நினைவுநாள் சமயத்தில் சந்தோஷத்தை அதிகமாக்குங்கள்!
1. நினைவு ஆசரிப்பு சமயத்தில் சந்தோஷத்தை அதிகமாக்க ஒரு வழி என்ன?
1 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உங்கள் சந்தோஷத்தை அதிகமாக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒரு வழி, அதிக நேரம் ஊழியம் செய்வது. முடிந்தால், துணைப் பயனியர் ஊழியம் செய்யலாம். இதற்கும் சந்தோஷத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?
2. நிறைய நேரம் ஊழியம் செய்தால் எப்படி சந்தோஷம் அதிகமாகும்?
2 சந்தோஷம் அதிகமாகும்: யெகோவா நம்மைப் படைத்திருக்கும் விதத்தைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அவரை வணங்கும்போது, அவரைப் பற்றிக் கற்றுக்கொள்ளும்போது நமக்கு சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கிறது. (மத். 5:3) அதுமட்டுமல்ல, மற்றவர்களுக்குக் கொடுக்கும்போதும் நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது. (அப். 20:35) ஊழியம் செய்யும்போது நம்மால் கடவுளை வணங்கவும் முடிகிறது, மற்றவர்களுக்கு உதவவும் முடிகிறது. அதனால், அதிகமாக ஊழியம் செய்யும்போது நம் சந்தோஷம் அதிகமாகிறது. அதோடு, நம் திறமையும் மெருகேறுகிறது. திறமையாகப் பேசும்போது நம் தைரியம் கூடுகிறது, பயம் குறைகிறது. அதிக நேரம் ஊழியம் செய்யும்போது, நிறைய பேருக்கு சாட்சி கொடுக்க முடிகிறது, நிறைய பைபிள் படிப்புகளையும் ஆரம்பிக்க முடிகிறது. இவையெல்லாம் ஊழியத்தில் பல மடங்கு சந்தோஷம் காண நமக்கு உதவுகின்றன.
3. துணைப் பயனியர் ஊழியம் செய்ய மார்ச், ஏப்ரல் மாதங்கள் ஏன் சிறந்தவை?
3 துணைப் பயனியர் செய்வதற்கு மார்ச், ஏப்ரல் மாதங்கள் மிகச்சிறந்தவை. ஏனென்றால், நாம் 50 அல்லது 30 மணிநேரம் செய்தாலே போதும்! அதோடு, மார்ச் 22 சனிக்கிழமை முதல் ஏப்ரல் 14 திங்கட்கிழமை வரை நினைவுநாள் அழைப்பிதழை எல்லோருக்கும் கொடுக்கப்போகிறோம். இந்தச் சமயத்தில் சபையிலுள்ள அநேகர் ஊழியத்தில் சுறுசுறுப்பாகக் கலந்துகொள்வார்கள். அதனால் அவர்களுடன் நாமும் “தோளோடு தோள் சேர்ந்து” பிராந்தியத்தைச் செய்து முடிக்க முயற்சி செய்யலாம்.—பிலி. 4:3.
4. துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
4 உடனே திட்டமிடுங்கள்: ஒரு மாதமோ அதற்கும் மேற்பட்ட மாதங்களோ அதிகமாக ஊழியம் செய்வதற்கு வசதியாக உங்கள் வேலையை இப்போதே திட்டமிடுங்கள். அதற்காக ஜெபம் செய்யுங்கள். (யாக். 1:5) குடும்பத்தாரிடமும் சபையிலுள்ள மற்றவர்களிடமும் அதைப் பற்றிப் பேசுங்கள். (நீதி. 15:22) இப்படித் திட்டமிட்டால் ஒருவேளை சுகவீனம், வேலைப்பளு மத்தியிலும் உங்களால் சந்தோஷமாக துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியும்.
5. நினைவுநாள் சமயத்தில் ஊழியத்தை மும்முரமாகச் செய்வதால் என்ன பலன்?
5 நாம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (சங். 32:11) நினைவுநாள் சமயத்தில் மும்முரமாக ஊழியம் செய்து நாமும் சந்தோஷப்படலாம், நம் பரலோகத் தகப்பனையும் சந்தோஷப்படுத்தலாம்.—நீதி. 23:24; 27:11.