“நற்கிரியைகளில் ஐசுவரியவான்” ஆகுங்கள்
1 அப்போஸ்தலன் பவுல் வைராக்கியமாக ஊழியம் செய்து வந்த வருடங்களின் கடைசிப்பகுதியில், தீமோத்தேயுவுடனும் தீத்துவுடனும் நெருக்கமாக உழைத்தார். இருவருக்குமே ஒரே மாதிரியான உற்சாக வார்த்தைகளை எழுதினார். “தேவனிடத்தில் விசுவாசமானவர்கள்,” ‘நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்க [“நற்செயல்களை காத்துக்கொள்வதில் கவனம் செலுத்த,” NW]’ வேண்டுமென்று தீத்துவுக்கு சொன்னார். (தீத். 3:8) கடவுளில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” வேண்டுமென்று தீமோத்தேயுவுக்கு சொன்னார். (1 தீ. 6:17, 18) இது நம் எல்லாருக்குமே மிகச் சிறந்த புத்திமதி! ஆனால் நம் வாழ்வில் நற்செயல்களைச் செய்ய எது நம்மை தூண்டும்? வரவிருக்கும் நாட்களில் குறிப்பிட்ட என்னென்ன செயல்களை நாம் செய்யலாம்?
2 நற்செயல்களில் ஐசுவரியவான்களாவதற்கு, யெகோவாவின் மீதுள்ள நம்பிக்கை, அன்பு ஆகியவற்றிலிருந்தும், அவர் நமக்கு அளித்திருக்கும் அருமையான எதிர்பார்ப்பிலிருந்தும் தூண்டுதல் கிடைக்கிறது. (1 தீ. 6:19; தீத். 2:11) முக்கியமாக, வருடத்தின் இந்த காலப் பகுதியில், யெகோவா தம் குமாரனை பூமிக்கு அனுப்பியதையும், அக்குமாரன் பிதாவின் மீதிருந்த குற்றச்சாட்டை பொய்யென நியாய நிரூபணம் செய்து, தகுதிபெற்ற மனிதர் அனைவருக்கும் நித்திய ஜீவனுக்கான வழியை திறந்து வைத்ததையும் நினைவுகூருகிறோம். (மத். 20:28; யோவா. 3:16) கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு மார்ச் 28 அன்று அனுசரிக்கப்படுகையில் இது இன்னும் தெளிவாகும். நாம் பெற்றிருக்கும் நித்திய ஜீவ நம்பிக்கைக்கு கைமாறாக ‘நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகும்படி’ நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு நாம் தூண்டப்படவில்லையா? நாம் உண்மையிலேயே தூண்டப்படுகிறோம்! இப்போது நாம் என்னென்ன செயல்களை செய்யலாம்?
3 மார்ச்சிலும் அதற்குப் பிறகும் செய்வதற்கான நற்செயல்கள்: நிச்சயமாகவே நாம் நினைவு ஆசரிப்பில்—உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகள் ஆசரிக்கும் வருடத்தின் மிக முக்கியமான நிகழ்ச்சியில்—கலந்து கொள்வோம். (லூக். 22:19) ஆனால் அந்நிகழ்ச்சியில் நமக்குக் கிடைக்கும் சந்தோஷத்தை எத்தனை பேரோடு முடியுமோ அத்தனை பேரோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். வருடாந்தர புத்தகம் 2002-ல் (ஆங்கிலம்) காணப்படும் ஊழிய அறிக்கையை சற்று பாருங்கள்; கடந்த வருடம் உலகெங்கும் பல இடங்களில், நினைவு ஆசரிப்பில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையைவிட மூன்று, நான்கு, ஐந்து அல்லது அதற்கும் அதிக மடங்கு உயர்ந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். நினைவு ஆசரிப்புக்கான அழைப்பிதழ்களை தங்கள் பிராந்தியம் முழுவதிலும் பரந்தளவில் விநியோகிப்பதற்காக சபைகளிலுள்ள அனைவருமே கடினமாக உழைத்தனர் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, இப்பொழுது முதல் மார்ச் 28 வரை நினைவு ஆசரிப்புக்கு மக்களை அழைப்பதில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரத்தை நாம் செலவிட வேண்டும்; இவ்வாறு இரட்சிப்பின் நம்பிக்கை பற்றி கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவ வேண்டும்.
4 ஏப்ரல் மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை காலம் என்பதால் பிள்ளைகளும் பெற்றோரும் சாவகாசமாக இருப்பார்கள்; அவர்களுக்கு அதிக நேரமும் கிடைக்கும். “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” இருப்பதற்கு இந்த வாய்ப்புகளை சாதகமாக நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? “நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாக” இருந்து, நற்செய்தியை பிரசங்கிக்கும் வேலையில் தொடர்ந்து உற்சாகமாக பங்கேற்பதன் மூலமே. (தீத். 2:14; மத். 24:14) மார்ச் மாதத்தில் உங்களால் துணைப் பயனியர் சேவை செய்ய முடியாமல் போயிருந்தால், ஏப்ரல் மற்றும்/அல்லது மே மாதத்தில் செய்ய முடியுமா? மார்ச் மாதத்தில் பயனியர் சேவை செய்கிறீர்களென்றால், தொடர்ந்து உங்களால் செய்ய முடியுமா?
5 வேலை பார்க்கும் சிலர், வேலைக்குப் போவதற்கு முன்பு தெருக்களில் சாட்சி கொடுத்தல், அல்லது அதிகாலையிலேயே திறந்துவிடும் கடைகளில் உள்ளவர்களை சந்தித்துப் பேசுதல் என ஊழியத்தில் சுமார் ஒரு மணிநேரம் செலவிட முடிவதைக் காண்கின்றனர். மற்றவர்கள் தங்கள் மதிய இடைவேளையில் கொஞ்ச நேரத்தை சாட்சி கொடுக்க ஒதுக்குகின்றனர். அந்த நேரத்தில் சக பணியாளர் ஒருவருடன் பைபிள் படிப்பை நடத்துகின்றனர். பள்ளிகள் திறந்திருக்கும்போதே, குடும்பப் பெண்களாய் இருக்கும் அநேக சகோதரிகள் வெளி ஊழியத்திற்கென நேரத்தை ஒதுக்க முடிந்திருக்கிறது; எனவே பள்ளி விடுமுறையின்போது இன்னும் அதிகமாகவே செய்வர். சில நாட்களில் சீக்கிரமாகவே எழுந்து வீட்டு வேலைகளைச் செய்துவிடுவதன் மூலம், பகல் வேளையில் பிரசங்கிக்கவும் கற்பிக்கவும் நேரத்தை அதிகமாக செலவிட அவர்களால் முடிந்திருக்கிறது.—எபே. 5:15, 16.
6 உங்களால் துணைப் பயனியர் ஊழியம் செய்ய முடியாவிட்டாலும், ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுவதற்கு தனிப்பட்ட வகையில் திட்டமிடலாம்; இவ்வாறு, ‘நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களாகவும்,’ சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதில் “உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்” உங்களால் முடிந்ததைச் செய்யலாம்.—1 தீ. 6:18.
7 சீஷராக்கும் நற்செயலை செய்வது நினைவிருக்கட்டும்: ஒவ்வொரு வருடமும் நினைவு ஆசரிப்பில் ஆர்வமுடையவர்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு கூட்டத்திற்கு மட்டும் வந்து, ஆனால் யாருடனும் பைபிள் படிக்காதவர்களிடம் சபையிலுள்ள சிலர் கவனம் செலுத்த முடியுமா? அவர்களுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவும் நோக்கத்துடன் மறுசந்திப்புகள் செய்ய முடியுமா? இவ்வாறு நினைவு ஆசரிப்புக்கு வருபவர்கள் சாட்சிகளின் உறவினர்களாக இருக்கலாம். மற்றவர்களோ, ஒரு காலத்தில் பைபிள் படித்தவர்களாக இருக்கலாம்; அப்படிப்பட்டவர்கள், மறுபடியும் பைபிள் படிப்பதற்கும் தவறாமல் கூட்டங்களுக்கு வருவதற்கும் சிறிது உற்சாகம் மட்டுமே தேவைப்படலாம். அவர்களும் நம்மோடு சேர்ந்து யெகோவாவுக்கு மும்முரமாக ஊழியம் செய்பவர்களாக ஆவதைக் காண்பது நமக்கு எத்தனை சந்தோஷமளிக்கும்!
8 மார்ச்சிலும் அதற்குப் பிறகும் ஊழியத்தில் இன்னும் அதிகமாக பங்கெடுத்தால், மீண்டும் சந்திக்க வேண்டிய அளவுக்கு ஆர்வமுள்ள அநேகரை நாம் கண்டுபிடிக்க வாய்ப்புண்டு. அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டுவிட்டு வர முயலுங்கள். அதற்கான பதிலை அடுத்த முறை வந்து சொல்வதாக உறுதியளியுங்கள். இவ்வாறு நாம் செய்கையில், அது மறுசந்திப்புக்கு எளிதில் வழி திறக்கும். எந்தளவுக்கு சீக்கிரம் மறுசந்திப்பு செய்கிறோமோ அந்தளவுக்கு நல்லது. நம்மால் முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை துவங்க முடியாவிட்டால், அடுத்த சந்திப்பிலாவது அதற்கு முயல வேண்டும்.
9 தெரு ஊழியத்தில் ஈடுபடுகையில், ஜனங்களுடன் எப்படியாவது உரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும் என்ற உணர்வுடன் இருப்பது அவசியம். இவ்வாறு தெரு ஊழியத்தில் ஈடுபட்ட அநேக பிரஸ்தாபிகளுக்கு அக்கறை காண்பித்தவர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள் கிடைத்திருக்கின்றன. தெருவில் சந்தித்த நபர் உங்கள் பிராந்தியத்தில் வசிக்காவிட்டால், வேறொருவர் போய் சந்திக்க வழிசெய்யும் ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) என்ற படிவத்தை ராஜ்ய மன்றத்தில் பெற்று, அதை பூர்த்தி செய்து சபை செயலரிடம் கொடுங்கள்; அவர் அதை அந்த நபர் வசிக்கும் பிராந்தியத்திலுள்ள சபைக்கு அனுப்பி வைப்பார். எந்தச் சபைக்கு அனுப்புவது என செயலருக்குத் தெரியாவிட்டால் அதை அவர் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார். இவ்வாறு, ஆர்வம் காட்டியவருக்கு உதவி அளிக்கப்படலாம்.
10 முகவரி கிடைக்காமல், தொலைபேசி எண் மட்டும் கிடைத்தால், ஃபோன் மூலமாகவே மறுசந்திப்பு செய்யுங்கள். நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தயாரியுங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை பக்கத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள். ஃபோனில் ஆட்களுடன் படிப்பு நடத்துவதில் சிலர் நன்கு வெற்றி கண்டிருக்கின்றனர்; அதில் வீட்டில் சந்திக்க முடியாதவர்களும் அடங்குவர். ஒரு சகோதரி வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது ஆர்வம் காட்டிய பெண்களிடம் தொலைபேசி எண்களைக் கேட்டு வாங்கத் தொடங்கினார்; அதன் பயனாக இரண்டு பைபிள் படிப்புகளை அவரால் தொடங்க முடிந்தது.
11 செயலற்றவர்களுக்கு உதவ மூப்பர்களுடன் ஒத்துழையுங்கள்: இவர்கள்மீது அன்புடன் கவனம் செலுத்துவதில் மூப்பர்களுக்கு மிகுந்த ஆர்வமுண்டு. அப்படிப்பட்டவர்களில் பலர் தாங்களாகவே சபை கூட்டங்களுக்கு மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர். சங்கீதம் 91-ல் விவரிக்கப்பட்டிருக்கும் ஆவிக்குரிய பாதுகாப்பைப் பெறுவதற்காக யெகோவாவின் அமைப்போடு நெருங்கிய தொடர்பை வைத்துக்கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை அவர்கள் உணருகின்றனர். அப்படிப்பட்டவர்களில் சிலர் மீண்டும் வெளி ஊழியத்தில் பங்கெடுக்க இப்போது தயாராக உள்ளனர். இந்த மாதம் நினைவு ஆசரிப்பில் செயலற்றவர்களாய் இருக்கும் யாராவது கலந்துகொண்டால், அவர்கள் மீண்டும் பைபிளை படிக்க விரும்பலாம். அப்படிப்பட்ட உதவியை விரும்புவோருடன் சேர்ந்து படிக்க எவரையாவது மூப்பர்கள் ஏற்பாடு செய்வார்கள். இவ்வாறு உதவும்படி உங்களை கேட்டுக்கொண்டால், உங்கள் ஒத்துழைப்பு பெரிதும் போற்றப்படும்.—ரோ. 15:1, 2.
12 ‘நற்செயல்களை காத்துக்கொள்வதில்’ கவனமாக இருங்கள்: துணைப் பயனியராக ஒரு மாதமோ அதற்கும் அதிகமாகவோ ஊழியம் செய்திருக்கும் அநேகர், அடுத்தடுத்த மாதங்களிலும் அதிகளவு வெளி ஊழியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆர்வம் காட்டியவர்களை சந்தித்ததால் அவர்களை மறுபடியும் சந்திக்க வேண்டும் என்று உணர்ந்தனர். இது, ஆர்வம் காட்டியவர்களை மறுபடியும் சந்திப்பதற்காக வெளி ஊழியத்தில் அடிக்கடி கலந்துகொள்ள முயற்சி செய்ய தூண்டியுள்ளது. சிலர் பைபிள் படிப்புகளை ஆரம்பித்தனர்; அது, ஊழியத்தில் இன்னும் அதிகமாக பங்கெடுக்க உதவியது.
13 இன்னும் சிலர், பிரசங்கித்து சீஷராக்கும் வேலையில் அதிகமாய் பங்கேற்று பெருமளவு சந்தோஷத்தை அனுபவித்ததால் தாங்கள் எவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை பரிசீலனை செய்யுமளவுக்கு தூண்டப்பட்டனர். அதன் பலனாக, தாங்கள் பார்த்து வந்த வேலையை குறைத்துக்கொண்டு தொடர்ந்து துணைப் பயனியராக சேவிக்க சிலருக்கு முடிந்திருக்கிறது. மற்றவர்கள் ஒழுங்கான பயனியர் சேவையை துவங்க முடிந்திருக்கிறது. அவர்கள் தங்கள் நம்பிக்கையை உலக காரியங்கள் மீது வைக்காமல், கடவுளின் மீதே முழுவதுமாக வைக்க முடிந்திருக்கிறது. ‘தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், பகிர்ந்து கொள்ள மனமுள்ளவர்களுமாய்’ இருப்பது, யெகோவாவிடமிருந்து அளவற்ற ஆசீர்வாதங்களை பெற்றுத் தந்திருப்பதையும், ‘மெய்யான வாழ்க்கையை’ அனுபவிக்கும் நம்பிக்கையை பலப்படுத்தியிருப்பதையும் அவர்கள் கண்டிருக்கின்றனர். (1 தீ. 6:18, 19, NW) அதிகமதிகமானோர் பயனியர் சேவை செய்ய தொடங்குகையில் சபை முழுவதுமே பயனடைகிறது. பயனியர்கள் தங்கள் அனுபவங்களை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் மனம் படைத்தவர்கள்; தங்களோடு ஊழியத்தில் கலந்துகொள்ள பிறரை அழைப்பவர்கள்; இதனால் சபையில் ஒரு சிறந்த ஆவிக்குரிய சூழல் நிலவும்.
14 இந்த நினைவு ஆசரிப்பு காலத்திலும் அதற்குப் பிறகும் கிறிஸ்தவ ஊழியத்தில் அதிகமாய் பங்கெடுப்பதன் மூலம் நாம் அனைவருமே “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” இருப்போமாக. நீதி வாசமாயிருக்கும் ஒரு புதிய பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையை அளிக்க யெகோவா செய்திருக்கும் காரியங்களுக்கு நம் நன்றியை காட்டுவோமாக.—2 பே. 3:13.