தேவை—4,000 துணைப் பயனியர்கள் உங்களால் துணைப் பயனியர் சேவை செய்யமுடியுமா—மார்ச்சில்? ஏப்ரலில்? மேயில்?
1 “1,000 பிரசங்கிகள் தேவை” என்பதே, ஏப்ரல் 1881 உவாட்ச் டவர் இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரையின் தலைப்பாக இருந்தது. ஒப்புக்கொடுத்த ஆண்களும் பெண்களும், “கர்த்தர் தமது சத்தியமாகிய அறிவை ஒப்படைத்தவர்களுமாகிய” அனைவருக்கும் விடுக்கப்பட்ட ஒரு வேண்டுகோள் அதில் அடங்கியிருந்தது. பைபிள் சத்தியத்தை பரப்புவதில் தங்களால் முடிந்தளவு சமயத்தைப் பயன்படுத்தும்படியான ஒரு வேண்டுகோள்தான் அது. முழுவதுமாக கர்த்தரின் வேலைக்கென்று தங்களுடைய நேரத்தில் பாதியையோ அல்லது அதிக நேரத்தையோ கொடுக்க முடிந்தவர்கள் கோல்போர்ட்டர் பிரசங்கிப்பாளர்களாக—இவர்கள் இன்றைய பயனியர்களின் முன்னோடிகள்—சேவை செய்ய மனமுவந்து முன்வரும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்.
2 1800-களில் இருந்து இப்போது காலம் மாறிவிட்டிருந்தாலும், ஒரு விஷயம் உண்மையாகவே இருந்துவருகிறது—கடவுளுடைய ஒப்புக்கொடுத்த ஊழியர்கள் நற்செய்தியைப் பரப்புவதற்காக தங்களால் முடிந்தளவு அதிக நேரத்தை தொடர்ந்து பயன்படுத்த விரும்புகின்றனர். துணைப் பயனியர்களாக சேவிப்பது, சபை பிரஸ்தாபிகள் ராஜ்ய ஊழியத்தில் அதிக நேரத்தை செலவிடும்போது அவர்கள் இன்னும் அதிக திறம்பட்டவர்களாக ஆவதற்கு உதவுகிறது.—கொலோ. 4:17; 2 தீ. 4:5.
3 துணைப் பயனியர் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, அது உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சகோதர சகோதரிகளால் அனுபவிக்கப்பட்டுவருகிறது. 1994-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்திய நாட்டில் 14,000 பிரஸ்தாபிகள் மட்டுமே இருந்த சமயத்தில், துணைப் பயனியர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2,000 என்ற உச்சநிலையை அடையுமளவுக்கு இந்தியாவிலும் பயனியர் ஊழியத்தின் இந்த அம்சத்திற்கான ஆர்வம் அதிகரித்தது! அந்த சமயம் வரை அந்த மாதம்தான் இந்தியாவில் அதிகளவில் பிரசங்க வேலை செய்யப்பட்ட மாதமாக இருந்தது. அந்த மாதத்தில் ஊழியத்தின் ஒவ்வொரு அம்சமும் உச்சநிலையை அடைந்தது. ஊழியத்தில் செலவிடப்பட்ட உச்சநிலையாகிய 3,33,489 மணிநேரமும், அளிக்கப்பட்ட உச்ச எண்ணிக்கையிலான 71,998 சிறுபுத்தகங்களும் மற்றும் பெறப்பட்ட 3,235 சந்தாக்களும் இதில் உள்ளடங்கும். அப்போதிலிருந்து இரண்டு ஆண்டுகளாக இந்த மூன்று உச்சநிலைகளையுமே நாம் விஞ்சிவிடவில்லை. இப்பொழுது நாட்டில் 17,000 பிரஸ்தாபிகள் இருப்பதால்—ஏப்ரல் 1994-ல் செய்த அதிகமான வேலையை—விஞ்சுவதற்கான வாய்ப்பு—ஏன் இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பு—நிச்சயமாகவே இன்னும் இருக்கிறது.
4 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஒரு மாதத்திற்கோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாதங்களுக்கோ துணைப் பயனியர் சேவை செய்யும் இலக்கை வைக்கும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். ஏன் மார்ச் மாதத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்? ஏனென்றால், கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு இந்த வருடம் மார்ச் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. நினைவு ஆசரிப்புக்கு முந்தின வாரங்களை நம் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து தொடங்கி வைத்த ராஜ்ய பிரசங்க வேலையில் வைராக்கியத்தோடு பங்குகொள்வதில் செலவழிப்பதைவிட வேறெந்த மேம்பட்ட வழியிலும் செலவு செய்யமுடியாது. மார்ச் மாதத்தில் பெருமளவில் சாட்சி கொடுக்கும் வேலையை செய்கையில், கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும் ஆசரிப்பில் நம்மோடு சேர்ந்துகொள்ளும்படி அக்கறையுள்ள ஆட்கள் அநேகரை நாம் அழைக்கலாம். மார்ச் மாதத்தில்தான் முதன்முதலாக குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புதிய புத்தகத்தை சிறப்புப்படுத்திக் காட்டப்போகிறோம்; இவ்வகையிலும் மார்ச் மாதம் சிறப்புவாய்ந்ததாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் மார்ச் மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகளும் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும் இருப்பதனால், வார இறுதிநாட்களில் மும்முரமான வெளி ஊழிய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களின்போது வெளி ஊழியத்தில் வைராக்கியத்தோடுகூடிய விடாமுயற்சியைக் காண்பிக்கும்போது, நாம் கண்டுபிடித்த அக்கறையுள்ளவர்களை மீண்டும் சந்தித்து கடவுள் நம்மிடம் எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டில் புதிய வீட்டு பைபிள் படிப்புகளைத் தொடங்க வசதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நம்முடைய பிராந்தியத்தை, குறிப்பாக வார இறுதிநாட்களில், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் காலத்துக்கேற்ற புத்தம்புதிய இதழ்களை வைத்து, முழுமையாக வேலை செய்து முடிப்போம்.
5 துணைப் பயனியர் சேவை செய்ய தகுதியானவர்கள் யார்?: நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்காக அமைக்கப்பட்டிருத்தல் புத்தகம் 113-114-ஆம் பக்கங்களில் விவரிப்பதாவது: “உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும் நீங்கள் முழுக்காட்டப்பட்டு, நல்நடத்தையுள்ளவர்களாக இருந்து, வெளி ஊழியத்தில் மாதத்துக்கு 60 மணிநேரம் செலவிட வேண்டிய தேவையைப் பூர்த்திசெய்ய ஏற்பாடு செய்துகொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் துணைப் பயனியராகச் சேவிக்கக் கூடுமென்று நம்புகிறீர்களென்றால், இந்த ஊழிய சிலாக்கியத்துக்காக நீங்கள் செய்யும் விண்ணப்பத்தை ஏற்பதற்கு சபை மூப்பர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.” ஏப்ரலில் இந்த சிலாக்கியத்தை அனுபவிக்க உங்களால் ஏற்பாடு செய்யமுடியுமா? ஒருவேளை மார்ச் மாதத்திலேயும்கூட முடியுமா? மே மாதத்திலும் முடியுமா? மூன்று மாதங்களில் எல்லா மாதங்களிலும் செய்யமுடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஏப்ரலிலாவது துணைப் பயனியர் சேவை செய்ய விசேஷ முயற்சிகள் எடுக்கும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.
6 மீதியுள்ள பிரஸ்தாபிகள் கொடுக்கும் மனமுவந்த ஆதரவோடு மூப்பர் குழுக்களின் பாகத்தில் காண்பிக்கக்கூடிய நம்பிக்கைகரமான மனநிலை, 4,000 துணைப் பயனியர்கள் தேவை என்ற இந்த அழைப்புக்கான பிரதிபலிப்பை வெற்றி முழங்கச்செய்யும் ஒன்றாக ஆக்கவேண்டும். ஒவ்வொரு சபையும் அதன் பிரஸ்தாபிகளில் குறைந்தது 25 முதல் 30 சதவீதத்தினரை ஏப்ரல் மாதத்தின்போது துணைப் பயனியர்களாக சேர்த்துக்கொள்ளும் இலக்கை வைத்திருக்கலாம். சில சபைகளில் இதைவிட மிக அதிக சதவீதத்தினர் இந்த சிலாக்கியத்தில் பங்குகொள்ள முடியலாம். சேர்ந்துகொள்ளுபவர்களில் முதலாவதாக இருப்பதன்மூலம் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் ஒரு நல்ல முன்மாதிரியை வைக்கலாம். (எபி. 13:7) குடும்பத் தலைவர்கள் அனைவரும் தங்களுடைய குடும்பத்தில் எத்தனை பேர் ஏப்ரல் மாதத்திலோ அல்லது வருகிற மாதங்களில் அதற்கதிகமான மாதங்களிலோ துணைப் பயனியர்களாக சேர்ந்துகொள்ள முடியும் என்று யோசித்துப் பார்க்கும்படி உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.—சங். 148:12, 13; ஒப்பிடுக: அப்போஸ்தலர் 21:8, 9.
7 உங்களுடைய முழுநேர உலகப்பிரகாரமான வேலை, பள்ளிப் படிப்பு, குடும்ப பொறுப்புகள், அல்லது மற்ற வேதப்பூர்வமான கடமைகள் ஆகியவற்றின் காரணமாக, துணைப் பயனியராக இருப்பது என்பது உங்களால் முடியாத காரியம் என்று உடனடியாக முடிவெடுத்துவிடாதீர்கள். சிலருக்கு இதில் பங்குகொள்வது சுலபமானதாக இல்லாமலிருக்கலாம்; இருந்தபோதிலும், நன்றாக ஒழுங்கமைப்பதாலும், யெகோவாவின் ஆசீர்வாதத்தாலும் அப்படிப்பட்டவர்கள் வெற்றி பெறலாம். (சங். 37:5; நீதி. 16:3) பயனியர் சேவையில் பங்குகொள்வதற்கான ஆசை உங்களுடைய சூழ்நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதாக; உங்களுடைய சூழ்நிலைமைகள் பயனியர் சேவை செய்வதற்கான உங்களுடைய ஆசையைக் கட்டுப்படுத்தவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். (நீதி. 13:19அ) ஆகவே, யெகோவாவுக்கும் உடன் மானிடருக்குமான பலமான அன்பின் காரணமாக, ஏதேனும் ஒரு சமயத்தில், ஒரு மாதத்திற்கு தங்களுடைய ஊழியத்தை விரிவாக்கும்படி தங்களுடைய வாராந்திர வழக்கமுறையில் மாற்றங்களை ஏற்படுத்த அநேகரால் முடிகிறது. (லூக். 10:27, 28) ராஜ்ய ஊழியத்தில் கடினமாக உழைப்பவர்களுக்கு அநேக ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன.—1 தீ. 4:10.
8 துணைப் பயனியர் சேவை நிறைவேற்றுபவை: துணைப் பயனியர் சேவை செய்வதற்காக கடவுளுடைய ஊழியர்களில் ஆயிரக்கணக்கானோர் எடுக்கும் முழு இருதயத்தோடுகூடிய முயற்சி யெகோவாவுக்கு எழுப்பும் மிகவும் உரத்த துதியில் விளைவடைகிறது. இந்த ராஜ்ய அறிவிப்பாளர்கள், அதிகமானோருக்கு இந்த நற்செய்தியைப் பரப்புவதற்காக பிரயாசப்படுகையில், தனிப்பட்ட வகையில் யெகோவாவிடம் நெருங்க இழுத்துக்கொள்ளப்படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் அவருடைய ஆவிக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும் அவரை அதிகம் சார்ந்தவர்களாக இருக்க பழகிக்கொள்கின்றனர்.
9 நமது மத்தியில் துணைப் பயனியர்களும், ஒழுங்கான பயனியர்களும், விசேஷ பயனியர்களும் சுறுசுறுப்பாக இருப்பது, சபையில் உயிர்த்துடிப்புள்ள புதுப்பிக்கப்பட்ட ஆவியை ஏற்படுத்துகிறது. அவர்கள் தங்களுடைய வெளி ஊழிய அனுபவங்களைப்பற்றி பேசும்போது அவர்களுடைய ஆர்வம் தொற்றிப் பரவும் தன்மையுள்ளதாய் இருக்கிறது. இது ஊழியத்தின் இந்த மிக முக்கியமான வேலையில் அதிகம் பங்குகொள்வதற்கு மற்றவர்கள் தங்களுடைய முன்னுரிமைகளையும் வாய்ப்புகளையும் பரிசீலனை செய்துபார்க்கும்படி தூண்டுவிக்கிறது. 70 வயதில் முழுக்காட்டப்பட்ட ஒரு சகோதரி உடனடியாக துணைப் பயனியர் சேவையைத் தொடங்கி தொடர்ந்து செய்து வந்தார். சில வருடங்கள் கழித்து, அவர் ஏன் இந்த வயதிலும்கூட ஒவ்வொரு மாதமும் ஊழியத்தில் ஒரு துணைப் பயனியராக சேவிக்க இவ்வளவு கடுமுயற்சி எடுக்கிறார் என்று கேட்கப்பட்டபோது, தன் வாழ்க்கையின் முதல் 70 வருஷங்கள் வீணடிக்கப்பட்டதாக உணர்ந்ததாகவும், வாழ்க்கையில் எஞ்சியிருக்கும் எந்த வருஷத்தையும் வீண்செய்வதற்கு தான் விரும்பாததாகவும் அவர் உணர்ந்ததாக சொன்னார்!
10 துணைப் பயனியர் வேலையில் பங்குகொள்ளும் ஒவ்வொருவரும் ஊழியத்தில் முன்னேற்றுவிக்கப்பட்ட திறமையை வளர்த்துக்கொள்கின்றனர். சாட்சியாக இருக்கும் வாலிபன் ஒருவன் ஒப்புக்கொண்டதாவது: ‘என்னுடைய குழந்தைப் பருவத்தில் என்னுடைய பெற்றோர் ஊழியத்துக்குப் போகும்போது அவர்களோடு நான் போனதுண்டு. வெளி ஊழியம் உண்மையிலேயே அனுபவிக்கத்தக்கதாக இருந்தது. என்றபோதிலும், நான் பள்ளியில் உள்ள மற்றெல்லாரையும்விட வித்தியாசமானவனாக இருந்தேன் என்று காலப்போக்கில் எனக்குத் தோன்றிற்று. பின்னர் சக மாணவர்களிடத்தில் சத்தியத்தைப் பற்றிப் பேசுவது எனக்குக் கூச்சமாக இருந்தது. வீட்டுக்குவீடு பிரசங்கிக்கும்போது, பள்ளியில் பழக்கப்பட்ட எவரையேனும் சந்தித்துவிடுவோமோ என்ற நினைப்பே என்னை நடுங்கவைத்தது. என்னுடைய விஷயத்தில் பிரச்சினை, மனிதருக்குப் பயப்படுதல் என்று நான் நினைக்கிறேன். [நீதி. 29:25] பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, தற்காலிக அடிப்படையில் பயனியர் சேவை செய்ய முயற்சிக்கலாம் என்று தீர்மானித்தேன். அதன் விளைவாக, பிரசங்கிப்பது எனக்கு இதற்குமுன் ஒருபோதும் இல்லாத நாட்டத்தைத் தந்தது. அதற்குப் பிறகு பிரசங்க வேலை ஒருபோதும் ஒரு கேளிக்கை நடவடிக்கையாகவும் இருந்ததில்லை, மிகப் பாரமான ஒன்றாகவும் இருந்ததில்லை. என்னுடைய பைபிள் மாணாக்கர்கள் சத்தியத்தில் முன்னேற்றம் காண்பிப்பதைக் காணும்போது, யெகோவா தேவன் என் முயற்சிகளை ஆதரித்து வந்திருப்பதற்கான அத்தாட்சியிலிருந்து வரும் ஒரு ஆழ்ந்த மன திருப்தியை நான் அனுபவித்தேன்.’ இந்த வாலிபன் தொடர்ந்து ஒழுங்கான பயனியராக சேவிக்கத் தொடங்கினான்.
11 நடைமுறையான நோக்குநிலையிலிருந்து பார்க்கும்போது, சபையில் அநேகர் துணைப் பயனியர்களாக சேவிக்கும்போது, அந்தப் பிராந்தியம் முழுமையாக வேலை செய்யப்படுவதில் விளைவடைகிறது. பிராந்தியங்களை ஒதுக்கிக்கொடுக்கும் பொறுப்பிலிருக்கும் சகோதரர், அரிதாக வேலை செய்யப்படும் பகுதிகளில் வேலை செய்வதற்கு துணைப் பயனியர்களுடைய உதவியைக் கேட்கலாம். மதிய உணவை எடுத்துக்கொண்டு போய் ஒரு முழு நாளையும் ஊழியத்தில் செலவழிப்பது பிராந்தியத்தின் தூரமான பகுதிகளையும் வேலை செய்து முடிப்பதை சாத்தியமானதாக ஆக்கும்.
12 மூப்பர்கள் முன்கூட்டியே தயாரிக்கவேண்டும்: அடுத்து வரும் மூன்று மாதங்கள் முழுவதற்கும், வாரத்தின் வெவ்வேறு சமயங்களிலும் வெவ்வேறு வகையான சாட்சிகொடுக்கும் நடவடிக்கைகளை அட்டவணையிட ஏற்பாடு செய்யவேண்டும். இந்த அட்டவணையில் பிற்பகலின் இறுதியையும், மாலைப்பொழுதின் ஆரம்பத்தையும் சேர்த்துக்கொண்டால், முடிந்தளவு அதிகம்பேர் பங்கெடுத்துக்கொள்ள முடியும். வழக்கமான வீட்டுக்குவீடு வேலை செய்வதோடு, தெரு ஊழியம், வியாபார பிராந்தியத்தில் ஊழியம் செய்தல், வீட்டில் சந்திக்கமுடியாமல் போனவர்களைச் சென்று சந்தித்தல் ஆகியவற்றுக்காகவும் சமயத்தை ஒதுக்கிவையுங்கள். இவ்வாறு முன்கூட்டியே தயாரிப்பதன்மூலம், பயனியர் சேவை செய்பவர்கள் பயனியர்களுக்கு மிகவும் நடைமுறையாகவும் வசதியாகவும் இருக்கும் நேரத்தில் சபையோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்கு மூப்பர்கள் உதவுகிறார்கள். வெளி ஊழிய ஏற்பாடுகள் அனைத்தையும் சபைக்குத் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். ஊழியத்திற்காக நடத்தப்படும் கூட்டங்களை நடத்துவது நன்கு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். கூடுதலாக, போதுமான பிராந்தியம் ஒதுக்கப்பட வேண்டும்; போதுமான பத்திரிகைகளும் மற்ற பிரசுரங்களும் காலதாமதமின்றி தருவிக்கப்பட வேண்டும்.
13 உங்களுடைய தனிப்பட்ட ஊழிய அட்டவணையைத் தயாரியுங்கள்: துணைப் பயனியராக சேவிப்பதற்குத் தொடக்கத்தில் பயந்த ஒரு சகோதரர் சொன்னார்: “உண்மையில் அது நான் நினைத்ததைவிட மிக சுலபமாக இருக்கிறது. அதற்கு நல்ல அட்டவணை மட்டும் தேவைப்படுகிறது.” இந்த உட்சேர்க்கையின் பின்பக்கத்தில், உங்களுக்கு நடைமுறையானதாக இருக்கும் ஒரு மாதிரி துணைப் பயனியர் அட்டவணையைக் காண்கிறீர்களா? ஒவ்வொரு வாரமும் ஊழியத்திற்கு பதினைந்து மணிநேரம் மட்டுமே துணைப் பயனியர்களுக்கு தேவைப்படும் மணிநேரமாகும்.
14 துணைப் பயனியர்களாக சேவிப்பதற்கு, வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் மனைவிமார்களும், இரண்டாவது ஷிஃப்ட் டியூட்டிக்கு செல்பவர்களும் பெரும்பாலும் காலை வேளையை வெளி ஊழியத்திற்கென்று திட்டமிடலாம். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளும், மூன்றாவது ஷிஃப்ட் டியூட்டிக்கு செல்பவர்களும் பொதுவாக பிற்பகலின் இறுதி பாகத்தை பிரசங்க வேலைக்காக ஒதுக்கலாம். உலகப்பிரகாரமான முழுநேர வேலையில் இருப்பவர்களுக்கு, மாலை நேர சாட்சிகொடுத்தலோடுகூட, ஊழியத்திற்கென வாரத்திற்கு ஒரு நாள் லீவு எடுப்பதோ அல்லது வார இறுதிநாட்களை முழுவதுமாக பயன்படுத்துவதோ இதைச் செய்வதை சாத்தியமாக்குகிறது. வார இறுதிநாட்களில் மட்டுமே வெளி ஊழியத்திற்கு போகமுடிகிற அநேகர் ஐந்து வார இறுதிநாட்களைக் கொண்ட மாதங்களைத் தெரிந்துகொள்கின்றனர். இந்த வருடம், மார்ச், ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் ஐந்து வார இறுதிநாட்கள் இருக்கின்றன. ஒரு வழிகாட்டியாக பக்கம் 6-ல் கொடுக்கப்பட்டிருக்கிற காலி அட்டவணையைப் பயன்படுத்தி, உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமைக்கு நடைமுறையான ஊழிய அட்டவணை எதுவாக இருக்கும் என்பதை கவனத்தோடும் ஜெப சிந்தனையோடும் ஆலோசனை செய்யுங்கள்.
15 துணைப் பயனியர் சேவை செய்வதில் உள்ள ஒரு அனுகூலம் என்னவென்றால், வளைந்துகொடுக்கக்கூடிய அதன் தன்மையாகும். நீங்கள் எந்த மாதங்களில் பயனியர் சேவை செய்ய விருப்பப்படுகிறீர்களோ அந்த மாதங்களை தெரிந்தெடுத்துக்கொள்ளலாம்; எவ்வளவு அடிக்கடி செய்ய விரும்புகிறீர்களோ அவ்வளவு அடிக்கடி செய்யலாம். நிறுத்தாமல் தொடர்ந்து துணைப் பயனியர் சேவை செய்ய நீங்கள் விரும்பி அவ்வாறு செய்யமுடியாமல் போனால், ஒரு மாதம்விட்டு ஒரு மாதம் செய்வதற்கு எழுதிக்கொடுத்து வருஷம் முழுவதுமாக செய்வதைப்பற்றி நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? மறுபட்சத்தில், சிலரால் நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக துணைப் பயனியர் சேவை செய்ய முடிகிறது.
16 முழுநேர பயனியர் சேவைக்கான தயாரித்தல்: பயனியர் செய்யும் மனப்பான்மை உள்ள அநேகர் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்ய விரும்புகின்றனர், ஆனால் தங்களுக்கு நேரமும், சூழ்நிலைமைகளும், அல்லது சக்தியும் இருக்குமா என்று யோசிக்கின்றனர். இப்போது ஒழுங்கான பயனியர் சேவை செய்துகொண்டிருக்கும் பெரும்பாலானோர் முழுநேர ஊழியம் செய்வதற்கான தயாரித்தலாக முதலாவது துணைப் பயனியர் சேவையைப் பயன்படுத்தினர் என்பதில் சந்தேகமேதுமில்லை. ஒருவருடைய துணைப் பயனியர் அட்டவணையில் ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரத்தை அல்லது ஒவ்வொரு வாரமும் ஒரு முழு நாளை அதிகரிப்பது, ஒழுங்கான பயனியர் அட்டவணை தேவைப்படுத்தும் மணிநேரத்தை பூர்த்திசெய்வதை சாத்தியமாக்குகிறது. அதை உங்களால் செய்யமுடியுமா என்று கண்டுபிடிக்க, துணைப் பயனியர் சேவை செய்யும் மாதங்களில் ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாதங்களிலோ ஊழியத்தில் மாதத்திற்கு 90 மணிநேரத்தை ஒதுக்க நீங்கள் ஏன் முயற்சிக்கக்கூடாது? அதே சமயத்தில், மறுசந்திப்புகளையும் பைபிள் படிப்புகளையும் நீங்கள் உருவாக்குவீர்கள். இது முழுமையான பயனியர் ஊழியத்தை நீங்கள் அனுபவித்து மகிழ்வதற்கு உதவிசெய்யும்.
17 சகோதரி ஒருவர் தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு துணைப் பயனியர் சேவையை செய்து மகிழ்ந்தார். அவ்வளவு காலமாக ஒழுங்கான பயனியர் சேவையைத் தொடங்குவது அவருடைய இலக்காக இருந்தது. இதே நோக்கத்தோடு, ஒழுங்கான பயனியர்களுக்குத் தேவையான 90 மணிநேரத்தை அடைவதை சாத்தியமாக்கும் நிலைமையை ஏற்படுத்தும் நம்பிக்கையில் வித்தியாசப்பட்ட நான்கு உலகப்பிரகாரமான வேலைகளை செய்து பார்த்தார். முடியுமா முடியாதா என்று கணக்குப்போட்டுப் பார்க்க ஒவ்வொரு மாதமும், ஒன்று அல்லது இரண்டு அட்டவணைகளை போட்டார். ஆனால் அவற்றை சோதித்தப் பிறகு, முழுநேர ஊழியம் அவரால் செய்யவேமுடியாத ஒன்று என்பதாக அவர் உணர்ந்தார். இருப்பினும், அவர் யெகோவாவின் வழிநடத்துதலுக்காக தொடர்ந்து ஜெபித்துவந்தார். பின்னர் ஒருநாள் ஊழியக் கூட்டத்திற்குத் தயாரித்துக்கொண்டிருந்தபோது, “மணிநேரத் தேவையின் பேரில் மட்டுக்குமீறி அழுத்தம் வைப்பதற்கு மாறாக, கூட்டிச்சேர்க்கும் வேலையில் பங்குகொள்வதற்கு அதிகரிக்கப்பட்ட சந்தர்ப்பத்தின் பேரில் ஏன் கவனத்தை ஒருமுகப்படுத்தக்கூடாது? (யோவா. 4:35, 36)” என்று அக்டோபர் 1991 நம் ராஜ்ய ஊழியம் கேட்பதை அவர் வாசித்தார். அவர் சொல்வதாவது: “இந்த வாக்கியத்தை நான் ஐந்து அல்லது ஆறு முறை திரும்பத்திரும்ப வாசித்தேன்; இதுதான் யெகோவாவின் பதில் என்பது எனக்கு நிச்சயமாயிற்று. அந்த நொடியிலேயே ஒழுங்கான பயனியர் சேவையில் இறங்க நான் தீர்மானம் எடுத்தேன்.” அவருடைய உலகப்பிரகாரமான பகுதிநேர வேலை அட்டவணை மிகவும் ஏற்றதாக இல்லாதிருந்தபோதும், ஒழுங்கான பயனியர் விண்ணப்பத்தை சமர்ப்பித்தார். ஒரு வாரத்திற்குப் பிறகு அவருடைய அட்டவணை மாற்றப்பட்டது; அவருக்குப் பொருத்தமான உலகப்பிரகாரமான வேலை நேரம் கொடுக்கப்பட்டது. “இது யெகோவாவின் ஆசீர்வாதம் இல்லையா என்ன?” என்று அவர் சொல்லி, “யெகோவாவை வழிநடத்துதலுக்காக நீங்கள் கேட்டு, அதைப் பெற்றுக்கொள்ளும்போது, அதை ஒதுக்கித் தள்ளிவிடாதீர்கள்—ஏற்றுக்கொள்ளுங்கள்,” என்று மேலும் கூறிமுடித்தார். ஒழுங்கான பயனியராவது உங்களுடைய உண்மையான ஆசையாக இருக்குமானால், ஒருவேளை இந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் துணைப் பயனியர் சேவையை முடிக்கும்போது, முழுநேர ஊழியத்தில் நீங்களும் வெற்றிகாண முடியும் என்பதில் நம்பிக்கையடைவீர்கள்.
18 இந்த விசேஷ இளவேனிற்கால நடவடிக்கையின்போது, யெகோவாவின் ஜனங்கள் இரட்சிப்பின் நற்செய்தியைப் பிரசங்கிக்கையில் அவர்கள் காண்பிக்கும் வைராக்கியத்தை அவர் ஆசீர்வதித்து, அவர்களுடைய முயற்சிகளை ஆதரிப்பார் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. (ஏசா. 52:7; ரோ. 10:15) ஏப்ரலில் பங்குகொள்வதன் மூலம் 4,000 துணைப் பயனியர்கள் தேவை என்ற அழைப்புக்கு நீங்கள் பதிலளிப்பீர்களா? ஒருவேளை மார்ச்சிலும்கூட பங்குகொள்வீர்களா? மே மாதத்திலும் முடியுமா?
[பக்கம் 3-ன் பெட்டி]
ஒரு துணைப் பயனியராக வெற்றிபெறுவது எவ்வாறு
■ உங்களால் செய்துமுடிக்க முடியும் என்று நம்பிக்கையோடு இருங்கள்
■ உங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்
■ உங்களோடு பயனியர் சேவை செய்யும்படி வேறொரு பிரஸ்தாபியை அழையுங்கள்
■ நடைமுறையான ஒரு ஊழிய அட்டவணையைப் போடுங்கள்
■ போதுமான அளவு பத்திரிகைகளை தருவியுங்கள்
■ சபை ஊழிய ஏற்பாடுகளுக்கு ஆதரவு காண்பியுங்கள்
■ சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள்