முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 1: பைபிள் படிப்பு என்றால் என்ன?
1 உலகெங்கிலும், ஒவ்வொரு மாதமும் சுமார் 60 லட்சம் பைபிள் படிப்புகள் கடவுளுடைய மக்களால் நடத்தப்படுகின்றன. சிறந்த கற்பிக்கும் முறைகளை பயன்படுத்தி இந்த பைபிள் மாணாக்கர்களை ஒப்புக்கொடுத்தல், முழுக்காட்டுதல், ‘மற்றவர்களுக்கு போதிப்பவர்களாக’ தகுதி பெறுதல் போன்ற முன்னேற்றப் படிகளை எடுக்க நீங்கள் உதவலாம். (2 தீ. 2:2) உங்கள் மாணாக்கர் இந்த முன்னேற்றப் படிகளில் ஏறிச் செல்ல நீங்கள் உதவ விரும்புகிறீர்களா? நம் ராஜ்ய ஊழியத்தின் இந்தப் பிரதியிலிருந்து தொடங்கும் தொடர் கட்டுரைகள், முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்த தேவையான அடிப்படை அம்சங்களை விளக்கிக் காட்டும்.
2 பைபிள் படிப்பை எப்பொழுது அறிக்கை செய்யலாம்: பரிந்துரைக்கப்பட்ட பிரசுரங்களோடு பைபிளை வைத்து, ஒழுங்காகவும் கிரமமாகவும் கலந்துரையாடினால், அது சுருக்கமாக இருந்தாலும்கூட, அது ஒரு பைபிள் படிப்பே. வீட்டு வாசலில் நின்றவாறே படிப்பு நடத்தினாலோ அல்லது டெலிபோன் மூலமாக நடத்தினாலோ அதுவும் ஒரு பைபிள் படிப்பே. பைபிள் படிப்பு ஏற்பாட்டை விளக்கிய பின் இரண்டு முறை நீங்கள் படிப்பு நடத்தினால், ஒருவேளை அந்தப் படிப்பு தொடரும் என்று நம்புவதற்கு தகுந்த காரணங்கள் இருந்தால், நீங்கள் அதை அறிக்கை செய்யலாம்.
3 தேவைப்படுத்துகிறார் சிற்றேடு மற்றும் அறிவு புத்தகத்தை வைத்து அநேக பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவற்றை முடித்த பின், அந்நபரிடத்தில் முன்னேற்றம் தென்பட்டால், அவர் மெதுவாக முன்னேறினாலும்சரி, தான் கற்ற காரியங்களுக்கு போற்றுதல் காண்பிக்கிறார் என்றால் கடவுளை வணங்குங்கள் புத்தகத்திலிருந்து படிப்பை தொடரலாம்.
4 பைபிள் படிப்புகள் திறம்பட்ட விதத்தில் நடத்தப்பட்டதால் லட்சக்கணக்கானோர் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களாக ஆகியிருக்கிறார்கள். (மத். 28:19, 20) இத்தொடர் கட்டுரையில் இனி வரவிருக்கும் பகுதிகளில் கொடுக்கப்படும் ஆலோசனைகளை கடைப்பிடிக்கையில், முன்னேறுகிற ஒரு பைபிள் படிப்பை உங்களால் நடத்த முடியும்.