‘உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்’
“உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையைக் கட்டாயத்தினால் இல்லாமல் மனப்பூர்வமாக . . . மேய்த்துவாருங்கள்.”—1 பே. 5:2.
1. பேதுரு தன்னுடைய முதல் கடிதத்தை எழுதியபோது ஏன் சக விசுவாசிகளை உற்சாகப்படுத்த விரும்பினார்?
ரோமாபுரியின் பேரரசனான நீரோ கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த ஆரம்பிப்பதற்குச் சில காலம் முன்பு அப்போஸ்தலன் பேதுரு தன்னுடைய முதல் கடிதத்தை எழுதினார். அவர் தன் சக விசுவாசிகளை உற்சாகப்படுத்த விரும்பினார். ஏனென்றால், அவர்களை விழுங்குவதற்காகப் பிசாசு ‘அலைந்து திரிந்து கொண்டிருந்தான்.’ அவனை எதிர்த்து நிற்க அவர்கள் ‘தெளிந்த புத்தியுடன் இருக்கவும்,’ கடவுளுடைய ‘பலத்த கைக்குள் தங்களைத் தாழ்த்திக்கொள்ளவும்’ வேண்டியிருந்தது. (1 பே. 5:6, 8) அவர்கள் ஒற்றுமையாய் இருக்கவும் வேண்டியிருந்தது. ‘ஒருவரால் ஒருவர் அழிக்கப்படாதிருக்க,’ ‘ஒருவரை ஒருவர் கடித்துக் குதறாமல்’ இருக்க வேண்டியிருந்தது.—கலா. 5:15.
2, 3. நாம் யாருடன் மல்யுத்தம் செய்ய வேண்டும், இந்தத் தொடர் கட்டுரைகளில் நாம் எதையெல்லாம் சிந்திக்கப் போகிறோம்?
2 இதுபோன்ற சூழ்நிலையில்தான் நாமும் இருக்கிறோம். நம்மை விழுங்குவதற்குப் பிசாசு வழிதேடிக் கொண்டிருக்கிறான். (வெளி. 12:12) ‘உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்திராத’ “மிகுந்த உபத்திரவம்” சீக்கிரத்தில் வரவிருக்கிறது. (மத். 24:21) முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களைப் போலவே நாமும் சண்டை சச்சரவுகளுக்கு இடங்கொடுக்காதபடி கவனமாய் இருக்க வேண்டும். இதற்கு, தகுதியான மூப்பர்களின் உதவி நமக்குச் சில சமயங்களில் தேவைப்படுகிறது.
3 மூப்பர்கள் ‘தங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை’ மேய்க்கும் பாக்கியத்திற்கு இன்னும் எப்படி நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம் என்பதை முதலில் கவனிப்போம். (1 பே. 5:2) அதன் பிறகு, அந்தப் பொறுப்பை அவர்கள் எப்படிச் சரிவர செய்யலாம் என்பதைக் குறித்தும் சிந்திப்போம். அடுத்த கட்டுரையில், ‘கடினமாக உழைத்து [சபையை] வழிநடத்துகிறவர்களிடம்’ சபையார் எப்படி ‘மதிப்பு மரியாதையோடு நடந்துகொள்ளலாம்’ என்பதைச் சிந்திப்போம். (1 தெ. 5:12) இதையெல்லாம் சிந்திப்பது, நம்முடைய பரம எதிரியான சாத்தானுடன்தான் நாம் மல்யுத்தம் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அவனை உறுதியோடு எதிர்த்து நிற்க நமக்கு உதவும்.—எபே. 6:12.
கடவுளுடைய மந்தையை மேய்த்துவாருங்கள்
4, 5. மூப்பர்கள் மந்தையை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும்? உதாரணத்துடன் விளக்குங்கள்.
4 முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவ மூப்பர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையைக் கடவுளுடைய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமென பேதுரு உற்சாகப்படுத்தினார். (1 பேதுரு 5:1, 2-ஐ வாசியுங்கள்.) சபையில் பேதுரு தூண்போல் இருந்ததாகக் கருதப்பட்டபோதிலும் மற்ற மூப்பர்களை அவர் மட்டமாக எண்ணிப் பேசவில்லை. மாறாக, சக மூப்பர்களாகக் கருதியே அவர்களுக்குப் புத்தி சொன்னார். (கலா. 2:9) பேதுரு காட்டிய அதே மனநிலையை இன்று ஆளும் குழுவினரும் வெளிக்காட்டுகிறார்கள்; கடவுளுடைய மந்தையை மேய்க்கிற பெரிய பொறுப்பைக் கண்ணும் கருத்துமாய் நிறைவேற்றும்படி சபை மூப்பர்களை அவர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
5 மூப்பர்கள் ‘தங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை’ மேய்க்க வேண்டுமென பேதுரு எழுதினார். மந்தை யெகோவாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உரியது என்பதை அவர்கள் புரிந்துகொள்வது மிகமிக முக்கியமாய் இருந்தது. கடவுளுடைய ஆடுகளைத் தாங்கள் கவனித்துக்கொண்ட விதத்திற்கு மூப்பர்கள் கணக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. உதாரணத்திற்கு, உங்களுடைய நெருங்கிய நண்பர் தன்னுடைய குழந்தைகளை உங்களிடம் விட்டுவிட்டு வெளி ஊருக்குப் போயிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அவர்களுக்கு உணவளித்து அவர்களை நன்கு கவனித்துக்கொள்வீர்கள், அல்லவா? அந்தக் குழந்தைகளில் ஒன்று வியாதிப்பட்டால், அதற்குத் தேவையான மருத்துவ உதவியை உடனே அளிப்பீர்கள், அல்லவா? அதேபோல் சபையிலுள்ள மூப்பர்கள், ‘கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்க்க’ வேண்டும்; “கடவுள் தம் சொந்த மகனுடைய இரத்தத்தால் வாங்கிய சபை அது.” (அப். 20:28) ஆகவே, ஒவ்வொரு ஆடும் கிறிஸ்து இயேசுவின் மதிப்புமிக்க இரத்தத்தால் வாங்கப்பட்டிருப்பதை அவர்கள் மனதில் வைக்க வேண்டும். தாங்கள் கணக்குக் கொடுக்கும் பொறுப்பைப் பெற்றிருப்பதால், மூப்பர்கள் மந்தைக்கு உணவளித்து, அதைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டும்.
6. பூர்வ காலங்களில் ஆடு மேய்ப்பவர்களுக்கு என்னென்ன பொறுப்புகள் இருந்தன?
6 பூர்வ காலங்களில் ஆடு மேய்ப்பவர்களுக்கு என்னென்ன பொறுப்புகள் இருந்தன என்பதைப் பார்க்கலாம். மந்தையைக் கவனிப்பதற்காக அவர்கள் பகல்நேர உஷ்ணத்தையும் இரவுநேர குளிரையும் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது. (ஆதி. 31:40) ஆடுகளுக்காகத் தங்கள் உயிரையும் அவர்கள் பணயம் வைக்க வேண்டியிருந்தது. தாவீது சிறு பையனாக மந்தையை மேய்த்துக்கொண்டிருந்த காலத்தில் சிங்கம், கரடி போன்ற கொடிய விலங்குகளிடமிருந்து தன் ஆடுகளைக் காப்பாற்றினார். அந்த ஒவ்வொன்றையும் பற்றி தாவீதே சொல்லுகையில், “நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன்” என்றார். (1 சா. 17:34, 35) எப்பேர்ப்பட்ட தைரியம்! அந்த விலங்குகளின் வாய்க்கு எவ்வளவு அருகே அவர் போயிருந்திருப்பார்! இருந்தாலும், தன் ஆடுகளை அவர் காப்பாற்றாமல் விடவில்லை.
7. அடையாள அர்த்தத்தில் மூப்பர்கள் எப்படி சாத்தானின் வாயிலிருந்து ஆடுகளைக் காப்பாற்ற முடியும்?
7 சிங்கம் போன்றிருக்கிற பிசாசின் தாக்குதல்களைக் குறித்து இன்று மூப்பர்களும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். அடையாள அர்த்தத்தில் பிசாசின் வாயிலிருந்து ஆடுகளைக் காப்பாற்ற அவர்கள் தைரியமாய்ச் செயல்பட வேண்டும். ஆம், அடையாள அர்த்தத்தில் அந்த மூர்க்க மிருகத்தின் தாடியைப் பிடிப்பதன் மூலம் மூப்பர்கள் ஆடுகளைக் காப்பாற்ற முடியும். சாத்தானுடைய வசீகர வலையில் விழப்போகிற அஜாக்கிரதையான சகோதரர்களுக்கு அவர்கள் அறிவுரை கூறலாம். (யூதா 22, 23-ஐ வாசியுங்கள்.) ஆனால், மூப்பர்கள் அப்படிச் செய்வதற்குக் கண்டிப்பாக யெகோவாவுடைய உதவி தேவை. அவர்கள் காயமடைந்த ஆட்டை மென்மையாகக் கவனிக்கிறார்கள்; கடவுளுடைய வார்த்தையின் இதமான தைலத்தைத் தடவி, கட்டுப்போட்டு, சுகப்படுத்துகிறார்கள்.
8. மந்தை எங்கு வருவதற்கு மூப்பர்கள் உற்சாகப்படுத்துகிறார்கள், எப்படி?
8 பூர்வ காலங்களில் மேய்ப்பர்கள் வேறொரு காரியத்தையும் செய்தார்கள்; அதாவது, புற்களும் தண்ணீரும் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு ஆடுகளை ஓட்டிச் சென்றார்கள். அதேபோல் மூப்பர்கள் ஆடுகளைச் சபைக்கு வழிநடத்திச் செல்கிறார்கள்; ‘ஏற்ற வேளையில் உணவை’ உண்டு ஊட்டத்தைப் பெறுவதற்கு, தவறாமல் கூட்டங்களில் கலந்துகொள்ளும்படி மந்தையை உற்சாகப்படுத்துகிறார்கள். (மத். 24:45) ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டவர்களுக்கு உதவ மூப்பர்கள் கூடுதலான நேரத்தைச் செலவிட வேண்டியிருக்கலாம்; கடவுளுடைய வார்த்தையிலிருந்து ‘ஊட்டத்தை’ பெறும்படி பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கலாம். வழிதவறிச் சென்ற ஆடு மீண்டும் மந்தைக்கு வர முயற்சி செய்கையில் அவர்கள் என்ன செய்ய வேண்டியிருக்கலாம்? அந்த ஆட்டை, அதாவது அந்தச் சகோதரரை, கடுமையாய் நடத்துவதற்கு மாறாக பைபிள் நெறிகளை அவருக்கு மென்மையாக விளக்கி, அவற்றை எப்படிக் கடைப்பிடிப்பதெனக் காட்டலாம்.
9, 10. ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டிருப்பவர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவ வேண்டும்?
9 நீங்கள் வியாதிப்படும்போது எப்படிப்பட்ட மருத்துவரிடம் போக விரும்புவீர்கள்? அடுத்தடுத்து உள்ளவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக, நீங்கள் சொல்வதைச் சரியாகக் காதுகொடுத்துக் கேட்காமல், அரக்கப்பரக்க மருந்து சீட்டை எழுதிக்கொடுக்கும் மருத்துவரிடம் போவீர்களா? அல்லது நீங்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு, எதனால் நீங்கள் வியாதிப்பட்டிருக்கிறீர்கள் என்பதைச் சொல்லி, எப்படிப்பட்ட சிகிச்சைகளைப் பெறலாம் என்பதை விளக்குகிற மருத்துவரிடம் போவீர்களா?
10 அதேபோல், ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டிருக்கிற ஒருவர் சொல்வதை மூப்பர்கள் காதுகொடுத்துக் கேட்க வேண்டும், அவருடைய புண் குணமாக உதவ வேண்டும்; இவ்வாறு அடையாள அர்த்தத்தில், ‘யெகோவாவின் பெயரில் அவருக்கு எண்ணெய் பூச’ வேண்டும். (யாக்கோபு 5:14, 15-ஐ வாசியுங்கள்.) கீலேயாத்தின் பிசின் தைலம்போல், கடவுளுடைய வார்த்தை வியாதிப்பட்டவரின் வேதனையைத் தணிக்கும். (எரே. 8:22; எசே. 34:16) பைபிள் நெறிகளைக் கடைப்பிடிக்க பலவீனமானவர்களுக்கு மூப்பர்கள் உதவும்போது அவர்கள் மீண்டும் பலப்பட்டு யெகோவாவின் சேவையில் நிலைத்துநிற்க முடியும். ஆம், ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டிருப்போரின் கவலைகளை மூப்பர்கள் காதுகொடுத்துக் கேட்கும்போதும், அவர்களுடன் சேர்ந்து ஜெபம் செய்யும்போதும் பெரும் நன்மை செய்கிறார்கள்.
கட்டாயத்தினால் இல்லாமல் மனப்பூர்வமாக
11. கடவுளுடைய மந்தையை மனப்பூர்வமாய் மேய்க்க எது மூப்பர்களைத் தூண்டுகிறது?
11 அடுத்ததாக பேதுரு, மேய்ப்பு வேலையை எப்படிச் செய்ய வேண்டும், எப்படிச் செய்யக் கூடாது என்பதையெல்லாம் மூப்பர்களுக்கு நினைப்பூட்டினார். மூப்பர்கள் தங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை “கட்டாயத்தினால் இல்லாமல் மனப்பூர்வமாக” மேய்க்க வேண்டும். தங்களுடைய சகோதரர்களுக்கு மனப்பூர்வமாய்ச் சேவை செய்ய எது மூப்பர்களைத் தூண்டுகிறது? இயேசுவின் ஆடுகளை மேய்த்து அவற்றுக்கு உணவளிக்க எது பேதுருவைத் தூண்டியது? எஜமானர் மீதிருந்த அன்பும் பாசமுமே. (யோவா. 21:15-17) அன்பின் காரணமாக மூப்பர்கள், ‘இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்கென்று இறந்து உயிர்த்தெழுந்தவருக்காகவே வாழ்கிறார்கள்.’ (2 கொ. 5:14, 15) எஜமானர்மீது அவர்களுக்குள்ள இந்த அன்பு, கடவுள்மீதும் தங்கள் சகோதரர்கள் மீதுமுள்ள அன்போடு கைகோர்க்கும்போது, மந்தைக்குச் சேவை செய்ய அவர்களைத் தூண்டுகிறது; அதற்காக அவர்கள் தங்களுடைய முயற்சி, பொருள் வளம், நேரம் ஆகியவற்றை அர்ப்பணிக்கிறார்கள். (மத். 22:37-39) அவர்கள் வேண்டாவெறுப்போடு அல்ல, மனப்பூர்வமாகத் தங்களையே தியாகம் செய்கிறார்கள்.
12. அப்போஸ்தலன் பவுல் எந்தளவுக்குத் தன்னையே தியாகம் செய்தார்?
12 மூப்பர்கள் எந்தளவுக்குத் தங்களையே தியாகம் செய்ய வேண்டும்? ஆடுகளைப் பராமரிக்கும் விஷயத்தில் அவர்கள் அப்போஸ்தலன் பவுலைப் பின்பற்றுகிறார்கள்; பவுல் இயேசுவைப் பின்பற்றினார். (1 கொ. 11:1) தெசலோனிக்கே சபையிலிருந்த சகோதரர்கள் மீதிருந்த கனிவான பாசத்தினால் பவுலும் அவருடைய தோழர்களும், ‘கடவுளுடைய நற்செய்தியை மட்டுமல்ல, தங்கள் உயிரையே அவர்களுக்காகக் கொடுக்க’ மிகுந்த ஆவலாய் இருந்தார்கள். “பாலூட்டுகிற தாய் தன் குழந்தைகளை நெஞ்சார நேசிப்பதுபோல்” அவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டார்கள். (1 தெ. 2:7, 8) பாலூட்டுகிற தாய் தன் குழந்தைகளிடம் எந்தளவு அன்பு காட்டுவாள் என்பதை பவுல் அறிந்திருந்தார். அவர்களுக்காக அவள் எதையும் செய்வாள், அவர்களுக்குப் பாலூட்ட நடுராத்திரியில் எழுந்திருக்கவும் தயங்க மாட்டாள்.
13. மூப்பர்கள் எதில் சமநிலையோடு இருக்க வேண்டும்?
13 சபைப் பொறுப்புகளோடு குடும்பப் பொறுப்புகளையும் கவனித்துக்கொள்வதில் மூப்பர்கள் சமநிலையோடு இருப்பது அவசியம். (1 தீ. 5:8) தங்கள் குடும்பத்திற்காகச் செலவிட முடிந்த பொன்னான நேரத்தை மூப்பர்கள் சபைக்காகச் செலவிடுகிறார்கள். இந்த இரண்டு பொறுப்புகளையும் சமநிலையோடு கையாளுவதற்கு அவர்கள் மற்றவர்களைத் தங்களுடைய குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்ளும்படி சில சமயங்களில் அழைக்கலாம். ஜப்பானைச் சேர்ந்த மாசானாவோ என்ற மூப்பர் மணமாகாதவர்களையும் சத்தியத்தில் தனியாக இருந்தவர்களையும் தன்னுடைய குடும்பப் படிப்பில் கலந்துகொள்ளும்படி பல வருடங்களாக அழைத்து வந்தார். இப்படி உதவியைப் பெற்ற சிலர் பிற்பாடு மூப்பர்களாக ஆகி, மாசானாவோவின் அருமையான முன்மாதிரியைப் பின்பற்றி வருகிறார்கள்.
கேவலமான ஆதாயத்தைத் தவிருங்கள், கடவுளுடைய மந்தையை ஆர்வமாக மேயுங்கள்
14, 15. “கேவலமான ஆதாயத்திற்காக” சேவை செய்யாதிருக்க மூப்பர்கள் ஏன் கவனமாய் இருக்க வேண்டும், இந்த விஷயத்தில் அவர்கள் எப்படி பவுலைப் பின்பற்றுகிறார்கள்?
14 கடவுளுடைய மந்தையை, ‘கேவலமான ஆதாயத்திற்காக இல்லாமல் ஆர்வமாக மேய்த்துவாருங்கள்’ என்றும் மூப்பர்களை பேதுரு உற்சாகப்படுத்தினார். சபையைக் கவனித்துக்கொள்வதில் மூப்பர்கள் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தாலும் அதற்குச் சம்பளத்தை எதிர்பார்ப்பதில்லை. “கேவலமான ஆதாயத்திற்காக” மந்தையை மேய்க்கும் ஆபத்தைக் குறித்துத் தன் சக மூப்பர்களை எச்சரிப்பதன் அவசியத்தை பேதுரு உணர்ந்தார். இன்று, கேவலமான ஆதாயத்திற்காக சேவை செய்கிற ‘மகா பாபிலோனின்’ மதத் தலைவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள்; அவர்கள் வசமுள்ள மக்களில் அநேகரோ வறுமையில் வாடுகிறார்கள்; இது பேதுருவின் வார்த்தைகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. (வெளி. 18:2, 3) இன்றுள்ள மூப்பர்கள் இந்த ஆபத்தான மனப்போக்கு தங்களைத் தொற்றிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
15 கிறிஸ்தவ மூப்பர்களுக்கு பவுல் அருமையான முன்மாதிரி வைத்தார். அவர் அப்போஸ்தலராக இருந்ததால் தனக்குத் தேவையான எல்லாவற்றையும் தெசலோனிக்கே கிறிஸ்தவர்களே கவனித்துக்கொள்ளும்படி எதிர்பார்த்து அவர்களுக்கு ‘பெரும் சுமையாக இருந்திருக்க’ முடியும்; ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை, “யாரிடமும் இலவசமாய்ச் சாப்பிடவில்லை.” மாறாக, ‘இரவும் பகலும் பாடுபட்டு வேலை செய்தார்.’ (2 தெ. 3:8) இந்த விஷயத்தில் பயணக் கண்காணிகள் உட்பட இன்றுள்ள மூப்பர்களில் பலர் சிறந்த முன்மாதிரி வைக்கிறார்கள். சக ஊழியர்களின் உபசரிப்பை அவர்கள் ஏற்றுக்கொள்கிறபோதிலும், யாருக்கும் அவர்கள் ‘பெரும் சுமையாக இருப்பதில்லை.’—1 தெ. 2:9.
16. மந்தையை “ஆர்வமாக” மேய்ப்பதை மூப்பர்கள் எப்படிக் காட்டுகிறார்கள்?
16 மூப்பர்கள் மந்தையை “ஆர்வமாக” மேய்த்து வருகிறார்கள். இது, மந்தைக்கு உதவுவதில் அவர்கள் காட்டும் தன்னலமற்ற மனப்போக்கிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. என்றாலும், அன்பான மூப்பர்கள் யெகோவாவுக்குச் சேவை செய்யும்படி மந்தையில் உள்ளவர்களை வற்புறுத்துவதில்லை; போட்டி போட்டுக்கொண்டு சேவை செய்யும்படியும் ஊக்குவிப்பதில்லை. (கலா. 5:26) ஒவ்வொரு ஆடும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை மூப்பர்கள் புரிந்திருக்கிறார்கள். யெகோவாவுக்குச் சந்தோஷமாய்ச் சேவை செய்யத் தங்கள் சகோதரர்களுக்கு அவர்கள் ஆர்வமாக உதவுகிறார்கள்.
மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல், முன்மாதிரிகளாக இருங்கள்
17, 18. (அ) மனத்தாழ்மை குறித்து இயேசு கற்பித்தவற்றைப் புரிந்துகொள்வது அப்போஸ்தலர்களுக்கு ஏன் சில சமயங்களில் கஷ்டமாக இருந்தது? (ஆ) அவர்களுடைய உதாரணம் இன்றுள்ளவர்களுக்கு எப்படி எச்சரிக்கையாய் இருக்கிறது?
17 இதுவரை நாம் சிந்தித்த விதமாக, தாங்கள் மேய்க்கிற மந்தை தங்களுடையது அல்ல, கடவுளுடையது என்பதை மூப்பர்கள் மனதில் வைக்க வேண்டும். ‘கடவுளுடைய சொத்தாக இருக்கிற மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாதபடி’ அவர்கள் கவனமாய் இருக்க வேண்டும். (1 பேதுரு 5:3-ஐ வாசியுங்கள்.) சில சமயங்களில், இயேசுவின் அப்போஸ்தலர்கள் தவறான உள்நோக்கத்தைக் கொண்டிருந்தார்கள்; ஆம், உலக ஆட்சியாளர்களைப் போல் உயர்ந்த ஸ்தானத்தை அடைய அவர்கள் விரும்பினார்கள்.—மாற்கு 10:42-45-ஐ வாசியுங்கள்.
18 இன்று, “கண்காணியாவதற்குத் தகுதிபெற முயலுகிற” சகோதரர்கள், எதற்காகத் தாங்கள் தகுதிபெற முயலுகிறார்கள் எனத் தங்களையே கேட்டுக்கொள்வது நல்லது. (1 தீ. 3:1) மூப்பர்களாகச் சேவை செய்துவருகிறவர்கள், ‘அதிகாரத்திற்காக அல்லது முதன்மையான நிலைக்காக சில அப்போஸ்தலர்கள் ஆசைப்பட்டதுபோல் நான் ஆசைப்படுகிறேனா?’ என்று தங்களையே நேர்மையாகக் கேட்டுக்கொள்ள வேண்டும். மற்றவர்கள்மீது அதிகாரம் செலுத்துகிற உலக மனப்பான்மையைத் தவிர்க்க அப்போஸ்தலர்களே கஷ்டப்பட வேண்டியிருந்தது; அப்படியென்றால், இன்றுள்ள மூப்பர்கள் எந்தளவு கடினமாய்ப் பாடுபட வேண்டும்!
19. மந்தையைப் பாதுகாக்க மூப்பர்கள் நடவடிக்கை எடுக்கும்போது என்ன செய்ய முயலுகிறார்கள்?
19 சில சமயங்களில், “கொடிய ஓநாய்” போன்றவர்களிடமிருந்து மந்தையைப் பாதுகாப்பதற்கு மூப்பர்கள் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. (அப். 20:28-30) ‘முழு அதிகாரத்தோடு தொடர்ந்து அறிவுரை கொடு, கடிந்துகொள்’ என்று தீத்துவிடம் பவுல் சொன்னார். (தீத். 2:15) என்றாலும், அப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும்போதுகூட சம்பந்தப்பட்ட நபருக்கு மதிப்புமரியாதை காட்ட மூப்பர்கள் முயலுகிறார்கள். பொதுவாக, கடுமையாய்க் குறைசொல்வதைவிட மென்மையாக எடுத்துச் சொல்வது, ஒருவரது இருதயத்தை எட்டவும் சரியான பாதையில் நடக்க அவரைத் தூண்டவும் அதிக பயனுள்ளதாய் இருப்பதை மூப்பர்கள் புரிந்திருக்கிறார்கள்.
20. மூப்பர்கள் எப்படி கிறிஸ்துவின் அருமையான முன்மாதிரியைப் பின்பற்றலாம்?
20 கிறிஸ்துவின் அருமையான முன்மாதிரி, மந்தையிடம் அன்பு காட்ட மூப்பர்களைத் தூண்டுகிறது. (யோவா. 13:12-15) பிரசங்கிக்கவும் சீடராக்கவும் அவர் எப்படித் தம்முடைய சீடர்களுக்குக் கற்பித்தார் என்பதை வாசிக்கும்போது நம் நெஞ்சம் நெகிழ்கிறது. அவர் காட்டிய மனத்தாழ்மை அவருடைய சீடர்களின் உள்ளத்தைத் தொட்டது; எதையும் ‘மனத்தாழ்மையினால் செய்யவும் மற்றவர்களைத் தங்களைவிட மேலானவர்களாகக் கருதவும்’ அவர்களைத் தூண்டியது. (பிலி. 2:3) அதேபோல், இன்றுள்ள மூப்பர்களும் இயேசுவைப் பின்பற்றத் தூண்டப்படுகிறார்கள்; அதன் மூலம் தாங்களும் ‘மந்தைக்கு மாதிரிகளாக இருக்க’ விரும்புகிறார்கள்.
21. மூப்பர்கள் எதைப் பெறுவார்கள்?
21 பேதுரு மூப்பர்களுக்குப் புத்திமதி அளித்த பிறகு, எதிர்கால வாக்குறுதியைப் பற்றிக் குறிப்பிட்டார். (1 பேதுரு 5:4-ஐ வாசியுங்கள்.) பரலோக நம்பிக்கையுள்ள கண்காணிகள் “வாடாத கிரீடமான மகிமையின் கிரீடத்தை” கிறிஸ்துவுடன் பரலோகத்தில் பெறுவார்கள். ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த மேய்ப்பர்கள், ‘பிரதான மேய்ப்பருடைய’ ஆட்சியின்கீழ் கடவுளுடைய மந்தையை மேய்க்கும் பாக்கியத்தைப் பூமியில் பெறுவார்கள். (யோவா. 10:16) மூப்பர்களுக்குச் சபையார் எந்தெந்த விதங்களில் ஒத்துழைப்புக் கொடுக்கலாம் என்பதை அடுத்த கட்டுரை சிந்திக்கும்.
மறுபார்வைக்கு
• தங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை மேய்க்கும்படி சக மூப்பர்களுக்கு பேதுரு ஏன் புத்தி சொல்ல வேண்டியிருந்தது?
• ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டவர்களுக்கு மூப்பர்கள் எப்படி உதவ வேண்டும்?
• தங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை மேய்க்க எது மூப்பர்களைத் தூண்டுகிறது?
[பக்கம் 21-ன் படம்]
பூர்வ கால மேய்ப்பர்களைப் போல, இன்று மூப்பர்கள் தங்கள் பொறுப்பிலுள்ள ‘ஆடுகளை’ பாதுகாக்க வேண்டும்