‘நற்செய்தியை முழுமையாக அறிவியுங்கள்’
1 நல்ல செய்தியே கேட்க முடியாத இந்த உலகில், “தேவனுடைய அளவற்ற கருணையின் நற்செய்தியை முழுமையாக அறிவிக்கும்” நல்வாய்ப்பு நமக்கு உள்ளது. (அப். 20:24, NW) இந்த ‘கடைசி நாட்கள்’ சீக்கிரத்தில் முடிவடைந்து யெகோவாவின் நீதியுள்ள புதிய உலகம் வரும் என்றும் அங்கே ‘முந்தினவைகள் ஒழிந்து போயிருக்கும்’ என்றும் மக்களுக்குத் தெரியப்படுத்துவது அந்தச் செய்தியில் அடங்கும். (2 தீ. 3:1-5; வெளி. 21:4) அச்சமயத்தில் யாருமே நோயால் அவதிப்பட மாட்டார்கள். (ஏசா. 33:24) இறந்துபோன நம் பிரியமானவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து, குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் மீண்டும் ஒன்றுசேர்வார்கள். (யோவா. 5:28, 29) இந்த முழு பூமியும் ஓர் அழகான பரதீஸாக மாறும். (ஏசா. 65:21-23) இவையாவும் நாம் சொல்லும் நற்செய்திக்குச் சில எடுத்துக்காட்டுகளே!
2 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்த நல்ல செய்திகளைச் சொல்வதற்கு நமக்கு அருமையான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நம் அனைவருக்கும் மிக முக்கியமான நிகழ்ச்சியாக இருக்கிற நினைவுநாள் ஆசரிப்பு இந்த வருடம் மார்ச் 22, சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உலகெங்கும் நடத்தப்படும். ஆகவே, அந்த மாதங்களின்போது ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய இப்போதே ஆரம்பித்துவிடுங்கள்.
3 துணைப் பயனியர் சேவை: ஒரு மாதத்திற்கோ, இரண்டு மாதங்களுக்கோ அல்லது மூன்று மாதங்களுக்குமோ துணைப் பயனியர் செய்வதற்கு ஏற்றாற்போல் உங்களுடைய அட்டவணையை மாற்ற முடியுமா? அடுத்ததாக நீங்கள் குடும்பப் படிப்பு நடத்தும்போது இந்த விஷயத்தைக் குறித்து சற்று நேரம் கலந்து பேசலாம், அல்லவா? நன்கு ஒத்துழைத்தால், குடும்பத்தில் ஒருவர் அல்லது அதற்கும் அதிகமானவர்கள் துணைப் பயனியர் செய்ய முடியும். (நீதி. 15:22) இந்த விஷயத்தைக் குறித்து ஜெபியுங்கள், அதன் பிறகு, உங்களுடைய முயற்சிகளை யெகோவா எப்படி ஆசீர்வதிக்கிறார் என்று பாருங்கள். (நீதி. 16:3) உங்கள் குடும்பத்திலுள்ள ஒருவரால்கூட துணைப் பயனியர் செய்ய முடியாதிருக்கலாம்; என்றாலும், பயனியர் செய்ய முடிந்தவர்களுடன் சேர்ந்து ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதற்கு நீங்கள் அனைவருமே திட்டவட்டமான சில இலக்குகளை வைக்கலாம்.
4 நீங்கள் முழுநேர வேலை செய்து வந்தால், நன்கு அட்டவணை போடுவது துணைப் பயனியர் செய்ய உங்களுக்கு உதவலாம். ஒருவேளை மதிய உணவு இடைவேளையில் கொஞ்சம் நேரத்தை ஊழியத்தில் செலவிடலாம். அல்லது, வீட்டிற்குப் பக்கத்திலோ வேலை செய்யும் இடத்திற்குப் பக்கத்திலோ உங்களுக்கென ஒரு பிராந்தியத்தைப் பெற்றுக்கொள்ளலாம்; வேலைக்குச் செல்வதற்கு முன்போ வேலை முடித்து வந்த பின்போ அங்கே சுமார் ஒரு மணிநேரம் ஊழியம் செய்யலாம். உங்களுடைய அட்டவணையில் ஊழியத்திற்கு அதிக நேரத்தை ஒதுக்க விரும்பினால், அதிக முக்கியமில்லாத காரியங்களை மற்றொரு மாதத்திற்குத் தள்ளிப்போடலாம், வாரயிறுதி நாட்களில் முழுமையாக ஊழியத்தில் ஈடுபடலாம். சிலர் ஓரிரு நாட்கள் விடுப்பு எடுத்து வெளி ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
5 நீங்கள் வயதானவராகவோ உடல்நலமில்லாதவராகவோ பலவீனமானவராகவோ இருந்தால் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நேரம் ஊழியத்தில் ஈடுபடுவதன்மூலம் துணைப் பயனியர் செய்யலாம். ‘இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை’ தரும்படி யெகோவாவிடம் கேளுங்கள். (2 கொ. 4:7, NW) ஒரு சகோதரி தனது 106-வது வயதிலும் துணைப் பயனியர் செய்தார் என்றால் பாருங்களேன்! தன்னுடைய கிறிஸ்தவ உறவினர்கள், சபையிலுள்ளவர்கள் ஆகியோரின் உதவியோடு வீடு வீடாக ஊழியம் செய்தார், மறுசந்திப்புகளுக்குச் சென்றார், பைபிள் படிப்புகளை நடத்தினார், வேறு பல வழிகளிலும் ஊழியம் செய்தார். அவர் பத்துப் பேருடன் பைபிள் படிப்பைத் துவங்கியிருக்கிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “துணைப் பயனியர் செய்வதற்குக் கிடைத்த அரிய வாய்ப்பைப்பற்றி நினைக்கும்போது யெகோவாமீதும் அவருடைய மகன்மீதும் அவருடைய அன்புள்ள அமைப்புமீதும் அன்பும் நன்றியுணர்வும் எனக்குள் பொங்கியெழுகிறது. ‘யெகோவாவே உமக்கு நன்றி!’ என்று நான் மனதார சொல்கிறேன்.”
6 நீங்கள் பள்ளியில் படிக்கிற முழுக்காட்டப்பட்ட இளைஞரா? நீங்களும்கூட துணைப் பயனியராகச் சேவைசெய்ய முடியும். முழுநேர வேலை செய்பவர்களைப் போலவே, நீங்களும்கூட முக்கியமாக வாரயிறுதி நாட்களில் ஊழியம் செய்வதற்கு அட்டவணை போடலாம். ஒருவேளை, பள்ளி முடிந்து வந்த பிறகு சுமார் ஒரு மணிநேரம் ஊழியத்தில் ஈடுபடலாம். பள்ளி விடுமுறை நாளிலும்கூட நீங்கள் ஊழியத்தில் கலந்து கொள்ளலாம், அல்லவா? நீங்கள் பயனியர் செய்ய விரும்பினால், அதைப்பற்றி உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள்.
7 ஆர்வத்தைத் தூண்டிவிடுங்கள்: மூப்பர்கள் தங்களுடைய முன்மாதிரியின்மூலம் சபையாரின் ஆர்வத்தை அதிகமாகத் தூண்டிவிடலாம். (1 பே. 5:2, 3) அதிகாலையிலும், பள்ளியிலிருந்து அல்லது வேலையிலிருந்து வந்த பிறகும் ஊழியம் செய்ய விரும்புகிறவர்களுக்காக வெளி ஊழியக் கூட்டங்களை நடத்த அவர்கள் தீர்மானிக்கலாம். இந்த விசேஷ மாதங்களில் வெளி ஊழியக் கூட்டங்களை முன்நின்று நடத்துவதற்குத் தகுதிவாய்ந்த பிரஸ்தாபிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா என்றும் ஊழியம் செய்வதற்குப் போதுமான பிராந்தியம், போதுமான பத்திரிகைகள் பிரசுரங்கள் ஆகியவை இருக்கின்றனவா என்றும் ஊழியக் கண்காணி நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.
8 ஒரு சபையில், பல மாதங்களுக்கு முன்னதாகவே துணைப் பயனியர் செய்வதைக் குறித்து மூப்பர்கள் சபையாரை ஊக்குவிக்கத் துவங்கினார்கள். எத்தனை பிரஸ்தாபிகளுக்கு துணைப் பயனியர் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் சபையாருக்கு அவர்கள் அறிவித்துக்கொண்டே வந்தார்கள். இதனால், ஊழியத்தில் அதிகளவு ஈடுபட விரும்பியவர்கள் தங்களுடன் வேலை செய்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டார்கள். அதிகாலையிலும் மாலை வேளையிலும்கூட வெளி ஊழியக் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் விளைவாக, ஏப்ரல் மாதத்தில் 53 பிரஸ்தாபிகள், அதாவது சபையில் கிட்டத்தட்ட பாதிபேர் துணைப் பயனியர் செய்தார்கள்! எதிர்ப்பு நிலவுகிற இடங்களில் சகோதரர்களுக்குப் பெருமளவு ஊக்கமூட்டுதல் மூப்பர்களிடமிருந்து தேவைப்படும். வீட்டுக்கு வீடு ஊழியத்திற்குப் பதிலாக கடிதம் எழுதுவது, தொலைபேசிமூலம் சாட்சிகொடுப்பது போன்ற பிற முறைகளை ஊழியக் கூட்டத்தில் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யலாம்.
9 பிரசங்கிப்பதில் மற்றவர்களுக்கு உதவுங்கள்: புதியவர்களும் இளைஞர்களும் பிரஸ்தாபிகளாவதற்குத் தகுதிபெறுகையில், அனுபவமுள்ள பிரஸ்தாபிகளோடு சேர்ந்து ஊழியம் செய்ய அவர்களை அழைக்கலாம். நினைவு நாள் ஆசரிப்பின் காலத்தில் அவ்வாறு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கலாம். அச்சமயத்தில், சபையில் பலரும் ஊழியத்தில் அதிகமாய் ஈடுபடுவார்கள். உங்களுடைய பைபிள் மாணாக்கர் யெகோவாவின் நீதியான நெறிமுறைகளுக்கு இசைவாக வாழ்க்கையை மாற்றி நல்ல முன்னேற்றம் செய்திருக்கிறாரா? உங்களுடைய பிள்ளைகள் நல்ல முன்னேற்றம் செய்கிறவர்களாக, கீழ்ப்படிதலுள்ளவர்களாக இருந்தாலும் இன்னும் பிரஸ்தாபிகளாக ஆகவில்லையா? அப்படிப்பட்டவர்கள், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆவதற்கு விருப்பம் தெரிவித்தால், அவர்கள் அதற்குத் தகுதிபெற்றிருப்பதாக நீங்கள் உணர்ந்தால் அதை ஒரு மூப்பரிடம் தெரியப்படுத்துங்கள். இரண்டு மூப்பர்கள் உங்களையும் உங்கள் பிள்ளையையும் அல்லது மாணாக்கரையும் சந்தித்துப்பேச நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்வார்.
10 செயலற்றவர்கள் மீண்டும் சபையோடு சேர்ந்து ஊழியத்தில் பங்குகொள்வதற்கும்கூட வரவிருக்கும் மாதங்கள் சிறந்த சமயமாக இருக்கும். சபை புத்தகப் படிப்புக் கண்காணிகளும் மற்ற மூப்பர்களும் அப்படிப்பட்டவர்களைப் போய்ச் சந்திப்பதற்கு கடும் முயற்சி எடுக்க வேண்டும்; தங்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்கும் அவர்களை அன்போடு அழைக்க வேண்டும். அவர்கள் அதிக காலமாகவே செயலற்றவர்களாக இருக்கிறார்கள் என்றால், ஊழியத்திற்கு வர அவர்கள் தகுதிபெற்றிருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு மூப்பர்கள் முதலில் அவர்களிடம் பேச வேண்டும்.—km-TL 11/00 பக். 3.
11 நினைவு நாளுக்கான முன்னேற்பாடுகளைச் செய்யுங்கள்: “தேவனுடைய அளவற்ற கருணையின்” மாபெரும் வெளிக்காட்டே மீட்கும்பொருள். (அப். 20:24, NW) உலகெங்கும் இருக்கிற நன்றியுள்ளம்கொண்ட லட்சக்கணக்கான ஆட்கள் மார்ச் 22, சனிக்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிறிஸ்துவின் மரண நினைவு நாளை ஆசரிப்பதற்குக் கூடிவருவார்கள். மனிதகுலத்திடம் யெகோவா காட்டியுள்ள அளவற்ற கருணைக்கு சாட்சி பகருகிற இந்த முக்கிய நிகழ்ச்சிக்கு நல்மனமுள்ள ஆட்கள் அனைவரையும் அழைக்கவும் அவர்களுக்கு உதவவும் நாம் விரும்புகிறோம்.
12 நீங்கள் அழைக்க விரும்புவோரின் பெயர்களைப் பட்டியலிடுங்கள். உங்களுடைய உறவினர்கள், அக்கம்பக்கத்தார், பணியிடத்திலோ பள்ளியிலோ உங்களுக்குப் பழக்கமானவர்கள், உங்களோடு பைபிள் படித்தவர்கள், இப்போது படித்துக் கொண்டிருப்பவர்கள், நீங்கள் தவறாமல் சந்தித்துவரும் மற்றவர்கள் ஆகிய அனைவரும் உங்களுடைய பட்டியலில் நிச்சயம் இருப்பார்கள். நீங்கள் அழைக்கிற ஆட்கள் சிலருக்கு நினைவு நாள் சம்பந்தமாக ஏதேனும் கேள்விகள் இருக்கலாம்; அப்படியானால், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் பிற்சேர்க்கையில் 206-8 பக்கங்களில் கர்த்தருடைய இராப்போஜனம் என்ற தலைப்பில் காணப்படும் பகுதியிலிருந்து அவர்களிடம் பேசலாம். இப்படிச் செய்யும்போது பைபிள் படிப்புக்கு பயன்படுத்தும் புத்தகத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்த முடிவதால், ஒரு படிப்பை ஆரம்பிப்பதற்குக்கூட அது வழிவகுக்கலாம்.
13 ஒரு சகோதரி, 48 குடும்பத்தாரை அழைப்பதற்குப் பட்டியல் போட்டார். ஒவ்வொரு குடும்பத்தையும் அழைத்த பிறகு, அதைத் தன் பட்டியலில் குறித்துக்கொண்டார், எந்தத் தேதியில் அழைத்தார் என்பதையும் எழுதிக்கொண்டார். அழைத்தவர்களில் 26 பேர் நினைவு நாள் ஆசரிப்புக்கு வந்திருந்ததைப் பார்த்து அவர் எவ்வளவாய் சந்தோஷப்பட்டிருப்பார்! கடை முதலாளியாக இருக்கும் ஒரு சகோதரர் தன்னிடம் வேலைபார்க்கும் ஒருவரை இந்நிகழ்ச்சிக்கு அழைத்தார்; அவர் முன்பு பாதிரியாக இருந்தவர். அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் ஆச்சரியம்பொங்க இவ்வாறு கூறினார்: “நான் கத்தோலிக்க சர்ச்சின் அங்கத்தினராக 30 வருடங்கள் இருந்தும் கற்றுக்கொள்ளாத அநேக பைபிள் விஷயங்களை ஒரு மணிநேரத்தில் கற்றுக்கொண்டேன்.” அதன் பிறகு, சீக்கிரத்திலேயே பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து படிக்க ஒத்துக்கொண்டார்.
14 விசேஷ ஏற்பாடு: சனிக்கிழமை, மார்ச் 1-லிருந்து மார்ச் 22 வரை நினைவு நாளுக்கான ஒரு விசேஷ அழைப்பிதழ் உலகெங்கும் வினியோகிக்கப்படும். இந்த முக்கிய வினியோகிப்பில் முழுமையாகப் பங்குகொள்ள பிரஸ்தாபிகள் எல்லாருமே விரும்புவார்கள். அழைப்பிதழை கதவருகில் வைத்துவிடுவதற்குப் பதிலாக வீட்டுக்காரரிடம் நேரில் கொடுப்பதே சிறந்தது. என்றாலும், பெரிய பிராந்தியமாக இருந்தால், பூட்டப்பட்ட வீடுகளில் மற்றவர்களுடைய கவனத்தைக் கவராதபடி அழைப்பிதழ்களை விட்டுவரலாமா என்பதை மூப்பர்கள் தீர்மானிக்கலாம். வாரயிறுதி நாட்களில், சமீபத்திய பத்திரிகைகளையும் சேர்த்து அளிப்போம்.
15 அழைப்பிதழ்களைக் கொடுத்து முடிப்பதற்கு குறுகிய காலமே இருப்பதால், சுருக்கமாகப் பேசிவிட்டு கொடுப்பது சிறந்தது. சிநேகப்பான்மையாகவும் உற்சாகமாகவும் பேசுங்கள். நாம் சந்திக்கிற நபர், நாம் சொல்கிற செய்திமீது ஆர்வங்காட்டுகிறார் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, நீங்கள் இவ்வாறு பேசலாம்: “மார்ச் 22-ஆம் தேதி நடக்கப்போகும் முக்கியமான நிகழ்ச்சிக்கு உங்களுடைய குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் வரும்படி நாங்கள் அழைக்கிறோம். இந்த அழைப்பிதழை உங்களுக்காக கொண்டுவந்திருக்கிறோம். எல்லா விவரங்களும் இதில் உள்ளன.” வீட்டுக்காரர் ஏதேனும் கேள்விகள் கேட்கலாம். அல்லது, அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சிக்கு வருவதாகவும் சொல்லலாம். ஆர்வம் காட்டியவர்களின் பெயரைக் குறித்துக்கொண்டு திரும்பவும் போய் சந்தியுங்கள்.
16 கடந்த வருடத்தில், ஒரு ராணுவ வீரர் தன்னுடைய வீட்டு கதவில் நினைவு நாளுக்கான அழைப்பிதழ் இருந்ததைப் பார்த்தார். அவர் அதில் கலந்துகொள்ளத் தீர்மானித்தார், ஆனால், தன்னுடைய அதிகாரியின் அனுமதியை அவர் பெற வேண்டியிருந்தது. அந்த அழைப்பிதழை தன் அதிகாரியிடம் அவர் காட்டினார்; அந்த அதிகாரி சிறிது நேரம் அமைதியாக இருந்தார்; பிறகு, தன்னுடைய பெற்றோர் யெகோவாவின் சாட்சிகள் என்றும் அவர்களுடன் கூட்டங்களுக்குப் போயிருக்கிறார் என்றும் சொன்னார். அந்த ராணுவ வீரருக்கு அனுமதி கொடுத்ததோடு நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அந்த அதிகாரியும் அவருடன் சென்றார்.
17 நன்றியுணர்வைக் காட்டுங்கள்: 2008-க்கான நினைவு நாள் நெருங்கிவருவதால், நம் சார்பில் யெகோவா காட்டிய அளவற்ற கருணையை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்ப்போமாக. “கடவுளிடமிருந்து அளவற்ற கருணையைப் பெற்றிருக்கிற நீங்கள், அதனுடைய நோக்கம் வீணாகிவிடாதபடி நடந்துகொள்ளுங்கள் என்றும் உங்களை நாங்கள் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொ. 6:1, NW) கடவுளுடைய அளவற்ற கருணையின் நோக்கத்தை நாம் வீணாக்கிவிடவில்லை என்பதை நாம் எப்படிக் காட்டுகிறோம்? பவுல் இவ்வாறு எழுதினார்: ‘எவ்விதத்திலும் எங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.’ (2 கொ. 6:3) ஆகவே, நம் நன்னடத்தையின் மூலமும் நற்செய்தியை பக்திவைராக்கியத்துடன் பிரசங்கிப்பதன் மூலமும் யெகோவா தந்திருக்கும் பரிசுக்கு நாம் நன்றி காட்டுகிறோம். ஊழியத்தில் அதிகமாய் ஈடுபடுவதற்கு இந்த நினைவு நாள் ஆசரிப்பின் காலம் நமக்குச் சிறந்த சமயமாக இருக்கும். இவ்வாறு நாம் நற்செய்தியை முழுமையாய் அறிவிக்க முடியும்.
[கேள்விகள்]
1. நாம் என்ன நற்செய்தியைச் சொல்கிறோம்?
2. நற்செய்தியை அறிவிக்க நினைவு நாள் ஆசரிப்பின் காலம் ஏன் அருமையான சந்தர்ப்பமாக இருக்கிறது?
3. முழு குடும்பமாக ஊழியத்தில் அதிகமாய் ஈடுபடுவதற்கு எது நமக்கு உதவும்?
4. நாம் முழுநேர வேலை செய்து வந்தால், துணைப் பயனியர் செய்வதற்கு எப்படி அட்டவணைபோட முடியும்?
5. வயதான அல்லது உடல்நலமில்லாத ஒருவர் துணைப் பயனியர் செய்ய நீங்கள் எப்படி உதவலாம்?
6. பள்ளியில் படிக்கிற முழுக்காட்டப்பட்ட இளைஞர்கள் எப்படி துணைப் பயனியர் செய்ய முடியும்?
7. நினைவு நாள் ஆசரிப்பின் காலத்தில் சபையார் ஊழியத்தில் அதிக ஆர்வம் காட்டுவதற்கு மூப்பர்கள் என்ன செய்யலாம்?
8. ஒரு சபையின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
9. தகுதியுள்ளவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கத் துவங்குவதற்கு நினைவு நாள் ஆசரிப்பின் காலம் ஏன் அருமையான சமயமாக இருக்கிறது?
10. செயலற்றவர்களுக்கு உதவ மூப்பர்கள் என்ன செய்யலாம்?
11. ‘தேவனுடைய அளவற்ற கருணைக்கு’ மாபெரும் வெளிக்காட்டு எது?
12. நினைவு நாள் ஆசரிப்புக்கு நாம் யாரையெல்லாம் அழைக்கலாம்?
13. நினைவு நாள் ஆசரிப்புக்கு மற்றவர்களை அழைப்பதற்குத் தீர்மானித்த இரண்டு பிரஸ்தாபிகளின் முயற்சியை யெகோவா எப்படி ஆசீர்வதித்தார்?
14. மார்ச் 1-லிருந்து உலகெங்கும் எது வினியோகிக்கப்படும்?
15. நினைவு நாள் ஆசரிப்புக்கான அழைப்பிதழை நாம் எப்படி அளிக்கலாம்?
16. பிராந்தியத்திலுள்ள மக்களை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அழைப்பதற்காகச் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டின் முக்கியத்துவத்தை எந்த அனுபவம் விளக்குகிறது?
17. கடவுளுடைய அளவற்ற கருணையின் நோக்கத்தை வீணாக்கவில்லை என்பதை நாம் எப்படிக் காட்டுகிறோம்?
[பக்கம் 7-ன் பெட்டி]
யாரெல்லாம் துணைப் பயனியர் செய்யலாம்?
◼ குடும்ப அங்கத்தினர்கள்
◼ முழுநேர வேலை செய்பவர்கள்
◼ வயதானவர்கள் மற்றும் உடல்நலமில்லாதவர்கள்
◼ பள்ளிக்குச் செல்பவர்கள்
[பக்கம் 8-ன் பெட்டி]
நினைவு நாள் அழைப்பிதழ்களை அளிக்கையில்:
◼ சுருக்கமாகவும் உற்சாகமாகவும் பேசுங்கள்
◼ ஆர்வம் காட்டுபவர்களைக் குறித்துக்கொண்டு திரும்பப்போய் சந்தியுங்கள்
◼ வாரயிறுதி நாட்களில் பத்திரிகைகளை அளியுங்கள்