தகுந்த உடை தேவபக்தியை காட்டுகிறது
1 “தேவனை மகிமைப்படுத்துங்கள்” 2003 மாவட்ட மாநாட்டில் யெகோவாவின் விருந்தினர்களாக கலந்துகொள்ளும் சிலாக்கியம் சீக்கிரத்தில் நமக்கு கிடைக்கப் போகிறது. இப்படியொரு கொழுமையான ஆவிக்குரிய விருந்திற்கு அவர் நம்மை அழைத்ததற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்! உடை உடுத்துவதிலும் அலங்காரம் செய்வதிலும் அவருக்கு பயபக்தியை காண்பிப்பதோடு அவர் செய்திருக்கும் ஆன்மீக ஏற்பாடுகளுக்காக போற்றுதலையும் காட்டலாம்.—சங். 116:12, 17.
2 சுத்தமும் ஒழுங்கும்: நம்முடைய தோற்றம், சுத்தமும் ஒழுங்கும் உள்ள நம் கடவுளுடைய தராதரங்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும். (1 கொ. 14:33; 2 கொ. 7:1) உடல், முடி, நகங்கள் இவையெல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும்; அதோடு, நம் தோற்றம் நேர்த்தியாகவும் இருக்க வேண்டும். ஏனோதானோவென்று தோற்றமளிப்பவர்களை பார்ப்பது இன்று சகஜம். ஒரு சினிமா நட்சத்திரமோ விளையாட்டு ஹீரோவோ பார்ப்பதற்கு அலங்கோலமாக இருக்கிறான் என்பதற்காக ஒரு கிறிஸ்தவனும் அதேமாதிரி இருக்க வேண்டுமென்பதில்லை. பிரபல ஃபாஷன்களை நாமும் பின்பற்றினால், உண்மைக் கடவுளை சேவிக்கிறவர்கள் யார், சேவிக்காதவர்கள் யார் என்ற வித்தியாசத்தை கண்டுபிடிப்பதே ஜனங்களுக்கு சிரமமாகி விடலாம்.—மல். 3:18.
3 கிறிஸ்தவ ஊழியர்களுக்கு ஏற்ற உடை: கிறிஸ்தவ கண்காணியான தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதுகையில், ‘ஸ்திரீகள் . . . தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், [“அடக்கத்தினாலும்,” NW] தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்’ என்று உற்சாகப்படுத்தினார். (1 தீ. 2:9, 10) நம்முடைய உடைகள் தகுதியானதாக இருக்க வேண்டுமென்றால் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடைகள் நேர்த்தியாகவும், சுத்தமாகவும் அடக்க ஒடுக்கமாகவும் இருக்க வேண்டும். ஜிகுஜிகு என கண்ணைப் பறிப்பது போலவோ உணர்ச்சிகளை தூண்டுவதாகவோ, அதாவது காம உணர்வுகளை தூண்டுவதாகவோ இருக்கக் கூடாது.—1 பே. 3:3.
4 “மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது” மிதமிஞ்சி அலங்கரித்துக் கொள்வதைக் குறித்து பவுல் எச்சரித்தார். (1 தீ. 2:9) நகைநட்டுகள், மேக்கப் போன்ற அலங்காரங்களில் கிறிஸ்தவ பெண்கள் சமநிலையை காத்துக்கொள்வது ஞானமானது.—நீதி. 11:2.
5 பவுல் கொடுத்த ஆலோசனை கிறிஸ்தவ பெண்களுக்கு மட்டுமல்ல; இதன் நியமம் கிறிஸ்தவ ஆண்களுக்கும் பொருந்தும். சகோதரர்கள் இவ்வுலகத்தின் சிந்தனையை பிரதிபலிக்கும் பாணிகளை அறவே தவிர்க்க வேண்டும். (1 யோ. 2:16) உதாரணத்திற்கு, சில நாடுகளில் தொளதொள என தொங்கும் பெரிய சைஸ் உடைகள் பிரபலமாக உள்ளன; ஆனால், கடவுளுடைய ஊழியருக்கு இத்தகைய உடைகள் பொருத்தமற்றவை.
6 நிகழ்ச்சிநிரலுக்கு பிறகு: நிகழ்ச்சியின்போது, பெரும்பாலான சகோதர சகோதரிகள் உடை உடுத்துவதிலும், தங்கள் தோற்றத்திலும் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்கள். என்றாலும், மாநாட்டுக்கு போய் வரும்போது அல்லது அந்நாளின் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஏதேனும் பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது சிலர் தங்கள் உடையை குறித்து அசட்டையாக இருக்கிறார்கள் என அறிக்கைகள் காண்பிக்கின்றன. உண்மையில், நம்முடைய தனிப்பட்ட தோற்றம்—நிகழ்ச்சி நடக்கும்போதோ மற்ற நேரத்தின்போதோ—கடவுளுடைய ஜனங்கள்மீது மற்றவர்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை பாதிக்கிறது. நாம் மாநாட்டு பேட்ஜ் கார்டை அணிந்திருப்பதால், எப்போதுமே கிறிஸ்தவ ஊழியர்களுக்கு ஏற்ற உடைகளை உடுத்தியிருக்க வேண்டும். இதனால் பெரும்பாலும், மற்றவர்கள் நம்மை பாராட்டுவதற்கு தூண்டப்படுவார்கள், அதோடு சாட்சி கொடுப்பதற்கும் அது வழி திறக்கும்.—1 கொ. 10:31-33.
7 சிநேகப்பான்மையான ஒரு புன்சிரிப்பு எப்படி நம் முகத்திற்கு களை சேர்க்கிறதோ அதேபோல தகுதியான உடையும் அலங்காரமும் நம் செய்தியையும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பையும் கௌரவிக்கும். இந்த வருடம் நடைபெறவிருக்கும் “தேவனை மகிமைப்படுத்துங்கள்” மாவட்ட மாநாடுகளின்போது நம்மை கவனிக்கும் சிலர் நாம் ஏன் வித்தியாசப்பட்டவர்களாக இருக்கிறோம் என்று கேட்பதற்கு தூண்டப்படலாம், காலப்போக்கில் அவர்கள் இவ்வாறு சொல்லலாம்: “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்.” (சக. 8:23) ஆகவே, நம் உடையிலும் தோற்றத்திலும் நாம் ஒவ்வொருவரும் யெகோவாவுக்கு தேவபக்தியை காட்டுவோமாக.
[கேள்விகள்]
1. சீக்கிரத்தில் வரவிருக்கும் மாவட்ட மாநாட்டிற்கு நம்முடைய போற்றுதலை எவ்வாறு காட்டலாம்?
2. நாம் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பது ஏன் முக்கியம்?
3. நம்முடைய தோற்றம் 1 தீமோத்தேயு 2:9, 10-ல் கொடுக்கப்பட்டிருப்பதற்கு இசைவாக இருக்கிறதாவென நாம் எவ்வாறு உறுதி செய்து கொள்ளலாம்?
4, 5.என்ன எச்சரிப்புக்கு கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் செவிகொடுக்க வேண்டும்?
6. மாநாட்டுக்கு போய் வரும்போதும், மாநாட்டிலும், ஒவ்வொரு நாள் நிகழ்ச்சிகள் முடிந்த பிறகும், நாம் ஏன் உடை உடுத்துவதிலும் தோற்றத்திலும் உயர்ந்த தராதரத்தை கடைப்பிடிக்க வேண்டும்?
7. நம்முடைய தகுதியான உடையும் தோற்றமும் மற்றவர்கள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தலாம்?
[பக்கம் 5-ன் பெட்டி]
கண்ணியமான தோற்றத்தைக் கொண்டிருங்கள்
▪ பிரயாணம் செய்யும்போது
▪ மாநாட்டின்போது
▪ நிகழ்ச்சிநிரலுக்குப் பிறகு