ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்
அன்புள்ள சகோதர சகோதரிகளே:
யெகோவாவை உண்மையாய் வழிபட்டுவரும் எழுபது லட்சத்துக்கும் அதிகமான உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுவதில் மனங்கொள்ளா மகிழ்ச்சி. ஏதோ ஒரு நாட்டிலிருந்து வந்த முன்பின் தெரியாத சாட்சியைச் சந்திக்கும்போது நம்மை அறியாமலேயே அவருக்கும் நமக்கும் இடையே ஒரு பாசப்பிணைப்பு மலர்கிறது. (யோவா. 13:34, 35) இந்த வருட இயர்புக்கை (ஆங்கிலம்) படித்தால் இதேபோன்ற பாசப்பிணைப்பு உங்கள் உள்ளங்களில் ஊற்றெடுக்கும்; அதோடு, நம் அன்பு சகோதர சகோதரிகளின் விசுவாசத்தையும் உண்மைத்தன்மையையும் பார்த்து மலைத்துப் போவீர்கள்.
உங்களில் அநேகர் குடும்ப வழிபாட்டைத் தவறாமல் நடத்தி வருகிறீர்கள் என்பதை உலகெங்குமிருந்து வந்த அறிக்கை காட்டுகிறது. அதிலும் சிறு பிள்ளைகளை உடைய பெற்றோர்கள் புதுப்புது விதங்களில் குடும்ப வழிபாட்டை நடத்தி, பிள்ளைகளுக்குப் படிப்பின்மேல் பிடிப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். (எபே. 6:4) அதேபோல், தம்பதிகள் ஆன்மீக விஷயங்களை ஒன்று சேர்ந்து படித்ததால், திருமண பந்தம் பலப்பட்டிருக்கிறது. (எபே. 5:28-33) ஆம், தனிநபர்களும் சரி குடும்பங்களும் சரி, கடவுளுடைய வார்த்தையை ஆழமாகப் படித்து ஏராளமான பயன்களை அடைந்திருக்கிறீர்கள்.—யோசு. 1:8, 9.
சமீபத்தில் நடந்த இயற்கைப் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைத்து எங்கள் மனம் கலங்குகிறது. அதுபோன்ற சமயங்களில், நிவாரணப் பணிகளைச் செய்ய முன்வந்த அனைவருக்கும் மனமார நன்றி சொல்கிறோம். (அப். 11:28-30; கலா. 6:9, 10) அதுமட்டுமா உங்களில் சிலர், சபையில் பணக் கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு தேவையான உதவியைச் செய்து வருகிறீர்கள். நீங்கள் அனைவரும், “நற்செயல்களையும் தானதர்மங்களையும்” தாராளமாகச் செய்த தொற்காளைப் பின்பற்றுகிறீர்கள். (அப். 9:36) இதையெல்லாம் யெகோவா கவனித்துக்கொண்டிருக்கிறார், அதற்கேற்ற பலனை நிச்சயம் அளிப்பார்.—மத். 6:3, 4.
சில நாடுகளில், அதிகாரிகள் ‘சட்டம் என்ற பெயரால் தொல்லை கொடுத்து’ உங்கள் உரிமைகளைப் பறிக்கிறார்கள். (சங். 94:20-22, கத்தோலிக்க பைபிள்) இதுபோன்ற துன்புறுத்துதல்கள் வரும் என்று இயேசு முன்பே சொல்லியிருப்பதைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தைரியமாய்ச் சகிக்கிறீர்கள், பாதுகாப்புக்காக யெகோவாவையே சார்ந்திருக்கிறீர்கள். (யோவா. 15:19, 20) ‘உங்கள் நம்பிக்கையைக் குறித்துக் கேள்வி கேட்கிறவர்களுக்குச் பதில் சொல்ல’ நீங்கள் எடுக்கும் முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி நாங்கள் தினம்தினம் ஜெபம் செய்கிறோம்.—1 பே. 3:13-15.
ஒழுக்க விஷயத்தில் சீர்கெட்டுப் போக சாத்தான் புதுப்புது உத்திகளைத் தந்திரமாகப் பயன்படுத்தினாலும் உங்களில் அநேகர் ஒழுக்கமாக இருந்து வருவதை மனதாரப் பாராட்டுகிறோம். இன்று உலகத்தின் ஒழுக்கநெறிகள் தறிகெட்டுப்போனாலும் “நம் எஜமானரிடமிருந்து கிடைக்கும் மகா பலத்தினால் [நீங்கள்] வலிமையடைந்துகொண்டே” இருக்கிறீர்கள். (எபே. 6:10) அதோடு, ‘கடவுள் தருகிற முழு கவசத்தையும் அணிந்திருப்பதால்’ “பிசாசின் சூழ்ச்சிகளை” நீங்கள் உறுதியோடு எதிர்த்து நிற்கிறீர்கள். (எபே. 6:11, 12) உங்களுடைய உதாரணத்தைக் காட்டித்தான் தம்மை நிந்திக்கிற சாத்தானுக்கு யெகோவா சரியான பதிலடி கொடுக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்.—நீதி. 27:11.
கடந்த ஆண்டில் இயேசுவின் நினைவு நாள் அனுசரிப்புக்கு 1,93,74,737 பேர் வந்திருந்தார்கள். இதை நினைக்கும்போது எங்கள் உள்ளம் பூரிப்பில் பூக்கிறது. இத்தனை அதிகம் பேர் வந்ததற்கு, கடந்த ஏப்ரலில் நீங்கள் செய்த துணைப் பயனியர் ஊழியமும் ஒரு காரணம். யெகோவாவின் உண்மை ஊழியர்கள் எல்லாரும் ஏக குரலில் யெகோவாவுக்குத் துதி சேர்த்ததை, லட்சக்கணக்கானோர் கேட்டிருக்கிறார்கள். (ரோ. 10:18) துணைப் பயனியர் செய்த 26,57,377 பேரில் ஒருவராக நீங்கள் இருந்தாலும் சரி அந்த மாதத்தில் அதிகமாக ஊழியம் செய்ய முயற்சி எடுத்தவராக இருந்தாலும் சரி, நீங்கள் பக்திவைராக்கியத்தோடும் முழுமூச்சோடும் உழைத்ததை நினைக்கும்போது எங்கள் உள்ளம் சந்தோஷத்தில் பொங்குகிறது.—சங். 110:3; கொலோ. 3:23.
கடந்த வருடம், 2,63,131 பேர் யெகோவாவுக்கு தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்ததற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்கிறோம். “கேட்கிற எவனும் ‘வருக, வருக!’ என்று அழைக்கட்டும்; தாகமாயிருக்கிற எவனும் வரட்டும்; விருப்பமுள்ள எவனும் வாழ்வளிக்கும் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளட்டும்” என்று இன்னும் பலரை அழைப்பதில் எங்களோடு கைகோர்க்கிற உங்களுக்கும் நன்றி. (வெளி. 22:17) அதிலும், 2011 மாவட்ட மாநாட்டில் கடவுளுடைய அரசாங்கம் செய்துவருகிற விஷயங்களைப் பற்றிக் கேட்ட பின் ‘கடவுளுடைய அரசாங்கம் வருக!’ என்று இன்னும் அதிக உற்சாகத்துடன் சொல்லி வருகிறோம். “நான் சீக்கிரமாக வரப்போகிறேன்” என்று இயேசு கொடுத்த வாக்கைப் படிக்கும்போது, அப்போஸ்தலன் பவுலைப்போலவே சொல்ல நாம் தூண்டப்படுகிறோம்: “அப்படியே ஆகட்டும்! எஜமானராகிய இயேசுவே, வாரும்.”—வெளி. 22:20.
இந்தப் பரவசமூட்டும் சம்பவத்தைக் காண ஆவலோடு காத்திருக்கிறீர்கள். அதேசமயத்தில், யெகோவாவின்மேல் வைத்திருக்கும் அன்பை “செயலினாலும் சத்தியத்தினாலும்” தொடர்ந்து காட்டி வருகிறீர்கள். உங்கள் எல்லாருக்கும் எங்களுடைய இதயம் கனிந்த அன்பைத் தெரிவித்துக்கொள்கிறோம்.—1 யோ. 3:18.
உங்கள் சகோதரர்கள்,
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு