“மனிதரில் வரங்கள்” ஆவலுடன் கடவுளின் மந்தையை மேய்க்கின்றனர்
1 யெகோவா தம் குமாரன் மூலமாக ‘மனிதரில் வரங்களை’ அளித்திருப்பது எப்பேர்ப்பட்ட ஓர் அன்பான ஏற்பாடு! (எபே. 4:8, 11, 12, NW) அவர்களுக்கு பல்வேறு பொறுப்புகள் உள்ளன; தேவனுடைய மந்தையை உற்சாகத்தோடும் ஆவலோடும் மேய்ப்பதும் அவற்றில் அடங்கும். (1 பே. 5:2, 3) அத்தியாவசியமான இந்த ஏற்பாட்டிலிருந்து நாம் அனைவரும் நன்மை அடைகிறோம். சிலர் கஷ்டங்களில் சிக்கித் தவிக்கலாம், புதியவர்களாய் இருக்கலாம், ஏதாவது பலவீனங்களில் அவதிப்படலாம், வழி தவறியும் சென்றிருக்கலாம்; எது எப்படியிருந்தாலும், இவர்களே தனிப்பட்ட விதத்தில் எல்லாருடைய ஆவிக்குரிய நலனிலும் அதிக கவனம் செலுத்துபவர்கள்.—பிலி. 2:4; 1 தெ. 5:12-14.
2 பயங்கர உலக நிகழ்ச்சிகளால் ஓரளவு பயம் நிலவுகையில், இந்த உதவி மேய்ப்பர்களே “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும்” இருக்கின்றனர். நாம் சோர்வுற்றிருக்கும்போது அல்லது ஏதாவது பாரத்தைச் சுமப்பதால் ஆறுதல் தேடி ஏங்கும்போது, அவர்கள் “வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாக,” அல்லது “விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாக” இருந்து நமக்கு புத்துணர்ச்சி அளிக்கிறார்கள்.—ஏசா. 32:2.
3 செயலற்றவர்களை உற்சாகப்படுத்துதல்: ஒழுங்கற்று அல்லது செயலற்றுப் போயிருப்பவர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் சபை காரியங்களில் தவறாமல் பங்கு கொள்ள உதவுவதற்கு மூப்பர்கள் விசேஷ முயற்சி எடுக்கிறார்கள். அப்படிப்பட்ட அநேகர் சபை கூட்டங்களுக்கு தவறாமல் வருவதற்கும், மறுபடியும் வெளி ஊழியத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு ஆவிக்குரிய உற்சாகம் பெறுவதற்கும் அன்பான மேய்ப்பு சந்திப்புகள் உதவியிருக்கின்றன. மூப்பர்கள் அப்படிப்பட்ட அனைத்து முயற்சிகளும் செய்கையில் யெகோவாவின் அன்பான கவனிப்பையும் இயேசு கிறிஸ்துவின் உற்சாகமான தலைமை வகிப்பையுமே பின்பற்றுகின்றனர். வழி தவறிப் போன அல்லது தொலைந்து போன தம் ஆடுகள்மீது அப்படிப்பட்ட கரிசனை காட்டுவதில் இயேசு முன்மாதிரி வைத்தார்.—மத். 18:12-14; யோவா. 10:16, 27-29.
4 ஆவிக்குரிய வகையில் யாராவது தடுமாறுகிறார்களா என்பதற்கான அறிகுறிகளை இந்த உதவி மேய்ப்பர்கள் கவனிக்கின்றனர். கூட்டங்களுக்கு ஒழுங்காக வராமல், அல்லது வெளி ஊழியத்தில் சரிவர பங்கேற்காமல் சோர்ந்து போயிருப்பதற்கான அறிகுறிகள் யாரிடமாவது தென்பட்டால், அப்படிப்பட்டவர்களுக்கு ஆவிக்குரிய உதவி தேவைப்படலாம். உடை மற்றும் சிகை அலங்காரத்தில் எவராவது உலக பாணியைப் பின்பற்ற தொடங்குவதாக அல்லது சபையைப் பற்றி குறைகூறும் மனப்பான்மையை வளர்ப்பதாக தெரிந்தால், அவர்களுக்கு உதவ மூப்பர்கள் தயாராக இருக்கின்றனர். யெகோவாவிடமுள்ள அன்பை புதுப்பித்துக்கொள்ள அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக, உள்ளான அக்கறையுடனும் கனிவான பாசத்துடனும் கரிசனை காட்டும் கண்காணிகள் ‘தங்கள் ஜீவனையும் கொடுக்க’ மனதாய் இருக்கின்றனர்.—1 தெ. 2:8.
5 ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாய் இருந்த சிலர், இப்போது சபையுடன் கூட்டுறவு கொள்வதில்லை; ஆவிக்குரிய விதத்தில் செயலற்ற நிலைக்குள் சறுக்கி விழுந்துவிட்டனர்; ஏனெனில் உடல்நல பிரச்சினைகள், பொருளாதார சிக்கல்கள், குடும்ப பிரச்சினைகள் போன்றவற்றால் திக்குமுக்காடிப் போய்விட்டனர். மூப்பர்கள் குறை காண்பவர்களாய் இராமல், யெகோவா தம் ஆடுகள் அனைத்திற்காகவும் கவலைப்படுகிறார் என்றும் கஷ்ட காலங்களில் அவற்றை காப்பார் என்றும் கனிவுடன் உறுதியளிக்கின்றனர். (சங். 55:22; 1 பே. 5:7) அப்படிப்பட்டவர்கள், ‘தேவனிடத்தில் சேரும்போது அவர் அவர்களிடத்தில் சேருவார்’ என்று உணருவதற்கு உன்னிப்பான மேய்ப்பர்கள் உதவி செய்து, ஆறுதலும் புத்துணர்ச்சியும் அளிக்கலாம்.—யாக். 4:8; சங். 23:3, 4.
6 பலவீனரை மதித்தல்: சிலர் ஒருவேளை புறக்கணிக்கப்பட்டிருந்தால் அவர்களிடமும் இந்த அன்பான உதவி மேய்ப்பர்கள் கரிசனை காட்டுகின்றனர். பெரும்பாலான சபைகளில் பலவீனமானவர்கள், பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்கள், அல்லது வேறு விதங்களில் இயலாதவர்கள் சிலர் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் தங்களது சூழ்நிலைகள் காரணமாக ராஜ்ய செய்தியை பிரசங்கிப்பதில் அதிகமாய் பங்கேற்க முடியாது என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. ஒருவேளை தங்களை பார்க்க வருபவர்கள், பிற நோயாளிகள், பராமரிப்பாளர்கள் ஆகியோரிடமே அப்படிப்பட்டவர்கள் சாட்சி கொடுக்க வாய்ப்பு கிடைக்கலாம். இருந்தாலும், அவர்கள் துளி செய்தாலும் அது மொத்த பிரசங்க வேலைக்கு மதிப்பு வாய்ந்த பங்காகவே கருதப்படுகிறது. (மத். 25:15) அவர்கள் 15 நிமிடங்கள் மட்டுமே சாட்சி கொடுத்தாலும், அதை அறிக்கை செய்ய வேண்டும், அவர்கள் ஒழுங்கான ராஜ்ய பிரஸ்தாபிகளாகவே கருதப்படுவர்.
7 வருடத்தின் இந்த சமயமாகிய நினைவு ஆசரிப்பு காலத்தில், இந்த ‘மனிதரில் வரங்கள்’ விசேஷமாக தங்கள் சகோதரர்களின் ஆவிக்குரிய தேவைகளை அறிந்திருக்கின்றனர். வழி தவறி சென்றிருப்பவர்கள் அனைவரும் சபையின் கனிவான கூட்டுறவு தரும் சந்தோஷத்தையும் மன அமைதியையும் மறுபடியும் அனுபவிக்க உதவுவதில் விசேஷ முயற்சி எடுப்பதற்கு இது எப்பேர்ப்பட்ட பொருத்தமான சமயம்! ‘விசுவாச குடும்பத்தார்களான’ அப்படிப்பட்டவர்கள் சபை கூட்டங்களில் கலந்துகொண்டு, மீட்பின் பலியில் தங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தும் வகையில் வெளி ஊழியத்திற்குச் செல்வதை நாம் பார்க்கையில் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.—கலா. 6:10; லூக். 15:4-7; யோவா. 10:11, 14.