ஆண்களுக்குச் சாட்சி கொடுப்பதன் சவாலைச் சமாளியுங்கள்
1. பிரசங்க வேலையைக் கவனித்துக்கொள்ள முக்கியமாய் யார் தேவைப்படுகிறார்கள்?
1 இந்தக் கடைசி நாட்களில் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலை தொடர்ந்து முன்னேறி வருகிறது; இந்த வேலையை முன்நின்று நடத்த ஆன்மீக முதிர்ச்சியும் தகுதியும் வாய்ந்த ஆண்கள் முக்கியமாய்த் தேவைப்படுகிறார்கள். (மாற். 4:30-32; அப். 20:28; 1 தீ. 3:1-13) எனினும், சில இடங்களில் ஆண்களைவிட பெண்களே நற்செய்தியை அதிகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். சில பாரம்பரியங்களில், பிள்ளைகளுக்குக் கடவுள் பக்தியை ஊட்டி வளர்ப்பது மனைவியின் பொறுப்பென கணவர்கள் நினைக்கிறார்கள். அதிகமதிகமான ஆண்களுக்கும் ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியை ஏற்படுத்தி, அவர்களும் நம்மைப் போலவே உண்மை வணக்கத்தாராவதற்கு நாம் எப்படி உற்சாகப்படுத்தலாம்?
2. ஆண்களுக்குச் சாட்சி கொடுக்க பவுலும் பேதுருவும் எடுத்த முயற்சிக்கு எப்படி நல்ல பலன்கள் கிடைத்தன?
2 ஆண்களுக்குச் சாட்சி கொடுக்க முயற்சி செய்யுங்கள்: பொதுவாக, குடும்பத் தலைவர் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்போது, தன்னுடைய குடும்பத்தாரும் உண்மை வணக்கத்தில் ஈடுபட உற்சாகப்படுத்துவார். உதாரணத்திற்கு, பிரசங்கித்ததன் காரணமாகப் பவுலும் சீலாவும் சிறையில் இருந்தபோது சிறைக்காவலருக்குச் சாட்சி கொடுத்தார்கள். அவரும் அவருடைய குடும்பத்தார் எல்லாரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். (அப். 16:25-34) கொரிந்துவில் பவுல் பிரசங்கித்ததால், “அந்த ஜெபக்கூடத்தின் தலைவரான கிறிஸ்பு என்பவரும் அவருடைய வீட்டார் அனைவரும் எஜமானரில் நம்பிக்கை வைத்து விசுவாசிகளானார்கள்.” (அப். 18:8) ‘தேவபக்திமிக்கவரும் . . . கடவுளுக்குப் பயந்து நடந்தவருமான’ கொர்நேலியுவுக்குச் சாட்சி கொடுக்க பேதுருவை யெகோவா பயன்படுத்தினார். அந்தக் கொர்நேலியு, தன் வீட்டாரோடும், உற்ற நண்பர்களோடும் சேர்ந்து ஞானஸ்நானம் பெற்றார்.—அப். 10:1-48.
3. பிலிப்புவைப் போல நீங்கள் எந்த ‘அதிகாரியிடம்’ சாட்சி கொடுக்கலாம்?
3 ‘உயர் அதிகாரிகளாக’ இருக்கும் ஆண்களுக்குச் சாட்சி கொடுப்பது, பெரிய அளவில் பலனளிக்கலாம். (1 தீ. 2:1, 2) உதாரணத்திற்கு, எத்தியோப்பியருடைய ராணியின் செல்வம் அனைத்தையும் நிர்வகிக்கிற ‘அதிகாரியிடம்’ பேசும்படி கடவுளுடைய தூதர் பிலிப்புவிடம் சொன்னார். ‘ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அவர் சத்தமாக வாசித்துக்கொண்டிருந்ததை’ பிலிப்பு கேட்டார்; அப்போது அவர், இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அந்த அதிகாரிக்கு விளக்கினார். அவர் இயேசுவின் சீடரானார்; தன் ஊருக்குத் திரும்பும் வழியில் அவர் ஒருவேளை நற்செய்தியை அறிவித்திருக்கலாம். அவர் எத்தியோப்பிய ராணிக்கும், அரசவையினருக்கும்கூட சாட்சி கொடுத்திருக்கலாம்; அவர்களுக்கெல்லாம் நற்செய்தியைக் கேட்க எந்த விதத்திலும் வாய்ப்பே இருந்திருக்காது.—அப். 8:26-39.
4. அநேக ஆண்கள் நற்செய்தியைக் கேட்க நாம் என்ன செய்யலாம்?
4 இன்னுமநேக ஆண்களைச் சந்திக்க வழிகள்: பொதுவாக ஆண்கள் பகல் பொழுதில் வேலைக்குச் சென்றுவிடுகிறார்கள்; அதனால், மாலை வேளையில், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது விடுமுறை நாட்களில் அதிக நேரம் ஊழியம் செய்வதற்குத் திட்டமிட முடியுமா? வியாபாரப் பகுதிகளில் தவறாமல் ஊழியம் செய்வது, வீடுகளில் பார்க்க முடியாத ஆண்களைச் சந்தித்துச் சாட்சி கொடுக்க இன்னும் அதிக வாய்ப்பளிக்கும். தங்களுடன் வேலை செய்கிற ஆண்களுக்குச் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கவும் நம் சகோதரர்கள் விசேஷ முயற்சி எடுக்கலாம். வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது, அதுவும் அடிக்கடி ஊழியம் செய்யப்படுகிற பகுதியில் வீட்டுக்கு வீடு செல்லும்போது, சில சமயங்களில் ஆண்கள் யாரிடமாவது பேச முயற்சி எடுக்கலாம்.
5. ஒரு சகோதரி சத்தியத்திற்கு ஆர்வம் காட்டுகிற ஓர் ஆணை சந்தித்தால் என்னென்ன செய்ய வேண்டும்?
5 ஒரு சகோதரி சத்தியத்திற்கு ஆர்வம் காட்டுகிற ஓர் ஆணை ஊழியத்தில் சந்திக்கலாம்; அவருக்கு மறுசந்திப்பு செய்ய அவர் தனியாகச் செல்லக்கூடாது. அவர் தன் கணவரையோ வேறொரு பிரஸ்தாபியையோ தன்னுடன் அழைத்துச் செல்லலாம். அந்த மறுசந்திப்பு ஒரு பைபிள் படிப்பாக மாறினால், தகுதியான ஒரு சகோதரரிடம் அதை ஒப்படைப்பதே நல்லது.
6. அப்போஸ்தலன் பவுலைப் போல் நாம் எப்படி அநேகரை ‘கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவரலாம்’?
6 ஆண்களுக்கு ஆர்வமூட்டும் தலைப்புகளைத் தேர்ந்தெடுங்கள்: அப்போஸ்தலன் பவுல் கேட்போரை மனதில் வைத்து, அதற்கேற்ப பேசினார்; ‘எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும் கிறிஸ்துவின் வழிக்குக் கொண்டுவருவதற்காகவே’ அவ்வாறு செய்தார். (1 கொ. 9:19-23) அதேபோல், நாம் சந்திக்கும் ஆண்களுக்குப் பொதுவாக என்ன தலைப்புகள் ஆர்வமூட்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்து, அதற்கேற்ப தயாரித்துச் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, பொருளாதாரப் பிரச்சினைகள், நல்ல ஆட்சி, குடும்பத்தாரின் பாதுகாப்பு போன்ற விஷயங்களில் ஆண்கள் பொதுவாக அக்கறை காட்டுகிறார்கள். வாழ்க்கையின் நோக்கம், பூமியின் எதிர்காலம், கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார் போன்ற விஷயங்களிலும் அவர்கள் ஆர்வம் காட்டலாம். இதையெல்லாம் புரிந்துகொண்டு, விவேகத்துடன் அவர்களை அணுகினால் அவர்கள் நற்செய்தியை ஆசை ஆசையாகக் கேட்பார்கள்.—நீதி. 16:23.
7. சத்தியத்தில் இல்லாத கணவர்கள் கூட்டத்திற்கு வரும்போது அவர்களைச் சபையார் எப்படிக் கவரலாம்?
7 சத்தியத்தில் இல்லாத கணவர்களுக்கு உதவ முன்வாருங்கள்: பொதுவாக, சத்தியத்தில் இல்லாத கணவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ மனைவியின் நல்நடத்தையைக் கண்டே பெருமளவு கவரப்படுகிறார்கள்; என்றாலும், சபையாரின் நல்நடத்தையைக் கண்டும் அவர்கள் கவரப்படலாம். (1 பே. 3:1-4) சத்தியத்தில் இல்லாத கணவர் தன் மனைவியுடன் கூட்டத்திற்கு வருகையில் சபையார் அவரை அன்புடன் வரவேற்பதே அவருக்குச் சிறந்த சாட்சி கொடுக்கிறது. அவர் கூட்டத்திற்கு வந்திருப்பது சத்தியத்தில் அவருக்கு ஓரளவு ஆர்வமிருப்பதைக் காட்டலாம்; பைபிள் படிப்புக்குக்கூட அவர் சம்மதிக்கலாம்.
8. சத்தியத்தில் துளியும் ஆர்வம் காட்டாதிருந்த கணவர்களுக்கு உதவ சகோதரர்கள் எப்படி முன்வரலாம்?
8 மறுபட்சத்தில், சில கணவர்கள் ஆரம்பத்தில் துளியும் ஆர்வம் காட்டாதிருக்கலாம்; ஆனால், தங்களுக்குப் பிடித்த ஒரு சகோதரருடன் பிற்பாடு பைபிளைப் படிக்க விரும்பலாம். ஒரு சபையிலுள்ள சகோதரர்கள் அவ்வப்போது ஒரு சகோதரியுடைய வீட்டுக்குப் போய், சத்தியத்தில் இல்லாத அவருடைய கணவரைச் சந்தித்தார்கள்; அப்போது, அவருக்கு ஆர்வமூட்டுகிற விஷயங்களைக் குறித்து அவருடன் பேச முயற்சி செய்தார்கள். காலப்போக்கில் இது பைபிள் விஷயங்களைப் பேசுவதற்கு வழிசெய்தது; இப்போது அவர் ஞானஸ்நானம் பெற்ற ஒரு சகோதரர். மற்றொரு அனுபவத்தில், சத்தியத்தில் இல்லாத, அதே சமயத்தில் நட்புடன் பழகிய ஒரு கணவர் தன் வீட்டைச் சுற்றி வேலி போடுகையில் ஒரு சகோதரர் அவருக்கு உதவினார். அப்படி உதவியது, அவருடன் பைபிள் படிப்பை ஆரம்பிக்க வழிசெய்தது. (கலா. 6:10; பிலி. 2:4) நீங்கள் ஒரு கிறிஸ்தவ சகோதரரா? அப்படியென்றால், சத்தியத்தில் இல்லாத கணவர்களில் ஒருவருக்கோ பலருக்கோ நீங்கள் உதவலாம், அல்லவா?
9. பொறுப்புகளைப் பெற பயிற்றுவிக்கப்படும் கிறிஸ்தவ ஆண்கள் என்ன பலன் பெறலாம்?
9 பொறுப்புகளைப் பெற பயிற்றுவியுங்கள்: நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, யெகோவாவின் சேவையில் பொறுப்புகளைப் பெறப் பாடுபடுகிறவர்கள் ‘மனிதர்களில் பரிசுகளாக,’ அதாவது கிறிஸ்தவ மூப்பர்களாக, ஆகலாம்; இவர்கள், சபைகளிலுள்ள யெகோவாவின் மக்களுக்காகத் தங்கள் திறமைகளையும் பலத்தையும் பயன்படுத்துகிறார்கள். (எபே. 4:8; சங். 68:18) இவர்கள் மனப்பூர்வமாகவும் ஆர்வமாகவும் சபையை மேய்த்துவருகிறார்கள். (1 பே. 5:2, 3) சகோதரர்கள் எல்லாருக்கும் இவர்கள் எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாய் இருக்கிறார்கள்!
10. பவுலுக்கு உதவ அனனியா எடுத்த முயற்சியிலிருந்து எப்படி அநேகர் பயனடைந்திருக்கிறார்கள்?
10 உதாரணத்திற்கு, சவுலை எடுத்துக்கொள்வோம். அவர் ‘புறதேசத்தாருக்கு ஓர் அப்போஸ்தலனாக’ ஆவதற்கு முன்பு கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வந்தார். (ரோ. 11:13) இதனால்தான் ஆரம்பத்தில் சவுலுக்குப் பிரசங்கிக்க அனனியா தயங்கினார். எனினும், எஜமானரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து பின்னர் அப்போஸ்தலன் பவுலாக மாறியவரிடம் பேசினார். பின்வந்த வருடங்களில், அவருடைய பிரசங்கத்தைக் கேட்ட ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தார்கள்; இப்போதும்கூட, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அவர் எழுதிய கடிதங்களைப் படிக்கிற கோடிக்கணக்கானோர் பயனடைந்து வருகிறார்கள்.—அப். 9:3-19; 2 தீ. 3:16, 17.
11. ஆண்களுக்கு நற்செய்தியை அறிவிக்க ஏன் தேவையான எல்லா மாற்றங்களையும் செய்ய வேண்டும்?
11 ஆகவே, ஆண்களுக்கு நற்செய்தியை அறிவிக்க தேவையான எல்லா மாற்றங்களையும் செய்வோமாக. இந்த இலக்கை அடையும் எண்ணத்தோடு, யெகோவா கொடுத்திருக்கும் பொறுப்புகளைக் கண்ணும் கருத்துமாகச் செய்யவும் அவருடைய சித்தத்தை நிறைவேற்றவும் ஊக்கமாய் முயற்சி எடுக்கும்போது அவர் நம்மை நிச்சயம் ஆசீர்வதிப்பார்.