யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை படித்து பயன் பெறுங்கள்
1 “வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிப்போர்” மாவட்ட மாநாட்டில் யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தை பெறுவதில் கிளர்ச்சி அடைந்தோம். அநேகர் உடனடியாகவே அந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டனர். இன்னும் பலர் “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்ற 2003-ன் வருடாந்தர வசனத்தால் அதை வாசிக்க தூண்டப்பட்டனர் என்பதில் சந்தேகமில்லை.—யாக். 4:8, NW.
2 யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தை மார்ச் மாதம் முதல் சபை புத்தகப் படிப்பில் படிக்கவிருக்கிறோம். இப்படிப்பிலிருந்து எப்படி அதிக பயனை பெற முடியும்? தயாரிப்பு அவசியம். ஒவ்வொரு அதிகாரமும் இரண்டு வாரங்களில் சிந்திக்கப்படும். பெரும்பாலும் ஒவ்வொரு வாரத்திலும் கொஞ்சம் பாராக்களே படிப்பதற்கென ஒதுக்கப்பட்டிருக்கும். உங்கள் படிப்பு மற்றும் தியானத்தின் அடிப்படையில் இருதயப்பூர்வமான குறிப்புகளை சொல்வதற்கு இது போதுமான நேரத்தை அளிக்கும். மேலுமாக, ஓர் அதிகாரத்தின் கடைசி பகுதி சிந்திக்கப்படும்போது இன்னும் குறைவான பாராக்களே இருக்கும். இந்த புத்தகத்திலுள்ள ஒரு விசேஷ அம்சத்தை பயன்படுத்த போதியளவு நேரம் இருப்பதற்காகவே அவ்வாறு செய்யப்படும்.
3 அதிகாரம் 2 முதல் “தியானிக்க சில கேள்விகள்” என்ற தலைப்புடைய பெட்டி ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் உள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள கடைசி பாராவை சிந்தித்த பிறகு புத்தகப் படிப்பு கண்காணி இந்த பெட்டியை தன் தொகுதியினருடன் கலந்தாலோசிப்பார். தன் தொகுதியில் உள்ளவர்கள் வேத வசனங்களை தியானித்தபோது தங்கள் மனதுக்குப் பட்ட அருமையான குறிப்புகளை சொல்லும்படி அவர்களை உற்சாகப்படுத்துவார். (நீதி. 20:5) பெட்டியில் கொடுக்கப்பட்ட கேள்விகளோடுகூட அவர் இதுபோன்ற வேறு சில கேள்விகளையும் சில சமயங்களில் கேட்கலாம்: “இது யெகோவாவைப் பற்றி உங்களுக்கு என்ன சொல்லுகிறது? இது எப்படி உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறது? மற்றவர்களுக்கு உதவி செய்ய இதை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்?” இருதயப்பூர்வமான குறிப்புகளை வெளிவரச் செய்வதே அவருடைய நோக்கமே தவிர, சிறுசிறு விவரங்களை பற்றி தொகுதியினரை பரீட்சித்துப் பார்ப்பது அல்ல.
4 யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகம் தனித்தன்மை வாய்ந்தது. ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையிடமிருந்து’ வரும் எல்லா பிரசுரங்களுமே யெகோவாவை மகிமைப்படுத்துகிறபோதிலும், இந்தப் புத்தகம் முழுவதுமே அவருடைய குணங்களை கலந்தாலோசிக்கிறது. (மத். 24:45-47, NW) எப்பேர்ப்பட்ட வாய்ப்பு நமக்குமுன் இருக்கிறது! யெகோவாவின் ஆளுமையைப் பற்றி ஆழமாக படிப்பதிலிருந்து நாம் மிகுந்த பயன் பெறுவோம். நம் பரலோக தந்தையிடம் இன்னுமதிகமாக நெருங்கி வர இந்தப் படிப்பு நமக்கு உதவட்டும். மற்றவர்களும் அதையே செய்ய உதவுவதில் நாம் இன்னுமதிக திறம்பட்டவர்களாவோமாக.