இருளிலிருந்து ஒளிக்கு மனிதர்களை திருப்புங்கள்
1 ஆவிக்குரிய இருள் பூமியை மூடியிருக்கிறது. (ஏசா. 60:2) மனிதவர்க்கம் பாவத்தில் விழுந்ததிலிருந்து, “இந்த ஒழுங்குமுறையின் கடவுள்”, சாத்தான், ஜனங்களை ஆவிக்குரிய இருளில் வைத்திருக்கிறான், இது ஒழுக்க சீரழிவில் விளைவடைந்திருக்கிறது.—2 கொரி. 4:4.
2 நாம் இப்பொழுது சத்தியத்தின் அறிவொளியூட்டப்பட்டிருப்பதனால், இயேசுவைப் போல நாமும் ஜனங்களுக்காக பரிதாபப்படுகிறோமா? (மத். 9:36) அப்படியென்றால், ‘அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு அவர்களுடைய கண்களைத் திறக்கும் பொருட்டு’ அப்போஸ்தலனாகிய பவுலுக்கு அவர் கொடுத்த வேலையின் முக்கியத்துவத்தை நாம் போற்றுவோம்.—அப். 26:16–18.
மனங்களுக்கும் இருதயங்களுக்கும் அறிவொளியூட்டுங்கள்
3 சாத்தான் தனக்கு பலியாகிறவர்களின் மனதை குருடாக்கி, இருதயத்தை உணர்ச்சியற்று போகச் செய்வதால், அவர்களுக்கு உதவ நாம் என்ன செய்யலாம்? நாம் கடவுளுடைய வார்த்தையைக் கொண்டு அவர்களுடைய மனதையும் இருதயத்தையும் எட்ட வேண்டும். எபேசியர்களுடைய இருதயத்தின் கண்கள் அறிவொளியூட்டப்பட்டவைகளாய் இருக்க வேண்டும் என்று பவுல் ஜெபித்தார். (எபே. 1:17, 18) இருதயத்தை எட்டுவதற்கு கடவுளுடைய வார்த்தையைவிட அதிக வல்லமையுள்ளது வேறு எதுவுமில்லை. (எபி. 4:12) இதை அறிந்திருப்பது, மற்றவர்களோடு பேசுகையில் பைபிளை உபயோகிப்பதில் திறமையை வளர்த்துக் கொள்ள நம்மை உந்துவிக்க வேண்டும்.
4 ஊழியத்தில் நீங்கள் அதிக திறமையுள்ளவர்களாக ஆக, பின்வரும் கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் உங்களுக்கு உதவக்கூடும். வெளி ஊழியத்திற்காக நீங்கள் நன்கு தயாரிக்கிறீர்களா? வீட்டுக்காரர்களின் அக்கறையை கவரும் சம்பாஷணை தொடக்கங்களோடு நீங்கள் அறிமுகமாவதற்கு பயிற்சி நேரங்களை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளைக் கற்றுக்கொண்டு, அதை உபயோகிப்பதை நீங்கள் முக்கிய காரியமாக வைத்து முயலுகிறீர்களா? வீடுகளில் வேதாகமங்களின் பேரில் காரணங்காட்டி இணங்க வைக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?—அப். 17:2.
காவற்கோபுரம் ஓர் உதவி
5 காவற்கோபுரம் ஆயிரக்கணக்கானோருக்கு இருளிலிருந்து ஒளிக்குத் திரும்ப உதவியிருக்கிறது. பைபிளின் ஒழுக்க நியமங்களை எவ்வாறு பொருத்துவது, நம் நாளுக்கான அதனுடைய தீர்க்கதரிசனங்களை எப்படி புரிந்து கொள்வது, யெகோவா அங்கீகரிக்கும் வழியில் நடப்பதற்கு உண்மை மதத்துக்கும் பொய் மதத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எவ்விதம் காண்பது என்று அது நமக்குக் காட்டுகிறது.
6 காவற்கோபுரம் பத்திரிகையால் முன்னேற்றுவிக்கப்படும் பைபிள் சத்தியம் எதை விளைவித்திருக்கிறது? கடவுளைப் பற்றியும் அவருடைய குமாரனைப் பற்றியுமான திருத்தமான அறிவின் மூலம் எல்லா வகையான ஆட்களும் இரட்சிப்பினிடமாக முன்னேற உதவப்பட்டிருக்கின்றனர். (யோ. 17:3; 1 தீமோ. 2:4) வாசகர் ஒருவர் எழுதினார்: ‘காவற்கோபுரத்தை நான் எவ்வளவாக போற்றுகிறேன்! நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நேரங்களைப் பற்றியும், காலங்களைப் பற்றியும் தெளிவாகக் காண இக்கட்டுரைகள் எல்லாருக்கும் உதவ வேண்டும். உண்மையிலேயே ஆவிக்குரிய உணவாக இருக்கும் காவற்கோபுரத்தை தயாரிப்பதற்காக செலவிடப்படும் திரளான ஆராய்ச்சி, படிப்பு, வேலை இவைகளுக்காக உங்களுக்கு மிக்க நன்றி சொல்கிறேன்.’
பகுத்தறிதலை உபயோகியுங்கள்
7 காவற்கோபுரம் சந்தா அளிப்பின் இந்த இரண்டாவது மாதத்தின் போது, ஆட்களை இருளிலிருந்து ஒளிக்குத் திருப்ப நாம் சந்தர்ப்பங்களை தேடிப் பார்க்க வேண்டியிருக்கிறது. வீட்டுக்கு வீடு வேலையில் நாம் சந்திக்கும் ஜனங்களோடு பைபிளின் பேரில் சம்பாஷணைகள் இதைச் செய்வதற்கு நமக்கு உதவுகின்றன. ராஜ்ய செய்தியில் ஓர் உண்மையான அக்கறையைக் கொண்டிருக்கும்படி ஜனங்களுக்கு உதவ நாம் விரும்புகிறோம். இதைச் செய்வதற்கு சிறந்த வழிகளில் ஒன்று காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஒரு வருடத்துக்கு சந்தாவை அளிப்பதாகும். ஒரு நபர் சந்தா செய்யாமல், பத்திரிகைகளை மட்டும் ஏற்றுக்கொண்டால், உங்கள் பத்திரிகை மார்க்கத்தில் அந்த நபரை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். காலப்போக்கில் பத்திரிகைகள் ஒழுங்காக சந்தா மூலம் தங்கள் வீட்டுக்கு வருவதன் மதிப்பை அவர்கள் போற்றுவார்கள். சந்தாக்கள் பெற்றுக்கொண்ட இடங்களில் திரும்பவும் சந்திப்பதற்காகவும், அவைகள் முடிவடையும் சமயத்தில் புதுப்பிப்பதற்காகவும் ஒரு நல்ல பதிவை வைத்திருங்கள்.
8 நாம் வீட்டுக்கு வீடு செல்கையிலும், தெரு ஊழியத்தில் ஈடுபடுகையிலும், நம்மோடு வேலை செய்பவர்கள், பள்ளித் தோழர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையிலும், ஜனங்களை விடுதலையாக்கும் சத்தியத்தைப் பரப்புவதில் நாம் பங்கு கொள்கிறோம். (யோ. 8:32) அவர்கள் விடுதலையைப் பெறுவதற்கும், நித்திய ஜீவனின் நம்பிக்கையை அடைவதற்கும், இருளிலிருந்து ஒளிக்கு அவர்களை திருப்பவும் காவற்கோபுரம் அவர்களுக்கு உதவிசெய்ய ஒரு விசேஷ கருவியாகும்.