நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொக்கிஷம்
1 அப்போஸ்தலன் பவுல், தனக்குக் கடவுள் கொடுத்திருந்த ஊழிய வேலையைப் பெரிதும் மதித்ததால் அதனை ‘பொக்கிஷம்’ என்று குறிப்பிட்டார். (2 கொ. 4:7) அந்த வேலையைச் செய்கையில் பல்வேறு கஷ்டங்களையும் உபத்திரவங்களையும் சகித்துக்கொண்டார். சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் அயராமல் பிரசங்கித்தார். தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் சிரமம் மிகுந்த ஆபத்தான பல பயணங்களை மேற்கொண்டார். பவுலைப் போலவே நாமும் ஊழியத்தைப் பொக்கிஷமாகப் போற்றுகிறோம் என்பதை எவ்வாறு காட்டலாம்? (ரோ. 11:14) நம்முடைய ஊழியம் ஏன் மிக மதிப்புள்ள பொக்கிஷமாக இருக்கிறது?
2 மதிப்புவாய்ந்த பொக்கிஷம்: உலக பொக்கிஷங்களால் நமக்குப் பயமும் திகிலுமே மிஞ்சுகின்றன. அவை குறைவான, தற்காலிகமான பலன்களையே தருகின்றன. மறுபட்சத்தில், ஊழியமோ நமக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி, நீடித்த பலன்களைத் தருகிறது. (1 தீ. 4:16) நல்மனமுள்ளோர் யெகோவாவைப்பற்றிக் கற்றுக்கொண்டு, வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்து, நித்திய ஜீவன் என்ற மெய்யான நம்பிக்கையைப் பெற உதவுகிறது. (ரோ. 10:13-15) ஊழியத்தை மிக உயர்வாகக் கருதுவதன்மூலம் நம் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைப் பெற்று திருப்தி காண்கிறோம், எதையோ சாதித்த சந்தோஷத்தை நிரந்தரமாக அனுபவிக்கிறோம், புத்துணர்ச்சியூட்டும் எதிர்கால நம்பிக்கையையும் பெறுகிறோம்.—1 கொ. 15:58.
3 உங்களிடமுள்ள பொக்கிஷத்தை மதிக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள்: ஒரு பொருளை நாம் எந்தளவு மதிக்கிறோம் என்பது அதற்காக நாம் செய்யும் தியாகங்களிலிருந்து தெரியவரும். யெகோவாவைத் துதிப்பதில் நம் நேரத்தையும் சக்தியையும் செலவிடுவது எவ்வளவு பெரிய பாக்கியம்! (எபே. 5:16, 17) நேரத்தை நாம் செலவிடும் விதம் பொருளாதார நாட்டங்களைவிட ஆன்மீக காரியங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும். ஊழியத்தில் நாம் சொல்கிற செய்தி அவ்வளவு மதிப்புவாய்ந்ததாக இருப்பதால், அதை உற்சாகத்துடன் சொல்ல விரும்புவோம். அதேசமயம் நற்செய்தியை அறிவிப்பதற்கு எல்லா சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்போம்.
4 பொதுவாக, மதிப்புவாய்ந்த பொக்கிஷங்கள் மறைத்து வைக்கப்படுவதில்லை. மற்றவர்களும் கண்டு ரசிப்பதற்காக அவை பார்வைக்கு வைக்கப்படுகின்றன. நமது ஊழியத்தைப் பொக்கிஷமாகக் கருதினால் நம் வாழ்க்கையின் முக்கிய பாகமாக அது இருக்கும். (மத். 5:14-16) எனவே, நன்றி பொங்கும் இதயத்தோடு, அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றுவோமாக. நமக்குக் கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு, நாம் ஊழியத்தை உண்மையிலேயே மதிக்கிறோம், அதைப் பொக்கிஷமாகவே கருதுகிறோம் என்பதைக் காட்டுவோமாக.