நாமும் யெகோவாவுக்குக் கொடுக்கலாம்
1 மனிதர்கள்கூட கடவுளுக்கு எதையாவது கொடுக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆபேல், தன்னிடமிருந்த மிகச்சிறந்த விலங்குகளில் சிலவற்றை யெகோவாவுக்குப் பலியாகச் செலுத்தினார். நோவா, யோபு ஆகியோரும் இதுபோன்ற பலிகளைச் செலுத்தினார்கள். (ஆதி. 4:4; 8:20; யோபு 1:5) அப்படிப்பட்ட காணிக்கைகள் கடவுளை எவ்விதத்திலும் செல்வந்தராக்கிவிடவில்லை என்பது உண்மைதான். ஏனெனில், அனைத்திற்கும் சொந்தக்காரர் அவரே. இருப்பினும், இந்த உண்மையுள்ள மனிதர்கள் கடவுளை எந்தளவுக்கு ஆழமாக நேசித்தார்கள் என்பது அந்தப் பலிகளிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. இன்று நாமும், நம்முடைய நேரம், சக்தி, பணம், பொருள் ஆகியவற்றை யெகோவாவுக்கு “ஸ்தோத்திரபலியை” செலுத்துவதில் பயன்படுத்தலாம்.—எபி. 13:15.
2 நேரம்: முக்கியமற்ற காரியங்களில் செலவிடும் நேரத்தை “வாங்கி,” அதை ஊழியத்தில் இன்னுமதிகமாக ஈடுபடுவதற்குப் பயன்படுத்துவது சிறந்தது, அல்லவா? (எபே. 5:15, 16, NW) நம்முடைய வேலைகளைச் சற்று ஒழுங்குபடுத்தி, ஆண்டுதோறும் ஒருமுறையோ அதற்கு மேலோ துணைப் பயனியர் ஊழியம் செய்யலாம். வழக்கமாகச் செய்வதைவிட அதிக மணிநேரங்கள் ஊழியத்தில் செலவிட நாம் முயற்சி செய்யலாம். ஒவ்வொரு வாரமும் ஊழியத்தில் 30 நிமிடங்கள் அதிகமாகச் செலவிட்டாலே, அந்த மாதம் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் அதிகரிக்கும்.
3 சக்தி: யெகோவாவுக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க முடியாதளவு நமக்குச் சோர்வூட்டுகிற பொழுதுபோக்கையும் வேலையையும் நாம் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் ஊழியத்தில் செலவிட நமக்கு சக்தி இருக்கும். மேலும், நம்முடைய இருதயத்தை “ஒடுக்கும்” கவலைகளை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். ஏனெனில், கடவுளுடைய சேவையில் நாம் பயன்படுத்தும் சக்தியை அவை உறிஞ்சிவிடும். (நீதி. 12:25) கவலைப்பட நமக்கு நியாயமான காரணங்கள் இருந்தால்கூட, ‘கர்த்தர்மேல் . . . பாரத்தை வைத்துவிடுவது’ எவ்வளவு நன்றாக இருக்கும்!—சங். 55:22; பிலி. 4:6, 7.
4 பணம், பொருள்: பிரசங்க வேலைக்காக நாம் பணத்தையும் பொருளையும்கூட கொடுத்து உதவலாம். ஏழ்மையில் இருப்போருக்கு உதவுவதற்காக தவறாமல் ‘எதையாகிலும் . . . சேர்த்துவைக்கும்படி’ சக கிறிஸ்தவர்களை பவுல் ஊக்கப்படுத்தினார். (1 கொ. 16:1, 2) அதேபோல, நாமும்கூட நம்முடைய சபைக்காகவும், உலகளாவிய வேலைக்காகவும் நன்கொடை கொடுப்பதற்காக பணத்தைச் சேமிக்கலாம். நாம் கொடுப்பது கொஞ்சமாக இருந்தாலும், அதை இருதயப்பூர்வமாகக் கொடுக்கும்போது யெகோவா அதை உயர்வாகக் கருதுகிறார்.—லூக். 21:1-4.
5 யெகோவா நமக்கு நிறைய கொடுத்திருக்கிறார். (யாக். 1:17) அவருக்குச் சேவை செய்ய நம்முடைய நேரம், சக்தி, பணம், பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் அவருக்கு நன்றி காட்டலாம். இது யெகோவாவை சந்தோஷப்படுத்துகிறது. ஏனெனில், “உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”—2 கொ. 9:7.