வெளி ஊழியத்தில் பைபிளை உபயோகியுங்கள்
1 பைபிளின் ஏவப்பட்ட வார்த்தைகள் ஜனங்கள் மீது ஒரு வல்லமையான பாதிப்பைக் கொண்டிருக்க முடியும். இந்தக் காரணத்துக்காக, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நற்செய்தியை அறிவிக்கையில் வேதாகமத்தை நன்கு பயன்படுத்தினர். பவுல் ‘வேத வாக்கியங்களின் நியாயங்களை எடுத்து,’ தன் குறிப்புகளை மேற்கோள்களால் விளக்கியும் நிரூபித்தும் காட்டினான். (அப். 17:2, 3) அப்பொல்லோ யூதர்களுக்கு சாட்சி கொடுக்கையில், “இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக் கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினான்.”—அப். 18:24–28.
2 இன்று யெகோவாவின் சாட்சிகள் இந்த உதாரணத்தை பின்பற்றுகின்றனர். காவற்கோபுரம், மார்ச் 1, 1986, பக்கம் 26-ல் குறிப்பிட்டுள்ளபடி: “வெளி ஊழியத்தில் அவர்கள் பங்குகொள்ளும்போது, அவர்கள் அறிவிக்கும் செய்தி அவர்களிலிருந்து உதயமானது அல்ல, ஆனால் கடவுளுடைய சொந்த வார்த்தையிலிருந்து வந்தது என்பதை ஜனங்கள் உணரவேண்டும் என்று விரும்புகின்றனர். ஆகையால் அவர்கள் பைபிளை நேரடியாக உபயோகிக்கின்றனர், முடியும்போதெல்லாம் மற்றவர்களுக்கு அதிலிருந்து வாசித்துக் காண்பிக்கின்றனர்.” உங்கள் ஊழியத்தில் நீங்கள் பைபிளை முழுமையாக பயன்படுத்துகிறீர்களா? உங்கள் பிராந்தியத்தில் பெரும்பாலும் உள்ள மொழியில் இருக்கும் பைபிளின் ஒரு பிரதியை எப்பொழுதும் எடுத்துச் சென்று, முடிந்தபோதெல்லாம் அதை உபயோகிக்க ஏன் உறுதிசெய்து கொள்ளக்கூடாது.
ஏன் திறம்பட்டது
3 பைபிள் ஏன் அவ்வளவு திறம்பட்டதாய் இருக்கிறது? ஏனென்றால் அது கடவுளுடைய வார்த்தையாகவும் “இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபி. 4:12) வேதாகம சத்தியத்தின் வெளிச்சத்தில் தனிப்பட்ட நபர்களின் உண்மையான உள்நோக்கங்கள் வெளியரங்கமாகின்றன. நேர்மையான இருதயமுள்ள ஜனங்கள் அதனிடமாக இழுக்கப்படுகின்றனர். உதாரணமாக, ஓர் இளம் தம்பதி யெகோவாவை சேவிப்பதில் விரைவாக முன்னேற்றம் அடைந்தனர். நற்செய்திக்கு ஏன் அவ்வளவு விரைவாக அவர்கள் பிரதிபலித்தனர் என்று கேட்டபோது, அவர்கள் பதிலென்ன? “அதற்கு காரணம் பைபிள்” என்றனர். அவர்களை சந்தித்த பிரஸ்தாபிகள் பைபிளினிடமாக அவர்களுடைய கவனத்தை திருப்பிய போது, “சிறந்த மேய்ப்பனின்” குரலை அவர்கள் அடையாளங் கண்டுகொண்டனர்.—யோ. 10:14, NW; w78 6/1 பக். 22–3.
4 வெளி ஊழியத்தில் உங்கள் பைபிளை உபயோகிக்கையில், நீங்கள் சில சமயங்களில் திறமையற்றவராக உணருகிறீர்களா? எல்லாச் சபைக் கூட்டங்களுக்கும் தயாரிப்பு மற்றும் ஆஜராவது உட்பட, ஒரு நல்ல தனிப்பட்ட படிப்பு நிகழ்ச்சிநிரல் ஒவ்வொரு நற்கிரியைக்கும் உங்களை தகுதியாக்கி, உங்களுக்கு கூடுதலான நம்பிக்கையை கொடுக்கும். (2 தீமோ. 3:16, 17) ஊழியத்தில் துணையாக செல்பவர்களும், குடும்ப அங்கத்தினர்களும் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை ஒருவரோடொருவர் பழகிக் கொள்ளலாம். நியாயங்கள் புத்தகம், பக்கங்கள் 9–15-ல் உள்ள அநேக முன்னுரைகள், சம்பாஷணையின் ஆரம்பத்தில் ஒரு வசனத்தை வாசிப்பதை உட்படுத்துகிறது. இவைகளில் சிலவற்றை ஏன் பழகிக்கொள்ளக்கூடாது? உங்கள் பிராந்தியத்திலுள்ள ஜனங்களின் அக்கறையை கவருபவற்றையும், நடைமுறையானதாக இருப்பவற்றையும் உபயோகியுங்கள்.
நல்ல பகுத்துணர்வை உபயோகியுங்கள்
5 வீட்டுக்காரர் தன்னுடைய சொந்த பைபிளின் பிரதியை எடுத்து வந்து நம்முடன் வசனத்தை பார்க்குமாறு அவரை நாம் அழைக்கும் சமயங்கள் இருக்கின்றன. அப்பேர்ப்பட்ட சூழ்நிலைமைகளில் நல்ல பகுத்துணர்வை உபயோகியுங்கள். (நியாயங்கள் புத்தகம், பக்கம் 67 பாரா 3, மற்றும் பக்கம் 279 பாரா 2-ஐயும் பாருங்கள்.) சுருக்கமாயிருப்பது தேவைப்பட்டால், நம் சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளில் உள்ள ஒரு வசனத்தை மட்டுமே வாசிக்க நாம் தீர்மானிக்கலாம். அல்லது வீட்டுக்காரர் அதிக வேலையாக இருப்பதாக தெரிந்தால், வெறுமென ஒரு பொருத்தமான சொற்றொடரை மேற்கோளாகச் சொல்லி, அது பைபிளில் இருக்கிறது என்பதை வீட்டுக்காரர் அறியும்படி செய்யலாம். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் பிரசங்கிக்கையில், தங்களோடு எடுத்துச் செல்ல எபிரெய வேதாகமங்களின் தனிப் பிரதிகள் இருக்கவில்லை. என்றபோதிலும் அவர்கள் அவைகளிலிருந்து மிகுதியாக வசனங்களை மேற்கோள் காட்டி உபயோகித்தனர். நம்முடைய ஊழியத்தில் உபயோகிப்பதற்காக வேதவசனங்களை நம் மனதில் கொண்டிருக்க, அவைகளை மனப்பாடம் செய்து கொள்ள நாம் முயற்சி செய்ய வேண்டும்.
6 ‘சத்திய வசனத்தை சரியான விதத்தில் கையாளும்படி’ பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறினார். (2 தீமோ. 2:15) அதே அறிவுரை இன்று நமக்குப் பொருந்துகிறது. நம் வெளி ஊழியத்தில் அடிக்கடி பைபிளை உபயோகிப்பதன் மூலம், நாம் இயேசுவையும் அவருடைய அப்போஸ்தலர்களையும் பின்பற்ற விரும்புவோம். முடியும் போதல்லாம் அதிலிருந்து வாசியுங்கள், தேவைப்பட்டால் ஞாபகத்திலிருந்து மேற்கோளாக எடுத்துச் சொல்லுங்கள். இதை நாம் திறம்பட்டவிதமாகச் செய்வது, நாம் கடவுளுடைய ஊழியர்கள் என்பதையும் மேலும் நம்முடைய செய்தி அவருடைய வார்த்தையின் பேரில் ஸ்திரமாக சார்ந்திருக்கிறது என்பதையும் தெளிவாக்கும்.