உங்கள் ஆன்மீக இலக்குகளை எவ்வாறு அடையலாம்
1 ஒரு கிறிஸ்தவ இளைஞராக, உங்களுடைய இலக்குகள் யெகோவா மீதுள்ள அன்பின் அடிப்படையிலும், ‘முதலாவது ராஜ்யத்தைத் தேடும்படி’ எல்லா கிறிஸ்தவர்களுக்கும் இயேசு சொன்ன வார்த்தையின் அடிப்படையிலும் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. (மத். 6:33) ஒரு பயனியராக சேவை செய்வதன் மூலமோ ராஜ்ய பிரசங்கிப்பாளர்கள் அதிகமாகத் தேவைப்படும் இடங்களில் சேவை செய்வதன் மூலமோ ஊழியத்தை விரிவுபடுத்துவது உங்கள் இலக்காக இருக்கலாம். வாலண்டியர்களாக ராஜ்ய மன்ற கட்டுமானப் பணியில் ஈடுபடுவது, கிளை அலுவலகத்தில் சேவை செய்வது, ஒரு மிஷனரியாக சேவை செய்வது ஆகியவை சிலருடைய இலக்குகளாக இருக்கலாம். இவையாவும் மனநிறைவளிக்கிற, மெச்சத்தக்க இலக்குகள்!
2 உங்கள் ஆன்மீக இலக்குகளை அடைவதற்கு ஒரு வழி, அவற்றைப் பட்டியலிடுவதாகும். ஜூலை 15, 2004, காவற்கோபுரம் இவ்வாறு சொல்கிறது: ‘எண்ணத்தை வார்த்தைகளில் விவரிக்கும்போது அது தெளிவடைகிறது, உருப்பெறுகிறது. எனவே [உங்களுடைய] இலக்குகளையும் அவற்றை எட்டுவதற்கான திட்டங்களையும் எழுதி வைக்க நீங்கள் விரும்பலாம்.’ அது தவிர, இடையிடையே சிறு சிறு இலக்குகளை வைப்பது உங்கள் முன்னேற்றத்தைக் கணிக்கவும் நீண்ட கால இலக்கை அடைவதற்கு உங்கள் மனதை ஒருமுகப்படுத்தவும் உதவும்.
3 குறுகிய கால இலக்குகள்: நீங்கள் முழுக்காட்டப்படாதவரா? அப்படியானால், அந்த இலக்கை அடைய நீங்கள் என்ன செய்யலாம் என்பதைச் சிந்தியுங்கள். பைபிளின் அடிப்படை சத்தியங்களை நீங்கள் நன்கு புரிந்துகொள்வது அவசியமாக இருக்கலாம். அப்படியென்றால், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை முழுமையாகப் படிக்க வேண்டுமென்று ஓர் இலக்கு வையுங்கள், கொடுக்கப்பட்டிருக்கும் எல்லா வசனங்களையும் எடுத்துப் பாருங்கள். (1 தீ. 4:15) ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல்வரை முழு பைபிளையும் படிப்பதற்கு இலக்கு வையுங்கள், அப்படிச் செய்யும்படி பெத்தேல் ஊழியர்களிடமும், கிலியட் மாணாக்கர்களிடமும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, தினமும் தவறாமல் பைபிளை வாசிப்பதை உங்கள் பழக்கமாக்குங்கள். (சங். 1:2, 3) ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு அது எவ்வளவாய் உதவும் என்பதை யோசித்துப் பாருங்கள்! பைபிளை வாசிப்பதற்கு முன்பும் பின்பும் இருதயப்பூர்வமாக ஜெபம் செய்யுங்கள், கற்றவற்றைக் கடைப்பிடிக்க எப்போதும் முயற்சி செய்யுங்கள்.—யாக். 1:25.
4 நீங்கள் ஏற்கனவே முழுக்காட்டுதல் பெற்றவராக இருந்தால், மேற்கொண்டு என்ன இலக்குகளை வைக்கலாம்? பிரசங்கிக்கும் திறமையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறதா? உதாரணமாக, வெளி ஊழியத்தில் பைபிளை பயன்படுத்துவதில் அதிக திறமையானவராக ஆவதை உங்கள் இலட்சியமாக்க முடியுமா? (2 தீ. 2:15) உங்களுடைய ஊழியத்தை எவ்வாறு விரிவாக்கலாம்? உங்களுடைய வயது, சூழ்நிலைகளைப் பொறுத்து திட்டவட்டமான குறுகிய கால இலக்குகளை வையுங்கள். இவை உங்களுடைய நீண்ட கால இலக்குகளை அடைய உதவும்.
5 வெற்றி கண்டவரின் அனுபவம்: 19 வயது டோனி யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் ஒன்றை விஜயம் செய்தபோது, பெத்தேலில் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை அவருடைய மனதில் துளிர்த்தது. ஆனால் அவரோ அதுவரையில் தான்தோன்றித்தனமாக வாழ்ந்துவந்திருந்தார், கடவுளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருக்கவுமில்லை. யெகோவாவின் வழிகளுக்கு இசைய தன்னை மாற்றிக்கொள்ள அவர் தீர்மானித்தார், முழுக்காட்டுதலுக்குத் தகுதி பெறுவதை இலக்காக வைத்தார். அந்த இலக்கை எட்டிய பிறகு, துணைப் பயனியர் செய்வதற்கும் ஒழுங்கான பயனியர் ஆவதற்கும் இலக்கு வைத்து, அதை எந்தத் தேதியில் ஆரம்பிக்கப் போகிறார் என்பதை காலண்டரில் குறித்தும் வைத்தார். கொஞ்ச காலம் பயனியர் செய்த பிறகு, பெத்தேலில் சேவை செய்வதற்கு அவர் அழைக்கப்பட்டபோது, அவர் அடைந்த சந்தோஷத்தைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள்!
6 கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களை நீங்கள் முதலாவது தேடினால், உங்களாலும் ஆன்மீக இலக்குகளை அடைய முடியும். ‘உங்கள் செய்கைகளை’ ஜெபத்தில் யெகோவாவிடம் சொல்லுங்கள். அவற்றை அடைய ஊக்கமாக முயலுங்கள்.—நீதி. 16:3; 21:5.
[கேள்விகள்]
1. கிறிஸ்தவ இளைஞர்கள் பலர் என்னென்ன ஆன்மீக இலக்குகளை வைத்திருக்கிறார்கள்?
2. உங்கள் ஆன்மீக இலக்குகளை அடைய எது உதவலாம்?
3. முழுக்காட்டுதலுக்குத் தகுதி பெற ஒருவருக்கு உதவும் குறுகிய கால இலக்குகள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள்.
4. பெத்தேல் சேவை அல்லது மிஷனரி சேவை போன்ற நீண்ட கால இலக்குகளை அடைய திட்டமிட்டிருக்கும் ஒரு கிறிஸ்தவர் என்ன குறுகிய கால இலக்குகளை வைக்கலாம்?
5. குறுகிய கால இலக்குகளை வைத்தது, பெத்தேலில் சேவை செய்யும் இலக்கை அடைய ஒரு சகோதரருக்கு எவ்வாறு உதவியது?
6. ஆன்மீக இலக்குகளை அடைய நீங்கள் என்ன செய்யலாம்?