கல்வியும் உங்கள் ஆன்மீக இலக்குகளும்
1 அடிப்படைக் கல்வி அத்தியாவசியம். நன்றாக எழுத, படிக்க அது முக்கியம். புவியியல், சரித்திரம், கணக்கு, விஞ்ஞானம் ஆகியவற்றைப் பற்றிய பொது அறிவை வளர்த்துக்கொள்ள அது தேவை. சிறுவயதிலிருந்தே நீங்கள் கற்கும் கல்வி, தெளிவாகச் சிந்திப்பதற்கும், விஷயங்களைப் பகுத்தாராய்வதற்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், புதுப்புது யோசனைகள் தோன்றுவதற்கும் உதவும். அடிப்படைக் கல்வி கடைசிவரை உங்களுக்குக் கைகொடுக்கும். அப்படியானால், உங்கள் ஆன்மீக இலக்குகளை அடைய கல்வி எப்படி உங்களுக்கு உதவும்? ‘நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறமையையும்’ பெற்றுக்கொள்ள எப்படி உதவும்?—நீதி. 3:21, 22, NW.
2 கடவுளுடைய சேவையில் பிரயோஜனமானவர்களாய் ஆகுங்கள்: பள்ளியில், வகுப்பு நடத்தப்படும்போது கூர்ந்து கவனியுங்கள், வீட்டுப் பாடங்களை நன்றாகச் செய்திடுங்கள். சரளமாக வாசிப்பதிலும் கருத்தூன்றிப் படிப்பதிலும் நீங்கள் சிறந்து விளங்கினால் கடவுளுடைய வார்த்தையை ஆழமாய் ஆராய்வதும் ஆன்மீக ரீதியில் திடமானவர்களாய் இருப்பதும் உங்களுக்கு எளிதாக இருக்கும். (அப். 17:11) பொது அறிவில் நீங்கள் கெட்டிக்காரர்களாய் இருந்தால், ஊழியத்தில் பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்களைச் சந்திக்கும்போது, அவர்களுடைய விருப்புவெறுப்புகளையும் நம்பிக்கைகளையும் நன்றாகப் புரிந்துகொண்டு உங்களால் பேச முடியும். அதோடு, கடவுளுடைய அமைப்பில் உங்களுக்குக் கிடைக்கும் பொறுப்புகளை நல்லபடியாக நிறைவேற்ற பள்ளிப் படிப்பு உங்களுக்குப் பெருமளவு உதவும்.—2 தீமோத்தேயு 2:21; 4:11-ஐ ஒப்பிடுங்கள்.
3 சொந்தக் காலில் நிற்கக் கற்றுக்கொள்ளுங்கள்: தீவிரமாக முயன்றீர்கள் என்றால், உங்கள் சொந்தக் காலில் நிற்பதற்குத் தேவையான திறன்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளலாம். (1 தீமோத்தேயு 5:8-ஐ ஒப்பிடுங்கள்.) அதற்கு என்ன பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதென இப்போதே தீர்மானியுங்கள். வேலை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பளிக்காத பாடங்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, எங்கு போனாலும் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க உதவுகிற ஒரு திறனையோ கைத்தொழிலையோ கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். (நீதி. 22:29) இப்படிச் செய்தீர்களென்றால், தேவை அதிகமுள்ள பிராந்தியங்களுக்குச் சென்று ஊழியம் செய்யும்போது உங்களால் சொந்தக் காலில் நிற்க முடியும்.—அப்போஸ்தலர் 18:1-4-ஐ ஒப்பிடுங்கள்.
4 யெகோவாவின் சேவையில் அதிகம் செய்ய அடிப்படைக் கல்வி உங்களுக்கு உதவும். சொந்தக் காலில் நிற்பதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள கடினமாக உழையுங்கள். ஆம், உங்கள் ஆன்மீக இலக்குகளை அடைவதற்குப் பள்ளிப் படிப்பு நிச்சயம் உங்களுக்குக் கைகொடுக்கும்.