‘எதையாகிலும் சேர்த்து வையுங்கள்’
ஆரம்பகால கிறிஸ்தவ சபையில் பொருளாதார தேவைகளுக்கு கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இந்தத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, ஒவ்வொரு நபரும் அவரவருடைய வசதிக்கு ஏற்றவாறு நன்கொடை அளிக்க ‘எதையாகிலும் சேர்த்து வைக்கும்படி’ தூண்டப்பட்டார். (1 கொ. 16:1-3) அவர்களுடைய தாராள குணத்தின் காரணமாக, “கடவுளுக்கு அநேக நன்றிகளை” தெரிவிப்பதில் அனைவரும் மகிழ்ந்தனர்.—2 கொ. 9:11, 12, NW.
இன்று யெகோவாவின் மக்களுடைய உலகளாவிய வேலை முன்னேறுவதால் அதிகமதிகமான பொருளாதார தேவைகள் ஏற்படுகின்றன. ஆகவே, இந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய நாமும் தவறாமல் ‘எதையாகிலும் சேர்த்து வைப்பது’ பொருத்தமானதே. (2 கொ. 8:3, 4) சென்ற வருடம் சொஸைட்டி மீது பண சம்பந்தப்பட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அநேகர் கொஞ்சம் அதிகத்தை ‘சேர்த்து வைக்க’ தீர்மானித்தனர். அப்படிப்பட்ட முயற்சிகளை பெரிதும் பாராட்டுகிறோம், யெகோவாவும் நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிக்கிறார்.—மல். 3:10.
ஊழியத்திற்காக அல்லது நமது உபயோகத்திற்காக பத்திரிகைகள் அல்லது பிரசுரங்கள் வாங்கும் ஒவ்வொரு சமயமும் நன்கொடை கொடுப்பதற்காக கொஞ்சத்தை சேர்த்து வைப்பது ஒரு நல்ல பழக்கம். நாம் தாராளமாக கொடுப்பது, பிரசுரங்களை தயாரித்து அனுப்ப சொஸைட்டிக்கு உதவுவது மட்டுமல்ல, உலகளாவிய வேலையின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் உதவுகிறது என்பதை நினைவில் வையுங்கள். இவ்வாறு நன்கொடை செலுத்த பிள்ளைகளையும் உற்சாகப்படுத்தலாம். கை செலவுகளுக்காக பெற்றோர் கொடுக்கும் பணத்திலிருந்து கொஞ்சத்தை அவர்களே ‘சேர்த்து வைப்பது’ அவர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி தருகிறது.
என்றாலும், நாம் இதை எளிதில் மறந்துவிடலாம். சொஸைட்டிக்கு அனுப்பப்படும் தொகை முந்தைய வருடங்களைவிட மிகக் குறைவாக இருப்பதையும் சபை செலுத்த வேண்டிய தொகை அதிகரித்து வருவதையும் ஒரு சபையின் மூப்பர்கள் கவனித்தனர். நாட்டிலுள்ள பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு எவ்வளவு பணம் அனுப்பினால் வேலையை கவனிக்க போதுமான பணம் கிடைக்கும் என அவர்கள் நினைத்ததை கணக்கிட்டனர். குறைந்தது அந்த தொகையையாவது அவர்களுடைய சபை உலகளாவிய வேலைக்காக மாதாந்தர நன்கொடையாக சங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என சகோதரர்கள் ஒருமனதாக தீர்மானித்தனர். நன்கொடை பெட்டியில் குறைவாக இருந்தால் சபையின் நிதியிலிருந்து அனுப்பவும் தீர்மானித்தனர்.
அநேக பத்திரிகைகள் உபயோகிக்கப்படாமல் இருந்ததால் மதிப்புமிக்க சொத்து வீணாவதை மற்றொரு சபை கவனித்தது. உள்ளூர் தோணித்துறையில் விசேஷ பத்திரிகை ஊழியம் செய்ய மூப்பர்கள் ஏற்பாடு செய்தனர். நன்கொடை கொடுக்கும் சிலாக்கியத்தை பொதுமக்களுக்கு எவ்வாறு தெரிவிக்கலாம் என்பதை பற்றியும் பிரஸ்தாபிகளுக்கு அறிவுரை கொடுத்தனர். அதன் விளைவாக அந்த மாதம் அந்த சபை 15,000 ரூபாய்க்கும் அதிகத்தை அனுப்ப முடிந்தது.
‘எதையாகிலும் சேர்த்து வைப்பதை’ பற்றி நீங்களும் உங்கள் குடும்பமும் யோசித்திருக்கிறீர்களா? நாம் பல வழிகளில் பொருளாதார நன்கொடை அளிக்கலாம். (2001, நவம்பர் 1, காவற்கோபுரம், பக்கங்கள் 28-9-ஐக் காண்க.) உண்மையான சந்தோஷத்தை தரும் அரிய வாய்ப்பாக இதை நாம் கருதுவது நியாயமானதே.—அப். 20:35.