நினைவுநாள் அனுசரிப்புக் காலம்—கூடுதலாக ஊழியம் செய்வதற்கான சமயம்!
1. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நாம் கூடுதலாக ஊழியம் செய்ய என்னென்ன காரணங்கள் இருக்கின்றன?
1 வரவிருக்கும் நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் உங்களால் கூடுதலாக ஊழியம் செய்ய முடியுமா? இந்தச் சமயத்தில் அநேக இடங்களில் பகல்நேரம் நீண்டதாக இருக்கும். வேலை பார்க்கிற அல்லது பள்ளியில் படிக்கிற சில பிரஸ்தாபிகளுக்கு இந்தச் சமயம் பார்த்து விடுமுறை நாட்களாக இருக்கும்; எனவே, இந்நாட்களில் ஊழியம் செய்ய அவர்கள் திட்டமிடலாம். வரும் ஏப்ரல் 2 முதல் ஒரு விசேஷ விநியோகிப்பில் நாம் ஈடுபடுவோம்; அப்போது, ஏப்ரல் 17-ல் நடைபெறும் நினைவுநாள் அனுசரிப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களை அழைப்போம். அதன்பிறகு, இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களின் ஆர்வத்தை இன்னும் வளர்ப்பதற்காக அவர்களை மீண்டும் சந்தித்து... ஏப்ரல் 25-ல் துவங்கும் வாரத்தின்போது கொடுக்கப்படவிருக்கிற விசேஷப் பேச்சிற்கு அழைப்போம். எனவே... மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நாம் கூடுதலாக ஊழியம் செய்ய நிறையவே காரணங்கள் இருக்கின்றன.
2. கூடுதலாக ஊழியம் செய்ய எது மிகச் சிறந்த வழியாக இருக்கிறது?
2 துணைப் பயனியர் சேவை: கூடுதலாக ஊழியத்தில் ஈடுபட மிகச் சிறந்த வழி, துணைப் பயனியர் சேவை செய்வதாகும். பொதுவாக, நம் எல்லாருக்குமே அதிக வேலை இருக்கும் என்பதால்... நாம் முன்கூட்டியே திட்டமிட்டு, தினந்தோறும் செய்துவருகிற வேலைகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். (நீதி. 21:5) முடிந்தால், நாம் வழக்கமாகச் செய்துவருகிற வேலைகளில், அவ்வளவாய் முக்கியமல்லாத வேலைகளைக் கொஞ்சம் தள்ளிப்போடலாம். (பிலி. 1:9-11) பயனியர் சேவை செய்ய உங்களுக்கிருக்கும் விருப்பத்தை, சபையிலுள்ள மற்றவர்களிடமும் தெரிவியுங்கள்; அவர்களும் உங்களோடு சேர்ந்து ஊழியம் செய்யலாம், அல்லவா?
3. கூடுதலாக ஊழியத்தில் ஈடுபட, குடும்பங்கள் எப்படித் திட்டமிடலாம்?
3 இதுசம்பந்தமாக நீங்கள் செய்ய நினைத்திருக்கிற காரியங்களை, அடுத்து வரும் உங்களுடைய குடும்ப வழிபாட்டு நேரத்தில் உங்கள் குடும்பத்தாரோடு கலந்து பேசுவது அதிக பிரயோஜனமாய் இருக்கும். (நீதி. 15:22) குடும்ப அங்கத்தினர்கள் ஒத்துழைத்தால்... அவர்களில் சிலர் துணைப் பயனியர் ஊழியம் செய்யலாம்; இப்படி ஒரு மாதமோ அதற்கும் மேலாகவோ செய்யலாம். ஒருவேளை, உங்களால் இப்படிச் செய்ய முடியாது என நீங்கள் நினைத்தால்..? கவலைப்பட வேண்டியதில்லை; இம்மாதங்களில் உங்களால் கூடுதலாக ஊழியம் செய்ய முடியும். மாலை நேரங்களில் ஊழியம் செய்யலாம்... அல்லது சனி, ஞாயிறு தினங்களில் இன்னும் சற்று அதிக நேரம் ஊழியம் செய்யலாம்.
4. இந்த நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் கூடுதலாக ஊழியம் செய்யும்போது என்ன ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள்?
4 யெகோவாவுக்காக நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும் அவர் கவனிக்கிறார்; நாம் செய்கிற தியாகங்களையெல்லாம் அவர் பெரிதும் போற்றுகிறார். (எபி. 6:10) இப்படி நாம் யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் ‘கொடுப்பதால்’ மனமகிழ்ச்சி அடைவோம். (1 நா. 29:9; அப். 20:35) ஆகவே, இந்த நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில் கூடுதலாக ஊழியம் செய்ய நீங்கள் தயாரா? அப்படிச் செய்தீர்களென்றால், அதனால் வரும் ஆசீர்வாதமும் மகிழ்ச்சியும் உங்களுக்கே!