‘யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்’
1 பிப்ரவரி, மார்ச் 2002 தேதியிட்ட நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கைகளில், “தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்து,” “‘நற்கிரியைகளில் ஐசுவரியவான்’ ஆகுங்கள்” எனும் தலைப்புகள் கலந்தாலோசிக்கப்பட்டிருந்தன. (கொலோ. 1:25; 1 தீ. 6:18) அந்தப் பிரதிகளில், நினைவு ஆசரிப்பில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு உதவுவதற்கும், செயலற்றுப் போனவர்கள் மீண்டும் சபை காரியங்களில் பங்கெடுப்பதற்கும், நம்முடைய பிள்ளைகளும் தகுதி பெற்ற பைபிள் மாணாக்கர்களும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும் உதவுவதற்கு அதிக முயற்சி எடுக்கும்படி நாம் உற்சாகப்படுத்தப்பட்டோம். ஊக்கமாக முயன்றதால் நாம் ஓரளவு வெற்றி பெற்றோம் என்பதில் சந்தேகமில்லை. இப்போதோ, “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், . . . [தொடர்ந்து] நன்மை செய்யக்கடவோம்.”—கலா. 6:10.
2 மீண்டும் வரும்படி அழையுங்கள்: இந்திய கிளை அலுவலகத்தின் கீழுள்ள பிராந்தியத்தில், கடந்த வருடம் நினைவு ஆசரிப்பிற்கு வந்திருந்தவர்களில் முப்பதாயிரத்திற்கும் அதிகமானோர் நற்செய்தியை அறிவிக்கும் பிரஸ்தாபிகள் அல்ல. அவர்கள் வந்திருந்ததே ஓரளவு ஆர்வம் இருப்பதை காட்டியதால், “நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள்” ‘விசுவாசிகள்’ ஆகும்படி தூண்டுவிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? (அப். 13:48) எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் கூட்டங்களுக்கு தொடர்ந்து வரும்படி அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
3 சபை புத்தகப் படிப்பில் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் உற்சாகமிக்க கலந்தாலோசிப்பை அந்த ஆர்வம் காட்டியவரும் அனுபவிப்பதற்காக ஏன் அழைக்கக்கூடாது? அவர் உங்களுக்கு உறவினராக அல்லது பரிச்சயமானவராக இருந்தால், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பேச்சு கொடுக்கும் வாய்ப்பு அடுத்து உங்களுக்குக் கிடைக்கையில் அதைக் கேட்பதற்கு வரும்படி அவரை அழைக்கலாம். வரவிருக்கும் வாரங்களில் கொடுக்கப்படவிருக்கும் பொதுப் பேச்சுக்களின் தலைப்புகளை அவரிடம் முன்னதாகவே சொல்லி வைக்கலாம். (அறிவிப்பு பலகையில் சமீபத்திய அட்டவணை போடப்பட்டிருக்க வேண்டும்.) யெகோவாவை வணங்கும் ஆசையை அந்த நபரில் தட்டியெழுப்ப கிடைக்கும் எந்த வாய்ப்புக்காகவும் காத்திருங்கள். சபையில் யாரும் அவருக்குப் பைபிள் படிப்பு நடத்தாவிட்டால் அவருக்கு படிப்பு நடத்த நீங்கள் முன்வரலாம்.
4 செயலற்றுப் போனவர்களைத் தொடர்ந்து உற்சாகப்படுத்துங்கள்: நினைவு ஆசரிப்பிற்கு வந்திருந்தவர்களில் சிலர் ஏற்கெனவே யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள். எனினும், ஏதோவொரு கட்டத்தில் நற்செய்தியை ஆர்வத்தோடு பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டார்கள். எனினும், “விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்”யும்படி பவுல் நமக்குப் புத்திமதி சொன்னார். (கலா. 6:10) ஆகவே செயலற்றுப் போனவர்களுக்கு முக்கிய கவனம் செலுத்துவது அவசியம்.
5 அவர்களில் சிலர் மீண்டும் ஊழியத்தில் பங்குகொள்ளும்படி மூப்பர்களும் மற்றவர்களும் கொடுத்த உற்சாகமூட்டுதலை ஏற்று அதற்கேற்ப நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். மீண்டும் செயல்பட துவங்கிய பிரஸ்தாபியுடன் ஊழியம் செய்ய மூப்பர்கள் உங்களை நியமித்திருந்தால் யெகோவாவிடமும் வெளி ஊழியத்திடமும் உங்களுக்குள்ள அன்பு அந்த நபருடைய நம்பிக்கையை பலப்படுத்தும் என்பதை அறிந்திருங்கள். அவரும் ஊழியத்தின் சந்தோஷத்தை அனுபவிக்கவும், பிரசங்க ஊழியத்தைத் தொடரவும், யெகோவாவின் ஆசீர்வாதங்களை அனுபவிக்கவும் உதவியாக ஊழியத்தின் பல்வேறு அம்சங்களில் நீங்கள் பங்குகொள்ளும் விதத்தை அவருக்கு சொல்லிக் கொடுங்கள்.
6 புதிய பிரஸ்தாபிகள் நல்ல விதத்தில் ஊழியத்தைத் துவங்க உதவுங்கள்: புதிதாக ஆர்வம் காட்டிய பெண்மணி ஒருவர், கடவுளுடைய உண்மையான அமைப்பைக் கண்டுபிடித்துவிட்டதாக புரிந்துகொண்டபோது உடனடியாக ஊழியத்துக்கு செல்ல விரும்பினார். அதற்கு அவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அறிந்துகொண்ட போது “உடனடியாக நான் ஊழியத்துக்குத் தயாராக வேண்டும்” என்றார். உங்களிடம் பைபிள் படிப்பவர் இப்போது வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுகையில் ‘உடனடியாக ஊழியத்தைத் தொடங்குவதன்’ அவசியத்தைப் புரிந்துகொள்ள உதவுங்கள்; இது புதிய பிரஸ்தாபி நல்ல விதத்தில் ஊழியத்தைத் துவங்க வழிசெய்யும். ஊழியத்துக்காக ஒவ்வொரு வாரமும் தவறாமல் தயாரித்து, அதில் பங்குகொள்ளும் பழக்கத்தை அவர் வளர்த்துக்கொள்ள உதவுங்கள்.
7 உங்களுடைய பிள்ளை முழுக்காட்டப்படாத புதிய பிரஸ்தாபியாக ஆகியிருக்கையில் அவன் வயதுக்கும் திறமைக்கும் ஏற்ப முன்னேற்றம் செய்வதற்கு அவனுடன் சேர்ந்து ஊழியம் செய்யுங்கள். கொஞ்சம் கைகொடுத்து தூக்கிவிட்டால் போதும், அவன் அருமையாக மற்றவருடன் ஊழியத்தில் உரையாடுவதையும், பைபிளிலிருந்து வாசித்துக் காட்டுவதையும், பிரசுரத்தை அளிப்பதையும் கண்டு நீங்களே அசந்துவிடுவீர்கள். செவிசாய்ப்பவரை அவன் ஊழியத்தில் சந்திக்கையில் மறுசந்திப்பு செய்யவும், தொடர்ந்து அவருடைய அக்கறையை வளர்க்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.
8 உங்கள் ஊழியத்தை விரிவுபடுத்துங்கள்: நினைவு ஆசரிப்புக்குப் பின்பும் ஊழியத்தில் அதிகளவு பங்குகொள்ள உங்கள் சூழ்நிலை அனுமதிக்கிறதா? ஒவ்வொரு வாரமும் ஊழியத்தில் நீங்கள் பொதுவாக செலவழிக்கும் நேரத்தைவிட ஓரிரு மணிநேரம் அதிகமாக செலவிட முடியுமா? வரவிருக்கும் மாதங்களில் மீண்டும் துணைப்பயனியர் ஊழியம் செய்யும் சமயத்தை நீங்கள் எதிர்நோக்கி இருக்கிறீர்களா? அல்லது முழுநேர ஊழியத்தில் பங்குகொள்ளும்படி உங்கள் வாழ்க்கையில் மாற்றம் செய்ய முடியுமா? ஊழியத்தின் சார்பாக நாம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கையில் யாரேனும் ஒருவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது! (அப். 8:26-39) வரவிருக்கும் நாட்களில் ‘நமக்கும் மற்ற யாவருக்கும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுவோமாக.’—1 தெ. 5:15.
[பக்கம் 3-ன் பெட்டி]
தொடர்ந்து உதவுங்கள்:
□✔ நினைவு ஆசரிப்புக்கு வந்தவர்களுக்கு
□✔ மீண்டும் செயல்பட தொடங்கிய பிரஸ்தாபிகளுக்கு
□✔ முழுக்காட்டப்படாத புதிய பிரஸ்தாபிகளுக்கு