனளிப்பதாய் இருக்கலாம். அக்கறை காண்பித்தோரைப் பற்றி விவரமான பதிவை குறித்துவைத்துக்கொள்ள நிச்சயமாயிருங்கள்.
8 ஆரம்பிப்பதற்கு நீங்கள் தயாரா? சபைக்கு கூடுதலான பத்திரிகைகள் எவ்வளவு தேவைப்படும் என்பதை மூப்பர்கள் முன்கூட்டியே தீர்மானித்து அதற்கேற்றாற்போல் ஆர்டர் செய்யவேண்டும். ராஜ்ய செய்தி எண் 35-க்காக ஆர்டர் செய்யவேண்டியதில்லை, ஏனென்றால் ஒவ்வொரு சபைக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அனுப்பிவைக்கப்படும். விசேஷ, ஒழுங்கான மற்றும் துணைப் பயனியர்களுக்கு தலா 200 பிரதிகள் விநியோகிப்பிற்காக கொடுக்கப்படும், சபை பிரஸ்தாபிகளுக்கோ தலா 40 பிரதிகள் அளிக்கப்படும். நாம் செய்யவேண்டியது நமக்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மகிழ்ச்சியூட்டும் இந்த சேவையில் பங்குகொள்ள நீங்கள் ஆவலாயிருக்கிறீர்களா? ஆம், சந்தேகமின்றி ஆவலாயிருக்கிறீர்கள். ராஜ்ய செய்தி எண் 35-ல் உள்ள பைபிள்-அடிப்படையிலான முக்கிய செய்தியை முடிந்தளவு பரவலாக விநியோகிப்போமாக!