முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்
பகுதி 10: வெளி ஊழியத்தில் மாணாக்கர்களுக்குப் பயிற்சி அளித்தல்
1 பைபிள் படிக்கும் மாணாக்கர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆவதற்குத் தகுதியானவர் என மூப்பர்கள் தீர்மானித்த பிறகு அவர் சபையாருடன் சேர்ந்து பிரசங்க ஊழியத்தில் ஈடுபட ஆரம்பிக்கலாம். (யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில் பக். 79-81-ஐக் காண்க.) வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும் இலக்கை எட்டுவதற்கு நாம் எப்படி மாணாக்கருக்கு உதவலாம்?
2 ஒன்றாகச் சேர்ந்து தயாரிப்பது: நன்கு தயாரிப்பது மிக மிக முக்கியம். எனவே, நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலும் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலும் மாதிரிப் பிரசங்கங்கள் எங்கே உள்ளன என்பதை மாணாக்கருக்குக் காட்டுங்கள்; சபை பிராந்தியத்திற்குப் பொருத்தமாக உள்ள எளிய பிரசங்கத்தை அவர் தேர்ந்தெடுப்பதற்கு உதவுங்கள். ஊழியத்தில் பைபிளைப் பயன்படுத்தும்படி ஆரம்பத்திலிருந்தே அவரை உற்சாகப்படுத்துங்கள்.—2 தீ. 4:2.
3 பிரசங்கத்தைப் பலமுறை பேசி பழகிப் பார்ப்பது புதிய பிரஸ்தாபிகளுக்கு அதிக பிரயோஜனமாக இருக்கிறது. இப்படி மாணாக்கருடன் பழகிப் பார்க்கும் சமயத்தில், பிராந்தியத்தில் உள்ளவர்கள் பொதுவாக எவ்வாறு பிரதிபலிப்பார்கள் என்பதைச் சொல்லி, அவற்றை அவர் சாமர்த்தியமாகச் சமாளிப்பதற்குக் கற்றுக் கொடுங்கள். (கொலோ. 4:6) வீட்டுக்காரர் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் கிறிஸ்தவ ஊழியர்களாகிய நாம் பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை அவரிடம் சொல்லுங்கள். அத்தகைய கேள்விகளுக்கு பெரும்பாலும் ஆராய்ச்சி செய்து வந்து, விளக்கமளிப்பதாக சொல்வது அவற்றைச் சமாளிப்பதற்கு சரியான வழியாகும்.—நீதி. 15:28.
4 ஒன்றாகச் சேர்ந்து பிரசங்கிப்பது: வீட்டுக்கு வீடு ஊழியத்தில் மாணாக்கர் முதன்முதலாகக் கலந்துகொள்ளும்போது, நீங்கள் இருவருமாகச் சேர்ந்து தயாரித்த பிரசங்கத்தை நீங்கள் எப்படிப் பேசுகிறீர்கள் என்பதை அவர் கவனிக்கட்டும். பின்னர் அவரும் பேசட்டும். சில சமயத்தில், முழு பிரசங்கத்தையும் புதிய பிரஸ்தாபியையே கொடுக்க வைக்காமல், வசனத்தை வாசிப்பதிலோ, அதன் பேரில் குறிப்பு சொல்வதிலோ மட்டும் அவரைப் பங்குகொள்ள வைப்பது நல்லதாக இருக்கும். அவ்வாறு செய்கையில், மாணாக்கருடைய சுபாவத்தையும் திறமைகளையும் கவனத்தில் வையுங்கள். (பிலி. 4:5, NW) பிரசங்க வேலையின் பல்வேறு அம்சங்களில் அவருக்குப் படிப்படியாகப் பயிற்சி அளிக்கும்போது சின்னச் சின்ன விஷயங்களிலும் அவரைப் பாராட்டுங்கள்.
5 முடிந்த மட்டும் வாரா வாரம் புதிய பிரஸ்தாபி தவறாமல் ஊழியத்தில் பங்குகொள்ள அட்டவணை போடுவதற்கு உதவுவது மிக முக்கியம். (பிலி. 3:16) இருவருமாக சேர்ந்து ஊழியம் செய்வதற்குத் திட்டவட்டமான ஏற்பாடுகளைச் செய்யுங்கள், ஊழியத்தில் வைராக்கியமாக ஈடுபடும் மற்றவர்களுடனும் சேர்ந்து ஊழியம் செய்ய அவரை உற்சாகப்படுத்துங்கள். அவர்களுடைய முன்மாதிரியும் கூட்டுறவும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொள்வதற்கும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தோஷத்தைக் கண்டடைவதற்கும் அவருக்கு உதவும்.