நினைவு ஆசரிப்புக் காலம்—கூடுதலாக ஊழியம் செய்வதற்கான காலம்
1 பண்டைய இஸ்ரவேலர் ‘கர்த்தருடைய பண்டிகை நாட்களை’ ஆசரித்தனர்; அவற்றை வருடத்தில் குறிப்பிட்ட காலங்களில் ஆசரித்தனர். (லேவி. 23:2) இப்படியாக அவர்களுடைய தேவனின் நற்குணத்தைப் பற்றி சிந்திக்க நேரமெடுத்துக் கொண்டனர்; இதனால் அளவிலா ஆனந்தம் அடைந்தனர், அத்துடன் தூய வணக்கத்திற்கு வைராக்கியம் காட்டத் தூண்டப்பட்டனர்.—2 நா. 30:21–31:2.
2 இன்று நாம் மகிழ்ச்சியுடன் செய்துவரும் தேவராஜ்ய ஊழியம் ஒவ்வொரு வருடமும் நினைவு ஆசரிப்புக் காலத்தில் மும்முரமடைகிறது. அது, யெகோவா தம் ஒரே பேறான குமாரனை நமக்கென்று ஒப்பற்ற பரிசாகக் கொடுத்ததை ஆழ்ந்து சிந்திக்கும் காலமாக இருக்கிறது. (யோவா. 3:16; 1 பே. 1:18, 19) யெகோவா தேவனும் அவருடைய குமாரனும் நம் மீது காட்டியிருக்கும் அன்பைக் குறித்து தியானிக்கையில், யெகோவாவைத் துதிப்பதற்கும், அவருடைய சித்தத்தைச் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவதற்கும் தூண்டப்படுவோம்.—2 கொ. 5:14, 15.
3 இந்த வருடம் கர்த்தருடைய இராப் போஜனம் மார்ச் 24, வியாழக்கிழமை, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஆசரிக்கப்படும். எனவே மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நாம் எப்படி கூடுதலாக ஊழியம் செய்யலாம்?
4 அதிக ஆட்களிடம் பேசுவது: வெளி ஊழியத்தில் எத்தனை பேரிடம் முடியுமோ அத்தனை பேரிடம் பேசுவதற்கு வாய்ப்புகளைத் தேடுங்கள். பிற்பகல் வேளை, மாலை வேளை போன்று ஆட்கள் பெரும்பாலும் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய திட்டமிட முடியுமா? உங்கள் புத்தகப் படிப்புத் தொகுதியிலுள்ள சகோதர சகோதரிகள் புத்தகப் படிப்பிற்குச் சற்று முன்பு வெளி ஊழியம் செய்ய விரும்பலாம்; அப்போது புத்தகப் படிப்புக் கண்காணி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம். அருகிலுள்ள பிராந்தியத்தில் கூடி ஊழியம் செய்ய சுருக்கமான வெளி ஊழியக் கூட்டத்திற்கு அவர் ஏற்பாடு செய்யலாம்.
5 பொதுவிடங்களில் பேசுவது அதிக ஆட்களிடம் பேசுவதற்கான மற்றொரு வழியாகும். ஜப்பானைச் சேர்ந்த ஒரு சகோதரி முழுநேர வேலை பார்த்து வந்தபோதிலும் துணைப் பயனியர் சேவை செய்ய விரும்பினார். ஒவ்வொரு நாளும் வேலைக்குப் போவதற்கு முன்பு, ரயில் நிலையத்திற்கு அருகில் தெரு ஊழியம் செய்யும்படி ஒரு மூப்பரும் ஆலோசனை கூறினார். தன் கூச்ச சுபாவத்தையும், பயணிகள் சிலர் செய்த கேலியையும் ஒரு வழியாகச் சமாளித்து, சுமார் 40 பேரிடம் பத்திரிகை மார்க்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். பயணிகள், ரயில் நிலையத்தில் வேலை செய்பவர்கள், ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடைக்காரர்கள் ஆகியோரே அவர்கள். இதனால் ஒரு மாதத்திற்குச் சராசரியாக 235 பத்திரிகைகளை அளித்தார். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் பைபிள் விஷயங்களைச் சுருக்கமாகப் பேசியே, பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார்; இப்படியாக ஆறு பைபிள் படிப்புகளை அவரால் நடத்த முடிந்தது.
6 சாட்சி கொடுக்கும் சந்தர்ப்பங்கள்: பள்ளிக்குச் செல்லும் பிரஸ்தாபிகளுக்கு வருடத்தில் அவ்வப்பொழுது விடுமுறை நாட்கள் வரும். இந்நாட்கள் துணைப் பயனியர் செய்ய மிகச் சிறந்த வாய்ப்பளிக்கின்றன. அத்துடன், பள்ளியில் சாட்சி கொடுப்பதன் மூலம் இளைஞர்கள் கூடுதலாக ஊழியம் செய்யலாம். உங்கள் மத நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்கள் வகுப்பிலுள்ளவர்கள் காட்டும் ஆர்வத்தைக் கண்டு நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். வகுப்பறை கலந்தாலோசிப்புகள் அல்லது கட்டுரைகள் எழுதுதல் போன்ற சந்தர்ப்பங்களை சாட்சி கொடுக்கக் கிடைக்கும் வாய்ப்புகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாமல்லவா? அமைப்பு வெளியிட்டிருக்கும் வீடியோக்களைப் பயன்படுத்தி சிலர் சாட்சி கொடுத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்குப் பைபிள் படிப்பு நடத்தி, அவர்கள் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் எடுப்பதற்கு உதவியிருக்கிறார்கள். இவை யாவும் “கர்த்தரின் நாமத்தைத் துதிக்க” அருமையான வழிகளாகும்.—சங். 148:12, 13.
7 அன்றாட அலுவல்களுக்கு மத்தியில், நம்முடைய அருமையான கடவுளையும் ஆச்சரியமூட்டும் அவரது வாக்குறுதிகளையும் பற்றி வித்தியாசமான முறைகளில் பேசுவதற்கு முயற்சி செய்யுங்கள். ஒரு சகோதரர், தினமும் ஒரே ரயிலில் தன்னோடு சேர்ந்து பயணம் செய்பவர்களிடம் பொருத்தமான சந்தர்ப்பங்களில் சாட்சி கொடுக்கிறார். உதாரணமாக, ரயில் நிலையத்தில் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கையில் ஓர் இளைஞரிடம் தினமும் சுமார் ஐந்து நிமிடம் பேசினார். அதன் பயனாக, அந்த இளைஞரும் அவருடன் வேலை பார்ப்பவரும் பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்யும்போதே அந்தப் படிப்பு நடத்தப்பட்டது. கொஞ்ச நாள் கழித்து, அவர்களுடைய உரையாடலைக் கேட்டு வந்த ஒரு முதிய பெண்மணி, தனக்கும் பைபிள் படிப்பு நடத்துமாறு அந்தச் சகோதரரிடம் கேட்டார். அவர் எப்பொழுதெல்லாம் அந்த ரயிலில் பயணிக்கிறாரோ, அப்பொழுதெல்லாம் அவருக்கும் பைபிள் படிப்பு நடத்தப்படுகிறது. இவ்வாறு, ரயிலிலேயே பத்து பேருக்கு அந்தச் சகோதரர் பைபிள் படிப்பு நடத்தியிருக்கிறார்.
8 வயோதிகம் அல்லது சுகவீனம் காரணமாக உங்களால் கூடுதலாக ஊழியம் செய்ய முடியாவிட்டால் என்ன செய்வது? அப்படியிருந்தாலும் யெகோவாவை நீங்கள் இன்னும் அதிகமாய்த் துதிக்க வழியிருக்கிறது. டெலிஃபோனில் சாட்சி கொடுக்க முயன்றிருக்கிறீர்களா? இதை எப்படிச் செய்வது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், உங்கள் புத்தகப் படிப்புக் கண்காணியிடம் கேளுங்கள். உங்களுக்கு உதவி செய்வதற்கு இம்முறையில் சாட்சி கொடுக்கும் பிரஸ்தாபிகளை அவர் ஏற்பாடு செய்வார். அப்படிச் சேர்ந்து ஊழியம் செய்கையில், ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொண்டு, திறம்பட சாட்சி கொடுக்க ஒருவருக்கொருவர் உதவலாம். டெலிஃபோனில் சாட்சி கொடுப்பது சம்பந்தமாக அருமையான ஆலோசனைகளை நம் ராஜ்ய ஊழியம், பிப்ரவரி 2001, பக்கங்கள் 5-6-ல் காணலாம்.
9 புதியவர்கள் நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்வது, யெகோவாவைத் துதிக்க கூடுதல் வழிகளைத் தேடும்படி அவர்களைத் தூண்டலாம். முறையாகப் பிரசங்க ஊழியத்தில் ஈடுபட அவர்களுக்குத் தயக்கமிருந்தால் அதைச் சமாளிக்க நீங்கள் உதவலாம். எப்படி? உற்சாகமளிக்கும் வெளி ஊழிய அனுபவங்களை அவர்களிடம் சொல்லலாம்; பைபிள் போதனைகளை விளக்குவதற்கும் தங்களுடைய நம்பிக்கையைக் குறித்து பேசுவதற்கும் அவர்களுக்கு படிப்படியாக பயிற்சியும் அளிக்கலாம். (1 பே. 3:15) உங்கள் பைபிள் மாணாக்கர் ஊழியத்தில் ஈடுபட ஆசைப்பட்டால், நடத்தும் கண்காணியிடம் அதைத் தெரிவியுங்கள். அந்த மாணாக்கரிடம் பேசுவதற்கு அவர் ஏற்பாடுகளைச் செய்வார்; இவ்வாறு சபையாருடன் சேர்ந்து ஊழியத்தில் பங்கு கொள்ள அவர் தகுதியுள்ளவரா என்பதைத் தீர்மானிக்க முடியும். புதியவர்கள் சர்வலோக பேரரசுரிமையை ஆதரிக்கும் விதத்தில் இத்தகைய நிலைநிற்கை எடுப்பதைக் காணும்போது யெகோவா தேவனுக்கு எத்தனை ஆனந்தமாக இருக்கும்!—நீதி. 27:11.
10 நீங்கள் துணைப் பயனியர் சேவை செய்ய முடியுமா? துணைப் பயனியர் சேவை செய்வதற்கு 50 மணிநேரம் தேவை; இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். (மத். 5:37) அப்படியானால் ஒவ்வொரு வாரமும் சராசரியாக 12 மணிநேரம் செலவிட வேண்டும். பக்கம் 5-ல் மாதிரியாகக் கொடுக்கப்பட்டுள்ள துணைப் பயனியர் அட்டவணையில் ஏதாவது ஒன்று உங்கள் சூழ்நிலைக்குப் பொருந்துகிறதா? பொருந்தாவிட்டால், உங்களுக்கு சௌகரியப்படும் விதத்தில் ஓர் அட்டவணையைப் போட்டு, மார்ச் மாதத்திலோ, ஏப்ரல் மாதத்திலோ, மே மாதத்திலோ உங்களால் துணைப் பயனியர் சேவை செய்ய முடியுமா? கூடுதலாக ஊழியம் செய்ய நீங்கள் எடுக்கும் முயற்சியை ஆசீர்வதிக்கும்படி யெகோவா தேவனிடம் ஜெபியுங்கள்.—நீதி. 16:3.
11 இந்த வருட நினைவு ஆசரிப்புக் காலத்தை யெகோவா தேவனை விசேஷமாய்த் துதிக்கும் காலமாக்குவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளை மூப்பர்களும் உதவி ஊழியர்களும் முழுமையாக ஆதரிப்பார்கள். ஒருவேளை அவர்களில் அநேகரும்கூட துணைப் பயனியர் சேவை செய்வார்கள். சூழ்நிலைக்கேற்ப பிற்பகல் வேளைகளில், மாலை வேளைகளில், வாரயிறுதி நாட்களில் என கூடுதலாக வெளி ஊழியம் செய்வதற்கான கூட்டங்களுக்கு அவர்கள் ஏற்பாடு செய்வார்கள். யார் யாரெல்லாம் பயனியர் செய்ய திட்டவட்டமாகத் தீர்மானித்துள்ளனர், அல்லது உத்தேசித்துள்ளனர் என மூப்பர்கள் விசாரித்துப் பார்ப்பார்கள்; இப்படியாக எங்கே, எப்பொழுது வெளி ஊழிய கூட்டத்தை நடத்தலாம், யார் தலைமை தாங்கலாம் என்றெல்லாம் தீர்மானிப்பார்கள். உங்களுக்கு வசதிப்படும் நாட்களிலும் நேரங்களிலும் பிரஸ்தாபிகளில் யாராவது உங்களுடன் சேர்ந்து ஊழியம் செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய மூப்பர்கள் அதிக முயற்சி எடுப்பார்கள். இப்படியாக எண்ணங்கள், அதாவது திட்டங்கள் ஸ்திரப்படும், ஏராளமான பலன்கள் கிடைக்கும்.—நீதி. 20:18.
12 முடிந்தளவு முயலுங்கள்: உங்களால் துணைப் பயனியர் சேவை செய்ய முடியாவிட்டால், ஒன்று மட்டும் நினைவிருக்கட்டும்: ‘நம்மிடம் இல்லாததின்படியல்ல, நம்மிடம் உள்ளதின்படியே’ நாம் எடுக்கும் முயற்சிகளையும் செய்யும் தியாகங்களையும் யெகோவா ஏற்றுக்கொள்கிறார். (2 கொ. 8:12) அவருக்கு நன்றி தெரிவிக்க நமக்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதனால்தான் தாவீது இப்படி எழுதினார்: “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்.” (சங். 34:1) இந்த வருட நினைவு ஆசரிப்புக் காலத்தில் அதுவே நம் தீர்மானமாகவும் இருக்கட்டும்.
[கேள்விகள்]
1. தேவபயமுள்ள இஸ்ரவேலர் ‘பண்டிகை நாட்களை’ ஆசரித்ததால் எப்படிப் பயனடைந்தனர்?
2, 3. நினைவு ஆசரிப்புக் காலத்தில் கூடுதலாக ஊழியம் செய்வது ஏன் பொருத்தமானது, நினைவு ஆசரிப்பை எப்பொழுது ஆசரிப்போம்?
4, 5. (அ) நற்செய்தியை அதிக ஆட்களிடம் பேசுவதற்கு சிலரால் எப்படி முடிந்திருக்கிறது? (ஆ) உங்கள் பிராந்தியத்தில் எது பலனுள்ள வழியாக கண்டிருக்கிறீர்கள்?
6. இளைஞர்கள் எப்படி கூடுதலாக ஊழியம் செய்யலாம்?
7. (அ) ஒரு சகோதரர் மற்றவர்களிடம் சாட்சி கொடுக்கும் வாய்ப்பை எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்? (ஆ) அதைப் போன்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா?
8. வயோதிகம் அல்லது சுகவீனம் காரணமாக தங்களால் கூடுதலாக ஊழியம் செய்ய முடியாதவர்களுக்கு வேறென்ன வழி இருக்கிறது?
9. சபையுடன் சேர்ந்து ஊழியம் செய்வதற்குத் தகுதி பெற பைபிள் மாணாக்கருக்கு நாம் எப்படி உதவலாம்?
10. (அ) துணைப் பயனியர் சேவை செய்ய ஒரு சரியான அட்டவணை நமக்கு எப்படி உதவும்? (ஆ) கடந்த வருட நினைவு ஆசரிப்புக் காலத்தில் நீங்கள் துணைப் பயனியர் சேவை செய்தீர்களா, உங்களால் எப்படி முடிந்தது?
11. துணைப் பயனியர் சேவை செய்பவர்களுக்கு மூப்பர்களும் உதவி ஊழியர்களும் எப்படி உதவுவார்கள்?
12. எக்காலத்திலும் யெகோவாவைத் துதிக்க எது நம்மைத் தூண்டுகிறது?
[பக்கம் 3-ன் பெட்டி]
நீங்கள் எப்படி கூடுதலாக ஊழியம் செய்யலாம்?
◼ ஆட்கள் வீட்டில் இருக்கையில் பிரசங்கியுங்கள்
◼ பொதுவிடங்களில் சாட்சி கொடுங்கள்
◼ வேலை பார்க்குமிடத்திலோ பள்ளியிலோ சாட்சி கொடுங்கள்
◼ டெலிஃபோனில் சாட்சி கொடுங்கள்
◼ துணைப் பயனியர் சேவை செய்யுங்கள்
[பக்கம் 5-ன் அட்டவணை]
துணைப் பயனியர் சேவை அட்டவணைக்கு மாதிரி—ஒவ்வொரு வாரமும் வெளி ஊழியத்தில் 12 மணிநேரத்தைப் பெறும் வழிகள்
காலை வேளைகள்—திங்கள் முதல் சனி வரை
ஏதாவது ஒரு நாளுக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமையை வைத்துக்கொள்ளலாம்.
நாள் வேளை மணிநேரம்
திங்கள் காலை 2
செவ்வாய் காலை 2
புதன் காலை 2
வியாழன் காலை 2
வெள்ளி காலை 2
சனி காலை 2
மொத்த மணிநேரம்: 12
இரு முழு நாட்கள்
வாரத்தில் ஏதாவது இரு நாட்களைத் தேர்ந்தெடுக்கலாம். (தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களைப் பொறுத்து, இந்த அட்டவணையில் மாதத்திற்கு 48 மணிநேரத்தை மட்டுமே பெறலாம்.)
நாள் வேளை மணிநேரம்
புதன் முழு நாள் 6
சனி முழு நாள் 6
மொத்த மணிநேரம்: 12
இரு மாலை வேளைகளும் வாரயிறுதியும்
வாரத்தில் ஏதாவது இரு நாட்களில் மாலை வேளைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
நாள் வேளை மணிநேரம்
திங்கள் மாலை 11⁄2
புதன் மாலை 11⁄2
சனி முழு நாள் 6
ஞாயிறு அரை நாள் 3
மொத்த மணிநேரம்: 12
மூன்று பிற்பகல் வேளைகளும் சனியும்
ஏதாவது ஒரு நாளுக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமையை வைத்துக்கொள்ளலாம்.
நாள் வேளை மணிநேரம்
திங்கள் பிற்பகல் 2
புதன் பிற்பகல் 2
வெள்ளி பிற்பகல் 2
சனி முழு நாள் 6
மொத்த மணிநேரம்: 12
என் ஊழிய அட்டவணை
ஒவ்வொரு வேளைக்கும் செலவிடும் மணிநேரத்தை தீர்மானியுங்கள்.
நாள் வேளை மணிநேரம்
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
ஞாயிறு
மொத்த மணிநேரம்: 12