ஆளும் குழுவின் கடிதம்
21-வது நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் காலடி எடுத்து வைக்கையில், உலகமுழுவதிலும் உள்ள ‘முழு சகோதர கூட்டத்தாராகிய’ உங்களுக்கு எழுதும் இக்கடிதத்தின் மூலம் உங்களுடைய கடினமான உழைப்புக்கு பாராட்டு தெரிவிப்பதில் நாங்கள் அதிக மகிழ்ச்சியடைகிறோம். (1 பே. 2:17, NW) ஏறக்குறைய 2,000 வருடங்களுக்கு முன்பு, “மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ” என்ற கேள்வியை இயேசு கேட்டார். (லூக். 18:8) கடந்த ஊழிய ஆண்டில் நீங்கள் வைராக்கியமாக ஊழியம் செய்ததால் இயேசுவின் கேள்விக்கு ஆம் என்ற தெளிவான பதிலை கொடுத்திருக்கிறீர்கள்! உங்களில் சிலர் விசுவாசத்திற்காக ஏளனத்தையும் அவதூறையும் சந்தித்திருக்கிறீர்கள். அநேக இடங்களில் யுத்தங்கள், பேரழிவுகள், வியாதி அல்லது பஞ்சத்தின் கோரப் பிடியில் சிக்கியிருந்தும் நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள். (லூக். 21:10, 11) நீதியான செயல்களைச் செய்ய உங்களுக்கிருக்கும் வைராக்கியத்தால் இன்றும் இயேசுவால் ‘பூமியிலே விசுவாசத்தைக் காண’ முடிகிறது. நிச்சயமாகவே, இதனால் பரலோகத்தில் மகிழ்ச்சி உண்டாகிறது!
சகித்திருப்பது சுலபமல்ல என்பது நமக்கு தெரியும். மேற்கு ஆசியாவிலுள்ள ஒரு நாட்டில் நம் சகோதரர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எண்ணிப் பாருங்கள். அந்நாட்டிலே யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான வன்முறை சர்வசாதாரணம் ஆகிவிட்டது. சமீபத்தில், ஏறக்குறைய 700 பேர் கலந்துகொண்ட, அமைதியாக நடைபெற்ற ஒரு மாநாட்டை போலீஸார் கலைத்தனர். ரோட்டில் தடைகள் போட்டதால் கூடுதலான 1,300 பேர் மாநாட்டிற்கு வர முடியாமல் போனது. சில போலீஸார் உட்பட முகமூடி அணிந்த ஒரு கும்பல், மாநாடு நடந்த இடத்திற்குள் திடீரென புகுந்து, பிரதிநிதிகள் பலரை தாக்கி, மாநாடு நடத்தவிருந்த இடத்தை கொளுத்திவிட்டது. வேறு சந்தர்ப்பங்களில், மத வெறியர்கள் ஆணிகள் நிறைந்த தடிகளால் நம் சகோதரர்களை முரட்டுத்தனமாக தாக்கியிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட தாக்குதல்கள் அதிர்ச்சியூட்டினாலும் நாம் ஆச்சரியப்படுவதில்லை. “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று எழுதும்படி அப்போஸ்தலன் பவுல் ஏவப்பட்டார். (2 தீ. 3:12) முதல் நூற்றாண்டில், கிறிஸ்தவர்கள் ஏச்சையும் பேச்சையும் சரீர துன்புறுத்துதலையும் சகித்தனர், சிலர் கொல்லப்பட்டனர். (அப். 5:40; 12:2; 16:22-24; 19:9) 20-ம் நூற்றாண்டிலும் அதுவே நடந்தது, 21-ம் நூற்றாண்டிலும் அது தொடரும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும், ‘உங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்’ என யெகோவா நம்மிடம் கூறுகிறார். (ஏசா. 54:17) எப்பேர்ப்பட்ட அருமையான உறுதியை அளித்திருக்கிறார்! உண்மையில், நாம் யெகோவாவின் பார்வையில் மதிப்புமிக்கவர்கள் என்பதாலேயே தமது தீர்க்கதரிசியான சகரியா மூலம் இவ்வாறு கூறினார்: “உங்களைத் தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்.” (சக. 2:8, NW) யெகோவாவை வணங்குவோரின் எதிரிகள் நிரந்தர வெற்றியைப் பெற வாய்ப்பே இல்லை. மெய் வணக்கம் நிச்சயம் வெல்லும்!
உதாரணமாக, மேலே குறிப்பிடப்பட்ட நாட்டில், 2001-ம் ஊழிய ஆண்டில் யெகோவாவின் சாட்சிகள் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் இரண்டு புதிய உச்சநிலைகளை எட்டினர். ஆம், எங்குமுள்ள நம் சகோதரர்களைப் போலவே அங்குள்ளவர்கள் கஷ்டங்களின் மத்தியிலும் சகித்திருக்கிறார்கள். உலகமுழுவதிலும் கடந்த ஊழிய ஆண்டில், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதன் அடையாளமாக வாரத்திற்கு 5,066 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். நம்மைப் போலவே இந்தப் புதியவர்களும், “தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்க” தீர்மானித்திருக்கின்றனர்.—கொலோ. 4:12.
சமீபத்தில் கிரீஸில் நடந்தவற்றையும் சிந்தித்துப் பாருங்கள். கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் பல வருடங்களாக கடுமையாய் எதிர்த்து வந்தபோதிலும், யெகோவாவின் சாட்சிகளை ‘அறியப்பட்ட மதமாக’ இப்போது அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை அளித்த ஆவணம் கிரீஸிலுள்ள பெத்தேல் வளாகம், “கடவுளை வணங்குவதற்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட பரிசுத்தமான, புனிதமான இடமாகும்” என்றும் அறிவிக்கிறது. கடந்த ஊழிய ஆண்டில், ஐக்கிய மாகாணங்கள், கனடா, பல்கேரியா, ரஷ்யா, ருமேனியா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளின் நீதிமன்றங்களில் நம் வணக்கத்தை ஆதரிக்கும் சட்ட ரீதியான வெற்றிகள் கிடைத்திருப்பதை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அந்த நாடுகளில் வாய்ப்பு என்னும் கதவை திறந்தே வைத்திருப்பதற்காக நாம் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றி கடன்பட்டிருக்கிறோம்!
இந்தக் கடைசி நாட்களில் யெகோவா தம் மக்களை ஆதரிக்கும் வழிகளைக் குறித்து சிந்திக்கையில் நமக்கு கிடைத்திருக்கக்கூடிய உற்ற நண்பர் அவரே என்பதை நம்மால் உணர முடிகிறது. அவர் நம்மீது அன்பு காட்டி, போதித்து, திருத்துகிறார் என்பதை அறிந்திருப்பதால் அவரோடுள்ள உறவு நமக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. ஆம், விசுவாச பரீட்சைகளைத் தொடர்ந்து சந்திப்போம். ஆனால், யெகோவா மீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருந்தால் அது நம்மை தாங்கும். “என் சகோதரரே, நீங்கள் பல விதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என யாக்கோபு எழுதினார். (யாக். 1:2, 3) மேலுமாக, நாம் சகித்திருக்கையில் யெகோவாவுக்கான நம் அன்பை வெளிக்காட்டுகிறோம், இதனால் நமக்கு பெருமகிழ்ச்சி உண்டாகிறது! அன்பான சகோதரர்களே, நம் ஒவ்வொருவரையும் யெகோவா தாங்கி ஆதரிப்பார் என்பதில் நிச்சயமாயிருங்கள். நாம் உண்மையாக நிலைத்திருந்தால் புதிய உலகத்திற்குள் நுழைய அவர் நமக்கு நிச்சயம் உதவுவார். நாம் வெற்றி பெற வேண்டுமென்றே அவர் விரும்புகிறார்.
ஆகவே இளையோரும் முதியோருமாகிய சகோதர சகோதரிகளே, வரப்போகும் மகத்தான ஆசீர்வாதங்களை எப்போதும் மனதில் எண்ணிப் பார்க்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். “இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” என எழுதிய அப்போஸ்தலன் பவுலின் மனப்பான்மையே நமக்கும் இருப்பதாக. (ரோ. 8:18) எந்த விதமான இன்னலை எதிர்ப்பட்டாலும் யெகோவா மீது சார்ந்திருங்கள். சகித்திருங்கள், விட்டுக்கொடுத்துவிடாதீர்கள். அப்படி செய்தால் அதற்காக ஒருபோதும் வருத்தப்படமாட்டீர்கள். “தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என கடவுளுடைய வார்த்தை நமக்கு உறுதியளிக்கிறதே.—ஆப. 2:4.
உங்கள் சகோதரர்கள்,
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு