யெகோவா நியமித்த மேய்ப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்
“உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்கள் . . . உங்களைக் காத்து வருகிறார்கள்; ஆகவே, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அடிபணிந்து நடங்கள்.”—எபி. 13:17.
1, 2. யெகோவா தம்மை ஏன் ஒரு மேய்ப்பனுக்கு ஒப்பிடுகிறார்?
யெகோவாவை ஒரு மேய்ப்பனுக்கு ஒப்பிட்டு பைபிள் பேசுகிறது. (எசே. 34:11-14) யெகோவா எப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்துகொள்ள இது நமக்குப் பெரிதும் உதவுகிறது. ஓர் அன்பான மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளைப் பொறுப்புடன் பராமரிப்பார், அவற்றின் நலனைக் கவனித்துக்கொள்வார். அவற்றைப் புல்வெளிக்கும் தண்ணீருள்ள இடங்களுக்கும் வழிநடத்துவார். (சங். 23:1, 2) இரவும் பகலும் கண்ணயராமல் காவல் காப்பார். (லூக். 2:8) கொடிய மிருகங்களிடமிருந்து பாதுகாப்பார். (1 சா. 17:34, 35) ஆட்டுக்குட்டிகளைத் தன் நெஞ்சோடு அணைத்து, சுமப்பார். (ஏசா. 40:11) வழிதவறிப் போன ஆடுகளைத் தேடிச் செல்வார், அடிபட்ட ஆடுகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்வார்.—எசே. 34:16.
2 பூர்வ காலத்தில், கடவுளுடைய ஜனங்களில் பெரும்பாலோர் மேய்ப்பர்களாகவும் விவசாயிகளாகவும் இருந்தார்கள். அதனால், யெகோவா தம்மை ஒரு மேய்ப்பனுக்கு ஒப்பிட்டுப் பேசியதை அவர்கள் எளிதில் புரிந்துகொண்டார்கள். ஆடுகள் புஷ்டியாக வளர நல்ல பராமரிப்பும் கவனிப்பும் தேவை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அது போல, மக்களுக்கும் யெகோவாவுடைய கவனிப்பும் வழிநடத்துதலும் தேவை. (மாற். 6:34) இல்லையென்றால், அவர்களின் நிலை பரிதாபமாகிவிடும். அவர்கள் “மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல” சிதறுண்டுபோய், ஆபத்தில் சிக்கிக்கொள்வார்கள். (1 இரா. 22:17) ஆம், யெகோவா எப்போதும் தம்முடைய ஜனங்களின் தேவைகளை அன்போடு கவனித்துக்கொள்கிறார்.
3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி கவனிப்போம்?
3 இன்றும் யெகோவா நமக்கு ஒரு மேய்ப்பராக இருக்கிறார். ஆடுகளைப் போன்ற தம் மக்களின் தேவைகளை நன்கு கவனித்துக்கொள்கிறார். இன்று தம் மக்களை அவர் எப்படி வழிநடத்துகிறார் என்றும் அவர்களுடைய தேவைகளை எப்படிக் கவனித்துக்கொள்கிறார் என்றும் இப்போது பார்க்கலாம். யெகோவாவின் அன்பான வழிநடத்துதலுக்கு நாம் எப்படிக் கீழ்ப்படிய வேண்டும் என்பதையும் கவனிக்கலாம்.
நல்ல மேய்ப்பர் தந்த மற்ற மேய்ப்பர்கள்
4. யெகோவாவின் ஆடுகளை இயேசு எப்படிக் கவனித்துக்கொள்கிறார்?
4 இயேசுவை கிறிஸ்தவ சபையின் தலைவராக யெகோவா நியமித்திருக்கிறார். (எபே. 1:22, 23) ‘நல்ல மேய்ப்பரான’ இயேசு தம்முடைய தந்தையைப் போலவே, தம் ஆடுகளை நேசிக்கிறார், நன்கு கவனித்துக்கொள்கிறார். ‘ஆடுகளுக்காக தம் உயிரையே கொடுத்தார்.’ (யோவா. 10:11, 15) இயேசுவின் இந்த மீட்பு பலி மனிதர்களுக்குக் கிடைத்த ஓர் அரிய பரிசு, அல்லவா? (மத். 20:28) ஆம், ‘தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெற’ வேண்டும் என்பதே யெகோவாவின் நோக்கம்!—யோவா. 3:16.
5, 6. (அ) தம்முடைய மந்தையை மேய்ப்பதற்கு இயேசு என்ன ஏற்பாடு செய்திருக்கிறார், இதிலிருந்து பயனடைய நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) மூப்பர்களுக்கு நாம் மனப்பூர்வமாகக் கீழ்ப்படிவதற்கு முக்கிய காரணம் என்ன?
5 நல்ல மேய்ப்பராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஆடுகள் எப்படிக் கீழ்ப்படிந்து நடக்கின்றன? “என் ஆடுகள் என்னுடைய குரலுக்குச் செவிகொடுக்கின்றன, நான் அவற்றை அறிந்திருக்கிறேன், அவை என்னைப் பின்பற்றி வருகின்றன” என்று இயேசு சொன்னார். (யோவா. 10:27) நல்ல மேய்ப்பனின் குரலுக்குச் செவிகொடுப்பது, அவருடைய வழிநடத்துதலுக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடப்பதைக் குறிக்கிறது. இது, அவர் நியமித்திருக்கும் மற்ற மேய்ப்பர்களுக்குக் கீழ்ப்படிவதையும் அர்த்தப்படுத்துகிறது. முதல் நூற்றாண்டில், இயேசு தம்முடைய மந்தையை மேய்ப்பதற்காக அப்போஸ்தலர்களையும் சீடர்களையும் நியமித்தார். அவர்கள் ‘கற்பிக்கவும்’ ‘இயேசுவின் ஆட்டுக்குட்டிகளுக்கு உணவளிக்கவும்’ வேண்டியிருந்தது. (மத். 28:20; யோவான் 21:15-17-ஐ வாசியுங்கள்.) நற்செய்தி எங்கும் பரவி சீடர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தபோது, சபைகளை வழிநடத்துவதற்கு முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களை இயேசு நியமித்தார்.—எபே. 4:11, 12.
6 எபேசு சபையிலிருந்த கண்காணிகளுக்கு பவுல் எழுதியபோது, “கடவுளுடைய சபையாகிய . . . மந்தையை மேய்ப்பதற்கு” கடவுளுடைய சக்திதான் அவர்களைக் கண்காணிகளாக நியமித்திருக்கிறது என்றார். (அப். 20:28) இன்றும் கிறிஸ்தவ கண்காணிகள் இவ்வாறே நியமிக்கப்படுகிறார்கள். எப்படியென்றால், கடவுளுடைய சக்தியால் ஏவப்பட்ட பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள தகுதிகளின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவ கண்காணிகளுக்குக் கீழ்ப்படியும்போது, மிகப்பெரிய மேய்ப்பர்களான யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் நாம் மதிப்பு காட்டுகிறோம். (லூக். 10:16) நாம் மூப்பர்களுக்கு மனப்பூர்வமாகக் கீழ்ப்படிய இதுவே முக்கிய காரணம். இருந்தாலும், அவர்களுடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து நடக்க மற்ற சில காரணங்களும் இருக்கின்றன.
7. யெகோவாவோடுள்ள நல்ல பந்தத்தைத் தக்கவைத்துக்கொள்ள மூப்பர்கள் எப்படி உதவுகிறார்கள்?
7 சகோதர சகோதரிகளுக்கு பைபிளின் அடிப்படையிலேயே மூப்பர்கள் உற்சாகத்தையும் ஆலோசனையையும் கொடுக்கிறார்கள். அதற்காக, இப்படித்தான் வாழ வேண்டும் என்று அவர்களிடம் கறாராக சொல்வதில்லை. (2 கொ. 1:24) மாறாக, பைபிளின் அடிப்படையில் நல்ல தீர்மானங்கள் எடுக்க அவர்களுக்கு உதவுகிறார்கள். இதன்மூலம், சபையில் ஐக்கியமும் சமாதானமும் நிலவ பங்களிக்கிறார்கள். (1 கொ. 14:33, 40) யெகோவாவோடுள்ள நல்ல பந்தத்தைத் தக்கவைத்துக்கொள்ள சபையார் ஒவ்வொருவருக்கும் உதவுவதன்மூலம் மூப்பர்கள் அவர்களை “காத்து வருகிறார்கள்.” ஒரு சகோதரரோ சகோதரியோ தவறான பாதையில் போவதற்கான அறிகுறிகள் தெரிந்தால் அல்லது ‘ஏதோவொரு தவறைச் செய்துவிட்டால்’ அவர்களுக்கு உடனடியாக உதவி செய்கிறார்கள். (கலா. 6:1, 2; யூ. 22) ‘உங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறவர்களுக்கு’ கீழ்ப்படிய இவையெல்லாம் நல்ல காரணங்கள், அல்லவா?—எபிரெயர் 13:17-ஐ வாசியுங்கள்.
8. கடவுளுடைய மந்தையை மூப்பர்கள் எப்படிப் பாதுகாக்கிறார்கள்?
8 மூப்பர்களுடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய இன்னொரு நல்ல காரணம் இருக்கிறது. அக்கறையுள்ள மேய்ப்பரான அப்போஸ்தலன் பவுல் கொலோசெயர்களுக்கு எழுதிய கடிதத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்ளலாம். அவர் இவ்வாறு எழுதினார்: “தத்துவங்களினாலும் வஞ்சனையான வீண் கருத்துகளினாலும் ஒருவனும் உங்களைக் கவர்ந்துகொண்டு போகாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவை மனித பாரம்பரியங்களையும் இவ்வுலகின் அடிப்படைக் காரியங்களையுமே சார்ந்தவை, கிறிஸ்துவைச் சார்ந்தவை அல்ல.” (கொலோ. 2:8) மூப்பர்கள், விசுவாசத்தைக் குலைத்துப்போடும் வஞ்சகர்களிடமிருந்து சகோதரர்களைப் பாதுகாக்கிறார்கள். ‘போலித் தீர்க்கதரிசிகளும்’ ‘போலிப் போதகர்களும்’ “மனவுறுதி இல்லாத ஆட்களை வசப்படுத்தி” தவறு செய்யத் தூண்டுவார்கள் என்று அப்போஸ்தலன் பேதுரு எச்சரித்தார். (2 பே. 2:1, 14) இன்றைக்கும், தேவையான சமயங்களில் மூப்பர்கள் இதுபோன்ற எச்சரிப்புகளைக் கொடுக்க வேண்டும். முதிர்ச்சியுள்ள இந்தச் சகோதரர்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. அதுமட்டுமல்ல, பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவும் போதிப்பதற்கான தகுதிகளும் இருப்பதை நிரூபித்திருப்பதால்தான் மூப்பர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். (1 தீ. 3:2; தீத். 1:9) இவர்களுக்கு முதிர்ச்சியும் சமநிலையும் பைபிள் அடிப்படையிலான ஞானமும் இருப்பதால் தங்களுடைய மந்தையை நன்கு வழிநடத்துகிறார்கள்.
மேய்ப்பன் மந்தையைப் பாதுகாப்பதுபோல், மூப்பர்கள் சபையைப் பாதுகாக்கிறார்கள் (பாரா 8)
நல்ல மேய்ப்பர் போஷிக்கிறார், பாதுகாக்கிறார்
9. இன்று கிறிஸ்தவ சபையை இயேசு எப்படிப் போஷித்து வழிநடத்துகிறார்?
9 உலகம் முழுவதுமுள்ள சகோதரர்களுக்கு யெகோவா தம்முடைய அமைப்பின் மூலம் ஏராளமான ஆன்மீக உணவை வழங்குகிறார். பைபிள் பிரசுரங்களிலிருந்து நாம் அநேக ஆலோசனைகளைப் பெற்று வருகிறோம். சில சமயங்களில், கடிதங்கள் மூலம் அல்லது பயணக் கண்காணிகள் மூலம் அமைப்பிடமிருந்து மூப்பர்களுக்கு நேரடியான ஆலோசனைகள் கிடைக்கின்றன. இவ்வாறு, சபையார் தெளிவான அறிவுரைகளைப் பெறுகிறார்கள்.
10. சபையிலிருந்து யாராவது வழிவிலகிச் சென்றிருந்தால் மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?
10 கண்காணிகளுக்கு தங்களுடைய மந்தையின் ஆன்மீக நலனைக் காத்துப் பராமரிக்கும் பொறுப்பு இருக்கிறது. முக்கியமாக, ஆன்மீக ரீதியில் வியாதிப்பட்டவர்கள்மீது அல்லது தங்களையே காயப்படுத்திக்கொண்டவர்கள்மீது அவர்கள் ஆழ்ந்த அக்கறை காட்டுகிறார்கள். (யாக்கோபு 5:14, 15-ஐ வாசியுங்கள்.) இவர்களில் சிலர், கிறிஸ்தவ சபையிலிருந்து வழிவிலகிச் சென்று, யெகோவாவைச் சேவிப்பதையே நிறுத்திவிட்டிருக்கலாம். இப்படி வழிவிலகிச் சென்ற ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிக்கவும் மந்தைக்குள் மறுபடியும் கொண்டு வரவும் ஓர் அன்பான மூப்பர் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார், அல்லவா? நிச்சயமாகவே! “இந்தச் சிறியவர்களில் ஒருவர்கூட அழிந்துபோவதை என் பரலோகத் தகப்பன் விரும்புவதில்லை” என்று இயேசு சரியாகவே சொன்னார்!—மத். 18:12-14.
மூப்பர்களின் பலவீனங்களை எப்படிக் கருத வேண்டும்?
11. மூப்பர்களுக்குக் கீழ்ப்படிவது சிலருக்கு ஏன் கடினமாக இருக்கலாம்?
11 யெகோவாவும் இயேசுவும் பரிபூரண மேய்ப்பர்கள். ஆனால், சபையைப் பேணிக் காக்க அவர்கள் நியமித்திருக்கும் மூப்பர்களோ பரிபூரணர் அல்ல. இந்தக் காரணத்தினால் அவர்களுக்குக் கீழ்ப்படிவது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். ஒருவேளை அவர்கள் இப்படிச் சொல்லலாம்: ‘நம்மைப் போல அவர்களும் அபூரண மனிதர்கள்தானே, அவர்கள் சொல்வதை நாம் ஏன் கேட்க வேண்டும்?’ மூப்பர்கள் அபூரணர் என்பது உண்மைதான். இருந்தாலும், அவர்களுடைய பலவீனங்களையும் குறைகளையும் நாம் பூதக்கண்ணாடியால் பார்க்கக்கூடாது.
12, 13. (அ) கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள் செய்த சில தவறுகள் யாவை? (ஆ) யெகோவா ஏன் அவற்றை பைபிளில் பதிவு செய்திருக்கிறார்?
12 பூர்வ காலத்தில் தம் ஜனங்களை வழிநடத்த யெகோவாவால் நியமிக்கப்பட்டவர்கள் சில தவறுகளைச் செய்திருக்கிறார்கள். அதைப் பற்றி பைபிள் ஒளிவுமறைவில்லாமல் சொல்கிறது. உதாரணத்திற்கு, தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக நியமிக்கப்பட்டிருந்தார். பிற்பாடு, கடவுளுக்கு எதிராக பாவம் செய்தார். ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல், அவளுடைய கணவனையும் கொலை செய்தார். (2 சா. 12:7-9) பேதுருவின் உதாரணத்தையும் எடுத்துக்கொள்வோம். கிறிஸ்தவ சபையில் பெரிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இவரும் மோசமான தவறுகளைச் செய்தார். (மத். 16:18, 19; யோவா. 13:38; 18:27; கலா. 2:11-14) இயேசு கிறிஸ்துவைத் தவிர ஆதாம்-ஏவாள் முதற்கொண்டு எல்லோரும் அபூரணர்களே.
13 தாம் நியமித்த மனிதர்களின் தவறுகளை யெகோவா ஏன் பைபிளில் பதிவு செய்திருக்கிறார்? ஒரு காரணம், அபூரண மனிதர்களைப் பயன்படுத்தி தம் ஜனங்களை வழிநடத்த முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே. அப்படிப்பட்டவர்களைக் கொண்டே தம் மக்களை அவர் எப்போதும் வழிநடத்தியிருக்கிறார். ஆகவே, மூப்பர்களுடைய பலவீனங்களைக் காரணங்காட்டி அவர்களுக்கு எதிராக முணுமுணுக்கவோ அவர்களுடைய அதிகாரத்தை அசட்டை செய்யவோ கூடாது. அவர்களுக்கு மதிப்பு காட்டவும் கீழ்ப்படிந்து நடக்கவும் வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார்.—யாத்திராகமம் 16:2, 8-ஐ வாசியுங்கள்.
14, 15. பூர்வ கால மக்களுக்கு யெகோவா அறிவுரைகள் கொடுத்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 இன்று நம்மை வழிநடத்தும் மூப்பர்களுக்கு நாம் கீழ்ப்படிந்து நடப்பது மிகவும் முக்கியம். இக்கட்டான சமயங்களில் தம் பூர்வ கால மக்களுக்கு யெகோவா எப்படி அறிவுரைகளைக் கொடுத்தார் என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது மோசே மற்றும் ஆரோன் மூலமாக யெகோவா அவர்களுக்குக் கட்டளைகளைக் கொடுத்தார். பத்தாவது வாதையிலிருந்து உயிர்தப்ப திட்டவட்டமான சில அறிவுரைகள் கொடுக்கப்பட்டன; அவற்றிற்கு அவர்கள் கவனமாகக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. ஆம், ஒரு விசேஷ உணவைச் சாப்பிட வேண்டியிருந்தது, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் கொஞ்சத்தை வீட்டுவாசலின் நிலைக்கால்களிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டியிருந்தது. இவற்றையெல்லாம் கடவுள் வானத்திலிருந்து நேரடியாக பேசினாரா? இல்லை! கடவுளிடமிருந்து பெற்ற அறிவுரையை மோசே இஸ்ரவேல் மூப்பர்களுக்குத் தெரிவிக்க, அதை அவர்கள் இஸ்ரவேல் மக்களுக்குத் தெரிவித்தார்கள். அந்த அறிவுரைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க வேண்டியிருந்தது. (யாத். 12:1-7, 21-23, 29) தம் மக்களை வழிநடத்துவதற்காக மோசேயையும் மூப்பர்களையும் யெகோவா பயன்படுத்தினார். அதே போல இன்று, கிறிஸ்தவ மூப்பர்களை யெகோவா பயன்படுத்துகிறார்.
15 தம் மக்களுக்கு அறிவுரைகள் வழங்க யெகோவா மனிதர்களை அல்லது தேவதூதர்களைப் பயன்படுத்திய மற்ற தருணங்கள் உங்கள் நினைவுக்கு வரலாம். அந்த அறிவுரைகள், அவர்களுடைய உயிரைக் காத்தன. இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும், யெகோவா தம் பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்; அவர்கள் யெகோவாவின் சார்பில் பேசினார்கள். நெருக்கடியான சமயங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை மக்களுக்குச் சொன்னார்கள். இதே போல, அர்மகெதோன் சமயத்திலும் யெகோவா நமக்கு உதவுவார் என்று எதிர்பார்க்கலாம், அல்லவா? இருந்தாலும், இன்று யெகோவாவையோ அவருடைய அமைப்பையோ பிரதிநிதித்துவம் செய்யும் மூப்பர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு மிஞ்சி எதையும் செய்யாதிருக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
‘ஒரே மேய்ப்பர், ஒரே மந்தை’
16. எந்த ‘வார்த்தைக்கு’ நாம் செவிசாய்க்க வேண்டும்?
16 யெகோவாவின் மக்கள் ‘ஒரே மேய்ப்பரான’ இயேசு கிறிஸ்துவின்கீழ் ‘ஒரே மந்தையாக’ இருக்கிறார்கள். (யோவா. 10:16) “இந்த உலகத்தின் முடிவுகாலம்வரை எல்லா நாட்களிலும்” தம் சீடர்களோடு இருப்பதாக இயேசு சொன்னார். (மத். 28:20) சாத்தானுடைய உலகின் அழிவுக்கு முன் நடக்கவிருக்கும் எல்லாச் சம்பவங்கள்மீதும் பரலோகத்தின் ராஜாவான இயேசுவுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அப்படியானால், கடவுளுடைய அமைப்பில் ஐக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? “வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை” கேட்டு நடக்க வேண்டும். இங்கு “வார்த்தை” என்று சொல்லப்பட்டிருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? பைபிள் மூலமாக யெகோவா கற்றுத் தரும் விஷயங்களையும் நியமிக்கப்பட்ட மூப்பர்கள் மூலமாக யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் சொல்லும் விஷயங்களையும் அர்த்தப்படுத்துகிறது.—ஏசாயா 30:21-ஐயும் வெளிப்படுத்துதல் 3:22-ஐயும் வாசியுங்கள்.
தீங்கிழைக்கும் சகவாசத்திலிருந்து ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களை மூப்பர்கள் பாதுகாக்கிறார்கள் (பாராக்கள் 17, 18)
17, 18. (அ) கடவுளுடைய மக்களுக்கு என்ன ஆபத்து இருக்கிறது, அதிலிருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும்? (ஆ) எந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்?
17 “பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று அலைந்து திரிகிறான்” என்பதாக பைபிள் சொல்கிறது. (1 பே. 5:8) ஆடுகளைப் பாய்ந்து பிடிக்க தயாராயிருக்கும் பசியுள்ள கொடிய மிருகத்தைப் போல, அவன் அஜாக்கிரதையாக இருக்கிறவர்களை அல்லது வழிதவறிச் செல்கிறவர்களை சமயம் பார்த்து தாக்க காத்துக்கொண்டிருக்கிறான். எனவே, சபையோடும் “உயிரைக் காக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும்” இருக்கிறவர்களோடும் நாம் நெருங்கி இருப்பது மிக மிக முக்கியம். (1 பே. 2:25) மிகுந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைப்பவர்களைப் பற்றி வெளிப்படுத்துதல் 7:17 இப்படிச் சொல்கிறது: “ஆட்டுக்குட்டியானவரே [இயேசு] இவர்களை மேய்த்து, வாழ்வளிக்கும் நீரூற்றுகளிடம் வழிநடத்திச் செல்வார். கடவுள் இவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவார்.” இதைவிடச் சிறந்த நம்பிக்கையூட்டும் செய்தி வேறு ஏதாவது இருக்க முடியுமா?
18 சபையை மேய்க்கும் கிறிஸ்தவ கண்காணிகளுடைய முக்கியமான பொறுப்புகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்த்தோம். ஆனால் இயேசுவின் மந்தையைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ள இவர்கள் என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கான பதிலை அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.