“தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்து”
1 அருமையான ஒன்றை பெற்றதற்காக உள்ளத்தில் நன்றி பெருக்கெடுக்கையில் அதை உங்கள் சிந்தையிலும் செயலிலும் காட்ட மாட்டீர்களா? நிச்சயம் வெளிக்காட்டுவீர்கள் இல்லையா? மனிதவர்க்கத்திடம் யெகோவா காண்பிக்கும் நற்குணத்தையும் அன்பான தயவையும் குறித்து அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு உணர்ந்தார் என்பதை கவனியுங்கள். “தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக [“இலவச பரிசுக்காக,” NW] அவருக்கு ஸ்தோத்திரம்” என உணர்ச்சிபொங்க கூறினார்! அந்த ‘இலவச பரிசில்’ என்னவெல்லாம் உட்பட்டுள்ளன? ‘தேவன் நமக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபை’ அனைத்தும் உட்பட்டுள்ளன; நம் பாவங்களுக்கு கிரய பலியாக தம் குமாரனையே பரிசாக கொடுத்தது அக்கிருபையின் மிகப் பெரிய வெளிக்காட்டாகும்.—2 கொ. 9:14, 15; யோவா. 3:16.
2 பவுல் நன்றி கூறுவதை வெறும் வார்த்தைகளோடு நிறுத்திக்கொண்டாரா? இல்லவே இல்லை! தனது உள்ளான நன்றியுணர்வை பல வழிகளில் காண்பித்தார். சக கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய நலனில் அவருக்கு அதிக அக்கறை இருந்தது. கடவுளுடைய அன்பான தயவிலிருந்து முழுமையாக பயனடைய அவர்களுக்கு உதவ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்பினார். “நாங்கள் உங்கள் மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்” என அவர்களைப் பற்றி பவுல் கூறினார். (1 தெ. 2:8) தங்கள் இரட்சிப்பை உறுதிப்படுத்திக் கொள்ள ஏற்கெனவே சபையில் இருந்தவர்களுக்கு பவுல் உதவியதோடு, ‘நித்திய ஜீவனிடமாக சரியான மனச்சாய்வுடையவர்களை’ தேடுவதற்காக தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து நற்செய்தியை ஊக்கமாக பிரசங்கித்தார். (அப். 13:48, NW) தனக்காக யெகோவா செய்த அனைத்திற்கும் ஆழ்ந்த நன்றியுணர்வு இருந்ததன் காரணமாகவே “தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்”த பவுல் தூண்டப்பட்டார்.—கொலோ. 1:25.
3 யெகோவா நமக்காக செய்திருக்கும் அனைத்திற்குமான நமது நன்றியுணர்வு, சபையில் ஆவிக்குரிய உதவி தேவைப்படுவோருக்கு உதவ நம்மை தூண்டவில்லையா? (கலா. 6:10) ராஜ்ய நற்செய்தியை நம் பிராந்தியம் முழுவதிலும் பிரசங்கிப்பதில் முடிந்தளவு முழுமையாக பங்குகொள்ள நம்மை தூண்டவில்லையா?—மத். 24:14.
4 போற்றுதலை காண்பிக்க ஓர் வாய்ப்பு: யெகோவாவும் இயேசுவும் நமக்காக செய்திருப்பவற்றிற்கு போற்றுதலை காண்பிக்க ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துவின் நினைவு ஆசரிப்பு நமக்கு விசேஷித்த வாய்ப்பளிக்கிறது. இது வெறுமனே மற்றொரு கூட்டமோ, ஏதோவொரு நிகழ்ச்சியின் நினைவு ஆசரிப்போ அல்ல. ‘என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்’ என இயேசு கூறினார். (லூக். 22:19) இயேசு எப்படிப்பட்டவர் என்பதை தியானிக்க ஏற்ற ஒரு சமயம் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பாகும். அவர் உண்மை தவறாமல் வாழ்ந்து, தம் உயிரை பலியாக கொடுத்ததற்காக மகிமையையும் ராஜ்யத்தையும் பெற்று, இன்று உயிருள்ளவராக, சுறுசுறுப்புடன் செயல்படுவதை ஒப்புக்கொள்வதற்கான ஒரு சமயமாகும். கிறிஸ்தவ சபையின் நடவடிக்கைகளை வழிநடத்துகிற கிறிஸ்துவின் தலைமை ஸ்தானத்திற்கு கீழ்ப்படிதலை காண்பிக்கவும் இந்த ஆசரிப்பு வாய்ப்பளிக்கிறது. (கொலோ. 1:17-20) கடவுளுடைய மக்கள் அனைவரும் மரியாதை உணர்வோடு கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு கூடிவர வேண்டும். இந்த வருடம், 2002, மார்ச் 28, வியாழக்கிழமை அது நடைபெறும்.
5 நமது ஊக்கந்தளராத உழைப்பின் காரணமாக சென்ற வருட நினைவு ஆசரிப்பிற்கு இந்தியாவில் 52,725 பேர் வந்திருந்தனர்; இது என்றுமில்லாத உச்ச எண்ணிக்கையாகும். இந்த வருடம் எத்தனை பேர் வருவார்கள்? அது, முடிந்தவரை அதிகமானோரை அழைக்க நாம் எந்தளவு ‘கடினமாக உழைத்து பிரயாசப்படுகிறோம்’ என்பதையே அதிகம் சார்ந்திருக்கும்.—1 தீ. 4:10, NW.
6 கர்த்தருடைய இராப் போஜனத்திற்கு ஆஜராவதோடுகூட வெளி ஊழியத்திலும் நம் பங்கை அதிகரிக்கலாம். ஆயிரக்கணக்கான சகோதர, சகோதரிகள் ஒன்று அல்லது அதற்கும் அதிகமான மாதங்கள் துணைப் பயனியராக ஊழியம் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு ஆண்டும் நினைவு ஆசரிப்பு காலத்தில், மார்ச் முதல் மே மாதங்களில், சராசரியாக 1,515 பேர் துணைப் பயனியர் செய்துள்ளனர். இந்த வருடம் துணைப் பயனியர் செய்யும் சிலாக்கியத்தை அனுபவிக்க உங்களால் சில மாற்றங்களை செய்ய முடியுமா? கிறிஸ்துவின் பலியாகிய கடவுளுடைய அன்புள்ள பரிசுக்காக உங்களுடைய மனப்பூர்வமான போற்றுதலை காட்ட இது சிறந்த வழியாகும். பின்வரும் அனுபவங்கள் காட்டுகிறபடி யெகோவாவின் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதில் நீங்கள் நிச்சயமாக இருக்கலாம்.
7 முழுநேரமாக வேலை செய்யும் ஒரு சகோதரி கடந்த மார்ச் மாதம் துணைப் பயனியர் செய்த அனுபவத்தை பற்றி இவ்வாறு எழுதினார்: “எவர்களுடைய சூழ்நிலை அனுமதிக்கிறதோ அவர்கள் அனைவரும் நினைவு ஆசரிப்பு சமயத்தில் துணைப் பயனியர் செய்யும்படி பிப்ரவரி 2001 நம் ராஜ்ய ஊழியம் உற்சாகப்படுத்தியது. மார்ச் மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகள் இருந்ததால் என் அட்டவணைக்கு ஒத்துவந்தது. ஆகவே, விண்ணப்பத்தை பூர்த்தி செய்துகொடுக்க தீர்மானித்தேன்.” ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்கும் இலக்கோடு அந்த மாதத்தை ஆரம்பித்தார். அவருக்கு வெற்றி கிடைத்ததா? அந்த மாதத்தில் சாட்சி கொடுத்த 52-வது மணிநேரத்தில் வெற்றி கைகூடியது! அவர் என்ன முடிவுக்கு வந்திருக்கிறார்? “நம் முயற்சிகளை அதிகரிக்கையில் அருமையான ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன” என்கிறார்.
8 குடும்பமாக அனைவரும் சேர்ந்து பயனியர் செய்வதால் என்ன பயன்? நான்கு பேருள்ள ஒரு குடும்பம் கடந்த ஏப்ரல் மாதம் பயனியர் செய்தது; அது நினைவை விட்டு நீங்காத மாதம் என அந்தக் குடும்பத்தினர் கூறுகின்றனர். அந்தத் தாய் கூறியதாவது: “ஒன்றாக சேர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டதால் ஒவ்வொரு நாளுமே எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்! தினமும் ராத்திரி சாப்பிடும்போது ஊழிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது அதிக மகிழ்ச்சியளித்தது.” மகனின் கருத்து இதோ: “வார நாட்களில் அப்பாவோடு சேர்ந்து ஊழியம் செய்தது சந்தோஷத்தைத் தந்தது, பொதுவாக அந்நாட்களில் அவர் வேலைக்கு போய்விடுவார் அல்லவா?” தகப்பன் இவ்வாறு கூறினார்: “நம் நாட்களின் மிக முக்கிய வேலையை ஒன்றாக சேர்ந்து செய்கிறோம் என அறிவதில் குடும்ப தலைவனாக திருப்தியடைந்தேன்.” உங்கள் குடும்பம் ஒன்றாக சேர்ந்து பயனியர் செய்ய முடியுமா? இந்த நினைவு ஆசரிப்பு சமயத்தில் முழு குடும்பமும் துணைப் பயனியர் செய்ய முடியுமா என்பதை பற்றி குடும்பமாக ஏன் கலந்து பேசக்கூடாது?
9 மார்ச் மாதத்தை மிகச் சிறந்த மாதமாக்க முடியுமா? 2000-ம் வருடத்தின் ஆரம்பத்தில் நம் ராஜ்ய ஊழியம், “ஏப்ரல் 2000-த்தை சிறந்த மாதமாக்க முடியுமா?” என்ற கேள்வியை எழுப்பியது. அதற்கு என்ன பதில் கிடைத்தது? அந்த மாதம் அநேக புதிய உச்சநிலைகளை எட்டினோம். எப்போதும் இல்லாத உச்ச எண்ணிக்கையாக அந்த ஒரு மாதத்தில் 3,287 பேர் துணைப் பயனியராக ஊழியம் செய்தனர். பைபிள் படிப்புகள், மணிநேரம், பிரஸ்தாபிகள், மறுசந்திப்புகள் ஆகியவற்றிலும் புதிய உச்சநிலைகளை எட்டினோம். அந்த விசேஷ மாதத்தில் ஆவிக்குரிய நடவடிக்கை திடீரென அதிகரித்ததால் உங்கள் சபையில் ஏற்பட்ட உற்சாக அலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த வருடம், அதற்கு சமமாக அல்லது அதையும் விஞ்சிவிடும் சாதனைகளை படைப்போமா? அனைவருமே ஒற்றுமையோடு முயற்சித்தால் மார்ச் 2002-ஐ ‘மிகச் சிறந்த மாதமாக்க முடியும்.’ ஆனால், ஏன் மார்ச் மாதம்?
10 விசேஷ நடவடிக்கைக்காக மார்ச் மாதத்தை தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் உள்ளன. முதல் காரணம், நினைவு ஆசரிப்பு மார்ச் மாத முடிவில் வருவதால் அதற்கு வரும்படி மாத ஆரம்பத்திலிருந்தே முடிந்தவரை அதிகமானோரை அழைக்க போதிய வாய்ப்பளிக்கும். இரண்டாவது காரணம், இந்த வருடம் மார்ச் மாதத்தில் ஐந்து சனி, ஞாயிறுகள் இருப்பதால் வேலை செய்பவர்களும் பள்ளியில் படிப்பவர்களும் துணைப் பயனியர் செய்ய அதிக எளிதாக இருக்கும். இந்த உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள காலண்டரை உபயோகித்து நடைமுறையான அட்டவணையை ஏன் இப்பொழுதே திட்டமிடக்கூடாது? துணைப் பயனியர் செய்வது நீங்கள் நினைக்கும் அளவிற்கு கடினமானதல்ல. உதாரணமாக, ஐந்து சனி, ஞாயிறுகளிலும் 8 மணிநேரம் ஊழியம் செய்ய திட்டமிட்டால் மாதத்தின் மீதி நாட்களில் கூடுதலாக 10 மணிநேரத்தை திட்டமிட்டாலே போதும், தேவைப்படும் 50 மணிநேரத்தை எட்டிவிடலாம்.
11 சபையிலுள்ள அனைவரும் ‘தேவவசனத்தை பூரணமாய் தெரியப்படுத்த’ மூப்பர்கள் எவ்வாறு உதவி செய்யலாம்? கூட்டங்களிலும் தனிப்பட்ட உரையாடல்களிலும் பயனியர் செய்ய உற்சாகப்படுத்துங்கள். சபை புத்தகப் படிப்பு நடத்துனர்களும் அவர்களுடைய உதவியாளர்களும் தங்கள் தொகுதியிலுள்ள ஒவ்வொருவரையும் சந்தித்து பேசி, தனிப்பட்ட உதவியளிக்க முன்வரலாம். உற்சாகமளிக்கும் ஓரிரு தயவான வார்த்தைகளே அல்லது சில நடைமுறையான ஆலோசனைகளே தேவையாக இருக்கலாம். (நீதி. 25:11) தங்கள் அட்டவணையில் சிறிய மாற்றங்களை செய்தாலே துணைப் பயனியர் செய்யும் சிலாக்கியத்தை அனுபவிக்கலாம் என்பதை அநேகர் காண்பர். அநேக சபைகளில், அனைவரும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான மூப்பர்களும் உதவி ஊழியர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் நினைவு ஆசரிப்பு காலத்தில் ஒன்றாக துணைப் பயனியர் செய்து அருமையான முன்மாதிரி வைக்கின்றனர். இதன் காரணமாக அவர்களோடு சேர்ந்துகொள்ள பல பிரஸ்தாபிகள் தூண்டப்பட்டிருக்கிறார்கள். சரீர குறைபாடுகள் அல்லது மற்ற சூழ்நிலைகள் காரணமாக சில பிரஸ்தாபிகள் பயனியர் செய்ய முடியாத நிலையில் இருக்கலாம்; ஆனால், தங்கள் போற்றுதலை காண்பிக்க சபையிலுள்ள மற்றவர்களோடு சேர்ந்து ஊழியத்தில் தங்களாலானதை செய்ய அவர்களும் உற்சாகத்தைப் பெறலாம்.
12 மூப்பர்கள் கவனமாக திட்டமிடுவதிலேயே வெற்றி சார்ந்துள்ளது. வாரம் முழுவதிலும் வசதியான நேரங்களில் வெளி ஊழியத்திற்கான கூட்டங்களை திட்டமிட வேண்டும். கூடுமானால், ஊழியத்திற்கான கூட்டங்கள் அனைத்தையும் நடத்த தகுதிவாய்ந்த சகோதரர்களை ஊழியக் கண்காணி முன்கூட்டியே நியமிப்பார். தொகுதிகளை ஒழுங்கமைப்பது, பிராந்தியத்தை நியமிப்பது, ஜெபம் செய்வது உட்பட இந்த கூட்டங்கள் 10 அல்லது 15 நிமிடத்திற்கு அதிகமாக செல்லாதிருக்க நல்ல தயாரிப்பு அவசியம். (செப்டம்பர் 2001 நம் ராஜ்ய ஊழியத்தில் கேள்விப் பெட்டியைக் காண்க.) அந்த மாதத்திற்கான அட்டவணையை சபையாருக்கு தெளிவாக விளக்கி, அதை அறிவிப்பு பலகையிலும் போட்டு வைக்க வேண்டும்.
13 போதுமான பிராந்தியம் இருப்பதும் அவசியம். ஊழியக் கண்காணி, பிராந்தியங்களை கவனித்துக்கொள்ளும் சகோதரரை சந்தித்து அடிக்கடி ஊழியம் செய்யப்படாத இடங்களுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வீட்டில் இல்லாதோரை சந்தித்தல், தெரு ஊழியம், கடைக்கு கடை ஊழியம், மாலைநேர ஊழியம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொருத்தமாயிருந்தால், தொலைபேசியில் சாட்சிகொடுக்க சில பிரஸ்தாபிகளுக்கு உதவி செய்யலாம்.
14 மறுபடியும் சேவிக்க அவர்களுக்கு உதவுங்கள்: நற்செய்தியை பிரசங்கிப்பதில் செயலற்றுப் போனவர்கள் யாராவது உங்கள் சபை பிராந்தியத்தில் வசிக்கிறார்களா? அப்படிப்பட்டவர்கள் இன்னும் சபையின் அங்கத்தினராகவே இருப்பதால் அவர்களுக்கு உதவி தேவை. (சங். 119:176) இந்த பழைய உலகின் முடிவும், புதிய உலகின் விடியலும் மிக சமீபம் என்பதால் செயலற்றுப் போனவர்களுக்கு உதவ முழு முயற்சி செய்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளன. (ரோ. 13:11, 12) கடந்த ஐந்து ஆண்டுகளில் உதவி அளிக்கப்பட்டவர்களில் வருடத்திற்கு சுமார் 300 பேர் மறுபடியும் செயல்பட ஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்திலிருந்த அன்பும் நம்பிக்கையும் மீண்டும் சுடர்விட இன்னும் அநேகருக்கு நாம் எப்படி உதவலாம்?—எபி. 3:12-14.
15 கடந்த சில வருடங்களாக செயலற்று இருப்பவர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதை பற்றி மூப்பர் குழு கலந்து பேசலாம். (மத். 18:12-14) செயலர், சபையின் பிரஸ்தாபி பதிவு அட்டைகளை பரிசோதித்து செயலற்றுப் போனவர்களை குறித்துக்கொள்ள வேண்டும். மேய்ப்பு சந்திப்புகள் மூலம் உதவி செய்வதற்கு விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். ஒரு பிரஸ்தாபியை முன்கூட்டியே அறிந்திருப்பதால் அவரை சந்திக்க ஒரு மூப்பர் முடிவு செய்யலாம், அல்லது உதவும்படி மற்ற பிரஸ்தாபிகளிடம் கேட்கலாம். இந்த பிரஸ்தாபிகள், தற்போது செயலற்றிருக்கும் நபருடன் படித்திருக்கலாம், விசேஷ உதவி தேவைப்படும் இந்த சந்தர்ப்பத்தில் உதவும் வாய்ப்பை அவர்கள் வரவேற்கலாம். செயலற்றுப்போன அநேகர் கடவுளுடைய வார்த்தையை மீண்டும் பிரசங்கிக்க தூண்டப்படுவார்கள் என்று நம்புவோமாக. தகுதி பெறுவார்களானால், அவர்கள் திரும்பவும் செயல்பட ஆரம்பிக்க நினைவு ஆசரிப்பு காலமே மிகவும் சிறந்த காலம்!—கூடுதலான விவரங்களுக்கு நவம்பர் 2000, நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள கேள்விப் பெட்டியைக் காண்க.
16 பிரசங்கிக்க மற்றவர்கள் தகுதி பெறுகிறார்களா? ‘சகல தேசங்களிலும் உள்ள விரும்பப்பட்டவற்றை’ கூட்டி சேர்ப்பதன் மூலம் யெகோவா தம் மக்களை தொடர்ந்து ஆசீர்வதிக்கிறார். (ஆகா. 2:7, NW) ஒவ்வொரு வருடமும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆயிரக்கணக்கானோர் தகுதி பெறுகின்றனர். அவர்கள் யார்? யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளும் முன்னேறுகிற பைபிள் படிப்புகளுமே. நற்செய்தியின் பிரஸ்தாபிகளாக ஆகும் தகுதியை அவர்கள் பெற்றுவிட்டார்களா என நமக்கு எப்படி தெரியும்?
17 யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள்: முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள் ஆகவில்லை என்றாலும் அநேக பிள்ளைகள் பல வருடங்களாக தங்கள் பெற்றோரோடு சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியத்திற்கு சென்றிருக்கின்றனர். அவர்கள் பிரஸ்தாபிகளாவதற்கு மார்ச் மாதம் சிறந்த வாய்ப்பளிக்கலாம். உங்கள் பிள்ளை தகுதி பெறுகிறதா என்பதை நீங்கள் எவ்வாறு அறியலாம்? “ஒரு பிள்ளை தன் நடத்தையில் நல்ல முன்மாதிரியாக இருந்து தன் இருதயத் தூண்டுதலினால் நற்செய்தியைப் பற்றி மற்றவர்களிடம் பேசி தன் விசுவாசத்தைத் தானாக வெளிப்படுத்திக் கூறக்கூடியவனாக இருக்கையில்” தகுதி பெறுகிறான் என நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகம், பக்கம் 100-ல் கூறுகிறது. உங்கள் பிள்ளை தகுதி பெறுவதாக நீங்கள் நினைத்தால், சபை ஊழியக் குழுவிலுள்ள ஒரு மூப்பரிடம் அதைக் குறித்துப் பேசுங்கள்.
18 தகுதி பெற்ற பைபிள் மாணாக்கர்கள்: ஒரு மாணாக்கர் பைபிள் அறிவை பெற்று, சில காலமாக கூட்டங்களுக்கும் வர ஆரம்பித்த பிறகு ராஜ்ய பிரஸ்தாபியாவதற்கு விருப்பம் தெரிவிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு மாணாக்கருக்கு நீங்கள் பைபிள் படிப்பு நடத்தினால் பின்வரும் கேள்விகளைக் குறித்து சிந்தியுங்கள்: அவருடைய வயதிற்கும் திறமைக்கும் ஏற்றவாறு முன்னேற்றம் செய்கிறாரா? சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதன் மூலம் தன் விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாரா? “புதிய மனுஷனை” தரித்து வருகிறாரா? (கொலோ. 3:10) நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 97-9-ல் கொடுக்கப்பட்டுள்ள முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளுக்கான தகுதிகளை அவர் பூர்த்தி செய்கிறாரா? ஆம் என்றால், சபை ஊழியக் குழு அங்கத்தினரிடம் தெரிவியுங்கள்; அப்போது உங்களையும் அந்த மாணாக்கரையும் சந்திக்க இரண்டு மூப்பர்கள் ஏற்பாடு செய்யப்படுவர். அந்த மாணாக்கர் தகுதி பெற்றிருந்தால், ஊழியத்தில் கலந்துகொள்ள ஆரம்பிக்கலாம் என அந்த இரண்டு மூப்பர்களும் அவரிடம் தெரிவிப்பர்.
19 ஏப்ரல், மே மாதங்களும் செய்யலாமா? வெளி ஊழியத்தில் நம் பங்கை அதிகரிக்க இவையும் விசேஷித்த மாதங்களே. மார்ச் மாதத்தில் துணைப் பயனியர் செய்யும் அநேகர் ஏப்ரல் மற்றும்/அல்லது மே மாதங்களில் திரும்பவும் பயனியர் செய்ய முடியலாம். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஏப்ரல், மே மாத ஊழியத்தில் அளிக்க முக்கியத்துவம் கொடுப்போம். வாசகர்களின் வாழ்க்கையில் அவை எவ்வளவு அதிக நன்மைகளை ஏற்படுத்தியுள்ளன! உலகமுழுவதிலும் ஏற்பட்டுள்ள மகத்தான அதிகரிப்பில் இந்தப் பத்திரிகைகளுக்கு பெரும் பங்குண்டு. ஏப்ரல், மே மாதங்களில் கூடுமானவரை அதிகமானோருக்கு பத்திரிகைகளை அளிக்க விசேஷ முயற்சி எடுக்கப்படும். முழுமையாக பங்குகொள்ள இப்பொழுதே திட்டமிடுங்கள்.
20 ஊழியத்தை அதிகரிக்க திட்டமிடுவதால் சபையின் மூலம் நீங்கள் பெறும் பத்திரிகைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டுமா? காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை ஊழிய ஆண்டு முழுவதும் பத்திரிகை ஊழியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சனிக்கிழமையும் அளித்து வருகிறோம். ஆனால், அநேகர் துணைப் பயனியர் செய்வார்கள் என்பதாலும் இரண்டு மாதங்கள் முழுவதுமாக நாம் அனைவருமே பத்திரிகைகளை அளிப்போம் என்பதாலும் சபையில் உங்களுடைய பத்திரிகை ஆர்டரை அதிகரிக்க வேண்டியிருக்கலாம். அப்படியென்றால், தயவுசெய்து உங்கள் சபையிலுள்ள பத்திரிகை ஊழியரிடம் உடனே தெரிவியுங்கள். அதே சமயம், பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? என்ற துண்டுப்பிரதி, அனைவரும் உபயோகிக்க போதுமான அளவு கையிருப்பில் உள்ளதா என பிரசுர ஊழியர் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
21 “பத்திரிகைகளைப் பற்றி என்ன சொல்வது” என்ற நம் ராஜ்ய ஊழியத்தில் வரும் பகுதிக்காக அநேகர் நன்றி தெரிவித்துள்ளனர். கொடுக்கப்பட்டுள்ள பத்திரிகை அளிப்புகளை கற்றுக்கொள்வதன் மூலம் இந்த ஏற்பாட்டிலிருந்து பயனடைந்து வருகிறீர்களா? ஒவ்வொரு வாரமும் உங்கள் குடும்ப பைபிள் படிப்பின்போது இந்த அளிப்புகளை ஒத்திகை பார்க்க ஏன் கொஞ்ச நேரத்தை ஒதுக்கக்கூடாது?
22 இந்த நினைவு ஆசரிப்பு காலத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்: அப்போஸ்தலன் பவுலைப் போல, இந்த நினைவு ஆசரிப்பு காலத்திற்காக திட்டமிடப்பட்ட ஆவிக்குரிய நடவடிக்கைகளில் முழுமையாக பங்குபெறுவதன் மூலம் ‘யெகோவாவுடைய சொல்லி முடியாத இலவச பரிசை’ எவ்வளவாக போற்றுகிறோம் என அவருக்கு காண்பிப்போமாக. அந்த ஆவிக்குரிய நடவடிக்கைகளில் பின்வருபவையும் உட்பட்டுள்ளன: (1) 2002, மார்ச் 28, வியாழன் அன்று, வருடத்தின் அதிமுக்கிய நிகழ்ச்சியாகிய கர்த்தருடைய இராப் போஜனத்தில் கலந்துகொள்வது; (2) “ஆதியில் கொண்டிருந்த அன்பை” மீண்டும் பெற செயலற்றுப் போனவர்களுக்கு உதவுவது (வெளி. 2:4; ரோ. 12:11); (3) முழுக்காட்டுதல் பெறாத பிரஸ்தாபிகளாக தகுதி பெறும் நம் பிள்ளைகளுக்கும் மற்ற பைபிள் மாணாக்கர்களுக்கும் உதவுவது; (4) மார்ச் மாதத்திலும் அதற்குப் பின்பும் துணைப் பயனியர் செய்வதன் மூலம் பிரசங்க வேலையில் கூடுமானவரை முழுமையாக பங்குகொள்வது.—2 தீ. 4:5.
23 இந்த நினைவு ஆசரிப்பு காலத்தில் ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிப்பதில் அனைவருமே முழுமையாக பங்குகொள்ள நாங்கள் ஊக்கமாக ஜெபிக்கிறோம். இவ்வாறு யெகோவா நமக்காக செய்திருக்கும் அனைத்திற்குமான நமது போற்றுதல் எவ்வளவு ஆழமானது என்பதை காண்பிப்போமாக.
[பக்கம் 6-ன் பெட்டி]
மார்ச் 2002-க்கான எனது வெளி ஊழிய அட்டவணை
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
1 2
பத்திரிகை ஊழியம்
3 4 5 6 7 8 9
பத்திரிகை ஊழியம்
10 11 12 13 14 15 16
பத்திரிகை ஊழியம்
17 18 19 20 21 22 23
பத்திரிகை ஊழியம்
24 25 26 27 28 29 30
நினைவு ஆசரிப்பு பத்திரிகை ஊழியம்
சூரிய அஸ்தமனத்திற்குப்
31 பிறகு
மார்ச் மாதத்தில் துணைப் பயனியர் செய்ய மொத்தமாக 50 மணிநேரத்தை உங்களால் திட்டமிட முடியுமா?