உங்கள் மாணாக்கரின் இதயத்தை எட்டுங்கள்
1 இயேசு பரலோகத்திற்கு செல்வதற்கு முன் தாம் கட்டளையிட்ட அனைத்தையும் “கைக்கொள்ளும்படி” மற்றவர்களுக்குக் கற்பிக்குமாறு சீஷர்களிடம் சொன்னார். (மத். 28:19, 20) கிறிஸ்துவின் கட்டளைகளை ஒருவர் ‘கைக்கொள்வதற்கு’ அத்தகவல் அவர் இதயத்தை எட்ட வேண்டும். (சங். 119:112) உங்களிடம் பைபிளைக் கற்றுக்கொள்பவரின் இதயத்தை நீங்கள் எப்படி தொடலாம்?
2 யெகோவாவின் வழிநடத்துதலுக்கு ஜெபியுங்கள்: சீஷர்களை உண்டுபண்ணுவது கடவுள் கொடுத்த வேலை. இதில் வெற்றி காண்பதற்கு நம்முடைய திறமைகள் அல்ல, ஆனால் அவருடைய ஆசீர்வாதமே அவசியம். (அப். 16:14; 1 கொ. 3:7) எனவே, மற்றவர்களுக்கு சத்தியத்தைக் கற்பிப்பதற்கு யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபிப்பது முக்கியம்.—ஏசா. 50:4.
3 மாணாக்கரின் நம்பிக்கைகளை பகுத்துணருங்கள்: ஜனங்கள் எதை நம்புகிறார்கள், ஏன் நம்புகிறார்கள் என்பதை அறிந்துகொள்வது அவர்களுடைய இதயத்தை எட்டுவதற்கு என்ன சொல்ல வேண்டும் என்பதை பகுத்தறிய நமக்கு உதவும். ஒரு குறிப்பிட்ட போதனை மாணாக்கருக்கு அதிகம் பிடித்துப் போக காரணம் என்ன? அது நம்பகமானதென அவரை ஒப்புக்கொள்ள வைத்தது எது? இவற்றைப் புரிந்துகொள்வது பகுத்துணர்வுடன் பேச நமக்கு உதவும்.—அப். 17:22, 23.
4 நியாயமாகவும் வேதப்பூர்வமாகவும் விவாதியுங்கள்: மாணாக்கர் புரிந்துகொள்ளும் விதத்தில் சத்தியத்தை கற்பிக்க வேண்டும். (அப். 17:24-31) நம் நம்பிக்கைக்கு நியாயமான காரணத்தை அளிக்க வேண்டும். (1 பே. 3:15) எனினும், அதை எப்போதும் கனிவோடும் பொறுமையோடும் சொல்ல வேண்டும்.
5 உதாரணங்களுடன், மனதில் பதியும் விதத்தில் கற்பியுங்கள்: மாணாக்கர் எளிதில் புரிந்துகொள்வதற்கு உதாரணங்கள் உதவுவதோடுகூட அவை அவர்களுடைய உணர்ச்சிகளையும் தூண்டுவிக்கின்றன. அவை மனதிலும் இதயத்திலும் இடம்பிடிக்கின்றன. அவற்றை இயேசு அடிக்கடி உபயோகித்தார். (மாற். 4:33, 34) பலன்தரத்தக்கதாக இருக்க பயன்படுத்தும் உதாரணம் கலந்தாலோசிக்கப்படும் குறிப்புக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பது உண்மை; அது மாணாக்கரின் அன்றாட வாழ்க்கையோடும் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.
6 சத்தியத்தை ஏற்பதால் கிடைக்கும் பலன்களை குறிப்பிடுங்கள்: தாங்கள் கற்றுக்கொள்வதைப் பின்பற்றுகையில் கிடைக்கும் பலன்களைப் பற்றி அறிய ஜனங்கள் விரும்புகின்றனர். 2 தீமோத்தேயு 3:14-17-லுள்ள பவுலின் வார்த்தைகளில் புதைந்து கிடக்கும் ஞானத்தைக் கண்டுணர உங்கள் மாணாக்கருக்கு உதவுங்கள்.
7 உங்கள் போதனையை சிலர் காதுகொடுத்து கேட்காவிட்டால் மனமுடைந்துவிடாதீர்கள். ஏனெனில் எல்லாருடைய இதயமும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. (மத். 13:15) எனினும் சிலர் விசுவாசிகளாக மாறுகிறார்கள். (அப். 17:32-34) நற்செய்தியின் மூலம் இதயங்களை எட்டுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இயேசு கட்டளையிட்டவற்றைக் ‘கைக்கொள்ளுவதற்கு’ இன்னும் அநேகருக்கு உதவுவதாக.