பைபிளைத் திறம்பட பயன்படுத்துங்கள்
1. பைபிள் ஏன் மிகவும் பயனுள்ளது?
1 கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளைத் திறமையாக, அதே சமயத்தில் விவேகத்துடன் பயன்படுத்தும்போது, சத்தியத்தைத் தெளிவாக அறிவிக்கவும் கற்பிக்கவும் முடிகிறது; அதோடு, மனிதருடைய பொய்ப் போதனைகளையும் பாரம்பரியங்களையும் வெட்டவெளிச்சமாக்க முடிகிறது.—2 தீ. 2:15; 1 பே. 3:15.
2. மிகத் திறமையாக பைபிள் வசனங்களைக் கண்டுபிடிப்பதற்கு எது உதவும்?
2 வசனங்களை நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்: எந்தவொரு கருவியையும் அதிகமதிகமாகப் பயன்படுத்தும்போதே, அதிலுள்ள நுட்பங்களை நீங்கள் நன்கு தெரிந்துகொள்வீர்கள். அதேபோல் பைபிளையும் முழுமையாக வாசிக்கும்போதுதான் பைபிளின் மையப்பொருள் என்ன என்பது உங்களுக்குப் பிடிபடும். அதோடு, வசனங்களை நினைவில் வைக்கவும், வெகு சுலபமாகக் கண்டுபிடிக்கவும் முடியும். பைபிளை நன்கு தெரிந்து வைத்துக்கொள்ளும்போது, சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையிலும் சரி வெளி ஊழியத்திலும் சரி, நீங்கள் மிகுந்த பக்திவைராக்கியத்தோடும் முழு நிச்சயத்தோடும் பேசுவீர்கள்.—1 தெ. 1:5.
3, 4. (அ) பைபிளை நன்கு தெரிந்துகொள்வதற்குச் சில வழிகள் யாவை? (ஆ) பைபிளை நன்கு தெரிந்து வைத்திருப்பதற்கு வேறு ஏதேனும் வழிகளை நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்களா?
3 சபைக் கூட்டங்களில் சொல்லப்படும் வசனங்களை உங்களுடைய பைபிளில் எடுத்துப் பார்ப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தனிப்பட்ட படிப்பின்போதும் சபைக் கூட்டங்களுக்காகத் தயாரிக்கும்போதும், பிரசுரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை எடுத்துப் பார்த்து அவற்றின் நடைமுறை பயனைக் குறித்து தியானியுங்கள். பைபிளை கம்ப்யூட்டரில் அல்லது பேப்பரில் நகலெடுத்து வாசிப்பதைவிட நேரடியாக பைபிளிலிருந்து வாசிக்கும்போதுதான் ஊழியத்தில் வசனங்களைச் சுலபமாகக் கண்டுபிடிக்க முடிவதாக அநேகர் அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள்.—யோவா. 14:26.
4 சில குடும்பத்தார் பைபிள் வசனங்களை மனப்பாடம் செய்வதற்கு நேரம் ஒதுக்குகிறார்கள். இதற்காக, ஒரு பக்கத்தில் வசனமும் மறு பக்கத்தில் வசனத்தின் இடக்குறிப்பும் எழுதப்பட்ட சிறிய கார்டுகளை அல்லது பேப்பர்களைப் பயன்படுத்தலாம். குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் மாறி மாறி, ஒரு வசனத்தின் இடக்குறிப்பைப் பார்த்து அந்த வசனத்தை மனப்பாடமாகச் சொல்கிறார்கள் அல்லது வசனத்தைப் பார்த்து அதன் இடக்குறிப்பைச் சொல்கிறார்கள். ஊழியத்தில் எப்படிப் பேசுவது, ஆட்சேபணை தெரிவித்தாலோ கேள்வி கேட்டாலோ பைபிளைப் பயன்படுத்தி எப்படிப் பதிலளிப்பது எனப் பழகிப் பார்ப்பதும்கூட நம் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவும்.
5. நாம் ஏன் பைபிளைப் பயன்படுத்துவதில் திறமையை வளர்த்துக்கொள்ள விரும்புகிறோம்?
5 எந்தவொரு புத்தகமும் பைபிளுக்கு நிகர் ஆகாது. மக்களுக்கு “ஞானத்தைத் தந்து” அவர்களை ‘மீட்புக்கு வழிநடத்தும்’ விஷயங்கள் அதில் உள்ளன. (2 தீ. 3:15) நம் பிராந்தியத்திலுள்ள பெரும்பாலோருக்கு, பைபிளில் புதைந்து கிடக்கும் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பற்றி தெரியாது; ஆகவே, பைபிள் தரும் நன்மைகளை அவர்களுக்கு விளக்கிக் காட்ட நம் திறமையை வளர்த்துக்கொள்வது நல்லது.—நீதி. 2:1-5.