முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 3: வசனங்களைத் திறம்பட பயன்படுத்துதல்
1 ஜனங்களை ‘சீஷராக்குவது’ தான் நாம் பைபிள் படிப்புகளை நடத்துவதன் நோக்கமே. இதை நாம் எவ்வாறு செய்கிறோம்? அவர்கள் பைபிள் போதகங்களைப் புரிந்து, அவற்றை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுவதன் மூலம் இதைச் செய்கிறோம். (மத். 28:19, 20; 1 தெ. 2:13) ஆகவே பைபிள் படிப்பில் வசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில், அவர்களுடைய சொந்த பைபிளில் வசனங்களை எடுப்பது எப்படி என்று காட்ட வேண்டியிருக்கலாம். என்றாலும், அவர்கள் ஆவிக்குரிய விதத்தில் முன்னேறுவதற்கு வசனங்களை நாம் எப்படி பயன்படுத்தலாம்?
2 வாசிக்கப் போகும் வசனங்களை தேர்ந்தெடுங்கள்: பைபிள் படிப்புக்காக நீங்கள் தயாரிக்கையில், கொடுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வசனமும் சிந்திக்கப்படும் விஷயத்துடன் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடியுங்கள்; படிப்பின்போது எந்தெந்த வசனங்களை வாசித்து கலந்தாலோசிப்பீர்கள் என்பதைத் தீர்மானியுங்கள். பொதுவாக, நம் நம்பிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கும் வசனங்களை வாசிப்பது நல்லது. பின்னணித் தகவல் அளிக்கும் வசனங்களை வாசிக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு மாணாக்கரின் தேவைகளையும் சூழ்நிலைகளையும் மனதில் வைத்து தயாரியுங்கள்.
3 கேள்விகளைப் பயன்படுத்துங்கள்: பைபிள் வசனங்களை நீங்கள் விளக்குவதற்கு பதிலாக, மாணாக்கரையே விளக்கும்படி சொல்லுங்கள். இதற்கு, கேள்விகளை திறமையாக பயன்படுத்துங்கள். ஒரு வசனம் என்ன கற்பிக்கிறது என்று வெளிப்படையாக தெரிந்தால், அது பாராவில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை எப்படி ஆதரிக்கிறது என்பதாக மட்டும் கேட்கலாம். அப்படி இல்லாதபோது, இன்னும் சற்று குறிப்பான கேள்வியை அல்லது தொடர் கேள்விகளை கேட்க வேண்டியிருக்கலாம்; அப்படிச் செய்கையில் அந்த மாணாக்கரே சரியான தீர்மானத்திற்கு வர அவை உதவும். கூடுதலாக விளக்கம் அளிக்க நினைத்தால், மாணாக்கர் பதில் சொன்ன பிறகு அவற்றைச் சொல்லலாம்.
4 எளிய நடையில் விளக்குங்கள்: அம்பு எய்வதில் திறமைசாலியான ஒருவருக்கு, குறிதவறாமல் இலக்கை நோக்கிப் பாய்ச்சுவதற்கு ஒரேவொரு அம்பு போதுமானது. அதைப் போலவே, ஒரு குறிப்பை விளக்குவதற்கு, திறமை வாய்ந்த போதனையாளருக்கு சில வார்த்தைகளே போதுமானது. விஷயத்தை அவர் எளிதாக, தெளிவாக, திருத்தமாக தெரிவித்துவிடுவார். சில சமயங்களில் ஒரு வசனத்தைப் புரிந்து சரியாக விளக்குவதற்கு கிறிஸ்தவ பிரசுரங்களிலிருந்து நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கலாம். (2 தீ. 2:15) ஆனால் படிப்பின்போது கலந்தாலோசிக்கும் வசனங்களின் எல்லா அம்சங்களையும் விளக்கத் தேவையில்லை. சிந்திக்கப்படும் விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்வதற்கு அவசியமானவற்றை மட்டும் சொன்னால் போதுமானது.
5 வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கலாமென காட்டுங்கள்: பொருத்தமான சந்தர்ப்பங்களில், பைபிள் வசனங்களை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கலாமென மாணாக்கருக்குக் காட்டுங்கள். உதாரணமாக, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வர ஆரம்பிக்காத மாணாக்கரோடு எபிரெயர் 10:24, 25-ஐ சிந்திக்கையில், ஒரு கூட்டத்தைப் பற்றி விளக்கி அதற்கு வருமாறு அழைக்கலாம். ஆனால் அவரை வற்புறுத்துவது போல் சொல்வதை தவிருங்கள். யெகோவாவை மகிழ்விக்க மாணாக்கர் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வதற்கு கடவுளுடைய வார்த்தையே அவரை உந்துவிக்கட்டும்.—எபி. 4:12.
6 சீஷராக்கும் வேலையை நாம் செய்து வருகையில், ‘விசுவாசத்தால் கீழ்ப்படியும்படிக்கு’ வசனங்களை நாம் திறம்பட பயன்படுத்துவோமாக.—ரோ. 16:26, NW.
[கேள்விகள்]
1. பைபிள் படிப்புகளை நடத்தும்போது வசனங்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
2. எந்தெந்த வசனங்களை வாசித்து கலந்தாலோசிப்பது என்பதை எப்படி தீர்மானிக்கலாம்?
3. கேள்விகளைப் பயன்படுத்துவதன் நன்மை என்ன? இதை நாம் எப்படி செய்யலாம்?
4. நாம் வாசிக்கும் வசனங்களுக்கு எந்தளவு விளக்கம் தேவை?
5, 6. கடவுளுடைய வார்த்தையை வாழ்க்கையில் கடைப்பிடிக்க மாணாக்கருக்கு நாம் எப்படி உதவலாம், ஆனால் எதை நாம் தவிர்க்க வேண்டும்?