நாம் மறுபடியும் செய்யலாமா? துணைப் பயனியர்களுக்கு இன்னொரு அழைப்பு
1 நாம் மறுபடியும் செய்யலாமா? நினைவு ஆசரிப்பு காலத்தில் நாம் துணைப் பயனியர் செய்யலாமா? நம் ராஜ்ய ஊழியம், பிப்ரவரி 1997-ல் “தேவை—4,000 துணைப் பயனியர்கள்” என்று கொட்டை எழுத்துக்களில் வந்த உட்சேர்க்கையின் தலைப்பு நம் கவனத்தை ஈர்த்தது. இந்த அழைப்பை நீங்கள் பொறுப்போடு ஏற்று நிறைவேற்றுவீர்கள் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. நாங்கள் சுற்றாய்வு எடுத்து முடிக்கையில், கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில், ஏதேனும் ஒரு மாதத்திலாவது துணைப் பயனியர் செய்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை சுமார் 4,250 பேர் என்று தெரியவந்ததும் மகிழ்ச்சியடைந்தோம். ஏப்ரல் 1997-ல் மாத்திரம் 2,093 பேர் துணைப் பயனியர் சேவையில் ஈடுபட்டனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இந்த எண்ணிக்கையோடு அம்மாதத்தில் அறிக்கை செய்த 797 ஒழுங்கான பயனியர்களையும், 288 விசேஷ பயனியர்களையும் சேர்த்தபோது, 18 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரஸ்தாபிகள் பயனியர் சேவை செய்ததை நாங்கள் கண்டோம். இந்த முறையும் நினைவு ஆசரிப்பு காலத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்யலாமா?
2 கடந்த வருடம் வெளி ஊழிய சேவையில் தங்கள் மணிநேரத்தை அதிகரிக்க கூடுதலான முயற்சி எடுத்த அனைவருக்கும் எங்களது உளமார்ந்த பாராட்டுக்கள். யெகோவா தேவன் பேரிலும் உங்கள் அயலகத்தார் பேரிலும் நீங்கள் வைத்திருக்கிற தன்னலமற்ற அன்பே உங்களை செயலாற்ற செய்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. (லூக். 10:27; 2 பே. 1:5-8) பல்வேறு சூழ்நிலைகளில் உள்ள பிரஸ்தாபிகள் எல்லாரும் துணைப் பயனியர் ஊழியம் செய்ய வழிசெய்துள்ளனர். ஒரு சபையில் 51 பிரஸ்தாபிகள் ஒரே மாதத்தில் பயனியர் சேவை செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையில் அநேக மூப்பர்களும், 15 மாத பெண் குழந்தையை உடைய ஒரு தாயும், பயனியர் செய்வதற்காகவே தன் முழுநேர வேலையை விட்டுவிட்டு பகுதிநேர வேலையைத் தேடிக்கொண்ட சகோதரி ஒருவரும், இதற்கு முன் பயனியர் சேவை செய்திராத வயதான சகோதரி ஒருவரும் அடங்குவர். வட்டாரக் கண்காணி இவ்வாறு எழுதினார்: “பெரும் முயற்சி எடுத்து பிரசங்க ஊழியத்தில் ஈடுபட்டுள்ளனர். . . . இதன் நல்விளைவு பிராந்தியத்தில் மட்டுமின்றி சபைகளிலும் எதிரொலிக்கிறது; சபைகளில் ஆர்வத்துடிப்பு கட்டுக்கடங்காமல் பெருக்கெடுக்கிறது. சகோதரர்களுக்கு ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்வதிலும், ஊழியத்தில் நல்ல பலன்களை காண்பதிலும் ஒரே குஷிதான்.”
3 இதற்கு இளம் பிள்ளைகள் ஒன்றும் விதிவிலக்கல்ல. 13 வயது சிறுமி ஒருத்தி, முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருந்தாள். யெகோவாவுக்கு தன்னுடைய ஒப்புக்கொடுத்தலை வெளிப்படுத்திக் காட்டும் அந்த நாளுக்காக ஏங்கிக்கொண்டிருந்தாள். அவள் பிப்ரவரி மாதம் முழுக்காட்டுதல் எடுத்து முடித்தவுடன், மார்ச்சில் துணைப் பயனியர் செய்ய தனது விருப்பத்தை தெரிவித்து இவ்வாறு எழுதினாள்: “இனி எனக்கு எந்த ஒரு தடையும் இல்லை, எனவே நான் உடனே என்னுடைய விண்ணப்பத்தை எழுதி கொடுத்துவிட்டேன். . . . பயனியர் செய்யும்படி நீங்கள் மாத்திரம் இந்த அன்பான அழைப்பை கொடுக்காவிட்டால், இவ்வளவு நல்ல நல்ல அனுபவங்களெல்லாம் எங்களுக்கு கிடைக்காமலேயே போயிருக்கும். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மற்றவர்களோடு . . . சேர்ந்து சேவை செய்யும் பாக்கியம் கிடைத்ததற்காக நான் யெகோவாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.” மறுபடியும் செய்யவேண்டும் என்ற இலட்சியத்தோடு இச்சிறுமி இருக்கிறாள்.
4 துணைப் பயனியர்களாக கடந்த மார்ச் மாதத்தில் சேவை செய்த 1,715 பேரில், அல்லது ஏப்ரல் மாதத்தில் சேவை செய்த 2,093 பேரில் அல்லது மே மாதத்தில் சேவை செய்த 1,523 பேரில் நீங்களும்கூட ஒருவராக இருந்திருப்பீர்கள். இவ்வருடமும் உங்களால் செய்ய முடியுமா? போன வருடம் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உங்களால் செய்ய முடியவில்லை, சரி, இவ்வருடமாவது உங்களால் செய்ய முடியுமா? ஏப்ரல் மாதத்தில் பயனியர் செய்த 2,093 பேர் என்ற எண்ணிக்கையை இப்போது நம்மால் மிஞ்சிவிட முடியுமா? இதுவரை இந்தியாவில் எந்த ஒரு மாதத்திலும் இவ்வளவு பேர் துணைப் பயனியர் செய்ததே கிடையாது.
5 ஏப்ரல், மே மாதங்களை குறிவையுங்கள்: இந்த வருடம் நினைவு ஆசரிப்பு நாள் ஏப்ரல் 11-ம் தேதி, சனிக்கிழமை வருகிறது. எனவே, வெளி ஊழியத்தில் நிறைய மணிநேரத்தை செலவிட ஏப்ரல் ஒரு சிறந்த மாதம். (2 கொ. 5:14, 15) மாதத்தின் முதல் 11 நாட்களை, ஆர்வமுள்ள நபர்கள் எத்தனை பேரை அழைக்க முடியுமோ அத்தனை பேரையும் நினைவு ஆசரிப்புக்கு வரும்படி அழைப்பதற்கு நாம் செலவிடுவோம். ஒருவேளை நீங்கள் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடிவெடுத்திருந்தால், ஊழியத்தை துவங்கவிருக்கும் அந்தத் தேதிக்கு ரொம்பவும் முன்னதாக உங்களுடைய விண்ணப்பத்தை தயவுசெய்து கொடுத்துவிடுங்கள்.—1 கொ. 14:40.
6 மே மாதத்தில் சுளையாக ஐந்து வார இறுதிநாட்கள் உள்ளதால், முழுநேரம் வேலைபார்க்கும் பிரஸ்தாபிகளுக்கு பயனியர் செய்ய சுலபமாக இருக்கலாம். மே மாதத்தில் நிறைய பிள்ளைகளுக்கு விடுமுறை இருக்கும். ஒவ்வொரு வார இறுதியிலும் வெளி ஊழியத்தில் 10 மணிநேரம் என்று கணக்கிட்டு அட்டவணை போட்டுக்கொண்டீர்கள் என்றால், அம்மாதத்தில் 60 மணிநேரத்தை எட்டிப்பிடிக்க இன்னும் ஒரு 10 மணிநேரத்தை கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்யவேண்டியிருக்கும்.
7 ஏப்ரல், மே மாதங்களில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தா எடுக்கும்படி உற்சாகப்படுத்த போகிறோம். இது நம்மில் இன்னும் நிறையப் பேரை பயனியர் செய்யும்படி உற்சாகப்படுத்த வேண்டும். ஏன்? ஏனென்றால், பத்திரிகைகளை அளிப்பது மிகவும் சுலபம், அதோடு இவற்றை கொண்டு ஊழியம் செய்வதும் ஜாலியாக இருக்கும். ஊழியத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் அவற்றை நாம் உபயோகிக்க முடியும். அதாவது வீட்டுக்கு வீடு ஊழியத்திலும், கடைகள் தோறும் ஊழியம் செய்யும்போதும், தெருக்களில், பார்க்கிங் ஏரியாக்களில், பூங்காக்களில், வேறுசில சந்தர்ப்பங்களில் மக்களை அணுகி பேசும்போதும் இவற்றை தகுந்தவிதத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாவற்றையும்விட முக்கிய காரணம் என்னவென்றால் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் ராஜ்ய சத்தியங்களை எடுத்துரைக்கின்றன. அவை பைபிள் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தின் பேரில் கவனத்தை ஈர்த்து, கடவுளுடைய ராஜ்யம் ஆளுகைசெய்கிறது என்பதை ஊர்ஜிதம் செய்கின்றன. மக்களின் உண்மையான தேவைகளைப் புரிந்து, அதற்கேற்ப விஷயங்களை எடுத்துக்கூறி, வாசகர்களின் நெஞ்சங்களையும் அவை கொள்ளைகொள்கின்றன. இந்த அருமையான பத்திரிகைகள் நம் நெஞ்சங்களை எப்படி கொள்ளைகொண்டன என்பதை நினைத்துப்பார்த்தால், ஏப்ரல், மே மாதங்களில் முடிந்த மட்டும் நிறையப் பேருக்கு இவற்றை தரவேண்டும் என்ற ஆர்வம் பொங்குகிறது.
8 இச்செயலில் முனைப்பாக ஈடுபட தயாராகும்போது, பின்வரும் கட்டுரைகளை நீங்கள் படித்துப்பார்த்தால் பயனடைவீர்கள்: “காவற்கோபுரம், விழித்தெழு!—சத்தியத்தின் காலத்திற்கேற்ற இதழ்கள்” (ஜனவரி 1, 1994, காவற்கோபுரம்), “நம் பத்திரிகைகளை மிக நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்” (ஜனவரி 1996 நம் ராஜ்ய ஊழியம்), “பத்திரிகை அளிப்புக்கு சொந்தமாகவே தயாரியுங்கள்” (அக்டோபர் 1996 நம் ராஜ்ய ஊழியம்).
9 மூப்பர்களே முன்செல்லுங்கள்: கடந்த வருடம் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பயனியர் செய்துகொண்டிருந்த பிரஸ்தாபிகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தபோது, முழு சபையும் ஊழியத்தில் பங்கேற்கும் வகையில் அம்மாதத்தின் ஒரு சனிக்கிழமையை விசேஷ ஊழிய நாள் என்பதாக ஒரு சபையின் மூப்பர்கள் அறிவித்துவிட்டார்கள். சபையில் உள்ள எல்லாரும் ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் பங்கேற்கும் வகையில் அந்த நாளில் வெவ்வேறு நேரங்களில் கூடிவர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வியாபார இடங்களில் ஊழியம் செய்வதும், தெருக்களில் சாட்சி கொடுப்பதும், வீடு வீடாக மக்களை சந்திப்பதும், மறுசந்திப்புகள் செய்வதும், கடிதங்கள் எழுதுவதும், தொலைபேசி மூலம் சாட்சி கொடுப்பதும் இந்த ஊழிய ஏற்பாட்டில் அடங்கின. இதற்கு பிரதிபலிப்பு அபாரமாக இருந்தது. அந்த ஒரே நாளில் 117 பிரஸ்தாபிகள் ஊழியத்தில் பங்கேற்றார்கள். அவர்கள் மொத்தமாக 521 மணிநேரத்தை ஊழியத்தில் செலவிட்டு, ஒட்டுமொத்தமாக 617 பத்திரிகைகளையும், சிற்றேடுகளையும், புத்தகங்களையும் கொடுத்தனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! சனிக்கிழமை உற்சாகமாக ஈடுபட்டதோடு நில்லாமல், ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து செய்தனர், அதனால் பொதுப் பேச்சுக்கும், காவற்கோபுர படிப்புக்கும் வருகைதந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரு பதிவையே ஏற்படுத்தி விட்டது.
10 ஏப்ரல், மே மாதங்களில் ஒவ்வொரு ஊழியக் கூட்டத்திலும், எப்போது, எங்கே வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் நடைபெறும் என்றும், வழக்கமாக செய்யப்படும் ஊழிய ஏற்பாடுகளை தவிர குறிப்பாக வேறு ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் அதையும் ஒவ்வொரு வாரமும் சபையாருக்கு ஞாபகப்படுத்த வேண்டும். இவ்வாறு குழுவாக சேர்ந்து செய்யவிருக்கும் ஏற்பாடுகளுக்கு ஒழுங்கான பயனியர்களும், துணைப் பயனியர் அல்லாத பிரஸ்தாபிகளும் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப ஆதரவு தரும்படி ஊக்குவிக்கிறோம்.
11 பிராந்தியத்தை பிரித்து கொடுக்கும் சகோதரரை ஊழியக் கண்காணி சந்தித்து, அடிக்கடி செய்யாதிருக்கும் இடங்களில் ஊழியம் செய்ய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். பூட்டிய வீடுகள் என்ற பதிவில் உள்ளவர்களை சந்திப்பதிலும், தெருக்கள், கடைகள் என்று சாட்சிகொடுப்பதிலும் நாம் அதிக கவனம் செலுத்துவோமாக. அம்மாதங்களில் பகல் நேரம் நீண்டிருப்பதால் மாலைநேர ஊழியத்தை வலியுறுத்தலாம். ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக ஊழியத்தில் ஈடுபட இருப்பதை மனதில்கொண்டு போதுமான அளவுக்கு பத்திரிகைகளை ஆர்டர் செய்யவும்.
12 பிரஸ்தாபிகள் பலரும் இத்தகுதியை அடையலாம்: துணைப் பயனியர் விண்ணப்பத்தின் முதல் வரி இவ்வாறு குறிப்பிடுகிறது: “யெகோவாவின்மீது நான் அன்பு வைத்துள்ள காரணத்தால், அவரை பற்றியும், அவரது அன்பான நோக்கங்களைப் பற்றியும் மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவவேண்டும் என்ற எனது ஆவலின் காரணத்தால், ஒரு துணைப் பயனியராக சேர்ந்து, வெளி ஊழியத்தில் என்னுடைய பங்கை அதிகரிக்க விரும்புகிறேன்.” யெகோவாவை நேசிப்பதும், மற்றவர்களுக்கு ஆன்மீக ரீதியில் உதவி அளிப்பதுமே நமது ஒப்புக்கொடுத்தலின் அடிப்படை. (1 தீ. 4:8, 10) துணைப் பயனியர் என்ற தகுதியை அடையவேண்டுமென்றால், ஒருவர் முழுக்காட்டுதல் எடுத்தவராகவும், நல்ல ஒழுக்க தராதரம் உள்ளவராகவும், அம்மாதத்தில் 60 மணிநேரம் செலவிட முடிந்தவராகவும் இருக்க வேண்டும். நாம் எல்லாரும் நம் சூழ்நிலைகளை கொஞ்சம் யோசித்துப்பார்ப்போமாக. அப்படி பார்க்கும்போது, நம்மில் யாராவது முன்பு ஒருபோதும் பயனியர் செய்யாதிருந்தால் இந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் செய்ய முடியுமா?
13 ஒருவேளை ஒரே மாதிரியான சூழ்நிலையில் இருப்பவர்கள் பயனியர் செய்வதை பார்த்ததும் சபையில் நிறையப் பேர் தங்களாலும் பயனியர் செய்ய முடியும் என்று உணர்ந்துகொள்வர். பள்ளிக்குப் போகும் பிள்ளைகள், வயதானவர்கள், முழுநேரம் வேலைக்கு செல்பவர்கள், மூப்பர்கள், உதவி ஊழியர்கள் என பலரும் வெற்றிகரமாக துணைப் பயனியர் செய்துள்ளனர். வீட்டையும் கவனித்துக்கொண்டு, வெளியே வேலைக்குப்போய் வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாக இருக்கும் சகோதரி, ஒரேவொரு மாதம் துணைப் பயனியர் செய்ததில் 60 மணிநேரம் செலவிட முடிந்தது, 108 பத்திரிகைகளை கொடுக்க முடிந்தது, 3 பைபிள் படிப்புகளை தொடங்க முடிந்தது. இவரால் எப்படி முடிந்தது? வேலைசெய்யும் இடத்தில் உணவு இடைவேளையின்போது, பக்கத்தில் இருந்த பிராந்தியத்தில் பிரசங்க ஊழியம் செய்தார், கடிதங்கள் மூலம் சாட்சிகொடுத்தார், பார்க்கிங் ஏரியாக்களிலும் தெருக்களிலும் சாட்சிகொடுத்தார். வாரத்தில் அவருக்கு கிடைக்கும் லீவை சபையாக சேர்ந்து ஊழியம் செய்வதற்காக நன்கு பயன்படுத்திக்கொண்டார். துணைப் பயனியர் என்பது தன்னால் அடையவே முடியாத ஓர் இலக்கு என்பதாக அவர் முதலில் நினைத்திருந்தார், ஆனால் மற்றவர்கள் தந்த ஊக்கத்தாலும், நடைமுறையான ஓர் அட்டவணையை வைத்துக்கொண்டதாலும் இடையூறுகளை தாண்டி வெற்றிகாண முடிந்தது.
14 இயேசு தம் சீஷர்களிடத்தில் இவ்வாறு உறுதியளித்தார்: “என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.” (மத். 11:30) இதுவே ஆகஸ்ட் 15, 1995, காவற்கோபுரத்தில் வெளிவந்த ஊக்கம் தந்த கட்டுரையின் தலைப்பு. அதிக அழுத்தம் நிறைந்த முழுநேரம் வேலை செய்துவந்த சகோதரி ஒருவரைப் பற்றி அதில் வந்திருக்கிறது. அவரால் துணைப் பயனியர் செய்யவே முடியாது என்று நினைத்தாரா? கிடையாது. பார்க்கப்போனால், ஒவ்வொரு மாதமும் எப்படியோ சமாளித்து துணைப் பயனியர் செய்தார். ஏன் செய்தார்? ஏனென்றால் சமநிலையோடு இருக்க அந்தப் பயனியர் சேவை தனக்கு உதவியதை அவர் உணர்ந்துகொண்டார். பைபிள் சத்தியங்களை மக்கள் கற்றுக்கொள்ள உதவியபோதும், அவர்கள் கடவுளின் அங்கீகாரத்தை நாடி வாழ்க்கையில் மாற்றங்கள் செய்வதை பார்த்தபோதும் அவருக்கு தன்னுடைய பிஸியான வாழ்க்கையிலும் பெரும் மகிழ்ச்சி காண முடிந்தது.—நீதி. 10:22.
15 பயனியர் செய்வதற்காக ஒருவர் தனிப்பட்ட முறையில் எவ்வளவுதான் தியாகங்களையும், மாற்றங்களையும் செய்தாலும்கூட அவை அவர் அனுபவிக்கவிருக்கும் ஆசீர்வாதங்களுக்கு நிகராகாது. துணைப் பயனியர் செய்த ஒரு சகோதரி தனது அனுபவத்தை இவ்வாறு எழுதினார்: “எந்நாளும் என்னைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் என் மனதை, மற்றவர்களுக்கு உதவிசெய்யும்படி திசைதிருப்புவதற்கு இது [பயனியர் ஊழியம்] உதவியது. . . . யாருக்கெல்லாம் முடியுமோ அவர்கள் எல்லாரும் இதை செய்யும்படி சிபாரிசு செய்கிறேன்.”
16 வேண்டும் ஒரு நல்ல அட்டவணை: இந்த உட்சேர்க்கையின் கடைசி பக்கத்தில், பிப்ரவரி 1997, நம் ராஜ்ய ஊழியத்தில் வெளிவந்த மாதிரி அட்டவணைகளை மறுபடியும் தந்துள்ளோம். இவற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு பொருந்தலாம். இவற்றை மறுபார்வையிடும்போது, மாதந்தோறும் வழக்கமாக செய்யவேண்டிய நடவடிக்கைகளுக்கும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். பயனியர் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பே முடித்துவிடக்கூடிய வீட்டிற்காக திட்டமிட்டுள்ள வேலைகள் யாவை அல்லது பயனியர் செய்து முடிக்கும் வரை தற்காலிகமாக ஒத்திப்போட முடிந்த வேலைகள் யாவை? நீங்கள் பொழுதுபோக்கிற்கு, விருப்ப வேலைக்கு அல்லது அக்கடா என்று பொழுதை கழிப்பதற்கு திட்டமிட்டிருக்கும் நேரத்திலிருந்து கொஞ்சம் இதற்காக செலவிட முடியுமா? ஒரேயடியாக 60 மணிநேரம் செலவிடவேண்டுமே என்று நினைப்பதற்கு பதிலாக, நாள் கணக்கில் அல்லது வார கணக்கில் உங்கள் அட்டவணையை அமைத்துக்கொள்ளுங்கள். துணைப் பயனியர் செய்ய ஒரு நாளுக்கு 2 மணிநேரம் அல்லது வாரத்திற்கு 15 மணிநேரம் மாத்திரம் தேவை. மாதிரி அட்டவணையை பாருங்கள், பென்ஸிலை கையில் எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறப்பாக பொருந்தும் வகையில் தனிப்பட்ட ஊழிய அட்டவணை என்ற பகுதியில் கணக்குப்போட்டு குறித்துக்கொள்ளுங்கள்.
17 கடந்த வருடம் ஊழியத்திற்காக காட்டிய நல்ல பிரதிபலிப்பும், சபை தந்த கூடுதலான ஆதரவும் ஒழுங்கான பயனியர் ஒருவருடைய ஆர்வத்தை பெருக்கியது. அவர் இவ்வாறு எழுதினார்: “துணைப் பயனியர் செய்வோருக்கு ஆதரவு தரும் வகையில் கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுக்கும்படி எங்களுக்கு நீங்கள் அன்பாக தந்த ஊக்கத்திற்காக ரொம்ப நன்றி. . . . நீங்கள் கொடுத்திருந்த அட்டவணைகள் நிறையப் பேருக்கு உதவியாக இருந்தன; முன்பு ஒருபோதும் பயனியர் செய்யாதவர்களும்கூட தங்களால் முடியும் என்பதை உணர்ந்துகொண்டனர். . . . நான் யெகோவாவின் அமைப்பில் ஒரு பாகமாக இருப்பதிலும், உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் மகிழ்ச்சியோடும், அன்போடும் தரும் வழிநடத்துதலை பின்பற்றுவதிலும் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.”
18 நீதிமொழிகள் 21:5 (திருத்திய மொழிபெயர்ப்பு) நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “சுறுசுறுப்புள்ளவன் யோசனை செல்வம் தரும்.” நீதிமொழிகள் 16:3 நமக்கு இவ்வாறு ஊக்கம் தருகிறது: “உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.” ஆம், நாம் தீர்மானம் எடுக்கும்போது ஜெபசிந்தையோடு யெகோவாவை அணுகி, அவர்மீது உறுதியாக சார்ந்திருப்போமானால் வெற்றியடைய அவர் நமக்கு உதவுவார்; நாமும் துணைப் பயனியர் செய்ய நம்பிக்கையான மனநிலையோடு திட்டமிட முடியும். ஓரிரு மாதங்கள் துணைப் பயனியர் செய்தபிறகு, உங்கள் அட்டவணை எவ்வளவு வெற்றிகரமாக உள்ளது என்பது தெரிய வரும். பின்பு, துணைப் பயனியர் விண்ணப்பத்தாளில் உள்ள பெட்டியில் நம்மால் டிக் செய்ய முடியும். அது இவ்வாறு வாசிக்கிறது: “மேற்கொண்டு தெரிவிக்கும்வரை உங்களால் தொடர்ந்து துணைப் பயனியர் செய்ய விருப்பமா என்பதை இங்கே கொஞ்சம் கவனியுங்கள்.” எப்படியிருந்தாலும் சரி, ஆகஸ்டில் ஐந்து வார இறுதிநாட்கள் இருப்பதால், மறுபடியும் துணைப் பயனியர் செய்ய ஆவலோடு காத்திருக்கலாம். ஆகஸ்டில் நமக்கு ஊழிய ஆண்டு முடிவடைவதால், ஒவ்வொருவரும் ஊழியத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்யவேண்டும் என அயராது முயற்சி எடுப்போமாக.
19 இயேசு இவ்வாறு தீர்க்கதரிசனம் சொன்னார்: “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.” (யோவா. 14:12) இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறிவரும்போது, கடவுளுடைய உடன்வேலையாட்களாய் இருந்து சேவை செய்வது நமக்கு மகிழ்ச்சி தரும் ஒரு அரிய வாய்ப்பே. ஒருபோதும் இராத அதிக தீவிரத்தோடு நற்செய்தியை பிரசங்கிப்பதற்கான காலம் இதுவே, இந்த ஊழியத்திற்காக நேரத்தை வாங்குவோமாக. (1 கொ. 3:9; கொலோ. 4:5, NW) ராஜ்ய அறிவிப்பாளர்களாக நமது பாகத்தை செய்ய ஒரு சிறந்த வழியானது நம்மால் முடிந்த மட்டும் அடிக்கடி துணைப் பயனியர் ஊழியத்தில் பங்கேற்பதாகும். இவ்வருட நினைவு ஆசரிப்பு காலத்தில் துணைப் பயனியர்கள் எழுப்பவிருக்கும் துதியின் சத்தம் எவ்வளவு பெரியதாக இருக்கப்போகிறதோ என்பதை அறிய ஆவலோடு நாங்கள் காத்திருக்கிறோம். (சங். 27:6) கடந்த வருட மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கிடைத்த நல்ல முடிவுகளை பார்க்கும்போது, ‘நாம் மறுபடியும் செய்யலாமா?’ என்று ஆர்வத்தோடு கேட்கத் தோன்றுகிறது. நம்மால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது!
[பக்கம் 3-ன் பெட்டி]
உங்களால் துணைப் பயனியர் செய்ய முடியுமா?
“உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும் நீங்கள் முழுக்காட்டப்பட்டு, நல்நடத்தையுள்ளவர்களாக இருந்து, வெளி ஊழியத்தில் மாதத்துக்கு 60 மணிநேரங்கள் செலவிட வேண்டிய தேவையைப் பூர்த்திசெய்ய ஏற்பாடு செய்துகொண்டு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் துணைப் பயனியராகச் சேவிக்க முடியுமென்று நம்புகிறீர்களென்றால், இந்த ஊழிய சிலாக்கியத்துக்காக நீங்கள் செய்யும் விண்ணப்பத்தை ஏற்பதற்கு சபை மூப்பர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.”—நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல், பக்கங்கள் 113-14.