முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—எவ்வளவு படிப்பது?
1 கற்பிக்கையில், இயேசு தம் சீடர்களால் எவ்வளவு விஷயத்தைக் கிரகிக்க முடியும் என்பதை மனதில் வைத்து, “அவர்களுடைய புரிந்துகொள்ளும் திறனுக்கு ஏற்ப” பேசினார். (மாற். 4:33; யோவா. 16:12) அவ்வாறே, இன்று கடவுளுடைய வார்த்தையைக் கற்பிக்கிற நாமும் பைபிள் படிப்பு நடத்துகையில் எவ்வளவு பாரா படிப்பது என்பதைத் தீர்மானிப்பது அவசியம். இது, படிப்பை நடத்துபவர், மாணாக்கர் ஆகிய இருவரின் திறமையையும் சூழ்நிலைகளையும் பொறுத்தது.
2 உறுதியான விசுவாசத்தைப் பெற உதவுங்கள்: சில மாணாக்கருக்கு ஒரு வாரத்தில் சொல்லிக்கொடுக்கிற விஷயத்தை வேறு சிலருக்கு இரண்டு, மூன்று வாரங்கள் சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கலாம். சீக்கிரமாய்ப் படிப்பை நடத்தி முடிக்க வேண்டுமென்பது அல்ல, ஆனால் மாணாக்கர் நன்கு புரிந்துகொள்ள வேண்டுமென்பதே நம்முடைய குறிக்கோள். ஒவ்வொரு மாணாக்கருக்கும், தான் புதிதாகக் கற்றுக்கொள்கிற சத்தியத்திற்குக் கடவுளுடைய வார்த்தையே பலமான அஸ்திவாரமாய் இருக்க வேண்டும்.—நீதி. 4:7; ரோ. 12:2.
3 நீங்கள் ஒவ்வொரு வாரமும் படிப்பை நடத்துகையில், கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்ளும் விஷயத்தை மாணாக்கர் நன்கு புரிந்துகொள்வதற்கும் அதை ஏற்றுக்கொள்வதற்கும் போதுமான நேரத்தைச் செலவிடுங்கள். வேக வேகமாக நடத்துவதைத் தவிருங்கள்; ஏனெனில், படிப்பிலிருந்து மாணாக்கர் முழுமையாகப் பயனடைய முடியாமல் போய்விடும். முக்கியக் குறிப்புகளுக்குக் கவனம் செலுத்துவதற்கும், போதனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் வசனங்களைச் சிந்திப்பதற்கும் போதிய நேரத்தைச் செலவிடுங்கள்.—2 தீ. 3:16, 17.
4 படிப்பு நேரத்தில் படிப்பு: நாம் படிப்பை வேக வேகமாய் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்; அதே சமயத்தில், படிப்பிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புகிற வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். ஒரு மாணாக்கர் எப்போதும் தன் சொந்த விஷயங்களைப் பற்றியே பேசுபவராக இருந்தால், படிப்பு முடிந்தபின் பேசலாம் என்று சொல்வது நல்லது.—பிர. 3:1.
5 மறுபட்சத்தில், நாமும்கூட சத்தியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் மாணாக்கருக்கு நிறைய விஷயங்களை விளக்கத் துடிக்கலாம்; படிப்பு நடத்தும்போது இப்படி அதிகம் பேசாதிருப்பது ஒரு சவாலே. (சங். 145:6, 7) எப்பொழுதாவது கூடுதல் குறிப்பையோ அனுபவத்தையோ சொல்வது படிப்பிற்கு மெருகூட்டும்; ஆனால், எதற்கெடுத்தாலும் இப்படிச் சொல்வதோ, வளவளவென பேசுவதோ சரியாக இருக்காது. ஏனெனில், அடிப்படை பைபிள் போதனைகளைப் பற்றிய திருத்தமான அறிவைப் பெற மாணாக்கருக்கு இவை முட்டுக்கட்டையாக இருக்கும்.
6 மாணாக்கருக்கு எவ்வளவு படிக்க முடியும் என்பதை மனதில் வைத்து ஒவ்வொரு வாரமும் நாம் படிப்பு நடத்தும்போது, ‘கர்த்தரின் வெளிச்சத்திலே நடக்க’ அவருக்கு உதவுகிறோம்.—ஏசா. 2:5.