நற்செய்தியை ஆவலுடன் பிரசங்கியுங்கள்
1 “உங்களைக் காண வாஞ்சையாயிருக்கி[றேன்] . . . உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன் [“ஆவலாய் இருக்கிறேன்,” NW].” ரோமாபுரியிலிருந்த சகோதரர்களுக்கு எழுதின கடிதத்தின் ஆரம்பத்தில் அப்போஸ்தலன் பவுல் தன் விருப்பத்தை இவ்வாறு குறிப்பிட்டார். அவர்களைச் சந்திக்க பவுல் ஏன் ஆவலாய் இருந்தார்? அவரே பதில் சொல்கிறார்: “உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, . . . சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன் . . . இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது.”—ரோ. 1:10-16.
2 எபேசுவிலிருந்த மூப்பர்களிடம் பேசுகையிலும் பவுல் இதேபோன்ற ஆவலை வெளிக்காட்டினார். “நான் ஆசியா நாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி . . . வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து உபதேசம் பண்ணி, . . . யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன்” என அவர்களுக்கு நினைப்பூட்டினார். (அப். 20:18-21) பவுல் தனக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியம் முழுவதும் இரட்சிப்பின் நற்செய்தியை பரவச்செய்து ராஜ்ய கனிகளை அறுவடை செய்வதில் முழுமூச்சாய் ஈடுபட்டார். நாம் பின்பற்றுவதற்கு என்னே அருமையான முன்மாதிரி!
3 நம்மை நாமே பின்வருமாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய பிராந்தியத்தில் நற்செய்தியைப் பிரசங்கிக்க நானும் அதேபோன்ற ஆவலைக் காண்பிக்கிறேனா? பிரசங்க வேலையை வெறுமனே ஒரு கடமையாக கருதாமல் என்னால் இயன்றளவு எல்லாருடனும் நற்செய்தியைப் பிரசங்கிக்க ஆவலாய் இருக்கிறேனா? என்னுடைய சொந்த சூழ்நிலைகளை ஜெப சிந்தையோடு ஆழ்ந்து சிந்தித்திருக்கிறேனா? வீட்டுக்கு வீடு ஊழியம், தெரு ஊழியம், வியாபார பிராந்தியம், தொலைபேசி வாயிலாக, சந்தர்ப்ப சாட்சியம் என இந்தப் பிராந்தியத்திலுள்ள எல்லா வாய்ப்புகளையும் முழுமையாக உபயோகித்திருக்கிறேனா?’
4 ஏப்ரலில் ஆவலுடன் பங்குகொள்ளுங்கள்: பிரசங்க வேலையில் நம்முடைய தனிப்பட்ட பங்கை அதிகரிக்க இந்த ஏப்ரல் மாதம் சிறந்த வாய்ப்பை அளிக்கிறது. மணிநேரம் குறைக்கப்பட்டிருப்பதால் இன்னும் அதிகமானோர் துணைப் பயனியர் செய்ய உதவியாய் இருக்கும். ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியராக சேவை செய்ய உங்களுடைய சூழ்நிலை ஒருவேளை அனுமதிக்கலாம். அல்லது மணிநேர மாற்றத்தின் காரணமாக நீங்கள் ஒழுங்கான பயனியராக ஊழியம் செய்ய வாய்ப்பிருக்கலாம். நீங்கள் சபையில் ஒரு பிரஸ்தாபியாக இருந்தால், இந்த மாதமும் அடுத்த மாதமும் எப்போதும் செய்வதைவிட கூடுதலான மணிநேரம் வெளி ஊழியத்தில் செலவிட முடியுமா? இவ்வாறு, பயனியர் செய்ய முடிந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டமுடியுமா? அது யெகோவாவின் இதயத்துக்கு எவ்வளவாய் மகிழ்வூட்டும்!
5 பிரசங்க வேலையில் முன்னேற்றம் செய்வதனால் ராஜ்ய பிரஸ்தாபிகள் அனைவரும் பவுலைப் போன்ற ஆவலைத் தொடர்ந்து காண்பிக்க வேண்டும். ஊழியத்தில் நம்மாலான மிகச் சிறந்ததைச் செய்யும்போதுதான் உண்மையான மகிழ்ச்சியை காண்போம். பவுல் தன்னுடைய பரிசுத்த சேவையில் இப்படிப்பட்ட மகிழ்ச்சியைத்தான் பெற்றார். அவருடைய அருமையான முன்மாதிரியை நாமும் பின்பற்றுவோமாக.—ரோ. 11:14; 1 கொ. 4:16.