பைபிளை நன்கு பயன்படுத்துங்கள்
1 ஊழியத்தில் நாம் எந்தப் பிரசுரத்தைக் கொடுக்க தீர்மானித்திருந்தாலும் சரி, சிந்தனையைத் தூண்டும் ஒரு வசனத்தை தேர்ந்தெடுத்து அதை நமக்கு செவிசாய்ப்பவர்களிடம் வாசித்துக் காட்டுவது பயனளிக்கும். (எபி. 4:12) நீங்கள் அளிக்கப்போகும் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு வசனத்தையே தெரிந்தெடுப்பது, அந்தப் பிரசுரத்தினிடம் கவனத்தை எளிதில் திருப்புவதற்கு வழிவகுக்கும். ஒரு வசனத்தை உபயோகிப்பதால் கேட்பவரின் இருதயத்தில் கடவுளுடைய வார்த்தை செல்வாக்கு செலுத்த நாம் அனுமதிக்கிறோம். கிறிஸ்தவமல்லாத பிற மதத்தினரும் சரி, ஏன் கிறிஸ்தவர்களை அறவே வெறுப்பவர்களில் சிலரும் சரி, பைபிள் மீது பொதுவாக மதிப்பு வைத்திருக்கின்றனர்.
2 ஒரு வசனத்துடன் ஆரம்பியுங்கள்: பிரஸ்தாபிகள் சிலர், தாங்கள் வாசிக்கப் போகும் பைபிள் வசனத்தின்பேரில் ஓர் எளிய நோக்குநிலைக் கேள்வியைக் கேட்பதன் மூலம் தங்கள் பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்கள். இது கவனத்தை சட்டென்று கடவுளுடைய வார்த்தையிடம் திருப்புகிறது. பின்வரும் முகவுரைகளில் சில உங்கள் பிராந்தியத்திற்கு பயனளிக்குமா?
◼ “இந்த மாற்றங்களையெல்லாம் செய்வதற்கு உங்களுக்கு சக்தி இருந்தால், நீங்கள் செய்வீர்களா?” வெளிப்படுத்துதல் 21:4-ஐ வாசியுங்கள்.
◼ “நாம் ஏன் இந்தளவுக்கு மோசமான காலத்தில் வாழ்ந்து வருகிறோமென்று எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா?” 2 தீமோத்தேயு 3:1-5-ஐ வாசியுங்கள்.
◼ “இந்த ஆலோசனையை எல்லாரும் பின்பற்றினால் நம்முடைய சமுதாயம் மேம்படும் என்று நினைக்கிறீர்களா?” மத்தேயு 7:12-ஐ வாசியுங்கள்.
◼ “தொல்லைகள் நிறைந்த தற்போதைய நிலைமைகளை வைத்துப் பார்க்கையில், இங்கு விவரிக்கப்பட்டுள்ளதைப் போன்ற நிலைமைகளை உங்கள் பிள்ளைகள் அனுபவிக்க முடியும் என நினைக்கிறீர்களா?” சங்கீதம் 37:10, 11-ஐ வாசியுங்கள்.
◼ “இந்த உலகில் வியாதியும் உடல் நலக் கோளாறும் அதிகரிக்கையில் இந்த வார்த்தைகள் நிஜமாகும் நாள் வரும் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?” ஏசாயா 33:24-ஐ வாசியுங்கள்.
◼ “இங்கு சொல்லப்பட்டிருப்பது போல் அரசாங்கத்திற்கு வரவிருக்கும் மாற்றத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்.
◼ “இந்தக் கேள்வியைக் கடவுளிடம் கேட்க எப்பொழுதாவது ஆசைப்பட்டிருக்கிறீர்களா?” யோபு 21:7-ஐ வாசியுங்கள்.
◼ “இறந்து போன நம் பிரியமானவர்களை மறுபடியும் பார்க்க முடியுமா?” யோவான் 5:28, 29-ஐ வாசியுங்கள்.
◼ “உயிரோடிருப்பவர்கள் செய்வதெல்லாம் இறந்தவர்களுக்குத் தெரியுமா?” பிரசங்கி 9:5-ஐ வாசியுங்கள்.
3 விளக்குங்கள், உதாரணம் கொடுங்கள், பொருத்திக் காட்டுங்கள்: ஒரு நபர் உரையாட விரும்பினால், வேக வேகமாய் பேசி முடித்து விடாதீர்கள். நீங்கள் வாசிக்கும் வசனத்தை விளக்குவதற்கும் அது சம்பந்தமாக உதாரணம் கொடுப்பதற்கும் அதைப் பொருத்திக் காட்டுவதற்கும் போதியளவு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அவரால் வசனத்தைப் புரிந்துகொள்ள முடியும். (நெ. 8:8) இவ்வாறு, கடவுளுடைய வார்த்தை போதிப்பதை ஜனங்கள் புரிந்து ஏற்றுக்கொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழும்.—1 தெ. 2:13.
4 முதலில் காட்டிய ஆர்வத்தை வளர்க்கையிலும் பைபிளையே நன்கு பயன்படுத்துங்கள். மறுசந்திப்பு செய்கையிலும் இதே முறையை நீங்கள் பின்பற்றலாம்: (1) ஒரு பொருத்தமான வசனத்தை தேர்ந்தெடுங்கள். (2) அந்த வசனத்தின் பேரில் ஓர் எளிய நோக்குநிலைக் கேள்வியை கேளுங்கள். பின்பு வாசியுங்கள். (3) விளக்குங்கள், உதாரணம் கொடுங்கள், பொருத்திக் காட்டுங்கள். ஒவ்வொரு சந்திப்பிலும் கடவுளுடைய வார்த்தையைப் பற்றி அந்த நபர் அறிந்துகொள்வதில் ஒரு படி முன்னேற உதவுங்கள். விரைவிலேயே நீங்கள் ஒரு பைபிள் படிப்பை நடத்த ஆரம்பிக்கலாம்!
[கேள்விகள்]
1. வெளி ஊழியத்திற்கு தயாரிக்கையில் நீங்கள் என்ன செய்யலாம்?
2. (அ) நம் பிரசங்கத்தை ஒரு வசனத்துடன் எப்படி ஆரம்பிக்கலாம்? (ஆ) பைபிளிலுள்ள என்ன விஷயங்கள் பிராந்தியத்திலுள்ள ஜனங்களுக்கு ஆர்வமளிக்கின்றன?
3. நாம் வாசிக்கும் பைபிள் வசனங்களை ஜனங்கள் புரிந்துகொள்ள எப்படி உதவலாம்?
4. மறுசந்திப்புகளில் பைபிளை நாம் எப்படி நன்கு உபயோகிக்கலாம்?