பலமான விசுவாசத்திற்கு அத்தாட்சி!
1 தம்முடைய பிரசன்னத்தையும் இந்த உலகத்தின் முடிவையும் குறித்து இயேசு பேசியபோது அப்போஸ்தலர்கள் கூர்ந்து கவனித்தார்கள். போர்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், கொள்ளைநோய்கள் ஆகியவை ஏற்பட்டு மனிதரை அலைக்கழிக்கும்; தம்மைப் பின்பற்றுவோர் பகைக்கப்படுவார்கள், உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள், கொலையும் செய்யப்படுவார்கள்; பொய்த் தீர்க்கதரிசிகள் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள்; பெரும்பாலோரின் அன்பு தணிந்துபோம் என்றெல்லாம் அவர் சொன்னார்.
2 அந்தப் பின்னணியில், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பூலோகமெங்கும் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு கூறியபோது அப்போஸ்தலர்கள் மலைத்துப்போயிருப்பார்கள். (மத். 24:3-14) பரபரப்பூட்டும் அத்தீர்க்கதரிசனத்தின் குறிப்பிடத்தக்க நிறைவேற்றத்தை இன்று நாம் கண்ணாரக் காண்கிறோம். கஷ்டம் நிறைந்த இந்தக் காலங்களிலும் யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியை வைராக்கியத்துடன் அறிவிக்கிறார்கள். உலகில் அன்பு தணிந்து வரவர, நம்மிடையே அன்பு அணையாத சுடராய் ஒளிவீசுகிறது. நாம் “எல்லாராலும்” பகைக்கப்பட்டாலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு தேசத்திலும் பிரசங்கிக்கிறோம்.
3 பக்கங்கள் 3 முதல் 6 வரையில் உள்ள புள்ளிவிவரப் பட்டியலிலிருந்து, கடந்த ஆண்டில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தின் அம்சங்களை நாம் சற்றுக் கவனிப்பது எவ்வளவாய் உற்சாகமூட்டுகிறது! தொடர்ச்சியாய் 16-வது ஆண்டாக, 100 கோடிக்கும் அதிகமான மணிநேரங்கள் பிரசங்க மற்றும் சீஷராக்கும் வேலையில் செலவிடப்பட்டன. பலமான விசுவாசத்திற்கு இது என்னே ஓர் அத்தாட்சி! பயனியர்களின் எண்ணிக்கையில் 5.8 சதவீதமும், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 3.1 சதவீதமும், பைபிள் படிப்புகளில் 4.4 சதவீதமும் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. முழுக்காட்டப்பட்டோரின் எண்ணிக்கையில் கடந்த ஊழிய ஆண்டைக் காட்டிலும் 20.1 சதவீத அதிகரிப்பு இருந்தது. வரலாறு காணாத அளவில் கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் உண்மையுடன் யெகோவாவுக்குச் சேவைசெய்து வருகிறார்கள் என்பதைக் காண்பது நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது! இந்தப் புள்ளிவிவரப் பட்டியலைக் கூர்ந்து கவனிக்கையில் எந்த அம்சம் உங்களை ஊக்கமூட்டுகிறது?
4 அதிகரித்துள்ள இந்த எண்ணிக்கையைப் பார்க்கும்போது நம் உள்ளம் குளிர்வது எதார்த்தமானதுதான்; அதே சமயத்தில், தங்களுடைய விசுவாசத்தை நிரூபித்திருப்பவர்களின் எண்ணிக்கையே இது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். கில்யெர்மோ என்பவர் பொலிவியா நாட்டில் வளர்ந்தவர். 1935-ல் பிறந்த அவர் தனது ஒன்பதாம் வயதிலிருந்து கொக்கோ தோட்டத்தில் வேலை செய்துவந்தார். அந்தச் சிறுவயதிலேயே, தனது சரீர உழைப்பின் கஷ்டம் தெரியாமலிருக்க கொக்கோ இலையை வாயில் போட்டு மெல்லும் பழக்கத்திற்கு அவர் அடிமையாகிவிட்டார். பின்னர் மது அருந்தும் பழக்கத்திற்கும் சிகரெட் புகைக்கும் பழக்கத்திற்கும் அடிமையானார். யெகோவா தன்னிடம் எதை எதிர்பார்க்கிறார் என அவர் படிப்படியாகக் கற்றுக்கொண்டபோதோ, புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டார், மது அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபட்டார். ஆனால், காலங்காலமாய் அடிமைப்பட்டிருந்த கொக்கோ இலை மெல்லும் பழக்கத்திலிருந்து அவரால் விடுபடவே முடியவில்லை. எனவே, தவறாமல் இதைக் குறித்து ஜெபித்து வந்தார், கடைசியில் அந்தப் பழக்கத்திலிருந்தும் விடுபட்டார். இந்தக் கெட்ட பழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபின் முழுக்காட்டுதலும் பெற்றார். “இப்போது நான் சுத்தமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன்” என்கிறார்.
5 ஆட்களின்மீது யெகோவா உண்மையிலேயே அக்கறையாய் இருக்கிறார். எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று அவர் விரும்புகிறார். (2 பே. 3:9) நமக்கும் அதே ஆவல்தான் உள்ளது. நாம் யெகோவாவைப்பற்றி அறிந்துகொண்டு அவரை நேசிப்பதைப் போலவே, நல்மனமுள்ள மற்றவர்களும் செய்யும்படி நம்மால் முடிந்தளவு தொடர்ந்து உதவுவதற்குத் தூண்டப்படுவோமாக.
[கேள்விகள்]
1. என்னென்ன அலைக்கழிக்கும் சம்பவங்கள் நிகழுமென்று இயேசு சொன்னார்?
2. உலகெங்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட்டு வருவது ஏன் குறிப்பிடத்தக்கது?
3. உலகளாவிய ஊழிய அறிக்கையில் எந்தெந்த அம்சங்களின் எண்ணிக்கை உங்களை ஊக்கமூட்டுகிறது?
4. முழுக்காட்டுதலுக்குத் தகுதிபெற விரும்பிய ஒருவர் தான் அடிமையாகியிருந்த என்னென்ன பழக்கங்களிலிருந்து விடுபட்டார்?
5. உங்கள் ஆவல் என்ன?