முடிவு நெருங்குகையில் சாட்சி கொடுத்தலை தீவிரமாக்குங்கள்
1 அறுவடை காலம் ஆனந்தமான காலம். அப்போது கடினமான உழைப்பும்கூட அவசியம். பயிர்களைச் சேகரிக்க குறுகிய காலமே இருக்கும். ஆகவே வேலையாட்கள் தங்கள் வேலையை ஏனோதானோவென்று செய்யமுடியாது.
2 அடையாள அர்த்தத்தில் பேசுபவராக இயேசு, “காரிய ஒழுங்குமுறையின் முடி”வை அறுவடை காலத்திற்கு ஒப்பிட்டார். (மத். 13:39, NW) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவில் நாம் வாழ்ந்துவருவதால் “பூலோகமெங்குமுள்ள” அனைவருக்கும் சாட்சி கொடுப்பதற்கு மிகக்குறைவான நேரமே மீதமுள்ளது. (மத். 24:14) முடிவு நெருங்கி வர வர நம் பங்கில் தீவிரமாக ஊழியத்தில் ஈடுபட வேண்டும். ஏன்? இயேசு விளக்கினார்: “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்.”—மத். 9:37, 38; ரோ. 12:11.
3 அவசர உணர்வோடு பிரசங்கியுங்கள்: இயேசு தம்முடைய மகத்தான பிரசங்க வேலையை ஆரம்பித்தபோது, அவருக்கு நியமிக்கப்பட்ட வேலையை செய்துமுடிக்க மூன்றரை வருடங்கள் மட்டுமே இருந்தன. அதனால்தான் அவர் அவசர உணர்வோடு பிரசங்கித்தார். “நான் . . . தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்” என்றும் கூறினார் அல்லவா?—லூக். 4:43.
4 அதேபோன்ற அவசர உணர்வை இயேசு தம் சீஷர்களிலும் பதியவைத்தார். (மாற். 13:32-37) அதனால்தான் அவர்கள், “தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.” (அப். 5:42) அதிக முக்கியமில்லாத வேலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் முதலிடம் பெறவில்லை. ஆகவேதான் அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தபோதிலும், “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” நற்செய்தியை பிரசங்கிப்பதில் வெற்றி கண்டனர்.—கொலோ. 1:23.
5 “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று,” ஆகையால் இப்போது அதேபோன்ற அவசர உணர்வை வளர்த்துக்கொள்ள நமக்கு இன்னும் அதிக காரணங்கள் இருக்கின்றன. (1 பே. 4:7) இந்தக் காரிய ஒழுங்குமுறையை அழிக்க யெகோவா தேவன் ஒரு நாளையும் ஒரு நாழிகையையும் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டார். (மத். 24:36) மீதமிருக்கும் நேரத்திற்குள் பிரசங்க வேலை செய்து முடிக்கப்படும். ஆகவேதான் நற்செய்தியை இன்னும் அதிகமான ஆட்களுக்கு தெரிவிக்க நம் முயற்சிகளை நாம் தொடர்ந்து அதிகரித்து வருகிறோம்.
6 முடிவு நெருங்குகையில் சாட்சிகொடுக்கும் வேலையில் நம்முடைய பங்கை தொடர்ந்து அதிகரிப்போமாக. அப்போதுதான் இயேசு சொன்னதைப் போல யெகோவாவிடம் சொல்லும்போது நமக்கு முழு திருப்தி இருக்கும்: ‘நாங்கள் செய்யும்படி நீர் எங்களுக்கு நியமித்த கிரியையை செய்து முடித்தோம்.’—யோவா. 17:4.