பெரிய செயல்களை நம்மாலும் செய்ய முடியும்
1 அற்புத செயல்கள் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தில் முக்கிய அங்கம் வகித்தன. அவர் அற்புதம் செய்து, ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்தார். பலருடைய நோய்களை குணமாக்கினார். இறந்துபோன சிலரை உயிரோடே எழுப்பவும் செய்தார். (மத். 8:1-17; 14:14-21; யோவா. 11:38-44) அவர் செய்த செயல் நாட்டிலுள்ள எல்லாருடைய கவனத்தையும் சுண்டி இழுத்தது. ஆனாலும் அவர் இறப்பதற்கு முந்திய மாலை, தம்முடைய உண்மையுள்ள சீஷர்களைப் பற்றி இவ்வாறு எடுத்துரைத்தார்: “நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்.” (யோவா. 14:12, பொது மொழிபெயர்ப்பு) “பெரிய” செயல்களை நாம் எப்படி செய்ய முடியும்?
2 நிறைய இடங்களில் ஊழியம் செய்வதன் மூலம்: இயேசு கிறிஸ்துவின் ஊழியம் பாலஸ்தீன பகுதியோடு நின்றுபோனது. ஆனால், “உலகத்தின் கடையெல்லைவரைக்கும்” சாட்சிக்கொடுக்கும் வேலையைச் செய்யும்படி தம்முடைய ஆரம்பகால சீஷர்களிடத்தில் சொன்னார். அப்படியென்றால், இயேசு ஊழியம் செய்த இடத்துக்கு அப்பால் அவர்கள் ஊழியம் செய்யவேண்டும். (அப். 1:8, பொ.மொ.) அன்று அவர் ஆரம்பித்து வைத்த ஊழியம் இன்று உலகளவில், 232 தேசங்களில் நடைபெற்று வருகிறது. (மத். 24:14) உங்கள் சபைக்காக கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஊழியம் செய்யும்போது, நீங்கள் முழுமையாக பங்கேற்கிறீர்களா?
3 நிறையப் பேருக்கு பிரசங்கிப்பதன் மூலம்: இயேசு விட்டு சென்ற ஊழியத்தை தொடர ஒருசில சீஷர்களே இருந்தார்கள். பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளில் அந்தச் சீஷர்கள் வைராக்கியத்தோடு சாட்சிகொடுத்தார்கள். அதன் விளைவாக அந்த ஒரேநாளில் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, முழுக்காட்டுதல் எடுத்தவர்கள் மூவாயிரம் பேர். (அப். 2:1-11, 37-41) ‘நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்களை’ சேகரிக்கும் பணி அன்று முதல் இன்று வரை தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,000-க்கும் அதிகமானோர் முழுக்காட்டுதல் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். (அப். 13:48) நல்மனம் உள்ள மக்கள் எங்கிருந்தாலும், அவர்களுக்கு பிரசங்கிப்பதற்கும், அவர்கள் ஆர்வம் காட்டினால் உடனே போய் சந்திப்பதற்கும் உங்களால் இயன்றமட்டும் முயற்சி செய்கிறீர்களா?
4 நீண்ட காலம் பிரசங்கிப்பதன் மூலம்: இயேசு மூன்றரை வருடமே பூமியில் ஊழியம் செய்தார். நம்மில் அநேகர் ரொம்ப வருடங்களாகப் பிரசங்கித்து வருகிறோம். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த ஊழியத்தை செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியாது. ஆனாலும் ஒவ்வொரு புதிய சீஷருக்கும் ஜீவ பாதையில் நடப்பதற்கு உதவும் வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். (மத். 7:14) கர்த்தருடைய வேலையில் ஒவ்வொரு மாதமும் அதிகமாக செய்கிறீர்களா?—1 கொ. 15:58, பொ.மொ.
5 இயேசு நமக்கு பக்கபலமாக இருக்கிறார் என்ற நம்பிக்கையைத் தளரவிடாமல், அவரது உண்மையான சீஷர்களாய் இன்னும் பெரிய செயல்களை செய்வோமாக!—மத். 28:19, 20.