வீட்டு வாசலிலும் தொலைபேசியிலும் பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல்
1 இன்று ஜனங்கள் ரொம்ப பிஸியாக இருக்கிறார்கள். என்றபோதிலும், அநேகருக்கு ஆன்மீகக் காரியங்களில் ஆர்வம் இருக்கிறது. ஆன்மீகப் பசியைத் தணித்துக்கொள்ள நாம் எப்படி அவர்களுக்கு உதவலாம்? (மத். 5:3, NW) அநேக பிரஸ்தாபிகள் வீட்டு வாசலிலோ தொலைபேசியிலோ பைபிள் படிப்புகளை நடத்துகின்றனர். நீங்களும் இதுபோன்ற பைபிள் படிப்புகளை நடத்துவதன் மூலம் உங்கள் ஊழியத்தை விரிவாக்க முடியுமா?
2 பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கு, அது எப்படி நடத்தப்படுகிறது என்பதைச் செய்துகாட்ட நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பைபிள் படிப்பை எப்படி, எங்கே நடத்திக்காட்டலாம்?
3 வீட்டு வாசலில்: பைபிளைப் பற்றி பேசுவதில் ஆர்வம் காட்டும் ஒரு நபரைச் சந்தித்தால், முன்கூட்டியே நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் ஒரு பாராவைக் காட்டி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம். உதாரணமாக, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டின் முதல் பாடத்திலுள்ள முதல் பத்தியை உபயோகித்தே நீங்கள் பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம். பாராவைப் படித்து, கேள்வி கேட்டு, பிறகு கொடுக்கப்பட்டுள்ள ஓரிரண்டு வசனங்களை விளக்கலாம். பெரும்பாலும் இதை நீங்கள் வீட்டு வாசலில் நின்றவாறு, ஐந்து பத்து நிமிடங்களிலேயே செய்துகாட்டிவிடலாம். வீட்டுக்காரருக்குப் பிடித்திருந்தால், அடுத்த முறை வரும்போது அடுத்த ஓரிரு பாராக்களைப் படிக்கலாம் என்று அவரிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.—நேரடி அணுகுமுறையின் மூலம் பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கான கூடுதல் ஆலோசனைகளை ஜனவரி 2002 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 6-ல் பார்க்கலாம்.
4 மறுசந்திப்புகளின்போது பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க இதுபோன்ற அணுகுமுறையையே நீங்கள் உபயோகிக்கலாம். உதாரணமாக, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டைக் காட்டி, இரண்டாவது பாடத்திலுள்ள 1-2 பாராக்களைப் பயன்படுத்தி கடவுளுடைய பெயரைச் சிறப்பித்துக் காட்டலாம். அடுத்த சந்திப்பில், 3-4 பாராக்களைப் பயன்படுத்தி யெகோவாவின் குணங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று விளக்கலாம். அதற்கு அடுத்த சந்திப்பில் 5-6 பாராக்களையும் பக்கம் 5-ல் உள்ள படத்தையும் காட்டி யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள பைபிள் படிப்பு எவ்வளவு உதவியாக இருக்கிறது என்று சிறப்பித்துக் காட்டலாம். இதையெல்லாம் வீட்டு வாசலில் நின்றவாறே செய்யலாம்.
5 தொலைபேசியில்: சிலர் நேரில் சந்தித்துப் படிப்பதைவிட தொலைபேசியின் மூலம் படிப்பதையே அதிகம் விரும்புவர். இதற்கொரு உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு சகோதரி வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தபோது ஓர் இளம் பெண்ணைச் சந்தித்தார். அந்தப் பெண்ணுக்குப் பிள்ளைகள் இருந்தனர். அதோடு அவர் வேலைக்குப் போகும் படு பிஸியான பெண்மணியாகவும் இருந்தார். அவரைச் சந்திக்க நம் சகோதரி பலமுறை முயற்சி செய்தும் முடியாததால் அவருக்கு ஃபோன் செய்ய தீர்மானித்தார். அப்பொழுது, அந்தப் பெண் பைபிளைப் பற்றி பேச தனக்குக் கொஞ்சங்கூட நேரமில்லை என்று விளக்கினார். அதற்கு அந்தச் சகோதரி, “தொலைபேசியில் பேச 10 அல்லது 15 நிமிடம் மட்டும் கொடுத்தால் போதும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள்” என்றார். “தொலைபேசியில் பேசுவதென்றால் சரி, எனக்குப் பிரச்சினையில்லை!” என அந்தப் பெண்மணி பதிலளித்தார். சீக்கிரத்திலேயே தொலைபேசி மூலம் ஒழுங்கான பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
6 நீங்கள் சந்திக்கும் ஆட்களில் சிலர் தொலைபேசி மூலம் படிக்க விரும்புவார்களா? மேலே சொல்லப்பட்ட அணுகுமுறையை நீங்கள் பயன்படுத்தலாம். அல்லது இவ்வாறு சொல்லலாம்: “நீங்கள் விரும்பினால் தொலைபேசியிலேயே பைபிளை படிக்கலாம். அது உங்களுக்கு வசதியாக இருக்குமா?” வீட்டுக்காரரின் சூழ்நிலைக்கு ஏற்ப நம் பைபிள் படிப்புத் திட்டத்தை மாற்றிக்கொள்ளும்போது ‘தேவனை அறியும் அறிவைக் கண்டடைய’ அவர்களுக்கு நம்மால் உதவ முடியும்.—நீதி. 2:5; 1 கொ. 9:23.
[கேள்விகள்]
1, 2. பிஸியாக இருப்பவர்களுக்கு ஏற்ற விதத்தில், பைபிள் படிப்புத் திட்டத்தை நாம் எவ்வாறு மாற்றிக்கொள்ளலாம்?
3. முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஏன் நடத்திக்காட்ட வேண்டும், அதை எவ்வாறு செய்யலாம்?
4. மறுசந்திப்பு செய்யும்போது வீட்டு வாசலிலேயே பைபிள் படிப்பை எவ்வாறு நாம் ஆரம்பிக்கலாம்?
5, 6. (அ) சிலர் ஏன் தொலைபேசி மூலம் பைபிளைப் படிக்க விரும்பலாம்? (ஆ) தொலைபேசியில் பைபிள் படிப்பை ஆரம்பிக்க எப்படிப்பட்ட அணுகுமுறையை நாம் பயன்படுத்தலாம்?