ஊழியத்தைப் பொக்கிஷமாய்ப் போற்றுகிறீர்களா?
1. உலகில் இருக்கும் அநேகர் நம் பிரசங்க வேலையை எப்படிப் பார்க்கிறார்கள்?
1 சாத்தானின் உலகத்தில் வாழ்கிற அநேகருக்கு பிரசங்க வேலை “முட்டாள்தனமாகத்” தோன்றுகிறது. (1 கொ. 1:18-21) நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால், அவர்களுடைய தவறான எண்ணம் நம்மையும் பாதித்துவிடும். இதனால் நாம் சோர்ந்து போகலாம். பிரசங்க வேலையில் ஊக்கத்தை இழந்துவிடலாம். (நீதி. 24:10; ஏசா. 5:20) ஆனால், யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பாக்கியத்தை நாம் பொக்கிஷமாய்ப் போற்ற என்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன?—ஏசா. 43:10.
2. ஊழியத்தை ஏன் “பரிசுத்த வேலை” என்று அழைக்கிறோம்?
2 “பரிசுத்த வேலை”: ஊழியத்தை அப்போஸ்தலன் பவுல் “பரிசுத்த வேலை” என்று அழைத்தார். (ரோ. 15:15, 16) ஊழியம் எப்படி “பரிசுத்த வேலை”யாக இருக்கிறது? எப்படியென்றால், அந்த வேலையில் நாம் பங்குகொள்ளும்போது ‘பரிசுத்தரான’ யெகோவா தேவனின் “சக வேலையாட்களாக” ஆகிறோம்; அதோடு, இந்த வேலையைச் செய்வது அவருடைய பெயர் பரிசுத்தமாவதற்கு உதவுகிறது. (1 கொ. 3:9; 1 பே. 1:15) நாம் செய்யும் ஊழியத்தை யெகோவா அவருக்குச் செலுத்தும் ‘புகழ்ச்சிப் பலியாக’ கருதுகிறார்; எனவே, ஊழியம் நம்முடைய வணக்கத்தின் மிக முக்கிய பாகமாக இருக்கிறது.—எபி. 13:15.
3. நற்செய்தியை அறிவிக்கும் வேலை அரும்பெரும் பாக்கியம் என்று எப்படிச் சொல்லலாம்?
3 நற்செய்தியை அறிவிக்கும் அரும்பெரும் பாக்கியத்தை யெகோவா வெகு சிலருக்கே அளித்திருக்கிறார். அவர் இந்த வேலையை தேவதூதர்களுக்குக் கொடுத்திருந்தால் இதைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு, மிக அருமையாகச் செய்திருப்பார்கள் என்பது நிச்சயம். (1 பே. 1:12) என்றாலும், அபூரண மனிதர்களான நம்மை, ‘மண்பாத்திரங்களான’ நம்மை, யெகோவா தேர்ந்தெடுத்து இந்த மகத்தான வாய்ப்பை அளித்திருக்கிறார்!—2 கொ. 4:7.
4. ஊழியத்தை நாம் பொக்கிஷமாய்ப் போற்றுகிறோம் என்று எப்படிக் காட்டலாம்?
4 முக்கியமான வேலை: ஊழியத்தை நாம் பொக்கிஷமாகப் போற்றுவதால்தான் அதை நம்முடைய வாழ்க்கையில் “மிக முக்கியமான” வேலையாகக் கருதுகிறோம். (பிலி. 1:10) எனவே, ஒவ்வொரு வாரமும் அதில் ஈடுபடுவதற்கு நாம் நேரத்தை ஒதுக்குகிறோம். உதாரணத்திற்கு, உலக புகழ் பெற்ற ஒரு இசை கச்சேரியில் கலந்துகொள்ளப்போகும் ஒரு இசை கலைஞரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் இசைக்க போகும் ஒவ்வொரு இசையையும் மிக நன்றாகத் தயார் செய்வார். அவருடைய திறமையை மெருகேற்ற கடினமாக உழைப்பார். அதுபோலவே, நாமும் ஒவ்வொரு முறை ஊழியத்திற்கு செல்வதற்கு முன்பு நன்கு தயாரிக்க வேண்டும். அப்போதுதான் ‘சத்திய வார்த்தையைச் சரியாகப் பயன்படுத்துகிறவர்களாக’ இருப்போம். நம்முடைய “கற்பிக்கும் கலையை” இன்னும் மெருகேற்ற உழைப்போம்.—2 தீ. 2:15; 4:2.
5. யார் நம்முடைய ஊழியத்தைப் போற்றுகிறார்கள்?
5 நம்முடைய ஊழியத்தை மற்றவர்கள் அசட்டை செய்தால் சோர்ந்துபோகாதீர்கள். நற்செய்தியைக் கேட்க ஆர்வமுள்ள அநேகர் நம்முடைய பிராந்தியத்தில் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். உண்மைதான், நாம் மனிதர்களுடைய அங்கீகாரத்தை நாடுவதில்லை. யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதையே மிக முக்கியமானதாகக் கருதுகிறோம். நாம் எடுக்கும் ஊக்கமான முயற்சிகளை அவர் மிக உயர்வாய் மதிக்கிறார்.—ஏசா. 52:7.