கடவுளின் பலத்தால் செய்யப்படும் வேலை
1 இன்று கடவுளுடைய ஊழியர்களாகிய நம்மில் அநேகருக்கு இந்த ஒழுங்குமுறையில் மிகச் சிறந்த கல்வியோ செல்வமோ பிரபலமோ இல்லை. இதனால், நம் ஊழியத்தை சிலர் துச்சமாக நினைக்கிறார்கள். (ஏசா. 53:3) ஆனாலும், நாம் செய்கிற பைபிள் கல்வி புகட்டும் வேலை உலகெங்கும் லட்சக்கணக்கானோருக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட சிறந்த பலன்களை சாதாரண மனிதர்களால் பெற முடிந்திருப்பது எவ்வாறு? கடவுள் தரும் பலத்தால் மட்டுமே. (மத். 28:19, 20; அப். 1:8) “பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்” என்று அப்போஸ்தலன் பவுல் விளக்கினார்.—1 கொ. 1:26-29.
2 அப்போஸ்தலர்களும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த மற்ற கிறிஸ்தவர்களும் பெரும்பாலும் ‘படிப்பறிவில்லாத சாதாரண மனிதர்.’ (அப். 4:13, NW) இருந்தாலும், நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையை தைரியமாய் செய்தார்கள்; யெகோவாவும் அவர்களுடைய முயற்சிகளை ஆசீர்வதித்தார். தடங்கல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் “பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.” கடவுளின் ஒத்தாசை இருந்ததால் இந்த வேலையை எதுவும் தடுத்து நிறுத்த முடியவில்லை. (அப். 5:38, 39; 19:20) நவீன காலங்களிலும் இதுவே உண்மை. பலம் படைத்த ஆட்சியாளர்கள் நாம் செய்து வரும் வேலைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறபோதிலும்கூட இந்த நற்செய்தி எங்கும் பரவுவதை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.—ஏசா. 54:17.
3 எல்லா துதியும் கடவுளுக்கே: கடவுளுடைய ஊழியர்களாக இருக்கும் விசேஷ தயவைப் பெற்றிருப்பதால் நாம் தற்பெருமை கொள்ளலாமா? நிச்சயமாகக் கூடாது. கிறிஸ்தவ ஊழியத்தைப் பற்றி பவுல் இவ்வாறு எழுதினார்: “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.” (2 கொ. 4:7) கடவுள் கொடுத்த பலத்தினால் மட்டுமே தன் ஊழியத்தை நிறைவேற்ற முடிந்ததை பவுல் உணர்ந்தார்.—எபே. 6:19, 20; பிலி. 4:13, NW.
4 அதேபோல் ‘கடவுளின் உதவி பெற்றதால்’ மட்டுமே பிரசங்க வேலை நிறைவேறி வருகிறது என்பதை நாமும் உணர்கிறோம். (அப். 26:22, பொ. மொ.) இப்படியாக உலகம் முழுவதும் அறிவிப்பதன் மூலம், மக்களை அசைவிக்க யெகோவா நம்மை குறிப்பிடத்தக்க வகையில் பயன்படுத்துகிறார். விரைவில் வந்து நொறுக்கப்போகும் நியாயத்தீர்ப்புக்கு இது ஓர் அடையாளம். (ஆகா. 2:7) மகத்தான இந்த ஆன்மீக அறுவடையில் ‘தேவனுக்கு உடன்வேலையாட்களாய்’ இருப்பது நமக்கு எப்பேர்ப்பட்ட ஒரு சிலாக்கியம்!—1 கொ. 3:6-9.