இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை யெகோவா கொடுக்கிறார்
1 பரிசுத்த சேவை செய்யும் ஒரு மதிப்புமிக்க சிலாக்கியம், அதாவது கிறிஸ்தவ ஊழியம் செய்தல், இயேசுவின் சீஷர்கள் எல்லாரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. (மத். 24:14; 28:19, 20) ஆனால், அபூரண மனித தன்மையும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் அழுத்தங்களும் சிலசமயங்களில் நாம் ஊழியத்தைத் தொடர்வதற்கு கொஞ்சமும் தகுதியற்றவர்களாக நம்மை உணர வைக்கலாம்.
2 இது சம்பவிக்கையில், கொரிந்துவிலிருந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய கடிதத்திலிருந்து நாம் ஆறுதலடையலாம். அவர் எழுதியதாவது: “இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.” (2 கொ. 4:7) பவுல் இவ்வாறு உறுதியாய் இருந்தார்: “இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் . . . சோர்ந்துபோகிறதில்லை.” (2 கொ. 4:1) உண்மைதான், அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லாருக்கும், ‘சோர்ந்துபோகாமல்’ தொடர்ந்து நற்செய்தியை பிரசங்கிப்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. “இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தி”யை அளிக்கிற கடவுளிடமிருந்து நமக்குப் பலம் தேவை.—யோவா. 10:16; 2 கொ. 4:7அ, NW.
3 உற்சாகமளிக்கும் விதமாக, கடும் எதிர்ப்பு, மோசமான உடல்நல பிரச்சினைகள், அல்லது மட்டுப்பட்ட பணவசதி ஆகியவற்றோடு போராட வேண்டியிருக்கிற போதிலும் அநேக சாட்சிகள் வைராக்கியமுள்ள சுவிசேஷகர்களாக தொடர்ந்து சேவை செய்கிறார்கள். பிரசங்கிக்கும் நம் நியமிப்புக்கு யெகோவாவின் ஆதரவு இருக்கிறது என்பதை நாமனைவரும் உணரவேண்டும். மன தளர்வோ, பயமோ பிரசங்கிக்க வேண்டும் என்ற நம் தீர்மானத்தை பலமிழக்க அனுமதிப்பதற்கு மாறாக நாம், “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் [“தொடர்ந்து,” NW] பலப்படு”வோமாக.—எபே. 6:10; நீதி. 24:10.
4 கடவுளுடைய சக்தியை எப்படி பெறுவது: கடவுளுடைய உதவிக்காகவும் சக்திக்காகவும் ஜெபத்தில் உறுதியாய் தரித்திருங்கள். (ரோ. 12:12; பிலி. 4:6, 7) பிறகு, இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியைக் கொடுப்பார் என்று உங்கள் முழு இருதயத்துடன் யெகோவாமீது நம்பிக்கை வையுங்கள். (நீதி. 3:5) தற்கால நிஜவாழ்க்கை சரிதைகளை நம்முடைய பத்திரிகைகளில் வாசியுங்கள். அவை சோதனைகளை சகிப்பதற்கு இன்று தம்முடைய ஊழியர்களுக்கு யெகோவா உதவிசெய்கிறார் என்பதற்கான ஆதாரத்தை அளிக்கின்றன. சபையிலுள்ள சகோதரர்களோடு நெருங்க கூட்டுறவுகொண்டிருங்கள், சபைக் கூட்டங்களைத் தவறவிடாதீர்கள்.—ரோ. 1:10, 11; எபி. 10:24, 25.
5 யெகோவாவின் சக்தியைப் பெறும் முயற்சியில் நம்மாலான அனைத்தையும் செய்வோமாக. அந்தச் சக்தி, இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியாகவும் வேலைகளிலேயே மிக முக்கியமானதாகிய ராஜ்ய பிரசங்க வேலையில் சோர்ந்துவிடாமல் இருக்க நமக்கு உதவுவதாகவும் இருக்கிறது.